மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

வெறுப்புக் கற்பிதங்களும், வெள்ளை மனமும் - பெருநாள் செய்தி
- நந்திதா ஹக்சர், மே 01 - 15, 2024
வெறுப்புக் கற்பிதங்களும், வெள்ளை மனமும்
- பெருநாள் செய்தி

நந்திதா ஹக்சர், வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர், விருது பெற்ற எழுத்தாளர்

தமிழில்: முனைவர். அ. உமர் ஃபாரூக், ஆங்கிலப் பேராசிரியர்


இந்தியாவில் முஸ்லிம்கள் பாகுபாடுகளைச் சந்தித்தாலும், மக்களுடன் பரிவுடனும் கண்ணியத்துடனும் வாழ்ந்து இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். நாடு முழுவதும் அமைதி நிலவுவதற்கான அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்.


ராஜஸ்தானைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞன் என்னிடம் சொன்ன ஓர் உண்மைச் சம்பவம். இது அவனுடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்வைப் பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் எனலாம். சில நாள்களுக்கு முன்புதான், வாகனத்தை வாடகைக்கு விடும் ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் அவன் பணியில் சேர்ந்துள்ளான். அங்கு பொலிரோ, டாடா ஹேரியர் போன்ற சிறிய வாகனங்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இந்த ஆண்டு ரமளான் மாதத் தொடக்க நாள்களில், ஒரு பெரியவர் அந்த இளைஞனின் முதலாளியிடம் ஐஸ்வால் பகுதிக்குச் செல்ல வாடகைக்கு வாகனத்தைப் பதிவு செய்தார். முதலாளி அந்த இளைஞனை அழைத்து, மிசோரமுக்குக் காரை ஓட்டிச் செல்ல விருப்பமா என்று கேட்டார். அந்த இளைஞனோ சாகசத்தில் ஈடுபடும் ஆர்வத்தில் உடனே ஒப்புக்கொண்டுள்ளான்.

அவனுடன் பயணிக்க அப்பெரியவர் தயாரானார். முதலில் அவனிடம் ‘மலைச் சாலைகளில் வாகனம் ஓட்டிச் சென்றிருக்கின்றாயா?’ என பெரியவர் கேட்டார். உடனே அதில் தனக்கு அதிக அனுபவம் இருப்பதாகவும், மிசோரம் செல்லும் வழியும் தனக்குத் தெரியும் என்றும் அவன் பெருமையாகப் பதிலளித்தான். வடகிழக்கு இந்தியாவில் வாகனம் ஓட்டிய சில அனுபவங்களைப் பற்றியும் கூறினான். பின்னர் அங்கிருந்து இருவரும் புறப்பட்டனர்.

போலீஸ் சோதனைச் சாவடிகளைக் கையாள்வதில் அந்த இளைஞனுக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால் அவனுடன் வந்த பெரியவருக்கு அந்த அனுபவம் இருந்தது. ஒருவேளை அவருக்கும் முன் அனுபவம் இல்லாமல் இருந்திருந்தால், அஸ்ஸாமில் உள்ள சில்சார் சென்றடைவதற்குள்ளேயே ரூபாய் 10,000 முதல் 15,000 வரை இலஞ்சமாகக் கொடுக்க நேர்ந்திருக்கும்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அவர்கள் நுழைந்தவுடன், வாகனத்தின் கிளட்ச் பிரச்னை கொடுக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் அவர்கள் மலை ஏற ஆரம்பிக்கவில்லை. அருகிலிருந்த ஒரு வாகனம் பழுதுநீக்கும் கேரேஜூக்கு அவர்கள் சென்றனர். அங்கிருந்த நான்கு பேர் வாகனத்தில் சில பழுதுகளைச் சரிசெய்து கொடுத்தனர். ஆனால் பிரச்னைகள் இப்போதுதான் ஆரம்பித்தன. ஷில்லாங்கிற்குச் செல்லும் சாலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது, அந்த இளைஞனுக்கு மலைப்பகுதியில் வாகனம் ஓட்டிய அனுபவம் இல்லை என்பதை உடனிருந்த பெரியவர் அறிந்து கொண்டார்.

ஒரு வழியாக அவர்கள் சில்சாரை அடைந்தனர். அப்போது அந்த இளைஞன் பதற்றமாகக் காணப்பட்டான். ‘என்ன விஷயம்?’ என பெரியவர் அவனிடம் கேட்டார். ‘நாம் இப்போது முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு பகுதிக்குள் செல்கிறோம். நாம் கவனமாக இருக்க வேண்டும்’ என அந்த இளைஞன் கூறினான். ஏனெனில், அதற்குமுன்பு வரை முஸ்லிம்கள் என்றாலே ‘பயங்கரவாதிகள்’ என்று மட்டுமே அவன் கேள்விப்பட்டிருந்தான். மேலும் வாகனத்தை மோசமாக ஓட்ட ஆரம்பித்தான்.
சூரியன் உதயமாகும் நேரம் சில்சாரில் கார் பழுதடைந்து நின்று விட்டது.

