மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இப்ராஹீம் நபி தொடங்கி வைத்த பயணம்
- மௌலவி அப்துல் ஹஸீப் பாக்கவி, ஜூன் 16-30


உலகெங்கிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மேற்கொண்டு பாவமன்னிப்பையும் இறைதிருப்தியையும் பெறுவதற்காக ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடும் நிகழ்வு தான் ஹஜ் கடமை என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

மற்ற கடமைகளைப் போல் அல்லாமல் குறிப்பிட்ட சில அளவுகோல் அடிப்படையில் முஸ்லிம்களின் ஒரு சாராருக்கு மட்டும் ஹஜ் கடமையாகின்றது. உடல் வணக்கம், பொருள் வணக்கம் ஆகிய இரண்டு வகையான வணக்கங்களையும் உள்ளடக்கியது தான் ஹஜ் கடமையாகும்.

உடல் ரீதியான பல்வேறு வணக்க வழிபாடுகளை உள்ளடக்கி இருப்பதாலும் பெரும் சவாலாகக் கூட்ட நெரிசல் இருப்பதாலும் இளம் வயதிலேயே ஹஜ் கடமையை முடித்து விட வேண்டும் என்று பலரும் விரும்புவது உண்டு. ஹஜ் வணக்கத்தைக் குறித்து நாம் அறியும்போது மிக முக்கியமாகத் தெரிய வேண்டிய செய்தி அந்த உன்னதமான கடமை ஆயுளில் ஒரே ஒரு முறை மட்டும் விதிக்கப்பட்டது என்பதேயாகும்.
இதர கடமைகளுக்கும் ஹஜ் என்ற மாபெரும் கடமைக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. மற்ற கடமைகளை நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே நிறைவேற்றுவதற்கான வசதி உண்டு. ஆனால் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு உலகில் எங்கிருந்தாலும் நாம் மக்கா மாநகர் செல்வது அவசியமாகும்.

ஹஜ்ஜின் சிறப்புகளும் பலன்களும்

திருமறைக் குர்ஆனிலும் நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளிலும் பல்வேறு வகையான சிறப்புகளால் ஹஜ் கடமை வலியுறுத்தப்படுகின்றது.

1. மூன்றாவது இடம்

‘இறைநம்பிக்கை, இறைத்தூதர் மீதான நம்பிக்கை, இறைவழியில் போராடுவது இதற்கு அடுத்தபடியாக ஹஜ் கடமை தான் நற்செயல்களில் சிறந்தது’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி)

2. இறைவனின் கண்டனம்

சென்று வருவதற்கான வசதியும் உடல் வலிமையும் பெற்ற ஒருவர் ஹஜ் செய்யாவிட்டால் அதனால் அல்லாஹ்வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று திருக்குர்ஆன் கண்டிப்புடன் கூறுகின்றது. (பார்க்க, திருக்குர்ஆன் 3:94)

3. ஜிஹாதுக்குப் பதில் ஹஜ்

நபி(ஸல்) அவர்களிடம் பெண்களின் ஒரு குழுவினர் போர்களில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளித்திட அனுமதி கேட்டபோது, ‘பெண்கள் போர்களில் கலந்து கொள்வதற்கு ஈடாக ஹஜ் கடமை உள்ளது’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்:புகாரி)

4. ஹாஜிக்குக் கூலி சுவனம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மை சுவனம் தவிர வேறில்லை’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி)

5. பாவங்களின் பரிகாரம்

‘தவறான விஷயங்களை விட்டு விலகி மேற்கொள்ளப்பட்ட ஹஜ் வணக்கம் ஒருவரின் எல்லாப் பாவங்களையும் துடைத்தெறிந்து அன்று பிறந்த பாலகனைப் போல அவரை மாற்றி விடுகின்றது’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி)

6. செல்வம் வளரும்

‘ஏழ்மை அகன்று விடும் நற்பேறு ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஒருவருக்கு கூடுதல் வெகுமதியாக கிடைக்கும்’ என்பது அண்ணலாரின் மற்றுமொரு வாக்குறுதியாகும்.(அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: சுனன் இப்னு மாஜா)

ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு பொருளாதாரத் திட்டமிடல், சேமிப்பு போன்றவற்றைக் கற்றுத்தருவதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பரக்கத் என்ற அபிவிருத்தி ஹாஜிக்குக் கிடைப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ‘ஹஜ், ஜகாத், அகீகா, குர்பானி போன்ற வணக்கங்கள் ஒரு முஸ்லிமை வசதியை நோக்கி நகர்த்திச் செல்கின்ற மாபெரும் உந்து சக்திகளாக இருக்கின்றன’ என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய கருத்துகளும் சிந்தனைக்குரியது.

7. நிகரற்ற இறைநெருக்கம்

ஹஜ்ஜை நிறைவேற்றியதன் காரணமாக இறை நெருக்கம் ஏற்பட்டு ஒருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்பதும் மற்றொரு சிறப்பு. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஹாஜியும் உம்ரா செய்தவரும் பிரார்த்தனை செய்தால் உடனே ஒப்புக்கொள்ளப்படும்; மற்றவர்களுக்காக அவர் பாவமன்னிப்புத் தேடினால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படும்’.(அறிவிப்பாளர்: உமர்(ரலி) நூல்: சுனன் இப்னு மாஜா)

8. ஈமானிய அடையாளம்

பல்வேறு பலன்களைக் கடந்து ஹஜ் என்பது ஒரு மனிதனின் ஈமானிய அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது. இலட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பல்வேறு வகையான சடங்குகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? தன்னுடைய ஈமானை வெளிப்படுத்துவதற்காக! தான் இறைஅடிமை என்ற அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதற்காக! அப்படியென்றால், மிகச்
சிறப்பாக மற்ற வணக்க வழிபாடுகளை விட ஹஜ் கடமை ஒரு மனிதனின் ஈமானிய அடை யாளத்தை வெளிப்படுத்துகிறதல்லவா?

வியக்க வைக்கும் எண்ணம்

இப்படி பல்வேறு வகையான சிறப்புகள் இருக்கின்ற காரணத்தால் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற ஆசையும் அதைச் சார்ந்த பிரார்த்தனையும் முஸ்லிம்களிடம் அழுத்தமாக இடம் பெறுவதைப் பார்க்கின்றோம். கடும் சிரமப்பட்டு பெரும் நெரிசலுக்கு ஆளாகி உணவுக்காகக் காத்திருந்து இயற்கை உபாதைகளுக்கு வரிசையில் நின்று கட்டாந்தரையில் படுத்து பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு ஹஜ் செய்து வந்த எந்த ஒரு ஹாஜியும் ‘அப்பப்பா எவ்வளவு சிரமம். இனிமேல் ஹஜ் செய்ய மாட்டேன்’ என்ற எண்ணத்திற்கு ஒருபோதும் வர மாட்டார். எவ்வளவு சிரமங்களை அனுபவித்திருந்தாலும் மீண்டும் ஹஜ் செய்ய வேண்டும், உம்ரா செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனதில் உடனே துளிர் விடுவதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது பெரும் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஆகவே தான் கஅபாவிற்குச் செல்கின்ற கூட்டம், ஹஜ் உம்ராவிற்குச் செல்கின்ற கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காண்கின்றோம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஹஜ் செய்வதற்கும் கஅபாவிற்குச் செல்வதற்கும் மக்கள் முன்வராத பொழுது உலக முடிவு நாள் வந்துவிடும். இந்த உலகம் அழிக்கப்படும் தகுதியை பெற்றுவிடும்’. (அறிவிப்பாளர்: அபூசயீத் அல்குத்ரி(ரலி) நூல்: இப்னு ஹிப்பான்)

நபித்தோழர் இப்னு அப்பாஸ் அவர்கள் இதற்கு விளக்கம் சொல்லுகின்ற முகமாக ஹஜ் செய்யப்படுகின்ற காலமெல்லாம் உலகம் முடிவு நாள் நெருங்காது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஹஜ்ஜின் உயர் நோக்கங்கள்

