மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம்
அபூ அமீன், 1-15 மார்ச் 2024


சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம்

சிறுபான்மை முஸ்லிம்களின் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.2.2024 சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில துணைத் தலைவர் ஐ.ஜலாலுத்தீன், மாநில அமைப்புச் செயலாளர் ஓ.ஜலா லுத்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன், தமிழ்நாடு மஸ்ஜித்களின் கூட்டமைப்பு, தர்ஹாக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு காஜிகளின் பேரவை, முஸ்லிம் கல்வி நிறுவனங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அழைப்பின் பேரில் கலந்துகொண்டனர்.

அரசு தரப்பில் சிறுபான்மை நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சிறுபான்மை நலத்துறை ஆணையத் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், அரசின் முதன்மைச் செயலாளர்கள் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல்கள் கட்டுமானப் பணிக்கு அனுமதி கிடைப்பதில் நீண்ட தாமதம், சமூக விரோதிகளால் ஏற்படும் இடையூறுகள் போன்றவை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அடக்கத்தலங்கள் (கபரஸ்தான்) இடப் பற்றாக்குறையைப் போக்க போதிய அளவு இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

ஒன்றிய அரசு வழங்கிவந்த சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கான PreMatric Scholarship நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் முஸ்லிம் மாணவியருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் M.A(அரபி) தொலைதூரக் கல்வி வழியாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி வரும் கல்வி ஆண்டிலிருந்து M.A(அரபி) தொலைதூரக் கல்வி வழியாகக் கற்பிக்க ஆவன செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதுபோல அஃப்ஸலுல் உலமா கல்விக்கட்டணம் ரூ.550லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டதைக் குறைத்து இதனை மீண்டும் பழைய கட்டணமே பெறுவதற்கும் உறுதியளித்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தமிழ்நாட்டில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வதற்கு அனுமதி உள்ள போதும் சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைச் சரிசெய்ய வேண்டும்.

NIOS – தேசிய திறந்த நிலைப் பள்ளி மூலம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்வதற்கும், அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்குமான தடைகள் நீக்கப்பட வேண்டும்.

அண்மையில் விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1500 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தக் கடனை எட்டு மாதத் தவணையில் வட்டியில்லாமல் திருப்பிச் செலுத்தலாம். இதனை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்கிறது. அதேபோல முஸ்லிம் சிறு தொழில் முனைவோர், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், முஸ்லிம் மகளிர் தொழில் முனைவோருக்கு வட்டியில்லாக் கடன் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

முதலமைச்சர் உரை 

‘அனைவரையும் உள்ளடக்கிய எல்லாருக்குமான திராவிட மாடல் ஆட்சி இது. எல்லாருக்கும் என்பதில் பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டில் 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் புனரமைப் பிற்காக மானியம் வழங்கி வருகிறோம்.

கடந்த ஆண்டில் இதற்கான தொகை 10 கோடியாக உயர்த்தப்பட்டு 134 பள்ளி வாசல்கள், தர்ஹாக்கள் பயன்பெற்றுள்ளன. உலமா நல வாரியத்திலுள்ள உறுப் பினர்களுக்கு 5.46 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் அகிய மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன், சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் இருபதாயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கபரஸ்தான்களுக்கு புதிதாகச் சுற்றுச்சுவர், பாதை அமைக்க ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த 658.44 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹஜ் மானியம், வக்ஃப் வாரியத்தின் மூலம் பணிகள் என பல்வேறு நலத்திட்டங்களை சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு செய்து வருகிறது. கடந்த காலங்களில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பான சில அறிவிப்புகளை இங்கு வெளியிடுகின்றேன்.

மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தரச் சான்றிதழ் வழங்க அரசாணை 02.02.24 வெளியிடப்பட்டுள்ளது. நீண்டகால ஆயுள் சிறைவாசிகள் விடுதலை, வழிபாட்டுத்தலங்கள் கட்ட, புனரமைக்க ஒரு நிலையான இயக்க நடைமுறை வெளியிட நடவடிக்கை, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வரையுள்ள மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம், சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கான வலைதள உருவாக்கம், இஸ்லாத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற வழிசெய்தல், சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் 5 இலட்சம் வரை வழங்குதல், வக்ஃப் சொத்துகள், நிர்வாகம் தொடர்பாக மதுரையிலும் தீர்ப்பாயம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியும், நிறைவேற்றுவதற்கான வழிவகைளையும் செய்துள்ளோம்’ என்று முதலமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்