மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு தேர்தல் களம்
- சேயன் இப்ராகிம்




தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதிநடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கின்ற இத்தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதியோடு முடிவடைந்து ஜூன் நான்காம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்கும் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் முடிவுகளை அறிய 45 நாள்கள் காத்திருக்க வேண்டும். இது இதுவரை தமிழ்நாடு சந்தித்திராத காத்திருப்பாகும்.

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களே பல கட்டத் தேர்தல்களைச் சந்திக்கவிருக்கின்றன. இவற்றில் மேற்கு வங்காளம் தவிர பிற மாநிலங்களில் பாஜக அல்லது அதன் கூட்டணி ஆட்சிகளே நடைபெறுகின்றன. இம்மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியதிருக்கிறது; எனவே தான் பல கட்டங்களாகத் தேர்தல்களை நடத்த வேண்டியதிருக்கிறது என்பது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்றால், அந்த மாநிலங்களில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதை ஆணையமே ஏற்றுக் கொண்டதாகத் தான் பொருள்.

இம்மாநிலங்களை விட ஒரே கட்டமாகத் தேர்தல்கள் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதையும் தேர்தல் ஆணையம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை விட இரு மடங்கு தொகுதி களைக் கொண்டுள்ள உ.பியில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் தேர்தல்களை நடத்த முடியும். எதற்காக ஏழு கட்டத் தேர்தல்கள் என்று நமக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு மறைமுகச் செயல்திட்டத்தை தேர்தல் ஆணையம் வைத்துள்ளதோ என்றே ஐயம் எழுகிறது.

ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று பேசுபவர்கள் ஒரே நாடு; ஒரே நாளில் தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த ஏன் தயங்குகிறார்கள் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார் போலும்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, பாஜக தலைமையிலான அணி என மூன்று அணிகள் களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் நான்கு விழுக்காடு வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொள்ளப் போவதாக அறி
வித்த அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்க திமுக ஒப்புக் கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பாஜக கூட்டணியில் அதிமுகவின் பன்னீர்செல்வம் அணி, பாட்டாளி மக்கள் கட்சி, அமமுக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம் ஆகியன அங்கம் வகிக்கின்றன. முதல்வராகும் கனவில் இருந்த நடிகர் சரத்குமார், நடுநிசியில் விழித்து, மனைவியுடன் ஆலோசனை நடத்திய பிறகு பாஜகவில் தனது கட்சியை இணைத்துள்ளார்.

அதிமுக தனக்கே சொந்தம் எனப் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் ஒரே ஓர் இடத்தில் அதுவும் சுயேட்சை சின்னத்தில் அவரே களமிறங்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சரத்குமாரைப் போலவே ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் பாஜக ஜோதியில் ஐக்கியமானாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அதிமுக கூட்டணி

பாஜக அரசுக்குக் கண்ணை மூடிக் கொண்டு அனைத்துப் பிரச்னைகளிலும் ஆதரவு அளித்து வந்த அதிமுக, அக்கட்சி யுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்தது தான் இந்தத் தேர்தலில் எதிர்பாராத ஒரு திருப்பமாகும். அதிமுகவை எப்படியும் சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பூட்டிய கதவை அதிமுக திறக்கவே இல்லை. எனினும், பாஜகவுடனான தேர்தல் உறவை அதிமுக முறித்துக் கொண்டதே தவிர, அக்கட்சிக்கு எதிராக எந்தவிதமான மென்மையான அல்லது கடுமையான விமர்சனங்களை இதுவரை முன்வைக்கவில்லை.

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதிப் பங்கீடு பிரச்னை, தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் ஒரு ரூபாய் கூட வழங்காதது, ஆளுநரின் அத்துமீறல்கள், அவரது சனாதன ஆதரவுப் பேச்சுகள் என எந்த ஒரு விஷயத்திலும் அதிமுக தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. கண்டனம் தெரிவிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் கூட அக்கட்சி மௌனம் காக்கிறது.

அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு காரணமாகவே மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டம் நிறைவேறியது. அதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் உச்சகட்டத்தில் இருந்த போது, இச்சட்டம் காரணமாக எந்த ஒரு முஸ்லிமாவது தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாரா என உரத்த குரலில் சட்டமன்றத்தில் பதிலளித்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்கள் காரணமாக அச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதாக பகிரங்கமாக அவர் சட்டமன்றத்திலே தெரிவித்தார்.

ஆனால் பாஜகவுடனான தேர்தல் உறவை முறித்துக் கொண்ட பிறகு கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாகவே அதிமுக குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தது. அதிலும் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஆதரவு அளித்தோம் என அறிக்கை வெளியிட்டார். தற்போது, அவர் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். இதுபோன்ற முரண்பாடான நடவடிக் கைகள் அவரின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளன. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், அதிமுக தலைவர்கள் பாஜக அரசின் கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சனம் செய்வார்களா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பாஜக கூட்டணி

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி திமுகவுக்கு எதிரான சக்தி யாக தன்னை நிலைநிறுத்த பாஜக முயன்று வருகிறது. திமுக ஙண் பாஜக என்ற நிலை தமிழக அரசியலில் ஏற்பட அக்கட்சி முனைப்புடன் பரப்புரைகளை முடுக்கி விட்டுள்ளது. அதிமுகவைப் பலவீனப்படுத்தி, அக்கட்சியின் வாக்குகளைத் தங்களது கட்சிக்கு மடைமாற்றம் செய்ய அது முனைகிறது. குறிப்பாக அண்ணாமலை மாநில பாஜக தலைவராகப் பதவியேற்ற பிறகு இந்த இலக்கை நோக்கியே அவர் பயணிக்கிறார். அவருக்கு பாஜகவின் மத்தியத் தலைவர்களின் ஆதரவும் இருக்கிறது.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் சிறந்த நிர்வாகிகள் எனவும், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் எனவும் புகழ்ந்து பேசியிருப்பது அதிமுகவின் வாக்குகளைக் கவரும் நோக்கில்தான் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறது என்ற ஊடகங்களின் ஓயாத பரப்புரையும், அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்து விடும் என்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் தற்போதும் அக்கூட்டணியில் தொடர்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பகிர்ந்தளிக்கப்பட்ட இடங்களே இப்போதும் அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தவிரவும், அனைத்திந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் உருவாகியுள்ள இந்தியா கூட்டணியிலும் இக்கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கின்ற பாஜகவின் மக்கள் விரோத, மதவாதக் கொள்கைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வெளியிலும் எதிர்த்துப் பரப்புரை செய்து வரு கின்றன. முத்தலாக், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் இரத்து ஆகிய அனைத்துப் பிரச்னைகளிலும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இக்கட்சிகள் எந்தவிதமான சமரசமுமின்றி சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக, உரிமைகளுக்காககக் குரல் கொடுத்து வருகின்றன. அனைத்திந்திய அளவில், பாஜகவுக்கு ஒரு மாற்றான வலுவான கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்கிறது. பாஜகவின் பத்து ஆண்டுகால மதவாத ஃபாசிஸ ஆட்சிக்கு முடிவு கட்ட விரும்புகிறவர்கள் அனைவரும் இக்கூட்டணிக்கு வாக்களிப்பதே மிகச் சரியாக இருக்கும்.

வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது இந்தியாவை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும். இத்தேர்தலே இறுதித் தேர்தலாக இருந்தாலும் வியப்பதற்கில்லை. பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவோம் என்ற கர்நாடக பாஜக தலைவர் சதானந்த கௌடாவின் அறிவிப்பை ஓர் அபாய அறிவிப்பாகவே கருத வேண்டும். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எனவே வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவின் மதவாதப் போக்கை, ஃபாசிஸ சிந்தாதங்களை முறியடிக்க, அகில இந்திய அளவில் மாற்று அணியாக உருவெடுத்துள்ள இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதே விடியலுக்கு வழிவகுக்கும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்