மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பொருளாதாரம்

இந்தியாவின் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு முறை 10 அம்சத் திட்டங்கள்
- ஹெச். அப்துர் ரகீப், பொதுச் செயலாளர், Indian Centre for Islamic Finance (ICIF), ஏப்ரல் 16-30, 2024


 

‘ஜகாத் என்பது ஏழை மக்களுக்கான மிகப்பெரிய அளவிலான செல்வப் பரிமாற்றம்’ என்று கார்டியன் (Gaurdian) நாளிதழ் கூறுகிறது. தகுதியுடைய முஸ்லிம்கள் அனைவரும் தங்களிடம் உள்ள சேமிப்புகள், வங்கிக் கணக்குகள், நகைகள், முதலீடுகள் தங்களது தேவைக்குப் போக மீதம் இருப்பவற்றில் ஆண்டுக்கு 2.5% ஜகாத் வழங்க வேண்டும்.

ஜகாத் இஸ்லாத்தின் மூன்றாவது தூண் என்று கூறப்பட்டாலும் வெகுஜன மக்கள் மத்தியில் அதைக் குறித்த விளக்கம் குறைவாகவே இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் அதனை நடைமுறைப்படுத்துவதும் இல்லை. அதே சமயம் இஸ்லாத்தின் பிற தூண்களான தொழுகை, நோன்பு, ஹஜ் குறித்து நம் சமூக மக்களின் மத்தியில் தெளிவான புரிதல் இருக்கிறது. பலர் ஜகாத் குறித்த தெளிவின்மையோடு அதனை தவறாகக் கணக்கிட்டு வழங்கி வருகின்றனர். இன்னும் சில வேளைகளில் ஜகாத் வழங்காமலே இருந்து விடும் நிலையும் காண முடிகிறது.

ஜகாத் என்பது வெறுமனே தொண்டு

என்று மட்டும் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இறைநம்பிக்கையையும் நம்பிக்கையாளர்களையும் செயல்பட வைக்கும் ஒரு நிறுவனமாக ஜகாத் இயங்குகிறது. ஜகாத் பெறத் தகுதியுடையவர்களை எட்டு பிரிவுகளாக குர்ஆன் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் மக்கள் பெரும்பாலும் சில கிலோ எடையுள்ள உணவு தானியங்களை வழங்குவதன் மூலமும் சில மீட்டர் அளவுள்ள துணிகளை வழங்குவதைக் கொண்டும், ஒரு சிறு தொகையை தேவையுடையவருக்கு வழங்குவதைக் கொண்டும் மனநிறைவு அடைகின்றனர். ஆனால் ஜகாத் பெற்ற பின்னரும் ஏழை, தேவையுடையவரின் வாழ்க்கை ஆண்டுக் கணக்கில் அதே நிலையில் இருப்பதைக் காண முடிகிறது.

சச்சார் குழுவின் அறிக்கையின்படி நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் அவர்களின் SNAP அறிக்கை, டாக்டர். கிரிஸ்டோபர் ஜஃபரால்ட் ஆகியோரின் அறிக்கை இந்திய மக்களின் அவல நிலையை, குறிப்பாக முஸ்லிம்களின் நிலையை அறிய பெரிதும் உதவுகிறது.

அவ்வறிக்கையின்படி நம் நாட்டில் யாசிப்பவர்களில் நான்கில் ஒருவர் முஸ்லிம்களாக உள்ளனர். அதிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். முஸ்லிம்களின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது முஸ்லிம் கைதிகள் இரண்டு மடங்காக இருக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள், இளம் பெண்கள் அதாவது 18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், வேலை இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பொறுப்பு என்னவென்றால் ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து அதனைச் சரி செய்ய வேண்டும். வறுமை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது. 1. பொருளாதாரம் சார்ந்தது
2. சமூகம் சார்ந்தது. பொருளாதாரம் சார்ந்த வறுமை என்பது அன்றாடத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், தூய்மையான குடிநீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. சமூகம்சார்ந்த வறுமை என்பது கல்வி, உடல் நலம், தகவல் அணுகுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஜகாத் நிறுவனமயமாக்கல் (Institutionalization of zakat) என்பது சமூக நலன், பொருளாதார மேம்பாட்டுடன் கூடிய சிறந்த சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. ஜகாத் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தவும் நமது நாட்டில் அதனை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்கள் மத்தியில் சிந்தனையை மேம்படுத்தி, பயனுள்ள தொடர்பை ஏற்படுத்தும் வகையில் 10 தலைப்பின் கீழ் ஒரு வரைபடம் தீட்டப்பட்டுள்ளது.

