மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்நாடு வழங்கிய தீர்ப்பு
- சேயன் இப்ராகிம், ஜூலை 01-15, 2024

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையில் ஓர் அணியும், அதிமுக தலைமையில் ஓர் அணியும் களத்தில் இருந்தன. ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி பிளவுபட்டு, அக்கட்சியின் தலைமையில் ஓர் அணியும், பாஜக தலைமயில் ஓர் அணியும் தேர்தலைச் சந்தித்தன. அதிமுக அணியில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், குஈகஐ ஆகிய கட்சிகள் இருந்தன. பாஜக அணியில் பாஜக, பாமக, தமாகா, அமமுக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரிவு, ஜான் பாண்டியனின் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இடம் பெற்றிருந்தன.

திமுக கூட்டணி 46.97, அதிமுக கூட்டணி 23.05, பாஜக கூட்டணி 18.28, நாம் தமிழர் 8.10, சுயேட்சைகள் 2.53, நோட்டா 1.07 விழுக்காடு வாக்குகளைப் பெற்றன.

முக்கிய புள்ளி விவரங்கள்

* திமுக கூட்டணி 2,04,86,693 வாக்குகளையும் அதிமுக கூட்டணி 1,00,55,124 வாக்குகளையும், பாஜக கூட்டணி 79,73,801 வாக்குகளையும், நாம் தமிழர் 35,11,364 வாக்குகளையும் பெற்றன.

* திமுக ஆட்சியிலிருக்கும் போது ஒட்டுமொத்தமாக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.

* மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 221 தொகுதி களில் முன்னிலை பெற்றிருக்கிறது.

* 14 தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் கடந்த 2019 தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

* தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர், தர்மபுரி, இராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, நீலகிரி, மதுரை, கன்னி யாகுமரி, திருவள்ளூர், மதுரை ஆகிய 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

* பாஜக கூட்டணி 21 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.

* 27 தொகுதிகளில் அதிமுக கூட்டணி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. 8 தொகுதிகளில் இக்கட்சியின் வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

* தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் (வாக்கு வித்தியாசம் 5,72,155) குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் (வாக்கு வித்தியாசம் 4379).

கட்சிகளின் வெற்றி - தோல்வி

திமுக

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் இடம் பெற்றிருந்த கட்சிகள் அனைத்தையும் திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டது. (பாரிவேந்தரின் கட்சியைத் தவிர) தொகுதிப் பங்கீட்டு விஷயத்திலும் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக நீக்குப் போக்குடன் நடந்து கொண்டது. திமுக கூட்டணியிலிருந்த அனைத்துக் கட்சிகளும் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருந்தன. ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட கடுமையான பரப்புரை பாஜக எதிர்ப்பு வாக்குகளை சேதாரமில்லாமல் திமுக கூட்டணிக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

திமுக கூட்டணி கடந்த 2019 தேர்தலை விட இந்தத் தேர்தலில் 4.5 விழுக்காடு வாக்குகளை இழந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் 1.5 விழுக்காடு அதிகம் பெற்றுள்ளது. திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியின் மீது மக்களிடையே சிறிது அதிருப்தி இருந்தாலும் அது வாக்குகளில் பிரதிபலிக்கவில்லை. எனினும் திமுக கவனக்குறைவாக இருந்து விடக் கூடாது. இன்னும் மீதமிருக்கும் இரண்டாண்டுகளில் எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.

குறிப்பாகத் தகுதியிருந்தும் இதுவரை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாதவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்காவிட்டால், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக கூட்டணிக்குப் பெரும் சவாலாக அமையும்.

அதிமுக

இக்கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. எனினும் அதிமுக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. 12 தொகுதிகளில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது உண்மையே. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், தர்மபுரி, வேலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய எட்டுத் தொகுதிகளில் திமுகவைப் பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்தது. ஆனால் வாக்கு விழுக்காட்டில் திமுக தான் இரண்டாவது இடத்தில் இருந்தது.

இந்தத் தேர்தலில் அதிமுக தான் வாக்கு விழுக்காட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2014 தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு விழுக்காடு 26.8. இப்போது இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்கு விழுக்காடு 23.05. எனவே கிட்டத்தட்ட 2014இல் திமுக இருந்த நிலையில் தான் இப்போது அதிமுக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் அதிமுக தலைமை நன்கு அறிமுகமான, வலுவான வேட்பாளர்களை நிறுத்தவில்லை. உதாரணமாக தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளைக் குறிப்பிடலாம். இந்த வேட்பாளர்களால் சரியான போட்டியைக் கொடுக்க முடியவில்லை.

தேர்தல் பரப்புரையின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பெருமளவு விமர்சனம் செய்யவில்லை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கூட்டணியில் இருந்து விட்டு தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியிலிருந்து விலகிய பின் தேர்தல் பரப்புரையில் பாஜகவை விமர்சித்துப் பேசுவது அவருக்குத் தர்ம சங்கடமாக இருந்திருக்கக் கூடும். நடைபெறவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், திமுக அரசின் செயல்பாடுகளைக் குறை கூறிப் பேசினால், அக்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் தங்களது கட்சிக்குப் பெருமளவு வந்து விடும் என்ற அவரின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டு இருந்தால் பாதிக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற அரசியல் கணக்கை நம்பி, அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது. பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருந்தால்தான் அதிமுகவின் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறும். அதிமுகவை ஒரு செலவாகிப் போன சக்தியாக (குணீஞுணணா ஊணிணூஞிஞு) நான் கருதவில்லை. சரியான அணுகுமுறைகளை மேற்கொண்டால் இப்போதைய சரிவிலிருந்து அக்கட்சி நிச்சயமாக மீள முடியும். அதிமுகவின் வீழ்ச்சி, பாஜகவின் வளர்ச்சியில்தான் போய் முடியும். எனவே அதிமுக பலவீனம் அடையக் கூடாது என்பதே மதச்சார்பற்ற மக்களின் கருத்தாகும்.

