மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

வெறுப்பை உமிழும் தினமணியின் புரட்டுக்குப் பதிலடி!
சேயன் இப்ராகிம், 1-15 மார்ச் 2024


வெறுப்பை உமிழும் தினமணியின் புரட்டுக்குப் பதிலடி!

இராமர் கோயில் திறக்கப்பட்ட நேரத்தில் தினமணி நாளிதழில் 22.1.24, 23.1.24 தேதிகளில் வெளியான இரண்டு தலையங்கங்களிலும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உண்மைக்குப் புறம்பான, அவதூறான பல கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஆலயமல்ல  அடையாளம் என்ற தலைப்பில் 22.01.24 வெளியான தினமணியின் தலையங்கப் புரட்டுக்குக் கடந்த இதழில் விரிவான பதில் அளித்திருந்தோம். இந்த இதழில் 23.1.24 தினமணி நாளிதழில் வெளியான ‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ எனும் தலைப்பிலான தலையங்க வெறுப்புப் புரட்டுக்குப் பதிலளித்துள்ளோம்.

தினமணி : பாஜக இராமர் பிரச்னையில் அரசியல் லாபம் அடைந்தது உண்மை. அதே அளவுக்கு உண்மை அதை எதிர்க்க முனைந்தவர்கள் அதற்கு அடித்தளமிட்டனர். 

பதில் : அரசியல் ஆதாயங்களுக்காகவே பாஜக இராமர் கோவில் பிரச்னையைக் கையில் எடுத்தது. எப்பாடுபட்டாவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அவசரச் சட்டம் போட்டாவது பாபரி மஸ்ஜித் நிலத்தைக் கையகப்படுத்தி அதில் இராமர் கோயில் கட்டுவோம் என பாஜக தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். மக்களைத் திரட்டினர். உணர்வுகளைத் தூண்டினர். பாஜக இந்தப் பிரச்னையை முன்வைத்தே தேர்தல்களைச் சந்தித்தது. வெற்றியும் பெற்றது.

1949ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜிதில் இரவோடு இரவாகத் திருட்டுத்தனமாகக் குழந்தை இராமர் சிலையைக் கொண்டு வைத்தது, வழிபடத் தொடங்கியது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான். 1986ஆம் ஆண்டு இந்துக்களின் வழிபாட்டிற்காகப் பாபரி மஸ்ஜிதைத் திறந்து விட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். 6.12.1992 அன்று கரசேவகர்களால் பாபரி மஸ்ஜித் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கைகளைக் குற்ற உணர்வுடனேயே கையாண்டது. ஆனால் பலன்களை பாஜக அறுவடை செய்து கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இரு தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றே காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் கூறி வந்தன. இந்நிலையில் பாஜகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடித்தளமிட்டன என்ற கூற்றில் துளியும் உண்மை இல்லை.

தினமணி : மசூதிகள் கட்டப்படுவதற்கு, இடிக்கப்படுவதற்கு, மாற்றியமைக்கப் படுவதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கட்டமைப்புத் திட்டங்களுக்காக மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.

பதில் : பழைய பள்ளிவாசல்களை இடிக்க, அந்த இடத்தில் புதிய பள்ளிவாசல்களைக்கட்ட, பள்ளிவாசல்களை மாற்றியமைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. இஸ்லாத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் அதனதன் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட, இடிக்க, மாற்றியமைக்கத் தடை இல்லை. சாலை களை அகலப்படுத்துவதற்காக, நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அரசுகள் அந்தந்த சமயத்தைச் சார்ந்தவர்களுக்குத் தக்க முறையில் முன் அறிவிப்பு செய்து இடித்துள்ளன. 9.12.1992 அன்று கரசேவகர்களால் பாபரி மஸ்ஜித் சட்ட விரோதமாக இடிக்கப்பட்டதை இப்படி நியாயப்படுத்த முனைகிறார் தினமணி ஆசிரியர். இதை விட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது. பாபரி மஸ்ஜிதை இடித்தது அரசு அல்ல.

முஸ்லிம்கள் அல்ல. இந்துத்துவ அமைப்புகள், கரசேவை என்ற பெயரில் இந்தியா முழுவதிலிருந்தும் ஆட்களைத் திரட்டி இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டனர். 7.12.1992 அன்று வெளியான தினமணி நாளிதழின் தலையங்கத்தில் இந்துத்துவவாதிகளின் இந்தச் செயல் தேசத்துரோகம் என வர்ணிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினமணி ஆசிரியர் தேசத் துரோகம் என கண்டித்த செயலை இன்றைய தினமணி ஆசிரியர் ஒரு வழக்கமான நடைமுறையாகச் சித்திரிக்க முயல்கிறார். அன்றைய தினமணி ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ்காரர் அல்ல. இன்றைய தினமணி ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ்காரர். இது தான் வேறுபாடு.