1. பொது விழிப்பு உணர்வு (General awareness)

விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் முதல் படியாக மக்கள் மத்தியில் ஜகாத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட வேண்டும். நபி(ஸல்) அவர்கள், கலீஃபாக்களினால் எவ்வாறு ஜகாத்திற்கான வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டது என்ற புரிதலை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் ஜகாத் நிறுவனமாக்கப்பட்டது என்பதை அடிக்கோடிட்டு கூற வேண்டும். அதாவது நபி(ஸல்) அவர்கள் தமது சிறந்த தோழர்களை ஜகாத்தை வசூலித்து பங்கீடு செய்யும் பணியில் நியமித்திருந்தார்கள்.

உமர்(ரலி), உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பம் உருவானது. அதாவது ஜகாத்தை வழங்குவதற்கான மக்கள் இருந்தனர். ஆனால் அதைப் பெறுவதற்கு எவரும் இல்லை. இவ்வாறாக ஒரு முன்மாதிரியான பகிர்வு, அக்கறையுள்ள சமுதாயம் அப்பொற்காலத்தில் உருவானது.

2. இறை நம்பிக்கையுள்ள, திறமையானவர்களை ஈடுபடுத்துதல்

ஜகாத் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதைக் கடந்து, இவ்வமைப்பு முறையின் மேலாண்மையில் ஆண்கள், பெண்களின் உணர்வு, ஆற்றல்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இறைநம்பிக்கை கொண்ட மக்கள் மட்டுமல்லாது தொழில் முறை சார்ந்தவர்களும் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இன்றைய உலக விவகாரங்களில் சிறந்த புரிதல், புலமைபெற்ற அறிஞர்கள், கணக்குகள், தணிக்கை குறித்து அறிவு கொண்ட பட்டயக் கணக்கறிஞர்கள் (chartered accountants) சமூகச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து சிறந்த மக்கள் தொடர்புப் பண்புகளை கொண்டுள்ளனர். நெறிமுறை சார்ந்து மட்டுமல்லாது திறமையான முறையிலும் இவ்வமைப்பு வளர்ச்சி அடைய வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் முஹல்லா அளவில் இந்த அமைப்பிற்கான முயற்சியைத் தொடங்கலாம்.

3. நிதிசார் கல்வி அறிவு, செல்வ உருவாக்கம்

நமது சமூக மக்களிடையே நிதிசார் கல்வி அறிவு போதிய அளவு இல்லை. செல்வ உருவாக்கம், தொழில் முனைதல் உருவாக்குதல் ஆகியவை மூலம் இலாபம் நிறைந்த வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். சேமிப்புப் பழக்கம், அதிக உற்பத்தி தரும் வணிகத்தில் முதலீடு செய்தல் ஆகியவை சரியான முறையில் திட்டமிடப்பட வேண்டும். இதன் மூலம் கொடையாளிகள் நிறைந்த ஓர் உறுதிமிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். இதன் மூலம் உண்மையான பொருளாதாரத்தை மக்கள் உணரும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் முடியும்.

நபி(ஸல்) அவர்கள் வணிகம் செய்த மதீனாவின் சந்தை நிலவரம் குறித்த விளக்கங்கள், அவர்களுடைய மனைவி கதீஜா(ரலி) அவர்கள் செய்த வணிகம் சார்ந்த எடுத்துக்காட்டுகள் இன்றைய முஸ்லிம்கள் இலாபம் தரும் தொழில் முனைவில் ஈடுபட தூண்டுகோலாய் அமையும். சுவனம் வாக்களிக்கப்பட்ட 10 நபித் தோழர்களில் நால்வர் 1. கலீஃபா உஸ்மான்(ரலி) 2. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) 3. ஜுபைர் பின் அவ்வாம்(ரலி) 4. தல்ஹா பின் உபைதுல்லா(ரலி) ஆகியோர் இன்றைய பொருளாதார நிலையில் ஒப்பீடு செய்தால் அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர்.

