2017 ஜூன் 18 அன்று லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்தது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொகத் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம்கள் இந்தக் கிரிக்கெட் போட்டி தங்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை அதன் பின் தாங்கள் பார்ப்பதே இல்லை என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போட்டி முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இரு அணி வீரர்களும் கூட அதனை மறந்திருப்பர். ஆனால் இப்போட்டியைக் காரணமாக வைத்து கைது செய்யப்பட்ட 19 முஸ்லிம்கள் சில மாதங்களுக்கு முன்தான் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் பதினெட்டு வயதிற்கும் குறைவானவர்கள்.
பாகிஸ்தானின் வெற்றியை முஸ்லிம்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங் கிக் கொண்டாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் 19 முஸ்லிம்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தது. தேசத் துரோகம், கிரிமினல், சதி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தேசத் துரோகம் பிரிவு இந்த வழக்கிற்கு ஒத்து வராது என்பதை உணர்ந்து கொண்ட காவல்துறை அப்பிரிவை நீக்கி, இரு பிரிவினர் இடையே பகையை வளர்ப்பது என்ற பிரிவைச் சேர்த்தனர்.
2014இல் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில் ‘தேசத் துரோகம்’ என்ற வார்த்தை தாராளமாக பயன்படுத்தப்பட்டது. பா.ஜ.கவை விமர்சித்தால் கூட தேசத் துரோகம் என்ற நிலையை இப்போது அடைந்துவிட்டார்கள். அரசாங்கத்திற்குக் கூஜா தூக்கும் ஊடகங்கள் இப்பரப்புரையில் முன்னணியில் நிற்கின்றன. இச்சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட நபர்களைத் ‘துரோகிகள்’ என்றே அந்த ஊடகங்கள் அடையாளப்படுத்தின. இந்தப் பரப்புரையின் தாக்கம் எந்தளவிற்கு மோசமாக இருந்தது என்றால் காவல் நிலையத்திற்கு டீ கொண்டு வரும் நபர் கூட தங்களை ‘பயங்கரவாதி’ என்று கூறி உதைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான இமாம் தட்வி தெரிவித்தார்.
புர்ஹான்புர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்ட சமயங்களில் ‘துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள்’ ‘பயங்கரவாதிகளைத் தூக்கிலிடுங்கள்’ என்று வழக்கறிஞர்கள் ஆக்ரோஷமாகக் கத்தினர். வழக்கில் பிணை கிடைத்து ஒவ்வொரு முறையும் கையெழுத்துப் போடுவதற்குக் காவல் நிலையம் சென்ற போதெல்லாம் ‘துரோகிகள்’ ‘பயங்கரவாதிகள்’ என்ற பதங்களால் தாங்கள் வரவேற்கப்பட்டதாக அவர்கள் வருத்தத்துடன் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாதவர்கள். சிறுவர்கள், படித்தவர்கள், தொழிலாளிகள் என கையில் கிடைத்தவர்களைக் காவல்துறை கைது செய்தது. ‘ரமளான் மாதத்தில் நாங்கள் டிவி பார்ப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று ஒரு பெண்மணி தெரிவிக்க, ‘எங்கள் வீட்டில் டிவியே கிடையாது’ என்று மற்றொருவர் கூறுகிறார். இக்கிராமத்தில் வாழும் பெரும்பான்மையினர் ஏழைகள். கைது செய்யப்பட்ட நபர்களில் தனது நண்பன் அனீஸ் ஷேக் மன்சூரியும் ஒருவர் என்பதால் சுபாஷ் கோலி என்பவர் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அந்தக் கிராமத்தில் அதிகம் படித்த நபரான 25 வயது அனீஸ், தனது படிப்புச் செலவுகளை எதிர்கொள்வதற்காக டெய்லர் வேலையும் செய்து வருகிறார் என்பது உள்ளிட்ட விவரங்களை சுபாஷ் தெரிவித்த போது, ‘ஒரு முஸ்லிமுக்கு இந்து நண்பனா?’ என்று காவல்துறை ஏளனமாகக் கேட்டுள்ளது. அதன் பின் அவரின் மொபைலை எடுத்து அதிலிருந்து அவர்களே 100க்கு அழைத்து ஒரு புகாரை அளித்துள்ளனர். மறுதினம் அவரை மீண்டும் அழைத்து, புகாரைத் தயார் செய்து கோலியின் கையெழுத்தைப் பெற்றுள்ளனர்.