1. மறுமையை நினைவூட்டிக் கொள்ளுதல்

ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையை நம்புகின்றனர். உலக அழிவு நாளை ஏற்றுக் கொள்கின்றனர். ஹஜ்ஜின் போது அணியும் இஹ்ராம் ஆடையும் அரஃபா பெருவெளியில் ஒன்று திரள்வதும் மஹ்ஷர் மைதானத்தையும் மறுமையையும் நினைவூட்டுவதாக அமைகிறது. இன்று முஸ்லிம்களுக்கு அவசியம் நினைவூட்ட வேண்டிய அம்சம் மறுமைச் சிந்தனை. ஏனென்றால் மறுமையை மறுப்பவர்கள், நம்பாதவர்களை விட மறுமையை ஏற்றுக் கொண்டு மறந்து வாழ்வது மாபெரும் இழப்பாகும்.

2. சமத்துவமும் சகோதரத்துவமும்

உலகெங்கிலுமிருந்து பல்வேறு அடையாளங்களைத் தாங்கிய மனிதர்கள் ஒரே அணியில் ஒரே முழக்கமாக ஒரே
நோக்கம் கொண்டு இயங்குகின்ற அழகான அம்சம் உலகளாவிய சகோதரத்துவத்தின் சமத்துவத்தின் மாபெரும் வெற்றியேயன்றி வேறென்ன? புனித பூமியில் நிறவேற்றுமை புதைந்து போகும்; இனவேற்றுமை இல்லாது போகும்; மொழி வேற்றுமை அழிந்து விடும்; பதவி, பண அடையாளங்கள் எதுவும் எடுபடாது. ஆண்டுதோறும் நடைபெறும் அற்புதமான அதிசயம் இது. முதல் மனிதர் தொழுத இடத்திலிருந்து முதல் ஜோடி சந்தித்துக் கொண்ட இடத்திலிருந்து நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்; ஒரே குடும்பம் என்ற உணர்வை ஆண்டுதோறும் நினைவூட்ட படைத்த இறைவன் ஒன்று கூட்டும் மாபெரும் ஒருங்கிணைப்பு.

3. நற்குணங்களுக்கான உரைகல்

ஹஜ்ஜின் பெருங்கூட்டத்தில் பெரும் மக்கள் வெள்ளத்தில் மிகவும் பொறுமையாக விட்டுக் கொடுத்து வாக்குவாதம் செய்யாமல் கோபம் கொள்ளாமல் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளையும் செய்தல் என்பது பெரும் சவால் மட்டுமல்ல மாபெரும் பயிற்சியும் ஆகும். அத்துடன் பெற்ற பயிற்சியை இருப்பிடம் வந்த பிறகு அனைவரிடமும் வெளிப்படுத்தி உயர்ந்த நற்பண்புடன் நடக்க ஹஜ் வகை செய்கின்றது.

4. அழைப்புப் பணி

இன்று நாம் காண்கின்ற கஅபா என்பது 360 சிலைகளால் நிறைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் தமது பொன்னான அறிவுரைகளால், தொடர் பரப்புரையால், மிகுந்த முயற்சியால் அழைப்புப் பணி செய்து அதனைத் தூய்மைப்படுத்தினார்கள் என்ற செய்தியை ஒவ்வொரு ஹாஜியும் அறிகின்ற பொழுது இந்த உலகம் முழுவதையும் கவ்வியிருக்கின்ற இறைவழிகாட்டுதலுக்கு முரணான விஷயங்களை உணர்ந்து ஓரிறையின் பக்கம் மக்களை அழைப்பதை மாபெரும் பணியாக உணர்ந்து கொள்வர்.

அன்று நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் கொடுத்த அழைப்பால் உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் முஸ்லிம் சமுதாயம் அது வெறும் பயணம் மட்டும் அல்ல, உன்னதமான பல நோக்கங்களையும் சிறப்புகளையும் உள்ளடக்கியது என்பதை அறியும்போது தான் ஒவ்வொருவரின் ஹஜ் பயணமும் அர்த்தமுள்ளதாக அமையும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்