மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஐயமும், தெளிவும்
வி.எஸ்.முஹம்மத் அமீன், ஜூன் 16-30

* முஸ்லிம்கள் மேற்குத் திசை நோக்கி வணங்குவது ஏன்?

ஒவ்வொரு நாளும் உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களும் ஐந்து நேரம் தொழுவது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டிருக்கிறது. எப்படித் தொழ வேண்டும் என்பதை இறைவனும், இறைத்தூதரும் வழிகாட்டியிருப்பதைப் போல எங்கு நோக்கித் தொழ வேண்டும் என்றும் வழிகாட்டியிருக்கின்றார்கள். உலகிலுள்ள முஸ்லிம்கள் தொழுகையின் முன்னோக்கும் இடமாக ஓர் இடத்தைத் தேர்வு செய்தால்தான் தொழுகையைச் சீராகத் தொழமுடியும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்பத் தொழத் தொடங்கினால் ஒருவர் மேற்கு நோக்கியும், மற்றொருவர் வடக்கு நோக்கியும் தொழுதால் தொழுகையின் வரிசை கெட்டுவிடும்.

எனவே தொழுகைக்கென்ற முன்னோக்குத் திசையை இறைவனே தீர்மானித்துள்ளான். ஃபலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா எனும் இறைஆலயம் இருக்கும் திசையை நோக்கி முதலில் முஸ்லிம்கள் தொழுது வருமாறு வழிகாட்டப்பட்டது. பின்னர் இறைவன் மக்காவிலிருக்கும் கஅபாவை முன்னோக்கு திசையாக்கி இறைத்தூதருக்கு வழிகாட்டினான். எனவே உலக மக்கள் அனைவரும் கஅபா இருக்கும் திசையை முன்னோக்குத் திசையாக வைத்துள்ளனரே தவிர கஅபாவையோ, திசையையோ வணங்குவதில்லை. எல்லாருமே அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றனர்.

இந்தியாவில் இருப்பவர்களுக்கு கஅபா மேற்குத் திசையில் இருப்பதால் மேற்கு நோக்கித் தொழுகின்றனர். சில நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்தத் திசைகள் மாறுபடும்போது அவர்கள் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும்
அதாவது அவர்கள் நாட்டிலிருந்து கஅபா இருக்கும் திசையையே முன்னோக்குகின்றனர். இதனைச் சிலர் பிழையாகப் புரிந்து கொண்டனர். அதனால்தான் மகாகவி பாரதியார் கூட ‘நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்’ என்று எழுதியுள்ளார். உண்மை அதுவல்ல. திசைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. படைத்த ஓரிறைவனையே முஸ்லிம்கள் வணங்குகின்றனர்.

* இறைவனுக்கு உருவம், சிலைகள் வைத்து நீங்கள் வழிபடுவதில்லை. எங்கும் நிறைந்தவனை எங்கிருந்தும் தொழலாம். இங்குள்ள பள்ளிகளை விட்டுவிட்டு அரபுநாட்டிலுள்ள கஅபாவிற்குச் செல்வது ஏன்?

உண்மைதான். முஸ்லிம்கள் உலகம் முழுவதும் நிரம்ப இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கின்ற இடத்திலிருந்தே தொழுகையை நிறைவேற்றி வருகிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று ஹஜ் எனும் புனிதப்பயணம். இது இறைக்கட்டளை. உடல்நலமும் பொருள்வளமும் உள்ள முஸ்லிம்களுக்கு இந்தக் கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‘திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது. அங்கு தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 3:96,97)

ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ்ஜுக்கும், மற்ற காலங்களில் உம்ரா என்ற சிறப்பு வழிபாட்டிற்கும் கஅபாவிற்குச் செல் லும் முஸ்லிம்கள் இங்கு எப்படி, எந்த இறைவனைத் தொழுதார்களோ அதே இறைவனைத்தான் அதே முறைப்படித்தான் தொழுகின்றனர். இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வரலாற்றிலிருந்து வாசிப்பவர்கள் தெளிவான பல உண்மைகளை விளங்கிக் கொள்ள லாம். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இந்த இறை ஆலயத்திற்கு எல்லாரும் உரிமை கொண்டாடினர். அங்கு 360 சிலைகள் வைக்கப்பட்டு பலிகள், பூஜைகள் என நிர்வாணமாக வலம் வந்து கொண் டிருந்தனர். அந்த இறை ஆலயத்தை இறைவனின் வழிகாட்டுதலின் படி நபி(ஸல்) அவர்கள் சிலைகளை அகற்றி அதனை ஓரிறைக் கேந்திரமாக மீட்டெடுத்தார்கள்.

