மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

வறுமை ஒழிப்பில் ஜகாத் - நிரூபணமான பொருளியல் முறை
- ஹெச். அப்துர் ரகீப், 1-15 ஏப்ரல், 2024

வறுமை ஒழிப்பில் ஜகாத்
- நிரூபணமான பொருளியல் முறை


நாள்தோறும் பல்வேறு பொதுக் கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. வாரம்தோறும் பள்ளிவாசல் களில் ஜும்ஆ உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்த உரைகளில் சிறந்தவற்றை இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரிக்க உள்ளோம். உரை நிகழ்த்தியவரோ, கேட்டவர்களோ இப் பகுதிக்கு உரைகளை அனுப்பலாம். உரையுடன் புகைப்படத்தையும் உரை இணைப்பையும் samarasam.article@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

Indian Centre for Islamic Finance (ICIF)பொதுச் செயலாளரும், ஜகாத் சென்டரின் அறங்காவலருமான ஏ.அப்துர்ரகீப் அவர்கள் Zakat Center India  யூடியூப் பக்கத்தில் ஜகாத் குறித்து ஆற்றிய உரைத்தொடர் இந்த இதழின் மேடையை அலங்கரிக்
கிறது.

ஜகாத்தின் முக்கியத்துவம், தேவை, பயன்பாடு

திருக்குர்ஆனில் எங்கெங்கெல்லாம் தொழுகையைக் குறித்து வருகிறதோ அங்கெல்லாம் ஜகாத்தைப் பற்றியும் வருகிறது: ‘எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி, தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்’ (திருக்குர்ஆன் 2:277)

திருக்குர்ஆனில் பல்வேறு நற்காரியங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொழுகையைப் பற்றியும் ஜகாத்தைப் பற்றியும் குர்ஆனில் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது, ஏன்?

தொழுகை, ஜகாத் இவ்விரண்டையும் புனித குர்ஆன் மார்க்கத்தின் அடிப்படை விஷயங் களாகக் கொண்டுள்ளது. ஒன்று இறைவனின் உரிமையெனில், மற்றொன்று அடியார்களின் உரிமையாகும். இவையிரண்டும் இல்லாமல் மார்க்கம் முழுமை பெறாது.

புனித குர்ஆனில் பல்வேறு இடங்களில், குறிப்பாக சூரா தவ்பாவில் (அத்தியாயம் 9) ஜகாத்தைக் குறித்து ஆறு வசனங்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. அவ்வசனங்கள் ஜகாத்தின் பல்வேறு பரிமாணங்களை விவரிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இஸ்லாத்தின் அடிப்படை, ஐந்து விஷயங்களில் உள்ளது : ஷஹாதத் கலிமா, தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் வழங்கல், நோன்பு நோற்றல், ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.’
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஐவேளை தொழுது வருகிறார்கள். மேலும் கடமையான தொழுகை மட்டுமல்ல, சுன்னத், நஃபில் தொழுகைகளையும் தொழுது வருகிறார்கள்.

கடமையான ரமளான் நோன்பு மட்டுமல்ல, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளும், ஏன் ஆஷூரா, அரஃபா நோன்புகளையும் நோற்கிறார்கள். ஹஜ்ஜையும் பயபக்தியுடன் கடைப்பிடிக்கிறார்கள், அத்துடன் உம்ரா செல்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், ஜகாத்தைக் குறித்த புரிதல் மிகக் குறைவாகவே உள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் அண்மையில் ஒரு சர்வே எடுத்தார்கள். சுமார் 5000 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. 30 விழுக்காட்டினருக்கு ஜகாத்தைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை. 40 விழுக்காட்டினருக்கு ஜகாத்தின் நிஸாப் அளவும் தெரியாது, ஜகாத்தை எப்படிக் கணக்கிடுவது என்பதும் தெரியவில்லை.

40 விழுக்காட்டினர் ரமளானில் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா என வினா எழுப்பினர். 60 விழுக்காட்டினர் ஆண்டுதோறும் ஜகாத் கொடுத்தவர்களுக்கே ஜகாத் கொடுத்து வருகின்றனர். ‘ஜகாத் கொடுத்து வருவதால் வாங்குபவர்கள் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா?’ என்ற வினாவிற்கு, ‘தங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை. ஜகாத்தைக் கணக்கிட்டுக் கொடுத்து விடுகிறோம், பிறகு அதைப்பற்றித் தெரியாது’ என பதிலளித்தனர்.

