கல்வியே உன் விலை என்ன?
- ச.அய்யம்பிள்ளை, மேனாள் பொருளியல் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் உரையாடும்போது கல்வியின் பொருள், நோக்கம், போக்கு, தாக்கம் பற்றி பல வேறுபட்ட கருத்துகள் நிலவி வருவதும் அவர்கள் மத்தியில் பாடத் திட்டங்கள், பயிற்று மொழிகள், கட்டணங்கள், தகுதிகள், தகுதித்தேர்வுகள், பட்டப் படிப்புகளுக்கான கால அளவுகள், ஆய்வுக்கட்டுரை வெளியிடுதல், தேசிய, மாநிலக் கல்விக் கொள்கைகள் (National Education Policy and State Education Policy) பற்றிய குழப்பங்கள் கூடிவருவதும் தெரிகின்றது.
மிகுந்த அளவுக்கு அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மருத்துவம், மனித வாழ்வு மேம்பாட்டிற்குக் கல்வி உதவியுள்ளதற்கு ஆதாரங்களும் இன்னும் உதவும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இருப்பினும் ஊடகங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் பலரும் பகிர்வது என்னவெனில், நம் நாட்டில் உயர் கல்வி மேலாண்மை நிறுவனங்கள் ((UGC, AICTE போன்ற Apex bodies), அரசின் கொள்கைகளால் கொண்டுவரப்படும் முன்னுக்குப் பின்னான முரண்பாட்டு மாற்றங்களும், ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைச் சச்சரவுகளும் மிகுந்த குழப்பங்களையே தருகின்றன. (அண்மையில் தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சம்பளம், ஓய்வூதியம் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டதால் தன் பதவியைத் துறந்தார்; மேல் நிலைக் குழப்பங்களால் சில பெரிய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் பல மாதங்களாகத் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது)
அரசு நடத்துகிற ஆய்வுகள் உள்பட (எடுத்துக்காட்டாக: All India Survey on Higher Education; Annual Status of Education Report titled ASER 2023: Beyond Basics) பலரும் ஒத்துக்கொள்பவை யாதெனில்: அண்மைக் காலத்தில், தனியார் கல்வி நிறுவனங்களின் ஆக்ரமிப்பும், கல்விக்கான தனிநபர் செலவும், கல்விக்கூடங்களுக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே சமயம் கல்விக்கான அரசின் முதலீடு, அரசு கல்விக்கூடங்களின் கட்டமைப்புத் தரம், கல்வியின் தரம், கற்றவருக்கான கண்ணியமான வேலைக் கான வாய்ப்புகள், கற்றவரின் சராசரி வருவாய் ஆகியவை குறைந்துள்ளன. இவைதான் அரசு எதிர்பார்க்கும் விளைவுகளா? அல்லது கிணறு தோண்ட தண்ணீருக்குப் பதிலாக பூதம் வந்த கதையா? அல்லது, இப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் கொள்கைகளை வடிப்பதால் அரசுக்கு வேறு பிற, வெளியில் தெரியாத, பெரும் பலன்கள் கிடைக்கின்றனவா?
அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப பதில்கள் வேறுபடலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இளைஞர்களுக்குக் கல்வி வசதிகளும் வாய்ப்புகளும் கூடியுள்ளது போலத் தோன்றினாலும், இளைஞர்கள் அப்படி எண்ணினாலும், வாழ்வியல் சிரமங்கள், பணி, ஊதியம், பொருளாதார நிலையற்றதன்மை, ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்பு ஆகியவை அதிகரித்துள்ளன என்பது ஊடகங்கள் தெரிவிக்கும் செய்தியாகும்.
கல்வி ‘மானுட மாண்புகளைச் சிறக்க வைக்கவேண்டும்’; ‘மத, சமூக நல்லிணக்கத்திற்கு உதவவேண்டும்’; ‘மனிதர்கள் வாழும் முறையைச் செம்மைப்படுத்த வேண்டும்’ என்பன போன்ற கருத்துகளை அரிஸ்டாட் டில், சாக்ரடீஸ், பிளேட்டோ, கௌடில்யர், விவேகானந்தர், தாகூர், காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் முன்வைத்தார்கள். அவர்கள் கல்வியை வருமானம் ஈட்டும் ஒரு கருவியாகப் பார்க்கவில்லை.
