மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

யாவும் நீரே
- முஹம்மது கபீர், மே 01 - 15, 2024


உயிர் வாழ அடிப்படையாக ரத்தம், உமிழ்நீர், வியர்வை, விந்து, கண்ணீர், போன்றவை எல்லாம் நீரின் மாறு வேடங்கள் என்றால் அது மிகை ஆகாது.

உலக நாடுகள் எல்லாம் சண்டை பிடிப்பதும், அண்டை மாநிலம் அண்டி நிற்பதும், இன்று அதே நீருக்காக அவர்கள் வாடி நிற்பதும் மனிதாபிமான எந்த ஒரு சக மனிதனுக்கும் மனதில் கவலையை ஏற்படுத்தி இருக்கும். அத்தகைய பிரச்னையான பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் கவலை கொள்ளச் செய்திருப்பது உண்மை.

பனி மலைகளையும், பனிப்பாறைகளையும் இரக்கமின்றி மெழுகாய் உருகச் செய்யும் மனித இனம் அதே நீரின் கொடுமையால் கடல் மட்டம் உயர்வு போன்ற அபாய எச்சரிக்கைகளை எதிர் கொண்டிருக்கும் தருணத்தில், நிலத்தடி நீர் பொய்த்துக் கொண்டிருக்கும் சமகாலச் சம்பவத்தை நம் கண் முன்னே கண்டு வருகிறோம்.

உலக நீதியையும் உலக நியாயத்தையும் மனிதன் எவ்வாறு பேணுகிறானோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இயற்கை வளத்தையும் பேணுவது அவசியம் என்பதுதான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்னும் குறளின் எதார்த்தமான அர்த்தம்.

நீரின்றி ஏற்படும் பெரும் இழப்புக்கான காரணத்தை ஆராயும் போது அவை அனைத்தும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ‘சுயநல இயற்கை வளக் கொள்ளையே’ என்பதை உணர்ந்துகொள்ளலாம். தண்ணீரின் தேவையையும் பயன்பாட்டையும் மாற்ற இயலாது. இதற்கு ஈடானது எதுவுமில்லை.

பொதுவுடமை

இறைவன் அளித்த அருள்வளங்களில் ஒன்றுதான் நீர். இது என்னுடையது அது உன்னுடையது எனப் பங்கு போட்டுக் கொள்ள இங்கு யாருக்கும் உரிமை இல்லை. உலக அளவில் பார்த்தால் அமெரிக்கா விழுங்கும் ஒருநாள் தண்ணீரை ஒரே நாளில் உறிஞ்சுகின்றன அமெரிக்கத் தொழிற்சாலைகள்.

பெங்களூர் நீர் கட்டமைப்பு

6.7 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் சென்னை மாநகருக்கும் கிட்டத்தட்ட 920 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருக்கும் நிலத்தடி நீரை எடுக்கும் முறையில் பல சிக்கல்கள் உள்ளது. பெங்களூர் தற்கால இந்தியாவின் ஆற்றல் மிகு புத்தொழில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நகரமாகும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள பெங்களூர் நகரத்தின் முக்கியமான பகுதிகளான ஒயிட் பீல்ட், வணிக ரீதியாக மிகவும் பிரபலமான சிவாஜி நகர் போன்ற இடங்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவது இந்த பிரச்னையின் வீரியத்தை உணரச் செய்கிறது.

இதிலிருந்து அண்டை மாநிலமான தமிழ்நாடும், தமிழகத்தின் தலைநகரான சென்னையும் எத்தகைய பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு, ஐந்து கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக பெங்களூரில் கர்நாடக முதலமைச்சர் பேட்டி அளித்திருந்தார். இத்தகைய தட்டுப்பாடு ஏற்படுவதற்கான முதன்மையான காரணமாகக் கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பருவமழை பொய்த்ததும் கிட்டத்தட்ட 18 விழுக்காடுக்குக் கீழ் அது சென்றதுமே காரணம் என்பதை மாநில அரசு மக்களுக்குத் தெரியப்படுத்துகிறது. கடல் நீர்மட்டத்தை விட 900 அடிகள் மேல் உள்ள ஊரான பெங்களூர் எளிதில் இயற்கை நீரூற்றுகளை நிலத்தடியில் கொண்டு இருந்தாலும் அதை உறிஞ்சி எடுக்கும் போர்கள் சுமார் 1000 அடிகள் சாதாரணமாக ஆழ்துளை இட்டுச் செல்வது அவசியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல இடங்களில் அத்தகைய ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப் போய் உள்ளது தான் இத்தகைய பிரச்னைக்கு முக்கிய மூல காரணமாகும்.

