முகநூல் உலா
கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த விளக்கம்
- Dr. அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
கொரோனா பெருந்தொற்று 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2022ஆம் ஆண்டு தொடக்கம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. கொரோனா பெருந்தொற்று கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய சார்ஸ் வகை இரண்டு (nCoV-2) என்ற வைரஸினால் ஏற்பட்டது. இந்தத் தொற்றுக்கு எதிராக மூன்று முக்கிய வகைகளில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி தொடங்கியது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் இணைந்து வேக்ஸ்செர்வியா எனும் வெக்ட்டார் வகை தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கின. ரஷ்யாவின் கேமாலயா நிறுவனம் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டறிந்தது. ஃபைசர், மாடர்னா முதலிய நிறுவனங்கள் மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பம் மூலம் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.
இந்தியாவில் கோவேக்சின் எனும் பெயரில் வைரஸை செயலிழக்கச் செய்து உருவாக்கும் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆரும் இணைந்து உருவாக்கின. சீனாவும் தன் பங்குக்கு செயலிழக்கச் செய்த வைரஸ் தொழில்நுட்ப தடுப்பூசியை உருவாக்கியது. டிசம்பர் 2020 தொடங்கி ஐரோப்பா, அமெரிக்காவில் ஃபைசர் மாடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் வேக்செர்வியா தடுப்பூசியை கோவிஷீல்டு எனும் பெயரில் சீரம் இண்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்தது. ஜனவரி 2021 மத்தியில் மக்களுக்கு வழங்கியது.
தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுள் நிகழும் அரிதினும் அரிதான பக்கவிளைவுகளைத் தொடர்ந்து மருத்துவ அறிவியல் உலகம் ஆய்வுகள் மூலமும் அறிக்கைகள் மூலமும் வெளிப்படுத்தின. அதில் மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு அரிதினும் அரிதாக இதய தசை அழற்சி (மயோ கார்டைட்டிஸ்) ஏற்படுகிறது என்றும் வெக்ட்டார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு அரிதினும் அரிதாக ரத்த உறைதல் தன்மையை அதிகமாக்கும், ரத்த நாளங்களில் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் பக்கவிளைவு உண்டு என்றும் மருத்துவ அறிவியல் ஆய்வறிக்கைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
எனினும் அதே சூழலில் பரவி வந்த கொரோனா தொற்று பீட்டா, டெல்ட்டா எனத் தீவிர வடிவம் எடுத்தது. இத்தகைய வைரஸ் தொற்றைப் பெறுபவர்களில் தீவிரத் தொற்று அடைந்தவர்களுக்கு ரத்த உறைதல், ரத்தக் கட்டி ஏற்படும் தன்மை மிக அதிகமாக இருந்தது. மருத்துவ அறிவியலாளர்கள் தடுப்பூசியினால் ஏற்படும் பலன்களையும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஆராய்ந்து தடுப்பூசிகளினால் தீவிர கொரோனா நோய் தடுக்கப்படுகிறது. மேலும் அரிதினும் அரிதாக தீவிர பக்க விளைவு களை ஏற்படுத்துகின்றன. எனவே தடுப்பூசிகளினால் ஏற்படும் பலன் பாதகத்தை விட அதிகமாக இருப்பதால் தடுப்பூசி பெறவே வலியுறுத்தினர்.
இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் இருநூறு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதில் 90% க்கு மேல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட 28 நாள்களுக்குள் இத்தகைய ரத்த உறைதல் நிகழ்வுகள், ரத்த தட்டணுக்களைக் குறைத்தல் போன்ற பக்க விளைவுகளை அரிதினும் அரிதாக ஏற்படுத்தியது.
அரிதினும் அரிது என்றால் எவ்வளவு?