இந்துத்துவவாதிகளால் அன்றும் இன்றும் கொண்டாடப்படுகின்ற துக்ளக் ஆசிரியர் சோ தனது 15.12.92 இதழில் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டிக்கும் விதமாக ‘அயோத்தியில் அயோக்கியத்தனம்’ என்று தலையங்கம் எழுதியிருந்தார். அந்த இதழின் அட்டையில் கூட ஒன்றுமே எழுதாமல் கருப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. இந்தத் தலையங்கத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் இந்துத்துவச் சக்திகளைச் சாடியிருந்தார்.

அயோத்தியில் இராமருக்குக் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று கூறிய அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டதோடு, 7.12.92 அன்று தமிழகமெங்கும் பந்த் நடத்தவும் உத்தரவிட்டார்.

பாஜக தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் கூட பிரதமர் நரசிம்மராவ் எங்களை நம்பியதற்காக வருந்துகிறேன் என்று அறிக்கை விட்டார். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பிரச்னையைத் திசை திருப்புவது ஏன்? சட்டப்படி செய்கின்ற ஒரு செயலையும், ஒரு சட்ட விரோதச் செயலையும் ஒன்றாகப் பார்ப்பது ஏன்? அவரின் இச்செயலை அவர் வணங்குவதாகக் கூறும் இராமர் கூட மன்னிக்க மாட்டார்.

தினமணி : கைபர் கணவாய் வழியாக வந்த இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் சோமநாத், மதுரா, காசி, அயோத்தி கோவில்கள் தாக்கப்பட்டன. மசூதிகளாக மாற்றப்பட்டன. மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தவே இவ்விதம் செய்தனர். பெரும் பாலானோர் அச்சுறுத்தலால்தான் அப்போது மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைவரும் பிறப்பால் இந்துக்கள். வழிபாட்டுத் தலங்களைச் சிதைத்தவர்கள் மீது மதம் மாறிய பிறகும் அளவு கடந்த வெறுப்பு உணர்வு அவர்களது ஆழ் மனதில் இருக்கிறது. இந்து வழிபாட்டுத் தலங்களைச் சிதைத்து அதன் மேல் மசூதி எழுப்பிய கஜினி, பாபர், ஔரங்கஜேப் ஆகியோர் பெயர்களை முஸ்லிம்கள் தங்களது பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை. பெரும்பான்மை மக்களின் உரிமைகளை மதித்த அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகியோர் பெயர்களையே சூட்டுகின்றனர்.

பதில் : நடந்து போன நிகழ்வுகளை அசை போடுவதில் எந்த லாபமும் இல்லை என்று முந்தைய நாள் (22.1.24) தலையங்கத்தில் எழுதியிருந்த தினமணி ஆசிரியர், மறுநாள் தலையங்கத்தில் மிகப் பழைய நிகழ்வுகளையே குறிப்பிட்டுள்ளார். கைபர் கணவாய் வழியாக முஸ்லிம் மன்னர்கள் மட்டும் வரவில்லை. குஷாணர்கள், ஹுணர்கள் ஆகியோரும் வந்தனர். இவர்கள் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே கைபர் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர். முஸ்லிம் மன்னர்கள் அன்றைய இந்தியாவின் ஒரு பகுதியாக (தேசமாக) கருதப்பட்ட காந்தாரத்திலிருந்து வந்தனர். அதுதான் இன்றைய ஆப்கானிஸ்தான்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதக் கோட்பாட்டின் படி ஆப்கானிஸ்தானும் இந்தியாவை உள்ளடக்கிய நாடே. அகண்ட பாரதம் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல் திட்டத்தில் இருக்கிறது. எனவே ஆப்கனிலிருந்து முஸ்லிம் மன்னர்கள் வந்த போதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கோட்பாட்டின்படியும் அது அந்நிய நாடு அல்ல. ஆனால் ஆரியர்கள் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து குறிப்பாகப் பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் அந்நியர்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் இந்திய சமூகத்தையே வர்ணாசிரம அடிப்படையில் பிரித்துச் சீர்குலைத்தனர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து ஒரு பிரிவு மக்களை விலங்குகளினும் கீழாக நடத்தினர்.

