மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

உலகின் கண்கள் ரஃபாவின் மீது!
- ஜ. ஜாஹிர் உசேன், ஜூன் 16-30


உலகைப் புரட்டிப்போட்ட புகைப்படங்களின் வரிசையில் அண்மையில் வெளியான All Eyes on Rafah படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஃபலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான மனிதாபிமானமற்ற இன அழிப்பு குறித்த கவன ஈர்ப்பை இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது. ரஃபா இங்கு கொடூரத்தின் உச்சமாக வடிவமைக்கப்பட்டாலும் பிரச்னை ஃபலஸ்தீன் குறித்தது. எனவே இந்தப் படம் உலகின் கூடுதல் கவனத்தைப் பெற்றது.

இந்தப்படம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவியில் (AI tool) வடிவமைக்கப்பட்ட படம். சற்றேறக்குறைய 5 கோடிக்கும் மேல் இன்ஸ்டாக்ராமில் பார்க்கப்பட்டிருக்கிறது. அறிவியல் ஆசிரியை ஜிலா அப்கா, கல்லூரி மாணவரும் புகைப்படக் கலைஞருமான அமீருல் ஷா என்ற இரண்டு மலேசியர்களால் தனித்தனியாக, சில நாள்கள் இடைவெளியில் உருவாக்கப்பட்டது இப்படம். இலட்சக்கணக்கான ஃபலஸ்தீனர்களின் இடப்பெயர்தலுக்குக் காரணமான ரஃபா நிகழ்வை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இருவரின் எண்ணமும், ஃபலஸ்தீன மக்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும் என்பது தான்.


                                

இந்த நிகழ்வுக்கு முன் நடந்த சம்பவங்களைப் பார்ப்போம். காஸா என்ற நிலப்பரப்பு பல பகுதிகளை உள்ளடக்கியது. வடக்கிலிருந்து தெற்காக அமைந்திருக்கும் வடக்கு காஸா, ஜபலியா, மத்திய காஸா, தைய்ர் அல்பலாஹ், கான் யூனிஸ், ரஃபா பகுதிகள் தான் அவை.

முதன்முதலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது வடக்குக் காஸாவில் தான். மக்கள் வான் வழி ஏவுகணைத் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல், மத்திய காஸாவிற்குள் நுழைந்தனர். சிலர் அவர்களின் உறவினர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பயணம் செய்து உறவினர்களின் வீடுகளில் தங்கி தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

இஸ்ரேல் தன் கொடூரமான தாக்குதல்களை ஒவ்வொரு பகுதி யாகத் தேர்ந்தெடுத்து நடத்தி, வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்குக் கொண்டு போய் இறுதிப் பகுதியான ரஃபாவின் பக்கம் தள்ளியது. மற்ற பகுதிகள் எல்லாம் சிதிலமடைந்து கட்டிடங்கள், வீடுகள் இடிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயின.

மொத்தமே 63 சதுர கிலோ மீட்டர் பகுதியாக இருந்த ரஃபாவில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 22,200 நபர்கள் இருக்கும் மிகவும் ஒரு நெருக்கடியான பகுதியாக அது மாறிப்போனது. நியூயார்க் நகரத்தில் இருக்கும் மக்களின் சதுர கிலோமீட்டர் அளவை விட(11,300 நபர்கள் ஒரு சதுர கிலோமீட்டருக்கு) இரண்டு மடங்கு அதிகம். இந்தப் பகுதியில் மட்டும் 12 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 6 இலட்சம் குழந்தைகள் அதில் அடங்குவர்.

ஒரு காலத்தில் ரஃபாவில் 2.5 இலட்சம் மக்கள் மட்டுமே குடியிருந்த பகுதி அது. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பயந்து பல முறை, பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியாக ரஃபாவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்பி தஞ்சம் அடைந்த மக்கள் அவர்கள். தங்களின் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து வீடு, வாசல், சொத்து, பணம், கடைகள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நடுரோட்டிற்கு வந்த பின், சாப்பிட உணவில்லாமல், குடிக்கத் தண்ணீர் இல்லாமல், உடுத்த உடைகள் இல்லாமல், தங்கவும் தூங்கவும் தற்காலிகக் கூடாரங்களில் தங்கிக் கொண்டிருந்தனர். பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள் என்று இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட போலியான அறிவிப்புகளை நம்பி தங்களின் சொந்த பூமியிலேயே புலம்பெயர்ந்து அல்லல்பட்டார்கள்.

ரஃபாவைத் தாக்கும் இஸ்ரேலின் திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டமையும், அதற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா உட்பட அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகள் காட்டிய கடும் எதிர்ப்பும் நடந்தேறியது இந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான். ரஃபாவின் மீதான தாக்குதல் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என உலக நாடுகள் இஸ்ரேலை மார்ச் மாதம் எச்சரித்தன. மே மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கி அது இஸ்ரேலால் ஒப்புக் கொள்ளப்படாததால், கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அதையும் மீறி இஸ்ரேல் தன் தாக்குதல்களை ரஃபாவில் தொடங்கியது.

எகிப்து நாட்டின் எல்லையில் ரஃபாவில் இருந்து மக்கள் கடக்கும் சுங்கச் சாவடி, இஸ்ரேலிய பீரங்கிகளால் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. எல்லை மூடப்பட்டது. எந்த வித உதவிப் பொருட்களும் ரஃபாவிற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. பெட்ரோல் எரிபொருள், தண்ணீர், உணவுப் பொருட்கள், உதவிப்பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கடந்த 6 வாரங்களாக நூற்றுக்கணக்கான மக்கள் கொத்துக்
கொத்தாக, குடும்பம் குடும்பமாகக் கொல்லப் பட்டார்கள். ரஃபாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த முகாமில், மக்கள் மீது தவறுதலாக ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்கள் ரஃபாவெங்கும் நிரம்பிக் கிடந்தது. மக்கள் சொல்லொணாத் துயரை அடைந்தார்கள்.

