மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நிற்க அதற்குத் தக
- நூருத்தீன், மே 16-31, 2024



நிற்க அதற்குத் தக
- நூருத்தீன்


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த பின் அங்கு வசித்துவந்த யூதர்கள் நபிகளாருக்கும் தோழர்களுக்கும் நாள்தோறும் ஏதேனும் தொல்லை தருவதே வாடிக்கையாக இருந்தது. அதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை, உடன்படிக்கை என்று அரசியல் சமாச்சாரங்கள் சில அவ்வப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர்களுடன் எழுத்தில் தகவல் பரிமாற்றம் வைத்துக் கொள்ள யூத மொழி வல்லுநர் ஒருவரின் தேவை முஸ்லிம்களுக்கு அவசியமாயிருந்தது.


ஸைது இப்னு ஸாபித்(ரலி) என்றொரு நபித்தோழர் இருந்தார். அவருக்கு அச்சமயம் மிகவும் இளவயது. ஆனால் படு சூட்டிகை. அவரை நபியவர்கள் அழைத்தார்கள். ‘ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதைச் சரியாகத் தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்கள்.

அவ்வளவுதானே! இதோ ‘தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களே’ என்று உடனே காரியத்தில் இறங்கினார் ஸைது. முப்பது நாள்களில் ஒரு மொழியில் தேர்ச்சியடைய புத்தகங்களெல்லாம் இல்லாத காலமது. ஒரே வழி உழைப்பு. இராப் பகல் என்று அயராது உழைப்பு. அதன் பலனாய் வெகு குறுகியகாலத்தில் இரண்டே வாரத்தில் ஹீப்ரு மொழியைக் கற்றுத் தேர்ந்தார் அவர். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது மொழிபெயர்ப்பது எழுதுவது எல்லாம் ஸைது(ரலி) அவர்களின் பொறுப்பிற்கு வந்து சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து, ‘உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?’ என்று கேட்டார்கள் நபியவர்கள். ‘தெரியாது’ என்றார் ஸைது. ‘சென்று அதைக் கற்று வா ஸைது’ என்றார்கள். அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாளில்? பதினேழே நாள்களில். நபியவர்கள் இட்ட கட்டளைக்காக மிக இளவயதினர் ஒருவர் இரு வாரங்களில் ஒரு மொழியினைக் கற்று, தயாராய் வந்து நின்றார்.

ண்மையில் அதிகம் பகிரப்படும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. ஆதிக்க வர்க்கத்தினரால் கசக்கி எறியப்பட்ட தந்தை, இறுதியில் தன் மகனிடம் கூறிய அறிவுரை அது, ‘நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுக. ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுக. ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது.’

செல்வம் களவு போகலாம். சொத்து பிடுங்கப்படலாம். ஆனால் ஒருவனின் படிப்பறிவைத் துடைத்தெறிய முடியாது என்பதை வலியுறுத்தும் வசனம் அது. உண்மைதான். பாமரர்கள் பகடைக்காயாக உருட்டப்படும் அநியாயம் இயல்பாக நடைபெறுகிறதுதான்.

எந்தளவு ஒரு சமூகம் கல்வியறிவில் பின்தங்கி விடுகிறதோ, அந்தளவு அது சீரழிவுக்கு உட்பட்டு விடுகிறது. ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரத்திற்கு ஆட்பட்டு மட்டம் தட்டப்படுகிறது. எனவே இயற்கையான எதிர்வினையாக கல்வியறிவு அதற்குரிய தீர்வாகத் தென்படுகிறது. முன்மொழியப்படுகிறது.ஆனால் அதில் முக்கியமாக விடுபட்டுப் போகும் விஷயம் என்னவென்றால் கல்விக்கும் அறிவுக்கும் இடையிலுள்ள வித்தியாசம். Education எனப்படும் கல்வியும்  Information  எனப்படும் தகவல்களும் Knowledge எனப்படும் அறிவும் வெவ்வேறு இரசாயனம். அவை சரியான விகிதத்தில் கலக்கும்போதுதான் சூல் கொள்கிறது மெய்யறிவு.