பாஜக

கடந்த 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 18.50 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் மதிமுகவும், தேமுதிகவும் இல்லை. அதற்குப் பதிலாக அமமுக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி, தமாகா உள்ளிட்ட வேறு சில கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து கொண்டன. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.28 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 2014இல் இருந்த அதே நிலையில் பாஜக கூட்டணி 2024லிலும் இருக்கிறது. வாக்கு விழுக்காடும் பெருமளவு மாறுபடவில்லை (2014 தேர்தலை விட இம்முறை பாஜக கூட்டணி 0.22 விழுக்காடு வாக்குகளைக் குறைவாகவே பெற்றிருக்கிறது) 

கிட்டத்தட்ட 2014இல் இருந்த அதே நிலையில் பாஜக கூட்டணி 2024லிலும் இருக்கிறது. வாக்கு விழுக்காடும் பெருமளவு மாறுபடவில்லை. 2014இல் பாஜக கூட்டணி கன்னியாகுமரியிலும் தர்மபுரியிலும் வெற்றி பெற்றது. இம்முறை அக்கூட்டணிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று வருகிறது. அதன் வாக்கு விழுக்காடு உயர்ந்து வருகிறது என்ற கூற்றில் உண்மை இல்லை.

இத்தனைக்கும் சாதியப் பின்புலம் கொண்ட, அரசியல் அனுபவமிக்க பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பிரதமர் மோடியும் எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பரப்புரை மேற்கொண்டார். அப்படியிருந்தும் பாஜகவால் வெற்றி பெற இயலவில்லை. கேரளத்தில் ஓர் இடத்தில் வென்றுள்ள அக்கட்சியால் தமிழ்நாட்டில் ஏற்கனவே 2014இல் வெற்றி பெற்ற இடங்களில் கூட வெற்றி பெற இயலவில்லை. யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு இருந்தால் அதன் உண்மையான வாக்கு விழுக்காடு என்னவென்று தெரிந்திருக்கும்.

நாம் தமிழர்

வழக்கம் போல் சீமானின் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 8.10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. திருச்சி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு ஆகிய தொகுதிகளில் பாஜகவை நான்காவது இடத்திற்குத் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு ஒன்றிரண்டு விழுக்காடு வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று வரும் இக்கட்சி தமிழ்நாட்டு அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? தமிழ்நாட்டில் வசிக்கின்ற நாற்பது விழுக்காட்டிற்கும் அதிகமான மக்களைத் தமிழர்கள் இல்லை என்று பரப்புரை செய்து வரும் இக்கட்சியால், ஆட்சி அமைக்கத் தேவையான 40 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை எப்போதாவது பெற முடியுமா? முடியாது என்றே கருதுகிறேன்.

முஸ்லிம் கட்சிகள்

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி இம்முறையும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு கடந்த தேர்தலை விடவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒரே தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.

கடந்த 2019 தேர்தலில் பாஜகவின் நயினார் நாகேந்திரனைத் தோற்கடித்த அவர், இம்முறை பாஜகவின் ஆதரவு பெற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தோற்கடித்துள்ளார். இந்துக்களின் புண்ணியத் தலங்கள் அதிகம் உள்ள ஒரு தொகுதியில் ஒரு முஸ்லிம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு உண்மையிலே மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ள மாநிலம் என்பதை உணர்த்துகிறது.

இன்னொரு முஸ்லிம் அரசியல் கட்சி யான குஈகஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறாததைப் போலவே, அவராலும் வெற்றி பெற இயலவில்லை. திமுக, அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்க முன்வராத நிலையில் தான் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் கடந்த பத்து ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசின் மதவாத, மக்கள் விரோதச் சட்டங்களை எந்தவிதமான நிபந்தனையுமின்றி ஆதரித்து வந்த அதிமுகவுடன் அந்த கசப்பான நினைவுகள் மறந்து போகும் முன்னரே கூட்டணி அமைத்து போட்டியிட்டது சரியான அணுகுமுறைதானா என்பதை அக்கட்சியின் தலைவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்தும், இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலையில் மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடாமல் அல்லது வேறு கூட்டணியில் சேராமல் திமுகவுக்கு ஆதரவான நிலை எடுத்தது ஒரு சரியான அணுகுமுறையாகவே நான் கருதுகிறேன். மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் அக்கட்சி கொண்டிருந்த உறுதிப்பாடே இந்த அணுகுமுறைக்குக் காரணம் எனலாம்.

கணிப்புகள்

தமிழ்நாட்டுத் தேர்தல் நிலவரத்தை ஓரளவு சரியாகக் கணித்தது தந்தி தொலைக்காட்சியே. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் (2.6.24 அன்று வெளியான கருத்துக் கணிப்பில்) அந்தத் தொலைக்காட்சி திமுக கூட்டணி 34 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும் என்றும் ஐந்து தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகவும் கூறியது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள வேறு சில ஊடகங்களும், தேசிய ஊடகங்கள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைக்கும் எனக் கூறின. பிரபல தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூட இதுபோன்ற ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியா டுடே தொலைக்காட்சி பாஜகவுக்கு 10 முதல் 15 இடங்கள் கிடைக்கும் என்று கணிப்பு வெளியிட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் வென்றுசாதனை படைத்துள்ளது.

பாஜகவினால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாததற்கு உ.பி.யிலும், தமிழ்நாட்டிலும் அக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியே காரணமாகும். இந்தியா கூட்டணியின் எண்ணிக்கை கூடுவதற்கும் இந்த மாநிலங்களே துணை புரிந்துள்ளன.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்