ஆனால், நோபல் பரிசு பெற்ற Gary S Becker, T W Schultz உள்பட பல மேற்கத்திய பொருளியலாளர்கள் ‘மேலே கூறப்பட்டவற்றுடன், கல்வியின் நோக்கம் மிக முக்கியமாக, மனிதர்களின் உற்பத்தித் திறனை உயர்த்தி அதிக பணம் சம்பாதிக்க உதவ வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். முதல் கருத்து வெளிப்படையாக மறுக்கப்படாவிட்டாலும்கூட, இரண்டாம் கருத்தே இன்று அதிக அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டு, கல்விக் கொள்கைகள் இயற்றப்படுகின்றன. இதனை கல்வி தொடர்பான அனைத்துத் தரப்பினரும் அறிந்தோ அறியாமலோ சரியென ஒத்துக்கொள்ளும் சூழலும் நிலவுவதால் கல்வி ஒரு கடைச் சரக்காக மாறிவிட்டது.
அனேகமாக 1990ஆம் ஆண்டு வரை பள்ளி, உயர் கல்வி நிறுவனங்களில் சில சமூகத் தொண்டில் அக்கறை கொண்ட தனியார் வசம் இருந்தபோதும், அரசு கல்வித் துறையில் முதலீடு செய்து வந்தது. அதற்குப் பின்னர் இலாப நோக்கோடு செயல்படும் தனியார் நிறுவனங்களுக்குத் தாராளமாக இடமளித்து அரசு பின்வாங்கியது. கல்வி யையும் வியாபாரப்படுத்தி தம் குடும்பத்தினருக்குச் சொத்துச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட தனியார் நிறுவனங்கள் அதிகமாக முளைக்க ஆரம்பித்தன. அதன் விளைவுகள் யாவரும் அறிந்ததே.
தனியார் நிறுவனங்கள் அழகாக இருப்பதாகவும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக அக்கறை செலுத்துவதாகவும், தனியார் நிறுவனங்கள் வந்திராவிட்டால் அரசு ஏதும் செய்து இருக்க இயலாது(!) என்றும் புகழ்மாலை சூட்டப்படுகிறது. அதே சமயம் பாவம் ஆசிரியர்கள் அனுபவிக்கும், வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புதைத்து வைத்திருக்கும், அல்லல்களோ ஏராளம். (அது அவர்களோடு உரையாடிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்). பலமுனைத் தாக்குதல்களுக்கு அவர்கள் உள்ளாவதைப்பற்றி யாரும் பெரிய அளவில் கவலை கொள்வதாகத் தெரியவில்லை; ஏன், கண்டு கொள்வதே இல்லை என்றுகூடக் கூறலாம்.
மாணவர்கள், பெற்றோர், நிர்வாகத்தினர் ஆகியோர் மூலம் பணம் (சம்பளம்) பெறுவதற்குள் அவர்கள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. கற்பித்தல் அல்லாத தனியார் சொத்துகளைப் பாதுகாக்கும் பணியையே தலைமேல் கொண்டு உழைக்கும் அவர்களால் எப்படிச் சிறந்த கல்வியைக் கற்பிக்க முடியும்? திறனை அளிக்க முடியும்? அன்றாடப் பிரச்னைகளைச் சமாளிப்பதே பெரும் சங்கடம் ஆகிவிடுவதால், சாதனைகளைப் பற்றி அவர்களால் எப்படிச் சிந்திக்க முடியும்? பணத்திற்குப் பதிலாக மதிப்பெண்கள், பட்டங்கள் பெறத்துடிக்கும் பெற்றோர்களைத் திருப்திப்படுத்தும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன; தனியார் சொத்துகள் தாராளமாக வளர்கின்றன.
இச்சூழலில் உருவாக்கப்படும் கல்வி கற்ற இளைஞர்களின் பிரச்னைகள் பல இருப்பினும், அவற்றில் இரண்டை மட்டும் இங்கு காண்போம். ஒன்று கல்வியைத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள். மற்றொன்று வேலைவாய்ப்பு, ஊதிய உயர்வின்மை. மேலே கூறப்பட்ட (AISHE amp; ASER 2023) அறிக்கைகள் இவை பற்றிய போதுமான புள்ளி விவரங்களைத் தந்துள்ளன.