பெங்களூர் நகரம் குளங்களையும் ஏரிகளையும் கொண்ட நீர் சூழலியல் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்து கொண்டுள்ளது. ஆனால் இன்று நகரத்தில் உள்ள நூறு விழுக்காட்டு ஏரி குளங்களில் 20% ஏரி குளங்கள் மட்டுமே நீர் கொண்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மழை பொய்த்தது ஒரு காரணமாக இருந்தாலும் மழையை நிரந்தரத் தீர்வாகக் கொண்டு எந்த ஒரு மாநகராட்சியும் அதுவும் பெங்களூர் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநகரம் சார்ந்திருப்பது நகைப்பிற்குரியது.

தோராயமாக, பாதிக்கும் மேற்பட்ட பெங்களூர் வாசிகளுக்கான குடிநீர்த் தேவை குழாய்கள் மூலம் மாநகராட்சியும் மாநில அரசும் பூர்த்தி செய்து வருகிறது. அவை அனைத்திற்கும் நிலத்தடி நீரையே பிரதானமாக நம்பியுள்ளது. அவர்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரை அரசு அளித்தாலும் அது எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதே இந்தக் கட்டுப்பாட்டுக் கான அடிப்படைக் காரணத்தை நாம்
உணர்ந்து கொள்ள முடியும்.

ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் எனப்படும் நிலத்தடி நீரைக் குடிநீராக மாற்றும் RO WATER PURIFIER சாதனங்கள் இன்றைய நகரங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாதது. ஒரு லிட்டர் குடிநீருக்காகச் சுமார் மூன்றரை லிட்டர் நீரை விரயம் செய்து ஆக வேண்டிய நிலை தான் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் சுத்திகரிப்பான்கள் உள்ளன.

உதாரணமாக 100 குடும்பங்களுக்கு சுமார் ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் இத்தகைய சுத்திகரிப்பான்கள் மூலம் 3,500 லிட்டர் நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

சென்னையின் நீர் தேவை

சுமார் 98.5 கோடி லிட்டர் நீர் சென்னையின் ஒரு நாள் தேவையாக உள்ளது. பெரும்பாலும் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ள புறநகர் பகுதிகள் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் எனப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு உப்புக் கரைசல்
நீக்கி முறையையே பயன்படுத்துகின்றன. முன்னர் குறிப்பிட்டதைப் போல் இத்தகைய நீரின் அளவுக்கு எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்ட நீராக, கழிவு நீராக நம் கால்வாயில் கலப்பது, கலந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்து நாம் உணரும் தருணம் இதுவல்லவா?

100 கோடி லிட்டர் தண்ணீர் ஒரு நாள் தேவை எனில் அதிலிருந்து வெளியேறும் 58 கோடி லிட்டர் கழிவு நீராக வெளியேறும் பட்சத்தில், சுமார் 7.45 கோடி லிட்டர் நீரை மட்டுமே மாநகராட்சி தனது சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்தி வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 13 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சுமார் 25 கோடி லிட்டர் நேரடியாக சென்னையின் ஆறுகளில் கழிவுநீராகக் கலப்பது வேதனை அளிக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட சென்னை மெட்ரோ வாட்டர் ரீயூஸ் ரிப்போர்ட் எனப்படும் நீர் சுத்திகரிப்புச் செயல் தொடர்பான ஆவணத்தை திரு சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ் (அப்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர்) வெளியிட்டுள்ளார். அதில் சென்னையின் நீர் தேவையில்லாமல் சுமார் 18% கடல் நீரிலிருந்து குடிநீராக மாற்றும் திட்டத்திலும், 8% சுத்தம் செய்யப்பட்ட நீரை உபயோகிப்பதாகவும், 9 விழுக்காடு நிலத்தடி நீரை உபயோகிப்பதாகவும், மீதமுள்ள 65 விழுக்காடு சென்னையின் நிரந்தர ஏரிகளான ஐந்து பெரும் ஏரிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சுத்திகரித்த நீரை மறுசுழற்சி செய்தோ, இதர தினசரி பயன்பாட்டுக்குப் பயன்படுத்தவோ பெரும்பாலும் 90% மக்கள் முயற்சிப்பது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதற்கான மக்கள் பங்கேற்புடன் கூடிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்த வேண்டும்.