(22 ஏப்ரல் 2021இல் நான் எழுதிய பதிவில் இருந்து) ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடையே ரத்த உறைதல் நிகழ்வுகள் எத்தனை நிகழ்ந்துள்ளன? ஆஸ்டர் செனிகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டறிந்த வெக்ட்டார் வைரஸ் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய AZD1222 எனும் தடுப்பூசி 2.5 கோடி பேருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் பிரிட்டனில் 1.8 கோடி பேர் சேர்த்து 4.3 கோடி பேருக்கு வழங்கப்பட்ட பின் 86 ரத்த உறைதல் நிகழ்வுகள் (ஐரோப்பிய யூனியன்) 30 ரத்த உறைதல் நிகழ்வுகள் (பிரிட்டன்) இரண்டையும் சேர்த்து 116 நிகழ்வுகள் கண்டறியப்பட்டன. இது தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களிடையே லட்சம் பேருக்கு போட்டால் 0.2 பேருக்கு அதாவது ஒரு நபர் என்ற அளவில் கூட நேராத அளவு அரிதினும் அரிதான நிகழ்வு.
இந்த ரத்த உறைதல் நிகழ்வில் மூளைக்குச் செல்லும் சிரை (Cerebral venous thrombosis) வயிற்றுப்பகுதியில் உள்ள சிரை, கால்களில் உள்ள ஆழ்சிரை ஆகியவற்றில் பெரும்பான்மை கட்டிகள் ஏற்பட்டுள்ளன. சிறுபான்மையாக தமனிகளில் கட்டிகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய ஒவ்வாமையை வெளிப்படுத்துவோருக்கு ரத்த தட்டணுக்கள் 1.5 லட்சம் என்ற அளவை விடக் குறைந்து இருக்கும். டி-டைமர் எனும் ரத்தம் கட்டியாவதைக் கண்காணிக்க உதவும் உயிர் ரசாயன சமிக்ஞை நொதி அளவில் 4.0 மி.கிக்கு மேல் கூடியிருக்கும். இந்த அரிதினும் அரிதான பக்கவிளைவு நிகழ்வை Vaccine Induced Prothrombotic Immune Thrombocytopenia என்று பெயிரிட்டுள்ளனர்.
அதாவது ரத்த தட்டணுக்கள் குறைபாடுடன் கூடிய ரத்த உறைதல் நிலையை உருவாக்கும் பக்கவிளைவு என்று பொருள். இதே போன்ற ஒவ்வாமை நிகழ்வு ரத்த உறைதல் தன்மையைத் தடுக்கப் பயன்படும் ஹெபாரின் என்ற மருந்தைச் செலுத்துபவர்களுக்கு அரிதினும் அரிதாக ஏற்படும். அதை HEPARIN INDUCED THROMBOCYTOPENIA என்று அழைப்போம். நூறு பேருக்குத் தடுப்பூசி வழங்கப்படும்
போது 0.0002 பேருக்கு நிகழும் அரிதினும் அரிதான நிகழ்வு. இதைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய யூனியனின் ஐரோப்பிய மெடிக்கல் ஏஜென்சியும் பிரிட்டனின் தேசிய சுகாதார நிறுவனமும் (NHS) கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் ஒவ்வொரு லட்சம் பேருக்கு 1400 கொரோனா தொற்றினால் ரத்த உறைதல் தன்மை ஏற்படுவதற்கு ஒவ்வொரு லட்சம் பேருக்கு 16800 இதை ஒப்பிடும் போது இந்தத் தடுப்பூசியினால் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவு லட்சம் பேருக்கு 0.3 என்ற மிக மிகக் குறைவான அளவிலே ஏற்படுவதால் தொடர்ந்து தடுப்பூசியை மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இந்த VIPIT பக்க விளைவின் அறிகுறிகள் என்ன?
ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 - 42 நாள்களுக்குள் அதீத தலைவலி, வலிப்பு, பக்கவாதம், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, வயிற்று வலி, கால்கள் வீங்கி சிவந்து குளிர்ச்சியாகக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குறித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் அறிவித்துள்ளது.
