தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் செய்யது நாகூர் மீரான் - மீராள் பீவி ஆகியோருக்கு 29-10-1961 அன்று பிறந்த S.N. சிக்கந்தர் அவர்கள் வரலாற்றுப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பில்(SIO) இணைந்து மாணவர் சமுதாயத்தை நெறிப்படுத்தி, அறவழியில் அவர்களை வழிநடத்தினார். SIOவின் தமிழ் நாட்டுத் தலைவராக இருந்த காலத்தில், கல்வி வளாகங்களில் பெருகும் வன்முறை, போதைப் பொருள் பயன்பாடு முதலானவற்றுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டார்.
2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமி என்னும் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்புப் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டார். நாகூர், கோட்டக்குப்பம் பகுதிகளில் நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரத் தேவைகளுக்கு வழி அமைத்துக் கொடுப்பதிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்ற பெரும்பான்மைவாதக் கருத்துக்கு எதிராக ‘மானுட வசந்தம்’ என்னும் தொலைக்காட்சித் தொடரை இயக்கி, பன்மைத்துவம் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என்ற சிந்தனையைப் பரந்துபட்டளவில் மக்களிடையே கொண்டு சென்றார்.
2011இல் வெல்ஃபேர் கட்சியைத் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அடித்தளம் அமைத்து அதன் அகில இந்தியப் பொருளாளராகச் செயல்பட்டார். அகில இந்திய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2011 முதல் 2021 வரை வெல்ஃபேர் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் திறம்படப் பணியாற்றினார்.
திருவாரூர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தெழுந்த சூழலில், அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று மக்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாக நின்றார். அத்துடன் விவ
சாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பொழுது விவசாய சங்கத் தலைவர் களோடு இணைந்து நின்றார்.
சென்னைப் பெருவெள்ளத்தின்போது மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட்டு அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒன்றிய பாஜக அரசு இயற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மக்கள் திரள் போராட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பங்கேற்றார்.
தொலைக்காட்சி விவாதங்கள், சமூக ஊடகங்களின் வழியாக விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வருகிறார். ‘இஸ்லாம் டுடே’ எனும் யூடியூப் சேனலையும் தற்போது நடத்தி வருகிறார். கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் சென்னை(CCC) பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் ‘சமரசம்’ மாதம் இருமுறை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார்.