70 விழுக்காட்டினர் தங்களது உறவினர்களுக்கும், தங்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொடுப்பதாகத் தெரிவித்தனர். 15 விழுக்காட்டினர் உள்ளூர் பைத்துல்மால்களுக்கும் பொதுச் சேவைகளுக்காகவும் கொடுப்பதாகக் கூறினர். 30 விழுக்காட்டினர் மதரஸாக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் தொழுகையைக் குறித்து புரிதல் உள்ளது போல் ஜகாத்தைப் பற்றிய புரிதலோ, முக்கியத்துவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஜகாத் எவ்வளவு என்பதோ, அதன் நிஸாப் எவ்வளவு என்பன போன்ற அடிப்படை விஷயங்களே தெரியவில்லை. சாதரணமாக சில கிலோ அரிசி போன்ற தானியங்களாகவோ, துணியாகவோ, சில நூறு ரூபாய் பணமாகவோ வழங்கப்பட்டு வருகிறது. இதை வைத்து ஜகாத் வழங்கப்
பட்டு விட்டதாக நம்பி வருகின்றனர்.
ரமளான் மாதம் வந்துவிட்டால் நோன்பு, தராவீஹ் தொழுகை, இரவு விழித்து இபாதத் செய்வது பற்றி அறிவுறுத்தப்படுகிறது. திருக்குர்ஆன் ஓதுவதையும், அதன் விரிவுரைகளையும் படித்து வருகிறோம். ஆனால் ஜகாத் குறித்து அதிகம் பேசுவதில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் ஜகாத்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் தனது ‘ஹகீகத்துல் ஜகாத்’ என்ற புத்தகத்தில் நமது சமுதாயம் தொழுகை, ஜகாத்தைச் சரிவரப் பேணவில்லை என ஆதங்கப்படுகிறார். தற்போது நாம் வழக்கமாக்கிக் கொண்டுள்ள தனிப்பட்ட முறையில் ஜகாத் வழங்குவதை ஜகாத்தாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அல்லாஹ் தெரிவித்துள்ள முறையில் வழங்காததால் அதற்கு வேறு பெயர்தான் சூட்டவேண்டும் என்கிறார். ‘முஸ்லிம் சமுதாயப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு அல்லாஹ்வின் கட்டளையின்படி ஜகாத் வழங்குவதேயாகும்’ என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார். மௌலானா ஸத்ருத்தீன் இஸ்லாஹி அவர்கள் தொழுகையையும் ஜகாத்தையும் வாகனத்தின் இரு சக்கரங்களாக உவமைப்படுத்துகிறார்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் ஜகாத் வழங்கும் அமைப்பில் 1. அம்வாலுல் ஸதகாத், 2. ஆமிலீன ஸதகாத், 3. காதிபீன ஸதகாத் 4. அம்வாலுல் ஹுமாயில் என நான்கு பிரிவுகள் இருந்தன. அதன் மூலம் ஜகாத் வசூலிக்க, வரவு செலவு பதிவு செய்ய, விவசாய வருவாய், கால்நடை மூலம் வருவாய் போன்றவற்றின் வருவாய்களை மதிப்பிட்டு ஜகாத் நிர்ணயிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டனர். ஜகாத் வசூலிப்பவர்கள் சிறந்தவர்களாக, நேர்மையான, நம்பிக்கை
யானவர்களாக இருந்தனர். உமர் இப்னு கத்தாப்(ரலி), அம்ர் இப்னு ஆஸ்(ரலி), அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) போன்றவர்கள் இருந்தனர்.

உமர்(ரலி) அவர்கள் கலீஃபா ஆனார்கள், அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் எகிப்தின் கவர்னர் ஆனார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) போர்படைத் தளபதியாக இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) பெரிய வியாபாரியாக மட்டுமல்ல சுவனம் அறிவிக்கப்பட்ட பதின்மரில் ஒருவராக இருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் ஜகாத் வசூலிக்கச் சென்றனர்.

ஜகாத் பொருட்களில் எவற்றை வாங்கலாம், எவற்றை வாங்கக்கூடாது என்பதை விளக்கினார்கள். ஜகாத் வசூலித்த பிறகு அவர்களுக்காகத் துஆச் செய்ய வேண்டும், அன்பாகப் பேச வேண்டும் என்றும், அதேபோல் ஜகாத் வழங்குபவர்கள் வசூலிப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற நன்னடத்தை விதிகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

இஸ்லாமிய ஆட்சியில் ஜகாத்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் முதல் கலீஃபாவாகப் பொறுப்பேற்றார்கள். அவர்கள் காலத்தில் ஒரு சில கோத்திரத்தார் ஜகாத்தை (தனிப்பட்ட முறையில்) வழங்குவதாகவும், ஆனால் பைத்துல்மாலில் சேர்க்கமாட்டோம் எனவும் அறிவித்தனர். கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள், ‘யார் கலிமா சொல்லி, தொழுகைகளைத் தொழுது, நோன்பு நோற்று, ஹஜ் செய்தாலும் ஜகாத்தை பைத்துல்மாலில்
சேர்க்க மறுக்கிறார்களோ அவர்கள் மார்க்கத்தில் ஒரு குறை ஏற்படுத்துகிறார்கள். அப்படிச் செய்வதைத் தடுக்காமல் விடமாட்டேன்’ என்று கூறி அக்கோத்திரத்தார் மீது போர்ப் பிரகடனம் செய்தார்கள். இறுதி யில் அவர்கள் பைத்துல்மாலில் ஜகாத்தைச் சேர்த்தனர்.