இந்த விபிட் விளைவுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால் நல்ல முறையில் மீளும் சிகிச்சை உள்ளது. வயிற்றுப்பகுதி வலிக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும். தலைவலிக்கு தலைப்பகுதி எம்ஆர்ஐ. கால்கள் வீக்கம் இருந்தால், வலி இருந்தால் ரத்த நாளங்களுக்கான டாப்ளர் பரிசோதனை எடுக்கப்படும். ப்ளேட்லெட் அளவுகள் 1.5 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருக்க வேண்டும். டி டைமர் அளவுகள் 4 மி.கிக்கு மேல் கூடியிருக்க வேண்டும்.
இவர்களுக்கு ஹெபாரின் அல்லாத ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளான அர்காட்ரோபான் அல்லது ஃபாண்டாபாரிணக்ஸ் மூலம் சிகிச்சை வழங்கலாம்.
கட்டாயம் ரத்த தட்டணுக்கள் மாற்று சிகிச்சையோ ஹெபாரின் மூலம் சிகிச்சை யையோ தவிர்க்க வேண்டும். இதற்கென பிரத்யேகமாக உள்ள சிரைவழி இம்யூனோகுளோபுளின் (Intravenous Immuno globulin) சிகிச்சையை வழங்க வேண்டும். இந்தியாவில் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனத்தின் பதிப்பான கோவிஷீல்டு இதுபோன்ற ரத்த உறைதல் நிகழ்வுகளை உருவாக்குகின்றதா ?
கோவிட் தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்க தேசிய தடுப்பூசி பக்க விளைவுகள் கண்காணிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டுத் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தொடர்ந்து கண்
காணித்தும் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
அவர்களின் அதிகாரப்பூர்வ கருத்துப்படி 2021 மார்ச் 13 வரை இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட மக்களுள் தடுப்பூசி சார்ந்த மரணங்கள் 79 நடந்தன. 412 தீவிர பக்க விளைவுகள் நிகழ்ந்தன.
இந்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை (17.05.2021). கோவிஷீல்டு தடுப்பூசியால் மிக மிகக் குறைந்த அளவில் ரத்த உறைதல் நிகழ்வுகள் நடந்துள்ளன என்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்பால் 0.61 என்ற அளவில் மட்டுமே ரத்த உறைதல் நிகழ்வுகள் நடக்கின்றன.
இது பிரிட்டன், ஐரோப்பாவைக் காட்டிலும் மிக மிகக் குறைவு எனினும் இந்தத் தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் மக்கள் அதிகம் என்பதையும் இந்த ஆய்வு பறைசாற்றியது.
அது குறித்த எனது பதிவின் லிங்க் https://www.facebook.com/share/p/vh9wEL9Sh7yZvbzd/?mibextid=oFDknk
இப்போது பக்க விளைவுகள் அதிகரித்து விட்டனவா?
இவ்வாறு மருத்துவ உலகம் தொடர்ந்து தடுப்பூசியினால் ஏற்படும் நன்மை, பக்கவிளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தொடர்ந்து வெளிப்படையாகப் பேசி வந்திருக்கிறது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. பிறகு ஏன் தற்போது இந்த கோவிஷீல்டு பக்கவிளைவுகள் தலைதூக்கி உள்ளன?
பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு அதனால் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவான ரத்த உறைதலுக்கு உள்ளான சகோதரர் ஒருவருக்கும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனத்துக்கும் இடையே 2021இன் மத்தியில் இருந்து நடக்கும் வழக்கில் 2023ஆம் ஆண்டு அத்தகைய ரத்த நாள அடைப்புக்கு எங்களது தடுப்பூசி காரணமாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறி வாதிட்ட ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் தற்போது இத்தகைய ரத்த உறைதல் நிகழ்வு அரிதினும் அரிதாக நிகழக் கூடும் என்று அறிவித்திருக்கிறது. இதில் எந்த வித அதிர்ச்சியோ வியப்போ இல்லை.