‘நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்; அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாள்களில் அவனது பெயர் கூறி (அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்; பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்!" (திருக்குர்ஆன் 22:27,28,29)

ஓரிறையின் மையக்கேந்திரமான இந்த இறை ஆலயத்தை இறைக் கட்டளைப்படி வலம்வருவதும், இப்ராஹீம் நபி நின்ற இடத்தில் நின்று வணங்குவதும், அவர்களுடைய மனைவி அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் ஓடிய ஓட்டத்தை ஓடுவதும், அவர்கள் எறிந்ததைப் போன்று ஷைத்தானை நோக்கிக் கல் எறிவதும், பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிடுவதும் ஹஜ்ஜின் கிரியைகளாகும். இவையாவும் இறைவனுக்கு இணைவைப்பதை விட்டு மனிதன் விலகி இருப்பதற்கான நேரடிப் பயிற்சியை வழங்குகிறது. இறைவனின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படியும் மாபெரும் பயிற்சியும் இங்கு கிடைக்கிறது.

உலகம் முழுவதும் பணம் படைத்த பெரும் செல்வந்தர்கள் இங்கே வரும்போது தங்களுடைய வழக்கமான ஆடைகளை மாற்றி இஹ்ராம் எனும் வெள்ளுடுப்பை மட்டுமே அணிய வேண்டும். அனைவரும் ஓருடையில், ஓர் வரிசையில் நிறுத்தப்படும்போது பணக்காரன், ஏழை, கறுப்பன், வெள்ளையன், படித்தவன், படிக்காதவன், இந்த நாட்டவன், இந்த மொழி பேசுபவன் என்ற எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒரே இறைவனின் அடிமைகளாக ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைகின்றனர்.

தொழுகை ஒவ்வொரு நாளும் உள்ளூர் சமத்துவத்தை வழங்குகிறது என்றால் ஆண்டுக்கு ஒருமுறை ஹஜ் உலகளாவிய சமத்துவத்தை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றேறக்குறைய 30 இலட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடும் உலகின் மாபெரும் சமத்துவ, சகோதரத்துவ, ஆன்மிக மாநாடு இதுதான்.

இந்த மாபெரும் மக்கள் திரளில் சங்கமிக்கும் ஒரு முஸ்லிம் தேச, மொழி, நிற எல்லைகள் கடந்த உலகக் குடிமகனாக தன்னை உணர்கின்றான். அதனால் அவனுடைய சிந்தனை விரிவடைகிறது. நபிமார்கள் வாழ்ந்த இடங்களையும் புனித நினைவுச் சின்னங்களையும் பார்க்கும் போது புதுத்தெம்பையும் உற்சாகத்தையும் பெறுகின்றான். இந்த ஆன்மிகப் புத்துணர்வுடன் தன் பிழைகளை உணர்ந்து திருந்தி அன்று பிறந்த பாலகனாக வீடு திரும்புகிறான்.

* அப்படியானால் அங்குள்ள கல்லை முத்தமிடுவது ஏன்? அருவ உருவமற்ற இறைவனை வழிபடும் இடத்தில் கல்லுக்கு என்ன முக்கியத்துவம்?

கஅபா எனும் இறை ஆலயத்தின் ஒருபகுதியில் ஹஜ்ருல் அஸ்வத் எனும் கருங்கல் பதிக்கப்பட்டிருக்கின்றது. சுவனத்திலிருந்து இறைவன் இறக்கிய இந்தக் கல்லை சகோதரத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் நபி(ஸல்) அவர்கள் அங்குள்ள கோத்திரத்தார்களை ஒன்றிணைத்து எல்லாருடைய ஒத்துழைப்புடனும் பதித்தார்கள். இறைவன் புறத்திலிருந்து வந்த அந்தப் பொருளை அன்பின் மேலீட்டால் முத்தமிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் முத்தமிட்டதால் அனைத்து புனிதப் பயணிகளும் அக்கல்லை முத்தமிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிடுமுன் இவ்வாறு கூறினார்கள்: ‘ஓ.. கருங்கல்லே..! உனக்கு எந்தச் சக்தியும் இல்லை. நீ ஒரு கல். நாங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் அவர்கள் முத்தமிட்ட காரணத்தினால் உன்னை நான் முத்தமிடுகின்றேன்’.

உலக மக்களின் கோடான கோடி உதடுகள் முத்தமிட்டு முத்திரை பதித்த கல்லாக அது இன்றும் திகழ்கிறது. அதை முத்தமிடுவதன் மூலம் அந்தச் சகோதரத்துவ சமத்துவப் பெருந்திரளில் ஒரு ஹாஜி தன்னையும் இணைத்துக் கொள்கிறார்.

அந்தக் கல்லை முத்தமிட்டால்தான் ஹஜ் கடமை நிறைவேறும் என்பதல்ல. அதை முத்தமிடுவது கட்டாயமும் அல்ல. அதே நேரம் அந்தக் கல்லின் மகிமையினால் அதனை யாரும் முத்தமிடுவதில்லை. அந்தக் கல்லுக்கென்று வேறு சிறப்புகள் எதுவுமில்லை. இறைவன் வழிபடச் சொன்ன அடிப்படையில் அங்கு வழிபாடுகள் நடக்கின்றன. இறைவன் வலம் வரச் சொன்ன அடிப்படையில் வலம் வருகின்றனர். இறைவன் ஆணையிடுகிறான். இறைத்தூதர் வழிகாட்டினார்கள். முஸ்லிம்கள் கீழ்ப்படிகின்றனர்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்