4. மதரஸா பாடத் திட்டங்களில் நவீன கால ஜகாத் மேலாண்மைப் பாடங்கள்

நமது சமுதாய ஆலிம்கள் ஒரு புது முயற்சியாக ஜகாத் குறித்த விரிவான பாடங்களை மதரஸா பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும். இப்பாடத்திட்டங்கள் மதக் கருத்தரங்குகளில் விவரிக்கப்பட வேண்டும். செயல்முறை களப்பணிகள் சார்ந்த சமூகப் பொருளாதார மதிப்பாய்வுகளில்(survey) மக்களின் இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்தி மதிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஜகாத்தின் பல்வேறு துறைகளுக்கு பல்வேறு வகையான அறிவு, ஆற்றல் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஜகாத்தை வசூலிக்க ஒருவருக்கு உளவியல் சார்ந்த அறிவு அவசியம் தேவைப்படுகிறது. மக்களை அணுக மக்கள் தொடர்பு பண்பு அவசியமாகிறது. வரவு செலவு கணக்கு முறையை நிர்வகிக்க கணக்குகள், தணிக்கை (accounts and audit) குறித்த அறிவு அவசியமாகிறது. சமூக பொருளாதார மதிப்பாய்வுகள் மேற்கொள்ள புள்ளியியல் குறித்த அறிவு தேவைப்படுகிறது. பல்வேறு நிலைகளில் பங்கீடு செய்ய நிதி நிபுணத்துவம் அவசியமாகிறது.

மதக் கருத்தரங்குகளில் ஜகாத் குறித்த தெளிவான, விரிவான பாடத்திட்டங்களை இணைப்பது, நமது நாட்டில் ஜகாத் இயக்கத்தை முன்னணிப்படுத்த நமது ஆலிம்களுக்கு உதவுகிறது. இந்திய இஸ்லாமிய ஃபிக்ஹ் அகாடமி, உலக ஜகாத் சபை போன்ற அமைப்புகளை ஜகாத் தொடர்பான விவகாரங்களில் ஒருங்கிணைக்க அணுகலாம்.

5. பள்ளிவாசலை மையமாக அமைத்து செயல்படுதல்

ஒவ்வொரு முஹல்லா பள்ளிவாசல்களிலும் சமூக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் ஜகாத் குறித்து தேர்ச்சி பெற்ற அறிஞர், ஒரு பட்டயக் கணக்காளர், சில சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைக்கப்பட வேண்டும். தொடக்கப் பணியாக அந்தந்த வட்டாரத்தில் ஜகாத்தை வசூலித்தல், விநியோகித்தலை அடிப்படையாகக் கொண்ட சமூக, பொருளாதார மதிப்பாய்வு (survey) மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் சில பெண்களையும் இணைத்துச் செயல்படுவதன் மூலம் குடும்பங்களின் பொருளாதார நிலை, குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் நிலை குறித்து அறிவதற்கு ஏதுவாக இருக்கும். அப்பெண்கள் ஜகாத் இயக்கம் குறித்த செய்தியை குடும்பங்கள், சமூகத்துக்கு எடுத்துக் கூறுவர். குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாகவும், அதே சமயம் இறைநம்பிக்கை உடையவர்களாகவும் தொழில் முறை தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியமாகிறது.

6. நிதி தொழில் நுட்பம்

ஜகாத்தை வசூலித்து விநியோகம் செய்வதில் நிதி தொழில்நுட்பம் நேர்மறையான, ஆற்றல்மிகு பங்கு வகிக்கிறது. ஜகாத் மூலமாகக் கிடைத்த தொகையை டிஜிட்டல் மயமாக்குவது இந்த மொத்த அமைப்பையும் ஊக்குவிப்பதாக அமைகிறது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் மக்களுக்கு அதிக இலகுவை ஏற்படுத்துவதைத் தவிர, நம்பிக்கையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது வெளிப்படைத் தன்மையையும் கட்டமைக்கிறது. கூட்டு நிதி(crowd funding)
நிதி தொழில்நுட்பத்தில் அதிக அளவிலான மக்கள் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் பணத்தை அதிகப்படுத்துகிறது. கணக்கு, தணிக்கை பயன்பாட்டிற்கு தொகுதிச் சங்கிலி முறையும் (black chain) அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

7. ஜகாத், குறு நிதி (micro finance)

ஜகாத் தொகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முறையாக குறு நிதி செயல்படுகிறது.

