ரஃபாவில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த ஃபலஸ்தீனர்களை படுகொலை செய்த இஸ்ரேலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(ஒஐஏ) தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘தெற்கு காஸாவில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே உள்ள முகாமில் இடம்பெயர்ந்த ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்ததை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கிறது. ஊடகச் செய்திகளின் படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்ட தற்காலிக அகதிகள் கூடாரங்கள் மீது ஏவுகணைகள், குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தியது. இத் தாக்குதலில் உயிருடன் மக்கள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபாவில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடிமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காஸா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தொடர் போர்க்குற்றங்களுக்கு ஓர் உதாரணம்.
சர்வதேசச் சட்டம் அல்லது ஜெனோசைட் கன்வென்ஷன் போன்ற சர்வதேச ஒப்பந்தங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்பது முதல் நாளிலேயே தெளிவாகிறது. குடியேற்ற காலனித்துவம், இனவெறி, பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்களை வேண்டுமென்றே கொன்று குவிப்பதை நடைமுறைப்படுத்தும் ஓர் அராஜக அரசு இஸ்ரேல். நமது காலத்தில் நடக்கும் மறக்க முடியாத வரலாற்றுத் துயரம் இது.
நீதி, ஜனநாயகம், விடுதலையின் முன்னணிப் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டாலும், உலகிலுள்ள சக்தி வாய்ந்த நாடுகள் ஃபலஸ்தீன் மீதான போரையும், இனப்படுகொலையையும் தடுக்க முடியாமல் போனது வெட்கக்கேடானது.
படுகொலையை நிறுத்துவதற்கும், போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கும், சுதந்திர ஃபலஸ்தீன அரசை விரைவாக நிறுவுவதற் கும் விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க ஐ.நாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான கோரிக்கையை மீண்டும் நாங்கள் வைக்கின்றோம். ஃபலஸ்தீன மக்களின் நண்பராக வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்கவும், அதன் பொறுப்புகளை நிறைவேற்ற சர்வதேச சமூகத்தை ஈர்க்கவும், அதன் நல்ல அம்சங்களைப் பயன்படுத்தவும் இந்திய அரசிற்குக் கோரிக்கை வைக்கிறோம்.
சர்வதேச நீதிமன்றத்தின் (ஐஇஒ) இந்தியப் பிரதிநிதி நீதிபதி தல்வீர் பண்டாரி ரஃபாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும்’