கல்வியைத் தொடர்தல்
ஒவ்வொரு மாநிலம், பல்கலைக்கழகம், பாடத்திட்டம் என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை நோக்கும்போது, மாணவர்களின் இடைநிற்றல் இளம் நிலையிலேயே அதிகரிப்பதும், கல்லூரிகளில், வகுப்புகளில் மாணவிகளின் விகிதாச்சாரம் அதிகமாக இருப்பதும் (முதுநிலை வகுப்புகளில் மிக அதிகமாக இருப்பதும்) தெரிகிறது.
மாணவர்களுக்கு மட்டுமாக இருந்த கல்லூரிகள் கூட, அண்மைக் காலமாக மாணவிகளையும் சேர்க்கத் தொடங்கிவிட்டன. ஆனால் முதுநிலைக் கல்விக்குப் பின் பெண்கள் திருமணத்திற்குத் தயாராகிவிடுவதாலும், குடும்பத்தைக் கவனிக்கவேண்டி இருப்பதாலும், பொருத்தமான வேலை கிடைக்காததாலும், பயண, பணியிட பாலியல் தொல்லைகளாலும், பல்கலைக்கழக அளவில் முதல் இடம், தங்கப் பதக்கம் பெற்ற முதுநிலை மாணவிகள்கூட வீட்டிற்குள்ளேயே தங்கி விடு கின்றனர். பட்டங்கள், அலங்கார ஆபரணங்களில் ஒரு பகுதியாக முடங்கிவிடுகின்றன.
மாணவர்களின் இளநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதாலும், அதிகப் பெண்கள் முதுநிலைக் கல்வி வரை படிப்பதாலும், மணமகளின் படிப்பிற்கு நிகரான மணமகன் பெறுவதில்கூட (அவ்வாறு எதிர்பார்த்தால்) சிரமம் வருகிறது. மேலும், சம்பாதிக்கும் ஆசையோடு பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கங்களுடன் முதுநிலை படிப்பு முடித்தும், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் பெண்களுக்குத் தன் பெண் குழந்தைகளைப் படிக்க ஊக்குவிக்கும்போது உள்ளூர (படித்து என்ன பயன்? குடும்பத்திற்குப் பண உதவி செய்ய இயவில்லையே என்ற) ஒரு வருத்தம் வருகிறது. இதனால் பெண்கள் தங்கள் முழு ஈடுபாட்டையும் கல்வியில் செலுத்துவது குறைகிறது; இளமையின் இமாலய சக்தி ஏனோ தானோ என்று வீணடிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே இடை நின்ற மாணவர்கள், மேற்கொண்டு திறன் வளர்ப்பதில் சிரமப்படுகிறார்கள்; அவர்கள் குறைந்த கூலிக்கே வேலை செய்யும் தொழிலாளிகளாக வாழ்கின்றனர்.
படிப்புகளில் பாலின பாரபட்சம் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் செய்தியைக் கூறலாம். JEE தேர்வில் மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்வதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 2024இல் வந்த JEE தேர்வு முடிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற அனைவரும் (இருபதுக்கு மேற்பட்டவர்கள்) ஆண் களே. ஆனால் NEET தேர்வில் அதிக மாணவிகள் பங்குபெறுகின்றனர். UPSC தேர்வில் பெண்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவிகள் சிலர் இத்தேர்வினில் வெற்றி பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.
ஆனால் இவர்களில் அதிகமானோர் கல்லூரி, பல்கலைக்கழக படிப்பை முடித்து, ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, பல குடும்ப சமூகத் (திருமணத்) தடைகளைத் தாண்டித்தான் இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இது அநேகப் பெண்களுக்கு அசாத்தியம் ஆகிவிடுகிறது. இவ்வாறாக மிகுந்த அறிவும் ஆற்றலும் உடைய, படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிகள்கூட, தம் உழைப்பின் முழுப் பயனை தம் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ அளிக்க இயலாத சோகமான நிலை சூழ்ந்து இருக்கிறது.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதாகவும் பணியின் தரம் குறைவதாகவும் நிறைய செய்திகள் வருகின்றன. ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள பன்னாட்டு உழைப்பாளர் அமைப்பும் (International Labour Organisation) டில்லியில் உள்ள மனித மேம்பாட்டு நிறுவனமும் (Institute of Human Development) செய்த ஆய்வுகளின்படி 2000 முதல் 2019 வரையிலான காலத்தில் மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும் வேலைவாய்ப்பின்மை மோசமாகி உள்ளது; இயந்திரமாதல் அதிகரித்து வருவதால் வளர்ச்சி உழைப்பாளர்களுக்கு அவ்வளவாக உதவவில்லை.