இந்தத் தாக்குதலினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பவிருந்த ஆயுதப்பொருட்களை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் இதுநாள் வரை அமெரிக்கா கொடுத்த வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு, இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தாமல், இடைவெளி இல்லாமல் நடத்தி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தான், All Eyes on Rafah என்ற படம் வெளியாகி உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவியது. உலக மக்களின் மனதைக் கவர்ந்து, ஃபலஸ்தீன மக்களின் மீது இரக்கம் கொள்ள வைத்தது.

குறிப்பாக, மேற்கத்திய உலகப்புகழ் பெற்ற சினிமா கலைஞர்கள் தொடங்கி, பல முக்கிய ஆளுமைகள் இந்தப் படத்தை தங்களின் முகநூல் பக்கத்தில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். இது இந்தியாவிலும் பல கலைஞர்களைப் பாதித்து, ஃபலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தங்களின் வலைதள பக்கங்களில் பதிவிட்டார்கள். அது வைரலாகி, பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவி, இஸ்ரேலின் கோர கொடிய முகத்தைக் காட்டியதோடு மட்டுமல்லாமல், ஃபலஸ்தீன மக்களின் துன்பங்களுக்காகக் குரல் கொடுக்க வைத்தது. காஸாவில் வேறு எங்கும் செல்ல முடியாத அளவிற்கு, குழந்தைகளின் நகரமாக ரஃபா மாறிப்போனது. இதுவரை 15,000 குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.


ரஃபா இன்று

ஐ,நாவின் யுனிசெஃப் அறிக்கை ரஃபாவின் இன்றைய நிலைமைகளை இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது. ‘ஆயிரக்கணக்கான குழந்தைகள் நெருக்கடியில் ரஃபாவில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் காயப்பட்டு அல்லது நோய்வாய்ப்பட்டு அல்லது ஊட்டச்சத்து குறைந்து, பயங்கரமான அதிர்ச்சிக்குள்ளாகி அதனால் மனச்சிதைவுக்குள்ளாகி அல்லது கை கால்கள் போன்ற உறுப்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.
1. கண் பார்வைக் குறைபாடு உள்ள, பார்க்க, கேட்க, நடக்க, புரிந்து கொள்ள, கற்றுக்கொள்ள முடியாத நிலையில் 65,000 குழந்தைகள் இருக்கிறார்கள்.

2. இரண்டு வயதிற்கும் குறைவான 8000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள்

3. ஐந்து வயதிற்கும் (இருக்கின்ற பத்து குழந்தைகளில் 9 குழந்தைகள்) குறைவான 1,75,000 குழந்தைகள் ஒன்று அல்லது பல தொற்று நோய்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

4. கிட்டத்தட்ட எல்லாக் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப்பட்டு, உளவியல் ரீதியான சிகிச்சை தேவை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,550. படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,959. ஒட்டு மொத்த காஸாவின் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் (17 இலட்சம் பேர்), காஸாவின் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவான பகுதியில் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை 10 இலட்சம் பேர் ரஃபாவை விட்டு வெளியேறி அல் மஸாவி, கான் யூனிஸ் பகுதிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு, கடல் நீரையே தங்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்.

5 இலட்சம் பேருக்கு 121 கழிவறைகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு கழிவறையை 4,130 நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும், பசி பட்டினியில் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட உதவிப் பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் பொருட்கள் அழுகி வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில கண்டெய்னர்கள் அனுமதிக்கப்பட்டால், அதை ரஃபாவிற்குள் நுழைய விடாமல் இஸ்ரேலிய தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி, அந்த உதவிப் பொருட்களை கண்டெய்னர் லாரிகளில் ஏறி எடுத்து சாலைகளில் வீசி எறிந்து நாசப்படுத்துகிறார்கள். லாரி டிரைவர்களைத் தாக்கி, மிரட்டி, இனி உள்ளே வரக்கூடாது என்று தடுக் கிறார்கள். கொடூர மனம் படைத்த அந்த யூத சியோனிஸத் தீவிரவாதிகள்.

ரஃபாவின் மீதான ஈவிரக்கமில்லாத கொடூரமான தாக்குதல்கள் உலக நாடுகளின் தலைவர்களின் மனதைப் பாதித்த காரணத்தால், தங்களின் கண்டனங்களை இஸ்ரேலுக்கு எதிராகத் தெரிவித்து வருகிறார்கள். ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரித்து, தங்களது தூதரகங்களை ஃபலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியில் அமைத்து வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தனது கடும் கண்டனத்தை அந்த நாடுகளுக்குத் தெரிவித்தது.

ரஃபாவின் மீதான தொடர் தாக்குதல்களை நிறுத்த அமெரிக்க புதிய 3 கட்ட போர் நிறுத்த, அமைதித் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. பல நாடுகள் அந்தத் திட்டத்தை ஆதரித்தாலும், இஸ்ரேல் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை இந்தத் திட்டத்தின் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டால் காஸாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இரத்தக்களறி நிறுத்தப்படும். ஃபலஸ்தீன மக்களுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். வல்ல இறைவன் ஃபலஸ்தீன மக்களைப் பாதுகாத்து அமைதியான வாழ்வை வாழ வழி வகை செய்வானாக !


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்