மொகத் கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் இணக்கமாக வாழ்ந்து வருவதாகவும் பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட சமயத்தில் அருகில் உள்ள பகுதிகளில் பிரச்னைகள் எழுந்த போதும் தங்கள் கிராமம் அமைதியாக இருந்ததாகவும் அம்மக்கள் கூறுகின்றனர். இப்பிரச்னை எழுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் இப்பகுதியில் விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்து - முஸ்லிம் நல்லுறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சுபாஷ் கோலியின் புகாரின் அடிப்படையிலேயே காவல்துறை வழக்கை ஜோடித்தது. ஆனால் தனது கிராமத்தில் யாரும் பட்டாசும் வெடிக்கவில்லை, இனிப்பும் வழங்கவில்லை என்று கோலி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். காவல் நிலையத்தில் தான் ஏதாவது சொல்லியிருந்தால் தன் மீதும் ஏதேனும் ஒரு வழக்கை பதிவு செய்திருப்பார்கள் என்று தான் அச்சப்பட்டதாக அவர் அப்போது (2017ஜூன் 25) பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆறு ஆண்டுகள் வழக்கு விசாரணை நீடித்து அதன் பின்னரே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த முதல்நிலை நீதிபதி தேவேந்தர் சர்மா குற்றம்சாட்டப்பட்ட பதினாறு நபர்களையும் நிரபராதிகள் என்று அக்டோபர் 2023இல் விடுவித்தார். ஒருவர் வழக்கு விசாரணைக் காலத்தில் மரணித்துவிட்டார். ‘ஆதாரங்கள், வாத பிரதி வாதங்கள், நேரடி சாட்சிகளின் கூற்றுகளை நோக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பியதற்கோ பட்டாசுகளை வெடித்ததற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை என்று 2023 அக்டோபர் 9 அன்று வழங்கிய தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார். காவல்துறை பொய்யாக வழக்கை ஜோடித்து 17 நபர்கள், அவர்களின் குடும்பத்தினர் அக்கிராமத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது தெளிவாகியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான ருபாப் நவாப், பிப்ரவரி 2019இல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு வாரத்திற்குப் பின் அவரின் தந்தையும் மரணித்தார். நவாப்பின் மூத்த மகன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தினக்கூலியாகி விட்டார். தினந்தோறும் சந்தித்த அவமானம், தேசத் துரோகி என்ற முத்திரையின் காரணமாக நிலை குலைந்த அவர் இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான சிக்கந்தரின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவம் அல்ல இது. பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் பல்லாண்டுகள் கழித்து நிரபராதிகள் என்று விடுவிக்கப்படும் செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குச் சில மாதங்களில் பிணை கிடைத்த போதும் ‘தேசத் துரோகி’ என்ற அவமானத்துடனே அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவ்வாறு பொய் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களில் அதிகமானவர்கள் ஏழைகள், சிறுபான்மை, பட்டியலின சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்பதை இத்தகைய வழக்குகளைச் சற்று நோக்கினால் விளங்கிக் கொள்ளலாம். இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டவர்களை இந்நாடு கண்டுள்ளது. ஆனால் இவர்களின் வழக்கு விசாரணை முடிவதற்கு முன்னரே இவர்கள் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். கார்ப்பரேட் ஊடகங்கள் இதனை முன்னின்று செய்கின்றன. இந்த வழக்கிலும் அதுதான் நடைபெற்றது. கைது செய்யப்பட்டதைக் காட்டுக் கூச்சல் போட்டு செய்தியாக மாற்றியவர்கள், இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டுகொள்ளவே இல்லை.