சுற்றிலும் யாரும் இல்லை. அப்போது வெள்ளை நிற குர்தா பைஜாமா அணிந்து, தலையில் வெள்ளைத் தொப்பியுடன் ஒரு மனிதர் அங்கு வந்தார். அவர் புத்துணர்வுடனும் அமைதியாகவும் காணப்பட்டார். அந்த இளைஞனைப் பார்த்து புன்னகைத்தவாறே, ஏதாவது பிரச்னையா என வினவினார். ‘வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை’ என அவன் பதில் கூறினான். அங்கேயே அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஒரு சிறிய வீட்டிற்குள் சென்றவர், சிறிது நேரம் கழித்து மெக்கானிக் உடையில் வெளியே வந்தார். அவர் கையில் வாகனம் பழுதுபார்க்கும் கருவிகளை வைத்திருந்தார். மேலும், ரமளான் நோன்பிற்காக சூரிய உதயத்திற்கு முன் தனது சஹர் உணவை உண்பதற்காகவே அவர்களைக் காத்திருக்க வைத்ததாக அவர்களிடம் தெளிவுபடுத்தினார்.

பிறகு அவரது அனுபவம் வாய்ந்த கைகளால் வாகனத்தைச் சரி செய்து முடித்தார். மேலும் தனது கருவிகளை இளைஞனிடம் கொடுத்து, ‘இவற்றை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு வழியில் அவை தேவைப்படலாம். நீங்கள் திரும்பி வரும்போது, அவற்றை என்னிடம் திருப்பித் தருங்கள்’ என்று கூறினார். தனது அலைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்து அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே வருவதாக உறுதியளித்தார் ஹுசைன் சாஹிப்.

அவர்கள் அலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். அம்மனிதரின் பரிவான செயலைக்கண்டு, இளைஞன் வாயடைத்துப் போயிருந்தான். இந்தப் புதிய அனுபவத்தைப் பற்றி என்ன சொல்வது? அந்த முஸ்லிம் மனிதர் ஏன் தனது வேலைக்குப் பணம் வாங்க மறுத்தார்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் பயணித்த நெடுஞ்சாலையின் இடையில் சாலைத் தடுப்பு வைக்கப்பட்டிருந்தன. அதனால் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் குறுகலான பாதையில் செல்ல ஆரம்பித்தனர். வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் ஏறி இறங்கும்போது, திடீரென வாகனத்தின் பிரேக் வேலை செய்யவில்லை. எப்படியோ சமாளித்து வாகனத்தை நிறுத்தி ஓரமாகத் தள்ளினர். இந்த இக்கட்டான நிலையில், தனது முதலாளியை அழைக்க அந்த இளைஞனுக்கு விருப்பமில்லை. ஏனென்றால், நிச்சயமாக அவர் கடுமையாக அவனைத் திட்டுவார். எனவே, ‘நாம் ஹுசைன் சாஹிபை அழைக்கலாமா?’ என உடனிருந்த பெரியவரிடம் அந்த இளைஞன் கேட்டான்.

அலைப்பேசியில் மென்மையாகப் பேசிய ஹுசைன் சாஹிப், உடனடியாக வருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் அவர் இருப்பிடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருவரும் இருந்தனர். ஹுசைன் சாஹிப் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களைக் கடந்து ஐஸ்வாலுக்குப் பல கார்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றில் பயணித்த பலர் அவர்களிடம் என்ன பிரச்னை என விசாரித்தனர். அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் தாங்கள் வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தனர். தண்ணீர்பாட்டில், வாழைப்பழம், சிப்ஸ், குளிர் பானங்களை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறிச் சென்றனர்.

சில மணிநேரம் கழித்து ஹுசைன் சாஹிப் அங்கு வந்து சேர்ந்தார். பணத்தை மிச்சப்படுத்த ஷேர் டாக்ஸியில் பயணம் செய்ததால், வந்து சேர சற்று தாமதமானதாகக் கூறினார். தாமதிக்காமல் வாகனத்தைப் பழுதுநீக்கும் வேலையில் இறங்கினார். இரண்டு மணி நேரத்தில் பிரேக்கைச் சரி செய்து முடித்தார். அங்கிருந்து ஏறும் சாலை செங்குத்தாக இருந்ததால் வாகனத்தை அவரே ஓட்டி வருவதாக அந்த இளைஞனிடம் கூறினார்.

அதைக் கேட்ட அந்த இளைஞனோ நிம்மதியடைந்தான். அவர்களை ஏற்றிக்கொண்டு ஹுசைன் சாஹிப் வாகனத்தை ஐஸ்வாலுக்கு ஓட்டிச் சென்றார். அவர்கள் அடைய வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்தனர். பெரியவர் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை அங்கு வழங்கினார். அப்போது அவர்களுக்குத் தேநீர், உணவை அங்கு அழைத்திருந்தவர்கள் வழங்கினர். ஆனால் ஹுசைன் சாஹிப் நோன்பு வைத்திருந்ததால் மற்ற இருவரும் உணவை மறுத்துவிட்டனர். அனைவரும் சில்சாருக்குத் திரும்பிச் செல்லப் புறப்பட்டனர்.