தங்களுக்குச் சாதகமாக வேதங்களையும், சட்டங்களையும் அமைத்துக் கொண்டனர். இன்றைக்கும் ஆரியர்களின் மேலாண்மை குறையவில்லை. ஆனால் முஸ்லிம் மன்னர்கள் சமத்துவத்தைப் போதித்தனர். சமூக நீதியை நிலை நாட்டினர். ஆரியர்கள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக சம பலமின்மையைப் போக்க முயற்சித்தனர். இந்தியாவையே தங்களது தாயகமாகக் கொண்டு வாழ்ந்தனர். இந்த நாட்டின் வளத்தைத் தங்களது நாட்டிற்குக் கொண்டு செல்லவில்லை. இது குறித்து பஞ்சாப் சிங்கம் எனப் போற்றப்படும் லாலா லஜபதிராய் எழுதியுள்ள ‘யுவ பாரதம்’ என்ற நூலை தினமணி ஆசிரியர் படித்துப் பார்க்கட்டும்.

படையெடுப்புகளின் போது ஆலயங்கள் தாக்கப்படுவது எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்தே வந்துள்ளது. இந்து மன்னர்கள் தங்களுக்குள் நடத்திய போர்களின்போது கூட கோயில்கள் தாக்கப்பட்டன. பௌத்த, சமணக் கோவில்கள் அழிக்கப்பட்டன. பல பௌத்த சமணக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன. இதற்கு வரலாற்றில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அன்றைய தமிழ் நாட்டில் பௌத்தமும், சமணமும் சைவ சமயத்தினரால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டன. அனல்வாதம், புனல்வாதம் என்ற பெயரில் அவர்களது இலக்கியங்கள் அழிக்கப்பட்டன. எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வு இன்றைக்கும் நினைவு கூரப்படுகிறது. 

முஸ்லிம் மன்னர்களான கஜினி, பாபர், ஔரங்கஜேப் கோயில்களை இடித்ததாக தினமணி ஆசிரியர் கூறுகின்றார். கஜினி முகம்மது சோமநாதபுரம் ஆலயத்திலுள்ள செல்வங்களைக் கவர்ந்து செல்லவே அதன் மீது தாக்குதல் நடத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் பள்ளிவாசல் எதுவும் சோமநாதபுரத்தில் கட்டியதாகத் தெரியவில்லை. பாபர், இராமர் கோயிலை இடித்தார் என்பதற்கு வரலாற்றில் ஆதாரமில்லை. எனினும், ஔரங்கஜேப் சில இந்துக் கோயில்களை இடித்ததாக வரலாற்றில் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு அவரது மதவெறி காரணமல்ல. அது மட்டுமே காரணமாக இருந்திருத்தால் அவரது பெரும் நிலப்பரப்பின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த எல்லாக் கோயில்களையும் இடித்திருக்க ஆணைகள் பிறப்பித்திருப்பார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

இன்றைக்கும் வடநாட்டில் பன்னூற்றுக்கணக்கான மிகப் பழமை வாய்ந்த பெரிய கோயில்கள் இருக்கின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் அவர் ஒன்றிரண்டு கோயில்களை இடித்திருக்கலாம். குறிப்பாக காசி நகரிலிருந்த விசுவநாதர் கோயிலை அவர் இடிக்குமாறு உத்தரவிட்டதற்குத் தக்க காரணங்கள் இருந்தன. இது குறித்து முன்னணி வரலாற்று ஆசிரியர் பி.என். பாண்டே தனது Islam and Indian Culture என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 55)

‘ஔரங்கஜேப் தனது பரிவாரங்களுடன் வங்காளத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்தப் பயணத்தில் பல இந்து சிற்றரசர்கள் தங்களது மனைவிமார்களுடன் கலந்து கொண்டிருந்தனர். பயணம் காசியை அடைந்த போது, மன்னரிடம் இந்து சிற்றரசர்கள் தங்களது மனைவியர்கள் கங்கை நதியில் குளித்து விட்டு, விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வர ஏதுவாக பயணத்தை ஒரு நாள் நிறுத்தி வைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர். மன்னர் அதனை ஏற்றுக் கொண்டார்.

