மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

உங்களில் சிறந்தவர்
- சம்ஷாத், 1-15 ஏப்ரல், 2024




‘க்ரீச்’ என்ற ஓசையுடன் கேட் திறந்தது. கார் வந்தால் மட்டுமே திறக்கப்படும் பெரிய கேட்டின் ஓசை அது. இங்கே வருபவர்களில் காரில் வருபவர்கள் மிக அபூர்வம். ஜன்னல் அருகே சென்று பார்த்தபோது, ஒருவர்
காரிலிருந்து அட்டைப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தார். ரமளானுக்காக இங்கே படிக்கும் பிள்ளைகளுக்கு பேரீச்சம்பழங்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

பெரும்பாலும் பொருளைக் கொடுக்க வருபவர்கள், அங்குள்ள பொறுப்பாளரிடம் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனால், இவர் முதல்வரான என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று செய்தி வந்தது. உள்ளே வரச் சொன்னேன். அவருடன் கூடவே பதின்பருவத்தில் இருக்கும் ஒரு பையனும் வந்தான். அவருடைய மகனாக இருக்கும்.

அவர் தன்னை ஒரு பெரும் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பதாக அறிமுகம் செய்து கொண்டார். அவருடைய தன்னடக்கமும், எளிமையும், என்னைக் கவர்ந்தது. இங்குள்ள மாணவர்களைப் பற்றி விசாரித்தார். எப்படி குர்ஆனை மனனம் செய்ய வைக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் நிறையக் கேள்விகள் கேட்டார். ஏதோ நன்கொடை கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பிரபலமான ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பில் படிக்கும் தன் மகனை இங்கே சேர்ப்பதற்காக வந்திருக்கிறார் என்று தெரிந்த போது அதிர்ந்து விட்டேன்.

ஏனென்றால் இங்கே வரும் மாணவர்கள் பெரும்பாலும் பெற்றோரை இழந்து, மிக ஏழ்மையில் உள்ளவர்கள் அல்லது படிப்பு வரவில்லை என்று பள்ளியால் புறக்கணிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் தான் வருவார்கள். இந்த மாணவன் ஏதாவது தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பானோ என்று தோன்றியது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பால் வடியும் சிரித்த முகம். என் ஐயத்தை அவரிடமே கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘என்ன செய்யவது? சமுதாயம் இப்படித் தானே இருக்கு! உலகக் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மார்க்கக் கல்விக்குக் கொடுக் கப்படுவதில்லையே.!’ என்றார்.

‘என் பையன் நல்லா மார்க் வாங்குவான். முதல் மூன்று ரேங்குக்குள் வருவான். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ‘உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுத்தருபவரே.’ என்ற ஹதீஸைப் படித்தபோது குர்ஆனைக் கற்று அதைக் கற்றுத் தரும் ஆசானாகி அதன் மூலம் சிறந்த முஸ்லிமாக இருக்க அவனுக்குள் ஒரு ஆசை உருவாகி அதை என்னிடம் சொன்னான். உங்கள் பள்ளியில் சிறந்த முறையில் திருக்குர்ஆன் மனனம் சொல்லிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தான் அவனை இங்கே சேர்க்க வந்தேன். இது குர்ஆனுடைய மாதம். இந்த மாதத்தில் என் மகன் மனதில் இந்த ஆசை உதித்தது அல்லாஹ்வின் மாபெரும் கிருபை. அதை உடனே செயல்படுத்துவது தானே ஒரு தந்தையின் கடமை..’

‘அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ், இந்தக் காலத்தில் இப்படி ஒரு பிள்ளையைப் பார்ப்பது அரிது. ஆனால், இங்கேயே தங்கிப் படிக்கணுமே, உன்னால முடியுமா தம்பி?’
‘எனக்குத் தெரியும் உஸ்தாத். நான் அதற்குத் தயார்.’ பளிச்சென்று பதில் வந்தது.

எனக்கு இன்னும் தயக்கம்.. ‘இல்ல.. நா எதுக்கு சொல்றேன்னா.. நீங்க வசதியான குடும்பம். இங்கே எல்லோரும் ஒரு ஹாலில், பாயில் தான் படுப்பாங்க. நீங்க ஏசிக்குப் பழக்கப்பட்டிருப்பீங்க.. ஆனா, இங்கே ஃபேன் மட்டும் தான். ஜன்னலைத் திறந்து வச்சா வேப்பமரக் காத்து நல்லா வரும். ஆனா, கூடவே கொசுவும் வரும். அதனால் சாயந்திரம் ஆனா ஜன்னல்களைக் கூட மூடி வச்சிடுவோம். டீ, காபி, பால், தயிர் எல்லாம் கிடையாது.

