மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

திருவள்ளுவர் இந்துவா?
- சேயன் இப்ராகிம், ஜூன் 16-30

தி இந்து தமிழ் திசை 25.5.2024 நாளிதழில் ‘திருவள்ளுவர் இந்துதான், சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் சுவாமிநாதன் எழுதியுள்ள கட்டுரையில் ‘தமிழரான திருவள்ளுவர் ஓர் இந்து. இந்துவான திருவள்ளுவர் ஒரு தமிழரே என்பது எனது கணிப்பு’ என்ற கவிஞரின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார். திருவள்ளுவர் ஒரு தமிழர் என்பதில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை. அவர் இந்துவா, சமணரா என்பதில்தான் அறிஞர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

திருவள்ளுவர் புலால் மறுத்தலை பெரிதும் வற்புறுத்துவதால் அவர் ஒரு சமணரே என்பது சில அறிஞர்களின் வாதம். கவியரசு கண்ணதாசன் போன்றோர் அவர் எழுதியுள்ள ஒன்றிரண்டு குறள்களை மேற்கோள் காட்டி அவர் ஓர் இந்துவே என வாதிடுகின்றனர். நம்மைப் பொறுத்தவரையில் அவர் இந்துவா அல்லது சமணரா என்பது முக்கியமில்லை. எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் மக்களுக்கு அறநெறிகளைப் போதித்த ஒரு நல்ல மனிதர் என்பதில் ஐயமில்லை. எனவே இதில் சமயச் சண்டை வேண்டாம்.

‘சாதி மதங்களைப் பாரோம் உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்’ என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை கவியரசு கண்ணதாசனும், இந்து தமிழ் நாளிதழில் எழுதியுள்ள ஸ்ரீதர் சுவாமிநாதனும், அந்த இதழின் ஆசிரியர் குழுவும் மறந்ததுதான் வேதனையளிக்கிறது. வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குள் அடைக்க முயலும் வீண் முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம்.

அண்மையில் தமிழக ஆளுநர் ரவி நடத்திய திருவள்ளுவர் விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் போட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் ஆளுநர் இதுபோன்று செய்திருக்கிறார். திருவள்ளுவர் தமிழில் 1330 திருக்குறள்களை எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர அவரைப் பற்றிய ஆதாரப்பூர்வமான எந்தத் தகவல்களும் எங்கும் இல்லை. அவர் எந்த ஊரில் பிறந்தார்? எந்தத் தேதியில் பிறந்தார்? எத்தனையாவது வயதில் திருக்குறள்களை எழுதினார்? எப்படி, எப்போது மரணமுற்றார்? அவரது தோற்றப் பொலிவு என்ன? என்ற கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான சான்று களோ, ஓலைச் சுவடிகளோ, கல்வெட்டுக் களோ எதுவும் இல்லை.

அவர் வாழ்ந்த காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் பதிமூன்று இடங்களில் திருக்குறள் பற்றிக் கூறப்பட்டுள்ளதால், சிலப்பதிகாரம் எழுதப்படுவதற்கு முன்னரே வள்ளுவர் திருக்குறளை எழுதியிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே வள்ளுவர் வாழ்ந்த காலம் கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர வள்ளுவர் வாழ்ந்த காலம் குறித்த சான்றுகள் எதுவுமில்லை.

கி.பி இரண்டாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் சைவ, வைணவ சமயங்களும், சமண, பௌத்த சமயங்களும் உன்னத நிலையில் இருந்தன. எனவே வள்ளுவர் இந்த நான்கு சமயங்களில் ஏதாவது ஒரு சமயத்தவராகத்தான் இருந்திருக்க முடியும். (இந்து என்ற சொற்பிரயோகம் அப்போது இல்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் வந்தது) எனவே அவரை இந்து தான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது.