அதன்படி சிற்றரசர்களின் மனைவியர்கள் கங்கையில் புனித நீராடி சுவாமி தரிசனமும் செய்து விட்டு முகாம்களுக்குத் திரும்பினர். ஆனால் கட்ச் மன்னரின் மனைவி மட்டும் திரும்பவில்லை. மன்னர் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். படை வீரர்கள் அவளைப் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டு இறுதியாக விசுவநாதர் கோயிலின் பீடத்திற்குக் கீழே மானபங்கப்படுத்தப்பட்ட நிலையில் அழுது கொண்டிருப்பதைக் கண்டனர். அவளை யாரோ பாலியல் வன்புணர்வு செய்திருந்தனர். இந்நிலையில், மன்னர் சமய குருமார்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கோயிலின் புனிதத்தைக் காக்க விசுவநாதர் கோயிலை இடிக்கவும் ஆணையிட்டார்’ இந்தக் கோயிலை இடிக்க மன்னர் ஔரங்கஜேப் உத்தரவிட்டதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

மன்னர் ஔரங்கஜேப், பல இந்துக் கோயில்களுக்கு மிக அதிக அளவில் மானியங்கள் வழங்கியுள்ளார். இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. வரலாற்று ஆசிரியர் செ.திவான் எழுதியுள்ள ‘வரலாற்று வெளிச்சத்தில் ஔரங்கஜேப்’ என்ற நூலை தினமணி ஆசிரியர் படித்துப் பார்த்துத் தெளிவு பெறட்டும். (இந்து நூலை விகடன் பிரசுரமும், ஐஎஃப்டியும் வெளியிட்டுள்ளன.)

பொதுவாகவே, கோயில்களில் உள்ள விலை மதிப்பற்ற சிலைகளையும், தங்க ஆபரணங்களையும் கவர்ந்து செல்லவே மன்னர்கள் அவற்றின் மீது தாக்குதல்கள் காரணமல்ல. இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், இங்குள்ள முக்கியக் கோயில்களிலிருந்து சிலைகளும், நகைகளும் தொடர்ந்து களவாடப் பட்டுள்ளன. இவற்றைக் கண்டுபிடித்து மீட்டிட, காவல்துறையில் தனிப் பிரிவே உள்ளது. இந்தச் செயல்களில் முஸ்லிம்கள்யாரும் ஈடுபடவில்லை. எல்லா சிலைக் கடத்தல் குற்றங்களிலும் கைது செய்யப் பட்டிருப்பவர்கள் இந்துக்களே! எனவே அன்றைக்கு மன்னர்களால் கோயில்கள் தாக்கப்பட்டன. இன்றைக்கு கொள்ளையர்களால் தாக்கப்படுகின்றன. ஆனால் நோக்கம் ஒன்றே!

அச்சுறுத்தல் காரணமாகவே பெரும்பாலும் மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தினமணி ஆசிரியர் குறிப்பிடுவதில் உண்மை இல்லை. சுமார் 700 ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம் மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது தலைநகரங்களான டெல்லியிலும், சுற்றியுள்ள மாநிலங்களிலும் இஸ்லாம் பெருமளவு பரவவில்லை. தலைநகரை விட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற வங்காளத்திலும், பஞ்சாபிலும் தான் இஸ்லாம் பெருமளவு பரவியுள்ளது.

எனவே மதமாற்றத்தில் மன்னர்களின் பங்கு எதுவுமில்லை. இறைநேசச் செல்வர்களின் பரப்புரை காரணமாகவே இஸ்லாம் இந்தியாவில் பரவியது. மதமாற்றங்கள் இயல்பாகவே நிகழ்கின்றன. சட்டையை மாற்றிக் கொள்வது போல் யாரும் தங்களது சமயங்களை, நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் இழிவுகளுக்கும் பின்னரும் இந்தியாவிலுள்ள பெரும்பாலான தலித் மக்கள் மதம் மாறவில்லை. இந்து மதத்திலேயே நீடிக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டனர். ஆங்கிலேய கிறித்தவ மிஷனரிகள் ஆயிரக்கணக்கான சேவை இல்லங்களையும், கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நடத்தின. அவற்றால் பலன் பெற்ற பெரும்பாலான இந்து மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறவில்லை. இன்றைக்கு இந்தியாவில் இரண்டு விழுக்காடு கிறித்தவர்களே உள்ளனர்.