ஜகாத் தொகை பெரும்பாலும் ஏழை மக்களின் அவசரத் தேவைகளை நிறைவு செய்வதற்காக வழங்கப்படுகிறது. ஆனால் அத்தகைய செலவு பணமாக spent money அல்லாமல் முதலீட்டுப் பணமாக (investment) வழங்குவது போதுமான அளவு தொழில் நிறுவனங்களைக் குறிப்பாக சிறு, குறு தொழிலை மேம்படுத்த உதவுகிறது. சிறு, குறு தொழில் மூலம் ஏழை மக்களின் நிலையை உயர்த்துவதன் மூலமாக ஏழை மக்களுக்கு வேலை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நிலை அதிகரித்தால் அதன் விளைவாக வறுமை நிலை குறைவது சாத்தியமாகிறது. ஜகாத் பெறுபவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறிவிடுவர். கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தேவையுடையவர்களுக்கு ஜகாத் தொகையிலிருந்து வட்டி இல்லாக் கடன் வழங்கினார். மேலும் அவரும் அவ்வசதியைப் பயன்படுத்தி கடன் பெற்று பயனடைந்திருக்கிறார்’ என்று டாக்டர் ஹமீதுல்லாஹ் குறிப்பிடுகிறார்.

8. ஜகாத் மூலமாக திறன் வளர்ச்சி

மலேசியா போன்ற சில நாடுகளில் ஏழை மக்கள் உற்பத்தித் திறன் கொண்டவர்கள்(productive poor), உற்பத்தித் திறன்(non-productive poor) அற்றவர்கள் என்று வகைப்படுத்தப் படுகின்றனர். உற்பத்தித் திறன் அற்ற ஏழைகள் என்ற பிரிவில் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்டு முழுவதற்கும் மருத்துவத் தேவை உடையவர்கள், உழைக்க இயலாதவர்கள் ஆகியோருக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான தொகை தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. உற்பத்தித் திறன் கொண்ட ஏழைகள் என்ற பிரிவில் சுய தொழில் செய்வோர், முதலீடு இன்மையின் காரணத்தால் தொழில் தொடங்க இயலாமல் உள்ள திறன் மிக்க நபர்களும் அடங்குவர்.

இந்த இரண்டாவது பிரிவினருக்குத் தனிக் கவனம் அளித்து அவர்களுக்குக் கணிசமான தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலமாக அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாகவும் சுயசார்பு உடையவர்களாகவும் மாறி தமது வாழ்வில் முன்னேறி மேலும் சில ஆண்டுகளிலேயே அவர்களது வாழ்வாதாரம் உயர்ந்து இந்த சமூகத்திற்கு அவர்கள் திருப்பி வழங்கும் நிலை, ஏதாவது அவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் நிலை உருவாகும்.

9. ஜகாத்தும் முஸ்லிமல்லாதவர்களும்

கலீஃபா உமர்(ரலி) அவர்களின் கூற் றுப்படி, ஜகாத் பெறத் தகுதி உடையவர்கள் என்று கூறப்படும் எட்டு பிரிவினர்களில் ‘ஃபுகரா’ என்று குறிப்பிடப்படுவோர் முஸ்லிம் ஏழைகள், ‘மஸாகீன்’ என்று குறிப்பிடப்படுவோர் முஸ்லிம் அல்லாத ஏழைகள். இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் வாழக்கூடிய நாம், ஒரு சிறு விழுக்காட்டு ஜகாத் தொகையை பிற சமூகத்தைச் சார்ந்த ஏழை, தேவையுடைய மக்களுக்கு வழங்குவதன் மூலம் பிற சமுதாய மக்களிடையே முஸ்லிம்கள் குறித்த நேர்மறையான விளைவு, தனித்துவமான முன்மொழிவு உருவாகக் காரணமாக அமைகிறது. இதனைச் செயல்படுத்துவதற்கு முன்பாக மார்க்க அறிஞர்களும், சமூகத் தலைவர்களும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.