உமர் ஃபாரூக்(ரலி) காலத்தில் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் யமன் தேசத்திற்கு ஜகாத் வசூலித்து பங்கிட அனுப்பப்பட்டார்கள். முதல் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு ஜகாத் மீதமாகி அதை முஆத் இப்னு ஜபல்(ரலி) தலைநகரம் மதீனாவிற்கு அனுப்பினார்கள். கலீஃபா உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள், ‘யமனில் ஏழைகள் குறைந்து விட்டார்களா, என்ன?’ என விசாரித்தார்கள். அடுத்த ஆண்டு 50 விழுக்காடு மீதமாகி மதீனாவிற்கு வருகிறது. அதற்கு அடுத்த ஆண்டு யமனில் வசூலிக்கப்பட்ட முழு ஜகாத்தும் ஜகாத் வாங்க யாருமில்லாமல் அப்படியே தலைநகரம் மதீனாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள்.

இதேபோல் மதீனா நகரத்திலும் ஜகாத் கொடுப்பதற்கு இருக்கிறார்கள், வாங்கத்தான் ஆளில்லை. இதே சுபிட்சமான நிலைதான் உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) ஆட்சிக் காலத்திலும் இருந்தது. ஜகாத் வாங்குபவர்கள் யாருமில்லையா? எனத் தெருத்தெருவாக அறிவிப்புச் செய்யப்பட்டது. இதே நிலைதான் மேலும் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு இருந்தது. தாத்தாரியர்கள் ஈராக் மீது படையெடுத்து அழித்த பிறகு இந்த ஜகாத் வசூலிப்பு முறை நின்று போனது.

தானமளிக்கும் தகுதி (நிஸாப்), தானமளிக்கும் தகுதி பெற்றவர் (ஸாஹிபே நிஸாப்)

ஜகாத், நான்கு பொருட்களின் மீது கடமை யாகிறது. 1. தங்கம், 2. வெள்ளி, 3. ரொக்கப் பணம், 4. வியாபாரப் பொருள்கள். 

தங்கம் 87.5 கிராம் இருந்தாலும், வெள்ளி 612.5 கிராம் இருந்தாலும் அந்த அளவிற்கு மதிப்புள்ள ரொக்கம் இருந்தாலும், வியாபாரப் பொருட்கள் இருந்தாலும் அவை சந்திர காலண்டர் அதாவது ஹிஜ்ரி காலண்டர்படி தொடர்ந்து ஓர் ஆண்டு இருந்தால் ஜகாத் கொடுக்கக்கூடிய தகுதி வந்துவிடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் மட்டுமில்லாமல் புதிதாக ஷேர், ஸ்டாக் ஆகியன முளைத்துவிட்டன. ஷேர், ஸ்டாக் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுவதும் உண்டு. அதை வாங்கி விற்பதும் உண்டு. முதலீடு செய்வதில் லாபத்தின் மதிப்பு மேற்குறிப்பிட்ட மதிப்பு இருக்க வேண்டும். அதேபோல் ஷேர், ஸ்டாக் வாங்கி விற்பதால் வியாபாரப் பொருளாகக் கொள்ள வேண்டும். எனவே தற்போதைய காலகட்டத்தில் மார்க்க அறிவுடன் பொரு ளாதாரத் துறை அறிவும் பெற்றவர்கள் இந்த ஜகாத் வசூலிப்புத் துறையில் தேவைப்படுகின்றனர்.

இவற்றைத் தவிர்த்து விவசாயப் பொருட்களும் இருக்கின்றன. அரிசி, கோதுமை, திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவை. மழையை எதிர்பார்த்த விளைச்சல் எனில் அதிலிருந்து 10% ஆகவும், நீராதாரம் அமைந்த விளைச்சல் எனில் 5% ஆகவும் ஜகாத் ஆகும். இதை உஷ்ர் என்று கூறுவார்கள். இதற்கு ஒரு சந்திர ஆண்டு பூர்த்தியாக வேண்டுமென்ற கணக்கில்லை. அறுவடையின் போது வழங்க வேண்டும்.

கால்நடைகள் வியாபாரப் பொருளாக இருப்பின் அதற்கும் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும். ஐந்திலிருந்து ஒன்பது ஒட்டகங்களுக்கு ஒரு மாடு என்றும் நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடும் ஜகாத் அளவாகும்.

