மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

கல்வி பணம் சம்பாதிக்கும் கருவி அல்ல!
- இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) மாநில இணைச் செயலாளர் முஹம்மத் ஜாஃபர் நேர்காணல், மே 16-31, 2024





கல்வி பணம் சம்பாதிக்கும் கருவி அல்ல!

- இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) மாநில இணைச் செயலாளர் முஹம்மத் ஜாஃபர் நேர்காணல்


சமகாலக் கல்விமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சமகாலக் கல்விமுறை மாணவர்களுக்கு உகந்ததாக இல்லை. கல்வியாளர்களிடையே இதுகுறித்த கடுமையான விமர்சனங்கள் உண்டு. நல்ல மனிதர்களை உருவாக்கி அவர்களை சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்ற இந்தக் கல்விமுறை தவறிவிட்டது. மாணவர்களிடையே இது விழுமங்களை விதைப்பதற்கு மாறாக, பொருளாதாரத்தை ஈட்டவே தயார்படுத்துகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

சமயத்தை, இறைவனை முற்றாக மனித வாழ்விலிருந்து அகற்ற இந்தக் கல்விஅமைப்பு முனைகிறது. இதன் விளைவாக அற விழுமங்கள் இன்றைக்குப் பலவீனப்படுத்தப்படுகின்றன. சமூகத்துக்கு இதனால் பேரிழப்பு ஏற்படுகிறது. ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்ற தெளிவே இல்லாதவர்களாக மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். படித்து சிந்தித்து ஆராய மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு முரணாக, தேர்விற்காகப் புத்தகங்களை மனனம் செய்து, தேர்வுக்குப் பின் அவற்றை மறக்கச் செய்வதாகக் கல்விமுறை உள்ளது.

தற்காலக் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என நீண்ட காலமாக நாம் கோரிக்கை வைக்கும் நிலையில், தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்துகிறது. இது ஏற்கனவே இருக்கும் சிக்கலை மேலும் மோசமாக்குகிறது.

புதிய கல்விக் கொள்கை இந்துத்துவத்தை, வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் எனும் நிலையைச் சிதைத்து முழு வணிகப் பொருளாகவே கல்வியை ஆக்குகிறது. 9ஆம் வகுப்பு முதலே பொதுத் தேர்வு, மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான் இந்தக் கொள்கையைக் கைவிட நாம் வலியுறுத்துகிறோம்.
கல்வி என்பது ஒழுக்கமான, பண்பான மாணவர்களை உருவாக்கி அவர்களின் வழியாக சமூகத்தைச் செழுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மாணவர்களின் தனித் திறமைகளுக்கும், ஆர்வமான துறைகளுக்கும் மதிப்பிருக்க வேண்டும். ஒரு மாணவர் தனக்கு ஆர்வமுள்ள துறையில் நிபுணராவதற்கு கல்வி இடமளிக்க வேண்டும்; பொருளாதாரமோ சாதியோ அல்லது இதுபோன்ற எந்தத் தடைகளும் அவனுக்கு இருக்கக் கூடாது. ஆனால் இன்றுள்ள கல்வியில் இப்படியான பல சிக்கல்கள் உள்ளன.

முஸ்லிம் மாணவர்கள் உயர் கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே!

உண்மைதான். இதைச் சரிசெய்ய தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) ஈடுபடுகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் உயர் கல்வி பயில்வது சிரமமான ஒன்றாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசம். கல்விக்கூடங்களில் மத ரீதியான பாகுபாடு, பொருளாதாரச் சிக்கல் என அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

முன்பெல்லாம் உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், 90களுக்குப் பின் மண்டல் ஆணையம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்த நிலைமை வெகுவாக மாறியது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கே எடுத்துச் செல்ல பாஜக முயல்கிறது.

சிறுபான்மையினருக்கான ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை, மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை போன்றவற்றை ஒன்றிய அரசு நிறுத்தியது முஸ்லிம் சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளும் இந்துத்துவ சூழ்ச்சியே ஆகும். திட்டமிட்ட இந்த இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையால் முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதில் மேலும் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது சார்ந்து அண்மையில் வெளியான புள்ளி விவரங்களும் கவலையளிக்கக் கூடியதாகவே இருக்கின்றன.
மாணவர்களிடத்தில் உயர்கல்வி படிக்க, ஆராய்ச்சி மேற்கொள்ள நாம் வலியுறுத்த வேண்டும். அதை குஐˆ தொடர்ந்து செய்து வருகிறது. இயன்ற அளவு கல்வி உதவித் தொகைகளையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. கல்வியில் சமூகத்தை தரம் உயர்த்துவது கூட்டாகச் செய்ய வேண்டிய கடமை என்ற அடிப்படையில் நாம் ஒரு சமூகமாக இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

நுழைவுத் தேர்வுகளும், அதற்கான பயிற்சிக் கூடங்களும் அதிகரித்துவிட்டன. என்ன படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் SIO என்ன மாதிரியான பணிகளை முன்னெடுக்கிறது?

கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் கருவியல்ல என்பதை SIO தீர்க்கமாக நம்புகிறது. கூலியாட்களை உருவாக்குவதற்கான ஏற்பாடு அல்ல கல்வி. இப்படியான தப்பெண்ணங்களை மாணவர்களிடமிருந்து களைய SIO பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது.

அதன்படி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில், பள்ளிவாசல்களில், பொது இடங்களில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ற படிப்புகளில் சேர அவர்களை SIO ஊக்குவிக்கிறது. மேலும் தங்களுடைய திறமைகளை எவ்வாறு கண்டறிவது, திறமைக்கு ஏற்ற படிப்புகள் எவை, எவ்வாறு ஒரு கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும், புதிய படிப்புகள் என்னென்ன இருக்கின்றன, அதன்மூலம் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பன போன்ற பல வழிகாட்டுதல்களை SIO வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைப் பற்றி அறிந்துகொள்ள Help Desk அமைத்து வழிகாட்டுகிறோம். இதுபோன்ற தொடர்ச்சியான கல்விச் செயல்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கல்வி வளாகங்களில் செயல்படுவதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?

கல்வி வளாகங்களில் சமூகப் பிரச்னைகளை, கல்விசார்ந்த சிக்கல்களை, நிர்வாக ரீதியான விவகாரங்களைப் பேசும் மாணவர்களைக் கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும் குறிவைக்கும் அவலமான நிலை உள்ளது. அந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது.

இப்படியான பல்வேறு தடைகளைத் தாண்டி பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் நாம் மாணவர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். குறிப்பாக தற்போது ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், ஃபலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பல முன்னெடுப்புகளை தமிழ்நாடு முழுக்க மேற்கொண்டிருக்கிறோம். இதுதவிர பல்வேறு ஒன்றுகூடல் அமர்வுகள் தொடர்ச்சியாகக் கல்வி வளாகங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக அழைப்புப் பணிக்கு கல்வி வளாகம் ஒரு சிறந்த களமாக விளங்குகிறது.

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது SIOவின் நீண்டகாலக் கோரிக்கைகளுள் ஒன்று. அவ்வாறு மாணவர்களுக்கான தேர்தல் நடத்தப்படும்போது கல்லூரிகளில் கல்வி சார்ந்த பிரச்னைகளை, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளை மாணவர்கள் கையிலெடுக்க முடியும். எங்களைப் போன்ற அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படவும் வழியேற்படும்.

கல்வி, கல்வி வளாகங்கள் சார்ந்து SIO என்ன மாதிரியான பணிகளை முன்னெடுத்து வருகிறது?

கல்வி, கல்வி வளாகச் செயல்பாடுகளில் SIO புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையன்று. கல்வி வழிகாட்டுதல் நிகழ்வுகள் மாநிலம் முழுக்க நடந்து வருகின்றன. கல்வி சார்ந்த விவகாரங்களைத் தொடர்ச்சியாக SIO கையிலெடுக்கிறது. குறிப்பிடத்தக்க எந்த விவகாரத்தையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. பலரும் கவனிக்கத் தவறும் மாணவர் பிரச்னைகளையும் எமது அமைப்பு இனங்கண்டு தீர்வுகாண முயல்கிறது.

உதாரணத்திற்கு அண்மையில் பெருநாள் தினத்தையொட்டி பள்ளித் தேர்வு நடத்தப்பட இருந்ததை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்து சுட்டிக்காட்டினோம். அதேபோல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தேர்வு நடத்தப்பட இருந்தது. நாம் அதைச் சுட்டிக் காட்டி தேர்வை ஒத்திவைக்க நிர்வாகத்தை நேரில் சென்று வலியுறுத்தினோம். எங்களுடன் மற்ற மாணவர் அமைப்புகளும் இணைந்துகொண்டனர். பிறகு எங்கள் கோரிக்கையை அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் ஏற்றன.

தற்கால இளைஞர்களிடம் நிலவும் முதன்மையான பிரச்னைகள் என்னென்ன?

தற்கால இளைஞர்கள் உலகம் அழைத்துச் செல்லும் திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிவுத் தேடல், ஆன்மிகத் தேடல் என்பன இல்லாமல் தொலைதொடர்புச் சாதனங்களில் மூழ்கியிருக்கிறார்கள். ஒழுக்க விழுமங்களின்றி மேற்கத்திய மோகத்தில் திளைத்து, தங்களுடைய உண்மையான மகிழ்ச்சியையும், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும்கூட இழக்கின்றனர். இதுவும் ஒருவகையில் கல்விமுறையின் தோல்வியையே காட்டுகிறது.

மது, கஞ்சா உள்ளிட்ட பலவித போதைப் பொருட்களுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி வருகிறார்கள். பாலியல் ரீதியான பல அநாச்சாரங்களும் பெருகியிருக்கின்றன. இவையெல்லாம்தான் இன்றைய இளைஞர்களிடம் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் இளைஞர்கள் சார்ந்த விவகாரத்தை மட்டுமே மையப்படுத்தி ஒரு பரப்புரையை தேசிய அளவில் நாங்கள் நடத்த இருக்கிறோம்.

சந்திப்பு : ரியாஸ் மொய்தீன்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்