காரணம் இந்த விசயங்கள் அனைத்துமே நமக்கு 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தி லேயே தெரியும். எனினும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் தற்போது வழக்கில் கூறியபடியால் மீண்டும் மீடியாவில் இந்தச் செய்தி வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கோவிஷீல்டு பெற்ற 80 கோடிக்கும் மேல் மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.
முதலில் சில விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்கு முதல் இருபத்தி எட்டு நாள்களுக்குள் இத்தகைய ரத்த உறைதல் ஏற்படும். அரிதினும் அரிதாகப் பத்து லட்சம் பேரில் ஒருவருக்கும் குறைவாகவே இதனால் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது பெற்ற தடுப்பூசிக்கு இப்போது பக்க விளைவு தெரிகிறது எனும் அளவில் எத்தகைய ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. அறிவியல் சான்றுகளும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் தடுப்பூசிகள் பெரும்பான்மை மக்களுக்குச் செலுத்தப்படும் முன்னரே இரண்டாம் அலை இந்தியாவில் வீசியது. அதில் பலருக்கும் கொரோனா தொற்று தீவிரமாக ஏற்பட்டது. அத்தகைய கொரோனா தொற்றின் தாக்கமும் நம்மிடையே பல வாழ்வியல், வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை உண்டாக்கி உள்ளன. இன்னும் சொல்லப்போனால் மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் தடுப்பூசி பெற்றவர்களிடையே மாரடைப்பு சார்ந்த மரணங்கள் கொரோனாவுக்குப் பின் குறைவாக நடந்து வருவதாக ஆய்வு முடிவுகள் உள்ளன.
எனவே தடுப்பூசி பெற்றவர்கள் பீதிக்குள்ளாகத் தேவையில்லை. தடுப்பூசிகள் - எவ்வாறு பலன்கள் கொண்டிருந்தவையோ அதே போன்று பக்க விளைவுகளும் கொண்டிருந்தன.
எந்த மருந்திற்கும் பலனும் பக்க விளைவும் இணைந்தே இருக்கும். தீவிர பக்க விளைவுகள் அரிதினும் அரிதாக தடுப்பூசிகளுக்கு இருந்தது உண்மை. இதை மருத்துவர்களோ நவீன மருத்துவ அறிவியலாளர்களோ மறுக்கவில்லை. தொடர்ந்து இதுகுறித்து நிகழ்காலத்தில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன்.
அதன் லிங்க்குகள் இதோhttps://www.facebook.com/share/p/4iPyufwZjQUCgxcV/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/31HdJFKgj4xZ7Mw2/?mibextid=oFDknk
அரிதினும் அரிதாகப் பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு என்ற அளவில் ஏற்படும் பக்கவிளைவை ஏதோ அனைவருக்கும் ஏற்படுவது போலவும் மீடியா நண்பர்கள் பரப்புவது நன்மையன்று. தங்களது செய்திகளில் ரத்த உறைதல் பக்க விளைவு அரிதினும் அரிதாக ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசிக்கு ‘ஏற்பட்டது’ என்று குறிப்பிடுங்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசி போட்டவர்களுக்கு இப்போதும் அத்தகைய நிகழ்வுகள் நிகழ்கிறது என்று அறிவியல் ஆதாரமில்லாத தகவல்களைப் பரப்பாதீர்கள்.
அந்த பக்க விளைவு தடுப்பூசி செலுத்திய 4 முதல் 42 நாள்களுக்குள் நடக்கவே வாய்ப்பு உண்டு. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, மூன்றாம் அலையில் பல உயிர்களைக் காத்தவை - கோவிஷீல்டு, கோவேக்
சின் தடுப்பூசிகள். மக்களைத் தேவையற்ற பீதியில் வைத்திருக்கவே இத்தகைய செய்திகள் உதவுகின்றன. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்ட சகோதர சகோதரிகளே வீண் அச்சம் வேண்டாம்
https://www.facebook.com/share/p/UNkjoiootYVvomzm/?mibextid=oFDknk