10. ஜகாத்தும் நிலையான வளர்ச்சித் திட்டமும்

ஐநாவின் நிலையான வளர்ச்சித் திட்டத்தில்(SDG) குறிப்பிடப்படுவதாவது, வறுமை ஒழிப்பு, அமைதி, செழிப்பை அனைத்து மக்களுக்கும் உறுதி செய்தல் ஆகியவற்றை நடை முறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜகாத், SDG இரண்டுக்கும் இடையே குறிப்பிடத்தக்க பொதுவான தன்மைகள் உள்ளன. ஷரீஅத்தின் அடிப்படையான இலக்குகள் மகாஸித்தே ஷரீஆ என்று கூறப்படுகிறது.

இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள ஜகாத் நிறுவனங்கள் தங்களது பல்வேறு திட்டங்களை ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்(UNDP), பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. நாம் இந்தியாவிலும் நம்முடைய ஜகாத் நிறுவனங்களைUNDP, UN ஏஜென்சிகளுடன் இணைத்துச் செயலாற்றுவதன் மூலம் நம் நாட்டிலும் வறுமை ஒழிப்பு, அனைவருக்குமான பகிர்வு, அக்கறை உள்ள சமூகத்தை உருவாக்க முடியும்.

தமிழில் : உம்மு ஹஃப்ஸா

 


ஜகாத் மேலாண்மையில் பிற நாட்டின் வெற்றிக் கதைகள்

உலக ஜகாத் பேரவையில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. அதில் தெற்கு ஆப்பிரிக்கா, கானா போன்ற நாடுகள் முஸ்லிம் சிறுபான்மை நாடுகளாகவும், பிற நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாகவும் உள்ளன. ஜகாத் தொகையைச் சரியான முறையில் பயன்படுத்த மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பல்வேறு புதிய உத்திகள், நுட்பங்களை ஆளுகின்றன. இந்தோனேசியாவின் ஆஅஙூ‡அகு அமைப்பு வெகுஜன சுத்திகரிப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் முதலீடு செய்வதுடன் சமூகம், கல்வி சார்ந்த துறைகளில் பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

நிதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஜகாத்தை வசூலித்தல், விநியோகித்தல் ஆகியவற்றில் மலேசியா பல புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. குஅ‡ஙூஅஊ தெற்கு ஆப்பிரிக்காவின் ஒரு தனித்துவமான அமைப்பு ஆகும். 2-3% முஸ்லிம்களை மட்டுமே கொண்ட அந்நாட்டில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவ்வமைப்பை இரண்டு புகழ்பெற்ற பெண்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர். ஃபைருஸ் முஹம்மத் அமைப்பின் தலைவராகவும், யாஸ்மீனா ஃப்ராங்கி தலைமை நிர்வாக அதிகாரியாகவும், 52% பெண் பணியாளர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு சர்வதேச நிதி ஆலோசனையகத்திடமிருந்து ‘உலகளாவிய நல்லாட்சி விருதை’ வென்றிருக்கிறது. சமூகத்துறையில் திறன் வளர்த்தல், பரோபகாரம் ஆகியவற்றுக்கான விருதை இச்ட்ஞணூடிஞீஞ்ஞு க்ஓ விடம் பெற்றிருக்கிறது. நமது அண்டை நாடான பங்களாதேஷில் மிகவும் வலுவான ‘ஜகாத் மேலாண்மை மையம்’ செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் வாயிலாக மிகவும் திறமையான நபர்கள் நன்கு தேர்ச்சி பெற்ற பணியாளர்களுடன் இணைந்து கிராமப்புற வளர்ச்சி, குழந்தைகளுக்கான சிறந்த கல்வி இது போன்ற பல துறைகளில் பணியாற்றி செயல் திறன் மிக்க முடிவுகளை வழங்கி வருகின்றனர். தங்களது க்ஓ ஜகாத் நிறுவனம் மூலமாக பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றி வருகிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்