சிறைவாசம், உடல், மன ரீதியான சித்ரவதை, அவமானம், புறக்கணிப்பு, வேலையின்மை, வருமானம் இன்மை, ஏழ்மை, வறுமை என அனைத்தையும் எத்தகைய தவறுகளையும் செய்யாத இந்த அப்பாவிகள் அனுபவிக்கின்றனர். வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் ‘விடுதலை’ என்ற அந்த ஒற்றை மகிழ்வைத் தவிர இழந்த வேறெதையும் இவர்களால் திரும்பப் பெற இயலவில்லை. பொய் வழக்குகள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறு வாழ்வு வழங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறியுமாறு சட்ட ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் உத்தரவிட்டிருந்தார் (பப்லு சவுகான் எதிர் டெல்லி அரசு).
காவல்துறையால் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் (ருதுல் ஷா எதிர் பீகார் அரசு, பீம் சிங் எதிர் ஜம்மு கஷ்மீர் அரசு)
குறிப்பிட்டுள்ளது.ஆனால் சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்தும் இருக்கிறது. அக்ஷர்தம் கோயில் வழக்கில் (சுலைமான் பாய் அஜ்மீரி, மற்றவர்கள் எதிர் குஜராத் அரசு) குற்றம்
சாட்டப்பட்டவர்கள் பத்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இருந்த போதும் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மறுத்துவிட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பதெல்லாம் விரல்விட்டு எண்ணக் கூடிய வழக்குகளில் மட்டுமே கிடைக்கிறது. ஏழ்மையிலும் அச்சத்திலும் இருக்கும் இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டதையே பெரும்பேறாக எண்ணி ஒதுங்கிக் கொள்கின்றனர். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை பொய்யாக வழக்குகளைப் புனைந்த போதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நீதிமன்றத்தின் கண்டிப்புதான் இவர்கள் மீதான அதிகபட்ச நடவடிக்கையாக இருக்கிறது. இந்த வழக்கும் அதற்கு விதிவிலக்கல்ல. பொய் வழக்குகளைப் புனைந்து அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதே நீதியை நிலைநாட்டுவதாக அமைவதுடன் பொய் வழக்குகளைப் புனைபவர்களுக்கு அச்சத்தையும் கொடுக்கும். எத்தனை அப்பாவிகளைச் சிக்க வைத்தாலும் நம்மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்ற நம்பிக்கை இருக்கும் வரை இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
பொய் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதைப் பெரும் சாதனையாகவும் நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஏராளமான சமூக, பொருளாதார, மன ரீதியான சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தைச் சார்ந்த விசாரணை சிறைவாசி ஒருவரின் குடும்பத்தை ஒரு ஆய்விற்காகச் சந்தித்தேன். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து வரும் அவருக்கு இரண்டு குழந்தைகள். இவரின் மனைவி 2018இல் உடல் நலக்குறைவால் மரணித்து விட்டார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் இவரின் பெயர் சேர்க்கப்பட்டதால் பெங்களூர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் குழந்தைகள் இருவரும் தந்தையைச் சந்திக்கவே இல்லை என்று அக்குடும்பத்தினர் தெரிவித்த போது அதனை ஏற்றுக் கொள்ளவே நமக்குப் பெரும் பாரமாக இருந்தது.
இதுதான் விசாரணை சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினரின் நிலை. பல்லாண்டுகள் கழித்து நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட பின், இவர்களின் இழந்த வாழ்க்கையையும் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் யார் திருப்பிக் கொடுப்பார்கள்?
‘ஓர் அப்பாவி பாதிக்கப்படுவதை விட பத்து குற்றவாளிகள் தப்பிப்பது சிறந்தது’ என்றார் ஆங்கிலேய நீதிபதி வில்லியம் பிளாக்ஸ்டோன். ஆனால் இங்கு அந்த வாக்கியத்தின் இரண்டாவது பகுதி மட்டுமே பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது.
References:
6 years after 17 Muslim men were accused of celebrating Pakistani Cricket victory, MP courts find police case to be false, www.article-14.com
'I was scared': MP man says police made him sign false report saying Muslims celebrated Pakistan win, www.scroll.in
Compensation for wrongful prosecution, incarceration and conviction, www.barandbench.com