திருக்குறளில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் ஐந்தாவது குறளில் மட்டும் ‘இறைவன்’ என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இதுதவிர, வேறு எந்தக் குறளிலும் அவர் கடவுள் அல்லது இறைவன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இறைவன் மீது நம்பிக்கை கொள்வதால் ஒருவர் பெறுகின்ற சாதக பாதகமான விளைவுகள் குறித்தே வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்துக் குறள்களிலும் பேசுகின்றார்.

இந்துக்கள் கடவுள்களாக வழிபடும் இந்திரன், வருணன், சிவன், விஷ்ணு, கிருஷ்ணன் ஆகியவர்கள் எந்தக் குறளிலும் இடம் பெறவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அறநெறிகளைப் போதிப்பவராகவே அவர் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமயவாதியாகத் தன்னை அடையாளம் காட்டவில்லை.

ஸ்ரீதர் சுவாமிநாதன், கண்ணதாசன் மேற்கோள் காட்டியுள்ள இரண்டு குறள்கள் குறித்து இனி ஆராய்வோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் 10ஆவது குறள் ‘பிறவிப் பெருங்கடல்’ என்று தொடங்குகிறது. இல்வாழ்க்கை அதிகாரத்தின் 10ஆவது குறள் ‘வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என முடிகிறது. ‘பிறவிப் பெருங்கடல்’ என்ற வார்த்தை இந்துக்களை மட்டுமே குறிப்பதாலும், வானுறை தெய்வம் இந்துக்களுக்கு மட்டுமே உண்டு; தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக்கொள்வதில்லை என்றும் கண்ணதாசன் குறிப்பிடுகின்றார்.

பிறவித் தத்துவத்தை யூதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியன ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் இந்திய சமயங் களான இந்து, சமண, பௌத்தம் இதனை ஏற்றுக் கொள்கின்றன என்ற உண்மையை கண்ணதாசன் கவனத்தில் கொள்ளவில்லை. இறைவன் வானத்தில் இருக்கிறான் என்பதை திருக்குர்ஆனின் அத்தியாயம் 20 வசனங்கள் 4, 5 கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றன: ‘பூமியையும் உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதும் ஆகும். கருணைமிக்க இறைவன் (பேரண்டத்தின்) ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளான்’ வானுறையும் தெய்வம் என்பதையே மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் குறிக்கின்றன.

திருவள்ளுவர் தனது நீதி நூலான திருக்குறளில் இரண்டு குறள்களில் மட்டுமே இறைவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் போது ‘இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை தொட்ட இடமெல்லாம் இந்துக் கடவுள்
களையும் இந்துக்களின் மரபையுமே கூறுவதால் அவரும் ஓர் இந்துவே என்பது ஐயத்துக்கு இடமில்லாத உண்மை’ என்று கவியரசு கண்ணதாசன் கூறுவது முற்றிலும் பொருத்தமற்றது.

திருவள்ளுவர் ஓர் இந்துவாகவே இருக்கட்டும். அதற்கு யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். தெரிவிக்கத் தேவையுமில்லை. ஆனால் அவருக்குக் காவி உடை அணிவித்து அவரை ஓர் இந்துத்துவவாதியாகக் காட்டு கின்ற முயற்சியைத்தான் எதிர்க்கிறார்கள். ‘காவி நிறம்’ இந்துத்துவவாதிகளை அடையாளப்படுத்துகின்ற நிறமாக தற்போது மாறிப் போய் விட்ட காரணத்தால்தான் இதுபோன்ற சர்ச்சைகள் வருகின்றன.

வள்ளுவர் இந்துவாகவே இருந்தாலும் அவர் இந்துத்துவவாதி அல்ல. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பாடியவர் அவர். பிறப்பால் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதே அவரது திடமான கருத்து. வள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்து மனுதர்ம, சனாதனக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்துத்துவக் கொள்கைகளுக்கும் எதிரானது.

அண்மைக் காலமாக தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் வள்ளுவரைக் கொண்டாடுவதற்குக் காரணம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே. அவர்கள் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் வாக்கு வங்கி அரசியலுக்காகவே. பொதுமறை தந்த வள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை இந்துத்துவவாதிகள் கொச்சைப்படுத்த வேண்டாம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்