மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தலைசிறந்த கல்வி நிலையங்களும் தேர்வு செய்யும் முறைகளும்..!
- கல்வியாளர் வாஜித் ஷா, மே 16-31, 2024






உலகத் தரமான பல்கலைக் கழகங்கள், சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் பல இந்தியாவில் உள்ளன. சிறந்த பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடங்களைப் பற்றிய முக்கியத் தகவல்களைக் கணலாம்.

சிறந்த பல்கலைக் கழகங்கள், பாடங்களைப் பற்றி மட்டுமல்ல, தேவைப்படும் நுழைவுத் தேர்வைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையமான டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைப் பற்றி தெரிய வேண்டிய பல சிறப்புகள் உள்ளன.

இந்த மத்தியப் பல்கலைக் கழகம் 1019 ஏக்கர் பரப்பளவில் 1969இல் தொடங்கப்பட்டது. இங்கு புவியியல், வரலாறு, இலக்கியம், நவீன மொழிகள், அரசியல், சர்வதேச உறவுகள், மானுடவியல் எனப் பல பாடங்கள் நடத்தப்படுகிறது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவெனில் இங்கு படித்தவர்களில் பலர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் மாணவர்களிடமுள்ள கலந்து ஆலோசனை செய்யும் வாய்ப்பாகும். இந்தப் பல்கலைக் கழகத்தில் க்யூட் (CUTE) தேர்வு மூலமாகச் சேரமுடியும்.

குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் படிப்பது பலரது கனவாகும். மனித வள அமைச்சகம், 2017இல் இதனைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி அமைப்பாக அங்கீகரித்துள்ளது. பிசினஸ் மேனேஜ்மென்ட் எம்.பி.ஏ கல்விக்கு இந்தியாவின் முக்கிய பிஸினஸ் ஸ்கூல்களிலே இந்தியாவின் தலைசிறந்ததாக இது உள்ளது. இதேபோல கணக்கியல், நிதி எம்.பி.ஏ. கல்விக்கு பெங்களுரைச் சார்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் அஃப் மெனஜ்மென்ட் சிறந்ததாகக் கருதப்படுகிறது. காட்(CAT) தேர்வு மூலமாக இங்கு சேர முடியும்.

23 தொழில் நுட்பக் கல்லூரிகள் இன்ஜினியரிங், டெக்னாலஜி வளர்சிக்காகத் தொடங்கப்பட்டது. இதில் பிரதானமானது டெல்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகும். மனித வள அமைச்சகம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி அமைப்பாக அங்கீகரித்துள்ளது. JEE தேர்வு மூலமாக இங்கு சேர முடியும்.

இந்திய அரசின் இரசாயனம், உரங்கள் அமைச்சகம் ஏழு பொதுக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கியது. இந்த கல்வி, ஆராய்ச்சிக்கான பல்கலைக் கழகங்களில் மருந்தியல் சார்ந்த கல்விக்கு ஹைதராபாத்திலுள்ள தேசிய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம்(National Institute of Pharmaceutical Education And Research: NIPER) சிறந்த ஒன்றாகும். நிபர் ஜே.இ.இ (NIPER JEE) நுழைவுத் தேர்வு மூலமாக இங்கு சேர முடியும். 

சட்டக் கல்விக்கு தேசிய அளவிலான பல அமைப்புகள் உள்ளன. க்லாட்(CLAT)  தேர்வு மூலமாக தேசிய சட்டக் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். எனினும் ஓ.பி. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி சட்டக் கல்விக்குச் சிறந்த பல்கலைக் கழகமாக உள்ளது. இது ஜிண்டால் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. லாஸ்ட் (LSAT) நுழைவுத் தேர்வு முலமாக இங்கு சேர முடியும்.

கணிதக் கல்விக்கு மும்பையிலுள்ள ஐ.ஐ.டி இந்தியாவின் தலைசிறந்ததாக உள்ளது. மருத்துவக் கல்விக்கு டெல்லி எய்ம்ஸ் சிறந்ததாக உள்ளது. நீட் நுழைவுத் தேர்வின் முலமாக இங்கு சேரமுடியும். அறிவியல் கல்விக்குக் குறிப்பாக இயற்பியல், வானவியல் கல்விக்கு பெங்களூரிலுள்ள ஐ.ஐ.எஸ் சிறந்த இடமாகும். டாடா நிறுவனம், ஒன்றிய அரசு தற்போதைய கர்நாடக அரசு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸை நடத்துகிறது. அரசு, தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் பல்கலைக்குத் தலைசிறந்த எடுத்துகாட்டாக இந்த தன்னாட்சி பெற்ற பல்கலைக் கழகம் உள்ளது. JEE தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு முலமாக இங்கு சேர முடியும்.

தகவல், மீடியா கல்விக்கு டெல்லி பல்கலைகழகம் சிறந்த பல்கலைக் கழகமாக உள்ளது. கியூட் (CUTE) நுழைவுத் தேர்வின் மூலமாக இங்கு சேரமுடியும். நல்ல கல்வி கற்க வேண்டுமென்றால் மாநில மத்திய அரசு பாடத்திட்டமுள்ள கல்வி முறையில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது தான் பொதுவாக யோசனையாக இருக்கும்.

சிறந்த பல்கலைக் கழகங்களில் சிறந்த பாடங்களைப் படிப்பதற்கு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணிற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்தான் பிரதானம் எனவாகிவிட்டது. எனவே நுழைவுத் தேர்வைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வில் வெற்றிபெற பயிற்சியை பள்ளியில் படிக்கும் பொழுதே தொடங்கி விட வேண்டும். இல்லையெனில் சிறந்த கல்வியைப் பெரும் வாய்ப்பு குறைந்து விடும். பள்ளியில் படிக்கும் போதே நுழைவுத் தேர்வையும் சேர்த்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது.

மேலும் விவரங்களுக்கு : 9884227669


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்