ஷாஹ் வலியுல்லாஹ்(ரஹ்) அவர்களின் கூற்றுப்படி, ‘மூன்று பேர் உள்ள ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்டிற்கு வாழ்க்கை ஓட்டுவதற்கான உணவு வைத்திருப்பவர் ஜகாத் வழங்கத் தகுதி படைத்தவராவார்.’

வறுமை ஒழிப்பில் ஜகாத்

நமது நாட்டில் முஸ்லிம்களின் பொருளாதார நிலையை சச்சார் கமிட்டி அறிக்கையும், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னின் வறுமை பற்றிய அறிக்கையும் விளக்குகிறது. அண்மையில் பிரெஞ்சு சமூகவியல் விஞ்ஞானி கிறிஸ்தோஃபெ ஜாஃப்ர்லாட்(Christophe Jaffrelot) தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் நமது இந்தியாவின் மக்கள்தொகையில் 31% வறுமையில் உழல்கிறார்கள், 18-24 வயது இளைஞர்கள் வேலையில்லாமலும், கல்வியறிவு இல்லாமலும் இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கிறார். வங்காளத்தில், வட மாநிலங்களில் முஸ்லிம்கள் மிகவும் மோச மான நிலையில் இருக்கிறார்கள்.

நாம் குடிசையில் நுழைந்து அந்த ஏழைகளின் நிலமையைப் பார்ப்பதில்லை. ஆனால் உமர் ஃபாரூக்(ரலி) நாட்டின் கலீஃபா வாக இருந்தும் இரவு நேரத்தில் அந்தப் பாலைவன நாட்டில் ஏழைகளின் நிலமையை அறியச் செல்வார்கள். சாப்பிட எதுவும் இல்லாத ஏழைப்பெண் பசியால் தவிக்கும் குழந்தைகளை ஏமாற்றித் தூங்க வைக்க காலிப் பானையில் நீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்ததை அறிந்து ஒரு மூட்டை கோதுமையைத் தன் முதுகில் சுமந்து வந்து கொடுத்தார்கள். ஏழை கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த போது தனது மனைவியை அழைத்து வந்து பிரசவம் பார்க்கச் செய்தார்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: ‘உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக..’ (திருக்குர்ஆன் 59:7) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ‘என் இறைவா, இறைநிராகரிப்பிலிருந்தும் வறுமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என துஆக் கேட்டார்கள்.

நாம் ஏழை மக்களின் வறுமையைப் போக்க வழிமுறை காண முயற்சிக்கவில்லை எனில் அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்போம்.

நாம் நமது பகுதிகளில் ஏழைகள், அவர்களின் தேவைகள், வசதியுள்ளவர்கள் குறித்த சர்வே எடுக்க வேண்டும். அண்மையில் நமது அரசு நிதி ஆயோக் மூலம் ஆய்வு நடத்தி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டின் மிக மோச
மான வறுமையில் உள்ள 20 பகுதிகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் 11 பகுதிகள் ஏழை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளாகும்.

நாட்டிலேயே மிக மோசமாக வறுமை பாதித்துள்ள பகுதி டில்லி அருகே உள்ள ‘மேவாத்(Mewat)' ஆகும். அதேபோல் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நாட்டிலேயே மிகச் செழுமையான பகுதி டில்லி அருகில் உள்ள குர்காவ்ன் (Gurgavan)). மோசமான அடிப்படை வசதிகள் உள்ள மேவாத்திற்கு அருகே உள்ளது, உயர்ந்த மிக வசதியான பகுதி குர்காவ்ன். விண்ணை முட்டும் மாடிகளுக்கு மிக அருகிலேயே மோசமான ஓலைக்குடிசை!

இந்நிலையை சரிப்படுத்த நம்மிடம் உள்ள வழிமுறை ஜகாத். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய கூட்டுமுறையில் ஜகாத் வசூலித்து இஸ்லாமிய வழிமுறையில் விநியோகித்தால் வறுமை ஒழியும். இதற்கு நபிவழியான கூட்டுமுறையில் ஜகாத் வசூலித்து பங்கிடு முறைக்கான விழிப்பு உணர்வை எற்படுத்த வேண்டும்.

வறுமையை ஒழிக்க நாம் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். வறுமைக் கடலில் செழுமை தீவுகளாக உள்ளன. கடலாக உள்ள ஏழ்மையை இன்ஷா அல்லாஹ் தீவுகளில் உள்ள செழுமையின் ஜகாத்தைக் கொண்டு
நீக்குவோம்.

எழுத்தாக்கம்: நாட்டாம்கார் அமீனுர் ரஹ்மான்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்