மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கடிதங்கள்
, ஏப்ரல் 16-30, 2024


குற்றங்கள் குறைய..

ரமளான் ஐயமும் தெளிவும் பகுதியில் பொறுப்பாசிரியரின் சிறப்பான விளக்கம் நெறி மறந்த மாந்தர்களுக்கு விழிப்பு உணர்வும், குறைகூறுபவர்களுக்குத் திகைப்பையும் தருவதாக அமைந்திருந்தது.
தத்துவக் கவிஞர் பத்ருதீனின் ‘அரும்பட்டும் இன்பம்’ சந்தக் கவிதை செவிக்கு இன்பம். தலையங்கம் ‘பெண்கள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா’ சரியான சவுக்கடி வார்த்தைகள். தண்டனையைக் கடுமையாக்காமல் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரை குற்றங்கள் குறையப் போவதில்லை.

- சோழா புகழேந்தி, கரியமாணிக்கம்

மனதைக் கவர்ந்த பரிசு

ரமளான் விருந்து மண்டபத்தின் மலர் படிக்கட்டுகளில் நம்மை வரவேற்க அல்லாஹ் காத்திருக்கின்றான் என்ற அற்புத வார்த்தைகள் என் மனதைக் கவர்ந்த பரிசு. ‘அரும்பட்டும் இன்பம்’ கவிதை அனுபவத்திலிருந்து துள்ளிக் குதிக்கிறது. எண்ணங்களின் புத்துயிர் வரிகள்.

- ப.பீர் இலாஹி, உத்தமபாளையம்

தெளிவான ஆக்கங்கள்

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா? தலையங்கம் அருமை. அஷ்ஷெய்க் அகார் முஹம்மதுவின் ரமளான் கட்டுரை சிறப்பு. வீணான செயல்களிலிருந்து விலகி இருப்போம் என்ற தொடர் மிக மிக அருமை. சேயன் இப்ராகிமின் பா.ஜ.கவின் கொல்லைபுற அரசியல் என்ற கட்டுரை மிக விளக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது.

- அபு அல்மஹதி (மின்னஞ்சலில்..)

ஆறு முதல் அறுபது வரை..

தலையங்கம் அருமை. உண்மைதான்..! பெண்கள் வாழத் தகுதி இல்லை இந்த நாட்டில்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடு இல்லை, பெண் பிள்ளைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஆறு வயதுச் சிறுமிக்கும் அறுபது வயது மூதாட்டிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. நிர்பயா, ஆசிபா, பில்கீஸ் பானு என எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டாலும் இங்கு குற்றங்கள் குறையப் போவது இல்லை. தலையங்கம் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
புதுச்சேரி அரசு இழப்பீடு தொகை கொடுத்தால் மட்டும் போதாது. தீர்ப்புகள் திருத்தப் பட வேண்டும். இஸ்லாமியச் சட்டப்படி தன்டனை வழங்கினால் தவறு செய்பவர்கள் பயம் கொள்வார்கள். ‘இரவு ஒரு பெண் நகை அணிந்து எந்தத் துணையும் இல்லாமல் பாதுகாப்பாகச் செல்கிறாளோ அதுவே சுதந்திர நாடு’ என்ற காந்தியின் எண்ணம் எப்போது நிறைவேறுமோ? இந்த நாட்டை ஆள்பவர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது தலையங்
கத்தின் தலைப்பு.

- பானு ஷிஹாப், கடையநல்லூர்

அட்டைப்படச் செய்தி ஆழமானது

காலத்தைப் பயனின்றி கரைக்கவே வெட்டிக்கதை பேசுவது பொழுதுபோக்கானது. அதனால்தான் பொறுப்பேற்று தீர்வு காணவேண்டிய சமூகப் பிரச்னைகள்கூட மறக்கடிக்கப்படுகிறது. காஸா மிகப்பெரிய திறந்தவெளி இடுகாடான பிறகும், ‘அப்படியா!’ என்று அடுத்த செய்திக்குத் தாவும் அவலத்தை அட்டையிலேயே கண்டித்துத் திருத்தியதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- அ. யாழினிபர்வதம், சென்னை-78