மாலையில் நோன்பு துறக்கும் இஃப்தார் நேரம் வந்தது. இருவரும் சைவ உணவு உண்பவர்கள் என்பதை ஹுசைன் சாஹிப் அறிந்து கொண்டார். மேலும் அவர்கள் சற்று இறுக்கமாக இருப்பதை உணர்ந்தார். அவர்களிடம் தனக்குச் சமைக்கத் தெரியாது என்றும், மனைவியும் நோன்பு இருப்பதால் அவரிடம் சமைக்கச் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார். உடனே தங்களுக்குத் தொந்தரவு இல்லை, அருகில் உள்ள தாபாவில் சாப்பிடுவோம் என அந்த இளைஞன் கூறினான்.

இரவில் தனது வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் செல்லலாம் என இருவரிடமும் ஹுசைன் சாஹிப் கூறினார். ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகம் தர்மம் செய்யவும், சக மனிதர்களை உபசரிக்கவும் தயாராக இருப்பார்கள். ஆகவே தான் பணம் எதுவும் வாங்க மாட்டேன் என்று அவர்களிடம் கூறினார். அந்த இளைஞனும் அவனுடன் வந்த பெரியவரும் உணவு உண்ண அமர்ந்தனர். ‘முஸ்லிம்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? கவுகாத்தியில் நமக்கு உதவிசெய்த மூன்று மெக்கானிக்களும்கூட முஸ்லிம்கள்தான். முஸ்லிம்கள் மீது தவாறான எண்ணமும், அச்சமும் எங்கிருந்து உனக்கு வந்தது?’ என அப்பெரியவர் அவனிடம் கேட்டார்.

ஹுசைன் சாஹிபின் மனிதநேயமும், சக இந்தியர்களிடம் அவர் காட்டிய பரிவும், அக்கறையும் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு விதிவிலக்கான முஸ்லிம் அல்ல. அவரது சமூகத்தின் நடைமுறையே அவ்வாறுதான் இருக்கும். கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் வெடித்த இன வன்முறையின்போது, குக்கி சமூகத்திற்கு ஆதரவையும் ஆறுதலையும் மணிப்பூரி முஸ்லிம்கள் வழங்கினர். ஒரு சந்தர்ப்பத்தில், இம்பாலில் உள்ள ஹடா கோலப்பட்டி சுற்றுவட்டாரத்தில் வசித்த 3,000 குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உயிரை முஸ்லிம்கள் காப்பாற்றினர். இவை எப்போதாவது நடக்கும் சம்பவங்கள் அல்ல. இத்தகைய சில சம்பவங்கள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிந்தவை.

கவலைக்குரிய நிலை என்னெவெனில், அந்த இளைஞனைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் முஸ்லிகள் மீது தவாறான எண்ணத்தையும், அச்சத்தையும், வெறுப்பையும் சுமந்து செல்கின்றனர். அதனால்தான் இந்துக்கள் தங்கள் நிலத்தை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று அஸ்ஸாம் அரசு அறிவித்தபோது, பொதுச் சமூகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழவில்லை. திறந்த வெளியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை ஒரு போலீஸ்காரர் எட்டி உதைத்தபோதும், தேசிய அளவில் போராட்டங்கள் நடக்கவில்லை. உத்தரகாண்டில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக நகராட்சிகள் அறிவிப்புச் செய்ததையும் யாரும் எதிர்க்கவில்லை.

இவற்றிற்கு மத்தியில்தான், சில்சாரில் உள்ள ஹுசைன் சாஹிப் போன்று இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடிமக்கள் தங்கள் சமயத்தைப் பின்பற்றி வாழ்கின்றனர். அனைவரிடமும் இரக்கத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்கின்றனர். அனைத்து முரண்பட்ட கற்பிதங்களுக்கு எதிராகத் தங்கள் கண்ணியத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். நாடு முழுவதும் அமைதி நிலவுவதற்கான அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்.

ரமளானின் ஆன்மாவிற்கு சில்சாரின் ஹுசைன் சாஹிப் ஒரு வாழும் உதாரணம். அவருடைய அமைதியான மனிதாபிமானமிக்க செயல்கள் குறித்து நான் எழுதி இருக்கின்றேன் என்பதை அவர் அறிந்திருந்தால், அவர் சற்று வருத்தப்பட்டிருக்கலாம். அதனால் அவரிடம் மன்னிப்புக் கோருகிறேன். தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் இந்த ஈத்பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடியிருப்பார்கள். அவர்களின் குழந்தைகள் பண்டிகையின் மகிழ்ச்சியை அனுபவித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துகள்.

நன்றி : Scroll வலைதளம்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்