மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - ஓர் அலசல்
- சேயன் இப்ராகிம், ஜூன் 16-30






பாஜக தனித்தே 370 இடங்களைக் கைப்பற்றும், கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என பாஜகவின் முன்னணித் தலைவர்களும், நாட்டிலுள்ள முக்கியமான ஊடகங்களும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையான 272 இடங்களைக் கூடக் கைப்பற்ற முடியாமல் 240 இடங்களையே அக்கட்சி கைப்பற்றி
உள்ளது. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களையும் சேர்த்து 292 இடங்களைப் பெற்றுள்ளது. பாஜக கடந்த 2019 பொதுத் தேர்தலில் தனித்தே 303 இடங்களைப் பெற்றிருந்தது. எனவே கடந்த தேர்தலை விட அக்கட்சி 63 இடங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கடந்த 2019 தேர்தலில் 52 இடங்களையே பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 99 இடங்களைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு 240 தொகுதிகளில் வெற்றி பெற்று 36.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 320 தொகுதிகளில் போட்டியிட்டு 99 இடங்களில் வென்று 21.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. கூட்டணிகளைப் பொறுத்த அளவில் பாஜக கூட்டணி 40 விழுக்காடு வாக்குகளையும் இந்தியா கூட்டணி 36 விழுக்காடு வாக்குகளையும், பிற கட்சிகள் 24 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன. பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 4 விழுக்காடுகளே. எனவே பாஜக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி மிகக் கடுமையான போட்டியையே கொடுத்துள்ளது எனலாம்.

கேலிக்கூத்தான கணிப்புகள் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணி 350 முதல் 400 இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறியிருந்தன. இந்தியா கூட்டணிக்கு 125 முதல் 154 இடங்களே கிடைக்கும் எனக் கணிப்புகள் கூறியிருந்த நிலையில் அக்கூட்டணி 234 இடங்களில் வென்று கணிப்புகளைப் பொய்யாக்கியுள்ளது. டெயினிக் பாஸ்கர் என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் மட்டுமே இந்தியா கூட்டணி 245 இடங்களைக் கைப்பற்றலாம் எனக் கூறியிருந்தது. மை ஆக்சிஸ் இந்தியா (அதாவது இந்தியா டுடே நிறுவனம்) என்ற நிறுவனம், பாஜக கூட்டணி 401 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கூறியிருந்தது. தனது கணிப்பு பொய்த்துப்போனதற்காக அந்தக் கருத்துக் கணிப்பை நடத்திய பிரதீப் குப்தா கண்ணீர் விட்டு வருத்தம் தெரிவித்த காட்சி ஊடகங்களில் வெளிவந்தன.

இந்தியாவிலுள்ள அச்சு, மின்னணு ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவான கணிப்புகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்த நிலையில் வாட்ஸ் அப், முகநூல், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்கள் ஓரளவுக்கு நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டது ஆறுதல் அளிக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், பாஜக பாதிக்கு மேற்பட்ட இடங்களை இழக்கும் என இந்த சமூக ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிட்டு வந்தன. பொதுவாக இந்தத் தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளின் மீதான நம்பிக்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.

பாஜகவின் வெற்றியும் தோல்வியும்

தங்களது பாரம்பரியத்திற்கு ஏற்ப தமிழ் நாடும் கேரளாவும் பாஜகவுக்கு இந்த முறை யும் கை கொடுக்கவில்லை. கேரளாவில் ஓர் இடத்தில் அக்கட்சி வெற்றி பெற்றிருப்பது ஒரு விபத்தே. எதிர்பார்த்தபடியே மகாராஷ்டிரா மாநிலமும் பாஜகவுக்குப் பலத்த அடி கொடுத்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அக்கட்சி சரிவினைச் சந்தித்துள்ளது. எனினும் உத்திரப்பிரதேசத்தில் அக்கட்சி பெற்றுள்ள தோல்வி யாரும் எதிர்பார்க்காதது.

புல்டோசரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து தான் எதிர்க்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் அண்மையில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள இராமர் கோயிலை இடித்து விடுவார்கள் எனவும் பிரதமர் மோடி பேசி வெறுப்பு உணர்வைத் தூண்டி விட்ட பிறகும், உ.பி. வாக்காளர்கள் அவரின் வெறுப்புப் பரப்புரையைப் புறந்தள்ளி இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு நல்ல வெற்றியைக் கொடுத்துள்ளனர்.

இராமர் கோயில் இருக்கும் அயோத்தி நகரை உள்ளடக்கிய பைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியிலேயே பாஜக தோற்றுப் போயுள்ளது. அந்தத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார். எனவே பிரதமரின் வெறுப்புப் பரப்புரை அங்கு எடுபடவில்லை.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியே தப்பிப் பிழைத்த நிலையில் இருந்தது. முதலில் சில சுற்றுகளில் அவர் பின்தங்கி இருந்தார். பின்னர் முன்னிலைக்கு வந்தார். இறுதியில் 1.5 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வித்தியாசம் இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி பெற்றிருக்கும் வாக்கு வித்தியாசத்தை விடக் குறைவே.

2014, 2019 தேர்தல்களில் பிரதமர் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. அதே நேரத்தில் தோல்வி பயத்தால் அமேதி தொகுதியிலிருந்து ஓடிவிட்டார் என பாஜக தலைவர்களால் கேலி செய்யப்பட்ட ராகுல் காந்தி அருகிலுள்ள ரேபரேலி தொகுதியில் 3.25 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார். உ.பியில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்பதே தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மையாகும்.