எந்தளவு மனிதகுல மேன்மைக்குக் கல்வி பயன்படுகிறதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் நாசவேலைகள் அனைத்திற்கும் மூலமாக உள்ளதும் கல்விதான். நாடாளுபவர்களாகட்டும் பெருநிறுவன முதலாளிகளாக இருக்கட்டும், மருத்துவம், விஞ்ஞானம், நீதி என எத்துறையைச் சார்ந்தவராக இருக்கட்டும், மெத்தப் படித்தவர்கள் அனைவரும் உத்தமர்களாகவா இருக்கின்றார்கள்? அல்லது நாசவேலைகள் அத்தனைக்கும் மூலகாரணமாக உள்ள மூளைகள் படிப்பறிவு இல்லாதவையா? நுணுக்கமாகப் பார்த்தால் ராஜதந்திரம் என்ற பெயரில் மக்களை அடிமைப்படுத்திய, அடிமைப்படுத்தும் அதிகார உச்சி அனைத்தும் படித்துப் பட்டம் பெற்றவையே.

குறைஷி குலத்தின் முக்கியமான தலைவர்களுள் ஒருவன் அம்ரு இப்னு ஹிஷாம். அவனுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு. சிறந்த அறிவாளியாகக் கருதப்பட்ட கூர்மதியாளன். இஸ்லாமிய மீளெழுச்சிக்குப் பின் அவனது அத்தனை அறிவும் தீவினைக்குத் துணைபோய் வரலாற்றில் அவனுக்கு நிலைத்துவிட்ட பெயர், அபூ ஜஹ்ல் - முட்டாளின் தந்தை.

இன்று இந்தியாவில் பரவியுள்ளதே விஷ விருட்சம், அதன் வேர்களும் கிளைகளும் படிப்பறிவில் தோய்ந்தவைதாமே. என்ன பயன்? மெய்யறிவுக்கும் அவற்றுக்குமான தொடர்பு வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரமல்லவா? விளைவு? நாடு இன்று பயணிக்கும் கற்காலத் திசை. உயிர் கொல்லித் தொற்றுக்கு, தலையாட்டிப் பொம்மைகளாக மணி ஆட்டி, தீபமேற்றி நிவாரணம் தேடிய மக்கள் திரள் வெறுமே பாமரக் கூட்டமா என்ன? தட்டுகளிலும் தாம்பாளங்களிலும் கரண்டியால் தட்டின படித்துப் பட்டத் தேர்வெழுதி வென்ற விரல்கள்.

வரலாற்றிலும் சமகாலத்திலும் இவ்வாறான உதாரணங்கள் பற்பல. வெறுமே படிப்பும் கல்வியும் மட்டுமே ஒரு மனிதனைச் சீர்படுத்தி செம்மைப்படுத்த முடியாது என்பதே இங்கு நமக்கு கதைச் சுருக்கம்.

எனில் கல்வி வீணா? இல்லை. அது அறிவுக்கான மூலாதாரம். ‘ஓதுவீராக!’ என்ற வேத வசனத்தில் தோன்றிப் பூத்தது பாலை பூமி ஒன்றில் பூஞ்சோலை. பாறை நெஞ்சங்களைப் பிளந்து மனித நேயத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தது அங்கு கற்பிக்கப்பட்ட கல்வி. மாக்கள் மனிதர்களாக மாறிய விந்தை நிகழ்ந்தது. விளங்கிக்கொள்ள அந்த மக்கத்து மண்ணில் பொதிந்துள்ளது சூத்திரம்.

படிப்பறிவும் தகவல் தொடர்பு மொழிகளும் பல்வேறு துறை ஆற்றலும் அறிவும் இவ்வுலக வாழ்வுக்கான அடிப்படை மூலாதாரங்கள். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இன்றியமையாதவை. ஆனால் அதற்காகக் கல்வி மட்டுமே போதுமானது என்பது தான் அறிவீனம்.

ஈருலகத்திற்கும் பயன்படும் கல்வியறிவே மனிதகுல மேன்மைக்கு வழிவகுக்கும். அது அறம் வளர்க்கும். அடக்கம் போதிக்கும். தலைச் செருக்கை அழிக்கும். சக மனித வாஞ்சையை உருவாக்கும். நீதியை நிலைநாட்டும். அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ஏக இறை அச்சத்தில் உள்ளத்தை நிலை நிறுத்தும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்