அகில இந்திய அளவில் 10 மாநிலங்களில் மட்டுமே நீர் கொள்கை சார்ந்த சட்ட வடிவுகள் செயல்பாட்டில் உள்ளன. அதுவும் முழுமையாகச் செயல்பாட்டில் இருக்கிறதா? என்பது கேள்விக்குறி. இத்தகைய நீர் கொள்கையை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்காமல், அச்சமின்றி கடந்து வரும் நாமும் நம் மாநில அரசுகளும் வருங்காலச் சந்ததியினருக்குச் செய்யும் துரோகமாகவே இதைக் கருத முடியும்.

நம் தினசரி வாழ்க்கையில் நீரை குளிக்கவும் குடிக்கவும் துவைக்கவும் சுத்தம் செய்யவும் பயன்படுத்திக் கொள்கிறோம். இத்தகைய பயன்படுத்தப்பட்ட நீரை நாம் கழிவு நீராகக் கருதாமல் சுத்திகரிப்புக்கு உகந்த பயன்படுத்தப்பட்ட நீராகக் கருத வேண்டும்.

அத்தகைய பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிப்பு செய்து அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற நீர் தேவைகளுக்கு உகந்ததாக மாற்றி அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும்.
ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் பயன்படுத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பான்கள் மூலம் வெளியேறும் பட்சத்தில் அந்த 3 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் கழிவு நீராக நம் கால்வாய்களில் கலப்பது நிதர்சனம். அத்தகைய கழிவு நீரை மாநகர சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய்கள் மூலம் அனுப்பி வைத்து அதை தகுந்த முறையில் சுத்திகரித்து மாற்று பயன்பாட்டிற்காக உபயோகிக்க வேண்டும்.

சரி இத்தகைய நடைமுறை இன்று இல்லாமல் இருக்கிறதா என்ற கேள்வி நம்மிடையே இருக்கிறது. ஆனால் சரிவர இயங்குகிறதா? அதை அரசு நிர்வாகத் திறனோடு கையாள்கிறதா? என்பது தான் கவலை.
நாளை பெங்களூர் போன்ற இடர் சென்னைக்கு ஏற்படும் போது வரும் முன்னரே அதற்கான திட்டங்களை வகுப்பது அவசியமாகிறது.
சாலை ஓரங்களில் உள்ள தோட்டங்கள் வாகன சர்வீஸ் மையங்களில் கழுவ பயன்
படும் நீர், பெரு நிறுவனங்களில் கழிவறைகளுக்குப் பயன்படுத்தப்படும் நீர், வணிக வளாகங்களில் சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நீர் போன்ற காரணங்களுக்கு மறுசுழற்சி செய்த நீரைப் பயன்
படுத்தச் சொல்வது உகந்ததாக இருக்கும்.

வீட்டில் செடி கொடிகள் வளர்த்தல், சுத்தப்படுத்துதல் போன்ற உணவாக உட்கொள்வதைத் தவிர்த்த செயல்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை உபயோகிப்பது மிக மிகச் சரியானதாக அமையும். பெரும்பாலும் சிப்காட் தொழில் பூங்காக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே தருவதாக தமிழ்நாடு அரசு தகவல் அளித்திருப்பது சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.

நீர் திரவ தங்கம். சுரண்டல் நிற்கப் போவதில்லை என்ற பொதுப் புத்தியை மாற்றி சுரண்டப்படுவதைச் சுகம் என்று வேடிக்கை பார்க்காமல் அரசும் அதிகாரிகளும் மனசாட்சியோடும் வருங்காலத்தின் கவலையோடும் அணுகி பெங்களூரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வான் மழைத்துளிகள் எல்லாம் இயற்கையின் கண்கள். தண்ணீரின் வாழ்விடங்களை தங்கள் குடியிருப்பாக்கி அதன் கல்லறைகளை உருவாக்கிய பெருமையும் இந்த அரசையும் நாட்டு மக்களையும் சாரும். பெருமழையில் புலம்புவதும் பிறகு நமக்கு என்ன என்று வாழ்வதும் மனித வாழ்க்கையா என்பதை எண்ணி தேவையானவற்றை, அவசியத்தைக் கருதிச் செய்வோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்