பாஜகவுக்குப் பெரிய அளவில் வெற்றி கொடுத்துள்ள மாநிலங்கள் குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகியவையாகும். டெல்லியில் அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் தற்காலிகமாக பிணையில் வெளிவந்து பரப்புரை செய்த பிறகும் வெற்றி கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளையும், குஜராத்தில் 26 தொகுதிகளில் 25ஐயும், உத்தரகாண்டிலுள்ள அனைத்து (ஐந்து) தொகுதிகளையும், இமாலச்சலப் பிரதேசத்தில் நான்கு தொகுதிகளையும், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 30 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

பீகாரில் பாஜக கூட்டணியின் வெற்றி எதிர்பாராததாகும். அங்கு காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியை விட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வலுவாக இருந்ததே காரணமாகும். பாஜக கூட்டணியில் தலித் அமைப்புகளும் இணைந்து கொண்டது. மேலும் அதற்கு வலு சேர்த்தது.

ஒரிசாவிலும், ஆந்திராவிலும் ஆட்சியிலிருந்த அரசுகளுக்கு எதிராக இருந்த மக்களின் மனநிலை பாஜகவுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பிஜு ஜனதா தளம் அரசு மீது மக்களுக்குச் சலிப்பு ஏற்பட்டது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆனால் ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இப்படிப் படுதோல்வியடையும் என யாரும் கருதவில்லை. அந்த மாநிலத்தில் இறுதித் தருணத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டுச் சேர்ந்து ஜெகன் மோகன் அரசுக்கு எதிராக இருந்த மக்களின் மனநிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சுருங்கக் கூறின், வடமாநிலங்களில் தனக்கு ஏற்பட்ட இழப்பை, பிற மாநிலங்களில் கிடைத்த வெற்றியைக் கொண்டு பாஜக தனித்த பெரும் கட்சியாக உருவெடுத்து விட்டது.

காங்கிரஸின் வெற்றி தோல்விகள்

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. தெலுங்கானாவில் காங்கிரஸ் சரிபாதி இடங்களைக் கைப்பற்றிய போதிலும், ஆட்சியிலிருக்கும் கர்நாடகாவில் கடந்த தேர்தலை விடவும், எட்டு இடங்களையே காங்கிரஸ் கட்சி அதிகமாகக் கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸுக்கு கர்நாடகம் தந்த முடிவு ஏமாற்றம் அளிக்கக் கூடியதே.
குஜராத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்று ஆறுதல் பரிசு பெற்றுள்ள காங்கிரஸ், மத்தியப் பிரதேசத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாகவே ஹிந்தி மொழி பேசப்படுகின்ற வடமாநிலங்களில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. கடந்த தேர்தலின் போது இராஜஸ்தானில் ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இம்முறை 11 இடங்களில் வெற்றி பெற்றது ஒரு சாதனையே. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணியின் எண்ணிக்கை உயரத் துணை புரிந்துள்ளது. கடந்த முறையை விடவும் அக்கட்சி அங்கு கூடுதலாக ஏழு இடங்களைப் பெற்றுள்ளது.

ஒற்றை ஆளாகவே நின்று மம்தா பானர்ஜி தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றிருக்கிறார். பாஜக தலைவர்கள் அங்கு செய்த வெறுப்புப் பரப்புரை மக்களிடையே எடுபடவில்லை. மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக இருக்கிறார்கள் என்ற மோடியின் வெறுப்புரையை அந்த சமய மக்களே புறக்கணித்து விட்டனர். இந்தி பேசுகின்ற வட மாநிலங்கள், ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட வேண்டும். பாஜகவைப் போலவே எப்போதும் தேர்தல் தயாரிப்பில் இருந்தால்தான் காங்கிரஸ் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும்.

முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்

இந்தத் தேர்தலில் 26 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே இந்தியா கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள். உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென்னகத்தைப் பொறுத்தவரையில் கேரளாவில் மூவர், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகியவற்றில் தலா ஒருவர் என ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 35 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்து பாஜகவின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட அம்மாநில முஸ்லிம் வாக்காளர்கள் அவர் நிறுத்திய வேட்பாளர்களைப் புறக்கணித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போலவே இம்முறையும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.

பாஜகவின் மூன்றாவது ஆட்சி பாஜக மிகப் பெரிய செயல் திட்டங்களுடன் தேர்தலைச் சந்தித்தது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்டம் கொண்டு வருவோம், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள (மத்திய அரசுப் பணிகளில் சேர வகை செய்யும் முறையில் முஸ்லிம்களின் மிகப் பெரும்பாலான பிரிவினர் இதர பிற்பட்ட வகுப்பினரில் (OBC) சேர்க்கப்பட்டிருக்கின்றனர்) இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றெல்லாம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பரப்புரைகளில் பேசி வந்தனர். அதற்காகத்தான் நானூறு இடங்கள் வேண்டும் எனக் கூறினர்.

ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர முடியும். அதிலும் குறிப்பாக நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுமே சூத்திரதாரிகளாக உருவெடுத்துள்ளனர். இவர்கள் பாஜகவின் மதச் சார்புடைய திட்டங்களை நடைமுறைப்படுத்த துணை புரிவார்களா? அல்லது உள்ளுக்குள்ளேயே எதிர்ப்புத் தெரிவித்து அவர்களின் இந்துத்துவா செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவார்களா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பட்டியலின மக்களுக்குக் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதியைப் பேணியவர் நிதிஷ்குமார். ஆந்திராவில் தான் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகளிலும் கல்வியிலும் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவேன் என வாக்குறுதி அளித்தவர் சந்திரபாபு நாயுடு. இவரும் சமூகநீதியிலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்களே. இவர்களது கட்சிகளின் தயவில் ஆட்சியில் அமரப் போகும் பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? காலம்தான் பதில் சொல்லும்.

Cut to Size

பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர். உண்மையில் இந்தியா கூட்டணி இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டிருந்தால் அக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கக் கூடும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்