எனவே அமெரிக்க டாலரில் ஐந்து டிரில்லியன் அளவிற்குத் தேசிய உற்பத்தியை அதிகரித்து, உலகில் மூன்றாவது பெரிய நாடாக பாரதத்தை(!) ஆக்கி, சாதனை படைக்கப் போகிறோம் என்று சிலர் கூறுவது இந்திய முதலாளிகளுக்கு உதவப்போகிறோம் என்று கூறுவதுதான்; இதனால் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படலாம்; சொத்து, வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கலாம் உலகில் அதிக அளவு வறியவர்களைக் கொண்ட நாடாகப் பராதம்(!) தொடரலாம்.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 27 விழுக்காடு (37 கோடி பேர்) இளைஞர்கள். ஆனால் வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் 83 விழுக்காடு இளைஞர்கள் (25 முதல் 35 வயதினர்). இந்த விகிதம் நகர்ப்புற இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் இன்னும் சற்று அதிகம்.
படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை 2012இல் 15 விழுக்காடாக இருந்தது; 2019இல் 26 விழுக்காடாக உயர்ந்து பின்னர் 2022இல் 22 விழுக்காடாகக் குறைந்தது. கொரானாவைத் தொடர்ந்து
சிறிது வேலைவாய்ப்பு கூடினாலும், சராசரி கூலி குறைந்துவிட்டது. வேலை நேரமும் வேலைப் பாதுகாப்பின்மையும் கூடிவிட்டன. படிப்பை வைத்துப் பிரித்துப்பார்த்தால், 2021இல் வேலையின்மையின் அளவு, இளநிலைப் பட்டதாரிகளுக்கு 34 விழுக்காடு; முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, 37 விழுக்காடு (The Hindu, January 5, 2024 p.9).
மாநிலவாரியாகப் பார்த்தால் பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட வேலையின்மைப் பிரச்னை அதிகம். உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையில் 62 ப்யூன் வேலை காலியிடங்களுக்கு 93,000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 3,700 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்; 28,000 முதுநிலைப் பட்டதாரிகள்; 5,000 பேர் பட்டதாரிகள். 2023 ஆம் ஆண்டு மே மாதம் தோட்ட வேலை, காவல்காரர் போன்ற வேலைகளுக்கு இந்த மாநிலத்தில் 5 இலட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
மத்தியப் பிரதேசம் குவாலியரில் ப்யூன், ஓட்டுநர் போன்ற 15 காலி இடங்களுக்கு, 11,000 முனைவர், முதுநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் பலர் மேலாண்மை, இஞ்சினியரிங் படிப்பு படித்த வர்கள். 2022ஆம் ஆண்டில் இரயில்வே வேலைக்கு 1,50,000 பேர் விண்ணப்பித்து இருந்தபோது பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏகப்பட்ட பித்தலாட்டங்கள், வன்முறைகள் நிகழ்ந்தன. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத்தில் பத்தாம் வகுப்பு தகுதிக்கான 3,400 பணி இடங்களுக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. அரசு பெரிதாகப் பேசுகிற ரோச்கார், அக்னிபாத் போன்ற திட்டங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறிதான் (K.N.Ninan, Young, Restless amp; Jobless inthe Most Populous Country, The New Indian Express, 24.4.2024, p.06).
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் இன்னல்கள் மிகுந்துவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனாலும் ஆளும் அரசுகள் இதுவரையில் எந்தப் பெரிய கொள்கை முடிவுகளும் எடுத்துள்ளதாகத் தெரியவில்லை. திறன் வளர்ப்பில் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் என்று சிலர் சொல்லி வருகின்றனர். மிகச் சிறிய கால அளவிற்குள் ஆங்காங்கே சில நேரங்களில் சிலருக்காக மட்டும் நடத்தப்படும் திறன் வளர்ச்சி வகுப்புகளால் எந்த அளவிற்கு எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை; அதுபற்றி அறிய சரியான, உண்மையை உரைக்கும் ஆய்வுகள் தேவை. அரசாங்கத்தைப் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் எண்ணினால், உண்மை வெளியே வராது; ஆய்வுகளால் பயனும் இருக்காது. எனவே சீரிய முயற்சிகள் அவசியம்; அவசரம்.