காலையிலும், மாலையிலும், சத்துமாவுக் கஞ்சியும், மதியம் பெரும்பாலும் சைவ உணவும்தான். வாரம் ஒரு நாள் முட்டை, ஒரு நாள் கோழி அல்லது ஆட்டுக்கறி, இரவு ஒன்பதரைக்கு லைட்டை அணைத்து விடுவோம். அதற்கு மேல் யாரும் தூங்காமல் உட்கார்ந்திருக்க முடியாது. அலைப்பேசிக்கு இங்கே அனுமதி இல்லை. வாரம் ஒரு நாள் பெற்றோருடன், வார்டனுடைய ஃபோனிலிருந்து பேசலாம். வீடு இந்த ஊரிலேயே இருந்தாலும் வாரா வாரம் வீட்டுக்குப் போக முடியாது. மூணு மாசத்துக்கு ஒரு முறை தான் போகலாம். இதெல்லாம் உங்களுக்குச் சரிப்பட்டு வருமா தம்பி?’

தந்தை கவலையுடன் மகனுடைய முகத்தைப் பார்த்தார். அவன் பளிச்சென்ற புன்னகையுடன்,

‘பரவாயில்லை உஸ்தாத்! என்னால் உங்களோட விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்க முடியும். ஃபலஸ்தீன் பிள்ளைகள் எத்தனை சிரமத்துடன் இடிபாடுகளில் இருக்காங்க.. அதை விடவா இது சிரமம்? குர்ஆனுக்காக இதைக் கூடவா செய்ய முடியாது?’ என்றான்.

இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவுமில்லை. ரமளானின் கடைசிப் பத்தில் மதரஸாவுக்கு விடுமுறை. பெருநாள் முடிந்து தான் புதிய மாணவர்களைச் சேர்ப்போம் என்று சொன்னேன்.

அவர்கள் கிளம்புவதற்கு முன் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டேன்.

‘நீங்களே அதிகம் படிச்சிருப்பீங்க.. உங்க மகனையும் பெரிய படிப்பு படிக்க வைக்கத் திட்டமிட்டிருப்பீங்க. மூணு, நாலு வருஷம் ஸ்கூல் படிப்பை நிறுத்திட்டு வந்திருக்கீங்களே, எப்படி அது?’

‘உண்மை தான். அந்த ஸ்கூல் அட்மிஷனுக்கே ஒரு இலட்சம் கொடுத்திருக்கேன். ஆனால், இந்த ஆசை என் மகன் மனதில் உதித்தது. நானும் அவனிடம் மனம் விட்டுப் பேசினேன். அவன் குர்ஆனை மனனம் செய்வதோடு நிறுத்துவதாக இல்லை. இன்ஷா அல்லாஹ் மக்கா அல்லது மதீனாவில் போய் மார்க்கக் கல்வியைப் படித்து விட்டு வரத் திட்டமிட்டிருக்கிறான்.’

‘நல்ல ஆசை தான். அல்லாஹ் அவனுடைய ஆசையை நிறைவேற்ற துஆச் செய்வோம். உங்களையும் நினைச்சா வியப்பா இருக்கு. வசதி வாய்ப்பு இருக்கறவங்க இந்த மதரஸாவுக்கு வருவது உணவோ, நிதியோ கொடுப்பதற்காகத்தான். முதல் முறையா அட்மிஷனுக்காக வந்திருப்பது நீங்கதான். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக. ஆமீன்.’

‘ஆமாம் உஸ்தாத்..! இங்கே மோதினார், இமாம் எல்லோருக்கும் என்ன சம்பளம் கொடுக்கிறாங்க? பதினஞ்சு, இருபது, இப்படித்தானே? இப்போ இருக்கும் விலைவாசியில ஒரு குடும்பம் இந்த வருமானத்தில வாழ முடியுமா? இமாம் இல்ம் உள்ள ஒருவர். அவர் இறுதிவரை ஏழ்மையில் தான் வாழணும். இந்த நிலையில அவர் மகனிடம் ‘நீயாவது படிச்சி முன்னேறுன்னு தானே சொல்வார்? அதனால வசதி இருக்கிறவங்க மார்க்கக் கல்வி கற்க தங்கள் பிள்ளைகளை அனுப்பி, இந்தச் சமுதாயத்தை நேர்வழிப்படுத்தும் இமாம்களை உருவாக்கணும்.’

‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!’ என்று தினமும் துஆச் செய்கிறோம். ஆனால் அதை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வைக்கிறோமா? என் மகன் பெரிய படிப்பு படிச்சி, காலம் பூரா சம்பாதிச்சாலும் வாங்க முடியாத அளவு சொத்து அவனுக்கு இருக்கு. இது அல்லாஹ்வுடைய மாபெரும் கொடை அல்லவா? அதற்கு நன்றியோடு இருக்க வேண்டாமா? மார்க்கக் கல்வி படிப்பதால அவனுக்கு உலகக் கல்வி இல்லாமல் போகாது. ஆர்வம் இருந்தால் அதையும் சேர்த்துப் படிக்கலாம். ஒரு பேராசியரோ, டாக்டரோ, இஞ்சினியரோ அல்லது ஒரு வியாபாரியோ இமாமாகவும் இருப்பதில் என்ன தவறு?’ 

அவர் கூறியதில் இருந்த உண்மை என்னைத் தாக்கியது. இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் இன்னும் பலர் சமுதாயத்தில் வர வேண்டும் என்று துஆச் செய்து கொண்டேன்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்