தோலுரித்த கட்டுரை

பாஜ.கவின் கொல்லைப்புற அரசியலை சேயன் இப்ராகிமின் கட்டுரை தோலுரித்துக் காட்டியது. ஆளத்தகுதியற்ற பா.ஜ.கவின் நயவஞ்சக வலைக்குள் பதவி, பணத்திற்கு ஆசைப்பட்டு அடிமையாகும் கேடுகெட்ட அரசியல்வாதிகளையும் இனம் காட்டியது. நாட்டு மக்களை விழிப்படையச் செய்ய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். காங்கிரஸ் இன்னும் விழிப்படைய வேண்டும் என்பதே மக்களின் கவலையாக உள்ளது. பெண்கள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா - தலையங்கம் படித்ததும் மனது திகிலும் கவலையும் கொண்டது. ஃபாசிஸ ஆட்சி அகற்றப்பட்டே ஆகவேண்டும்.

- பருத்தி இக்பால், மேலப்பாளையம்

சத்தியத்தைச் சொல்லும் சமரசம்

சமரசம் எத்தனை அருமருந்து. சமரசம் இல்லாத வரலாற்றை வாசிக்கமுடியுமா? சமரசம் இல்லாத வாழ்க்கை சாத்தியமா? சமரசம் மட்டுமே சண்டைகளை வெல்கிறது, சத்தியத்தைச் சொல்கிறது. சமரசமே மகிழ்ச்சியின் வேர். சமரசம் இதழ் பெயருக்கேற்ப சிறப்புடன் திகழ்வது வாழ்த்துக்குரியது.

- லெட்சுமி சங்கரன், அம்பை

ஆழமான ஆக்கங்கள்

முஹம்மது முஜம்மில் எழுதிய திருமறையின் மாதம் கட்டுரையில் குர்ஆன் குறித்த பல அரிய தகவல்கள் நிறைந்திருந்தன. திருக்குர்ஆனுக்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. பொருளறிந்து ஓத வேண்டும். அன்ஸாரிகள் குறித்த ரஹ்மத்துல்லா மஹ்ழரியின் கருத்து சிந்திக்கத்தக்க முன்னுதாரணம். யுனெஸ்கோ பட்டியலில் இஃப்தார் இடம்பெற்ற செய்தி மகிழ்வுக்குரியது. விருந்தாளியல்ல ரமளான் கட்டுரையும் அதில் மேற்கோள் காட்டப்பட்ட உதாரணமும் வெகு சிறப்பு. நமது வரலாறு அறிவோம் என்ற ஹாபிழ் முஹம்மது இப்ராஹீமின் ஒருபக்கக் கட்டுரை பல சிந்தனைகளை வெளிப்படுத்தியது. சேயன் இப்ராகிம் பாஜகவின் முகமூடியைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். சமரசத்தின் ஆக்கங்கள் ஆழமானவை. எளிமையானவை.

- எம். லைலா பேகம், எஸ். அஜிதா, ஆர்.ஷர்மிளா, எஸ். மகுதனன், எம்.சகுபர் அலீ, ஏ.பரிதா, தேனி

ஃபலஸ்தீன் வெல்லும்

மரண தண்டனையே குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற கருத்து உண்மையானது. ஃபலஸ்தீன் குறித்த முகப்புக் கட்டுரை மனதைக் கனக்கச் செய்துவிட்டது. ஆரோன் புஷ்னெலின் உயிர்த்தியாகம் ஃபலஸ்தீன விடுதலைக்கு வழி
வகுக்கட்டும். ரமளான் குறித்த கேள்விகளுக்கு ஆசிரியர் அளித்த பதில்கள் சிந்தனைக்கு விருந்து. வெல்லுங்கள் செல்லங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தெளிவான அறிவுரை

- ப. குருசாமி, தேனி

அவர் பச்சோந்தி அல்ல

ஒன்பது வயதுச் சிறுமியை சிதைத்துக் கொன்ற கயவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மற்ற வர்கள் குற்றம் செய்ய அஞ்சுவார்கள். மது போதைதான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம். மதுவிலும், இணைய போதையிலும் இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். நிதிஷ்குமாரை பச்சோந்தியுடன் ஒப்பிட்டு சேயன் இப்ராகிம் எழுதியிருந்தார்.
பச்சோந்திக்கு இயற்கைக் குணம் அது. அதை விடக் கீழானவர்தான் நிதிஷ். அவருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பதவி மோகம் படுத்தும் பாடு நூல் விமர்சனம் படித்தேன். நூலை வாசிக்க வேண்டும்.

- இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்