முஸ்லிம்களிடம் இப்போது ஆட்சி அதிகாரம் இல்லை. நிர்வாகத் துறை, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்ற நிறுவனங்கள் என அனைத்திலும் அவர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவே. இந்தச் சூழ்நிலையிலும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துதான் இந்து சமயத்தைப் பாதுகாக்க வேண்டியதிருக்கிறது. இந்து சமயத்திற்கு ஆபத்து ஆட்சி அதிகாரத்தில் இல்லாத முஸ்லிம்களாலா அல்லது இன்றைக்கும் சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆரியர்களாலா? என்பதை தினமணி ஆசிரியர் சிந்தித்துப் பார்க்கட்டும்.

தினமணி : திருப்பதி, குருவாயூர் தரிசனத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஸ்ரீரங்கம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை என்று ஸ்ரீராம பிரானின் புராணத் திருத்தலங்களுக்கு எல்லாம் சென்று 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாகத் தன்னை உணர்ந்து பிரார்த்தித்ததை உலகமே பார்த்து வியந்தது. தமிழகத்தில் இருந்து பெற்ற ஆன்மிக பலத்துடன் இங்கிருந்து நேராக அயோத்தி சென்று ஸ்ரீராமனின் பிராண பிரதிஷ்டையில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தமிழகத்தின் ஆன்மிக சக்தியை எடுத்தியம்பி இருக்கிறார்.

பதில் : தினமணி குறிப்பிடுகின்ற இந்தப் பணிகளெல்லாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் செய்யத்தக்கவை அல்ல. இந்து சமய மதகுருமார்கள், பூசாரிகள் செய்ய வேண்டிய பணிகளே இவை. இதனை அரசியல்வாதியான நரேந்திர மோடி செய்திருப்பது எந்த விதத்திலும் சரியல்ல. நியாமுமல்ல.

தினமணி : அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது ஸ்ரீராமரல்ல. ராமராஜ்யத்தின் அடையாளம். ஸ்ரீராம ராஜ்யம் என்பது இந்து ராஷ்டிரம் அல்ல. அனைவருக்குமான சமய நல்லிணக்கத்தின் அடையாளமான சனாதான தர்மம். 

பதில் : இராமராஜ்ஜியத்தின் அடையாளம் என்று கூறுகிறார் தினமணி ஆசிரியர். இராமராஜ்யம் எப்படி இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் இல்லை. புராணங்களிலேயே இருக்கின்றன. புராணகால இராமராஜ்யத்தை நினைக்கின்றபோது கர்ப்பிணியான தனது மனைவியை இரண்டாவது முறையாக இராமன் காட்டுக்கு அனுப்பியதும், ஒரு பிராமணச் சிறுவனின் அகால மரணத்திற்குச் சம்புகன் என்ற சூத்திரன் செய்த தவமே காரணம் என்று கருதி இராமன் அவனைக் கொன்றதும் நமது நினைவுக்கு வருகின்றன. இராம ராஜ்யம் இந்து ராஜ்யம் அல்ல என்கிறார் தினமணி ஆசிரியர்.

ஆனால் அவர் போற்றிப் புகழுகின்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாஜகவும், அதன் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போவதாகத் தானே இத்தனை காலமும் சொல்லி வருகின்றன. தினமணி ஆசிரியர் எதற்காக அதற்கு முரணான ஒரு தகவலைத் தருகிறார்? இந்த புதிய இராமராஜ்யத்தை பிரதமர் மோடி தருவாரா அல்லது வேறு யாரும் புதிதாக வந்து தரப் போகிறார்களா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ‘இராமராஜ்யம் அனைவருக்குமான சமய நல்லிணக்கத்தின் அடையாளமான சனாதான தர்மம்’ என்றும் குறிப்பிடுகின்றார். சனாதன தர்மம், வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த ஒரு தத்துவமே. அப்படி ஒரு தத்துவம் அல்லது கோட்பாடு நடைமுறைக்கு வருவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் நடுநிலை தவறி தனது ஆர்.எஸ்.எஸ் விசுவாசத்தை மேற்கண்ட இரண்டு தலையங்கங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார். கொரோனா பெரும் தொற்று பரவிய நேரத்தில் ‘கொரோனா கிருமிகளைப் பரப்பியது டெல்லியில் மாநாடு நடத்திய தப்லீக் அமைப்பினர்தான்’ என்று குற்றம் சாட்டி தலையங்கங்கள் எழுதியவரும்

இவரே! 2019  2020களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் மிகப் பிரம்மாண்ட அளவில் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடத்திய போது அதனைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியதும் இவரே! அயோத்தி கோயில் குறித்து இவர் முஸ்லிம்கள் மீது சுமத்துகின்ற அவதூறுகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் பிரச்னையைச் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

 

கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள : 93601 89931


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்