மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது யார்?
- முனைவர் ச. அய்யம்பிள்ளை, , ஜூலை 01-15, 2024
இந்த ஆண்டு (2024) பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த பின்னர், மாணவர்களுடனும் அவர்களுடைய பெற்றோர்களுடனும் பல இடங்களில் உரையாடியபோது கிடைத்த அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொண்டால், அது மற்றவர்களுக்கும் உதவலாம் என்று எண்ணுகிறேன்.

‘அடுத்து என்ன படிக்கலாம்’ என்று யோசிக்கிறபோது, மாணவர்களின் ஆர்வம், பாடங்களைப் புரியும் திறன், தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களின் தகுதிகள், திறன்கள், குணாதிசயங்கள், தங்களுடைய பொருளாதார, போக்குவரத்து வசதிகளையும் மனதில் கொள்வது நல்லது.

நான் சந்தித்தவர்களில் மிகுதியானவர்கள் தம் பிள்ளைகள் எளிதாக, விரைவாக அதிகமாக பணம் சம்பாதிக்க, சொத்துச் சேர்க்க, விரும்பியதைப் பெற எந்தெந்த பாடங்களை எங்கு படிக்கலாம் என்று அறியத்தான் ஆவலுடன் இருப்பதாகத் தெரிந்தது. இதில் தவறோ, வியப்போ இல்லை; ஏனெனில், இன்றைய வணிகமயமான உலகில் சிறந்த உணவு, உடை, உறையுள், மருத்துவச் சேவை, வாழ்வு, பட்டங்கள் பெற பணமும், செல்வமும் தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அமைதியான, நிறைவான, பிறருக்கு மதிப்பளிக்கும், உதவும் அறத்தோடு கூடிய மாண்புடைய வாழ்வைப் பெறச் சிறந்த சிந்தையும், எண்ணமும், பரந்த அறிவும் தேவை.

நியாயமாகச் சம்பாதிக்கும் திறனையும், நிறைந்த அறிவையும், நிம்மதியாக, அமைதியாக வாழும் வகையையும் கற்றுத்தரும் கல்வியைத் தேடுவதுதான் ஒரு சரியான தேடலாக இருக்க முடியும்.

நம்நாடு சமூக, பொருளாதார, பண்பாட் டுப் பின்னணியில், பல அடுக்கான மக்களைக் கொண்ட நாடு. அதன் அடிப்படையில் அவர்களுடைய திறன்களும், அனுபவங் களும், எதிர்பார்ப்புகளும் மிக வித்தியாச மானவையாக இருக்கின்றன. எனவே கல்வி பற்றிய அவர்களின் எண்ணங்களுக்குள் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் மிகப் பெரிய, குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

கடல் கடக்கும் மாணவர்கள்

நம் நாட்டிற்குள் எதிர்பார்க்கப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத, இடம் பெற முடியாத, சற்றே பொருளாதார வசதி, வெளிநாட்டு மோகம் உள்ள, மாணவர்களில் சிலர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து, முயற்சி செய்து, படித்து, வெற்றியும் பெறுகின்றனர். நம் மாணவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக வெளி நாடுகளில் வேகமாக உயர்ந்து வருகிறது (Geeta Gopinath and Maneesha N, The Big Move, The Hindu, 10th June, 2024, p.12).

அங்கு படிக்கும் வாய்ப்புக்கள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளன. TOEFL, GRE, IELTS போன்ற சில தடைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் வசீகரங்கள், வாய்ப்புக்கள் (எடுத்துக்காட்டாக, உலகத்தரமான படிப்புகள், பண்டங்கள், பணிகள், வசதிகள், வாழ்க்கை முறைகள், சுதந்திரம், பண்பாடு, பன்மொழிப் புலமை, பன்னாட்டுப் புரிதல், தொடர்பு போன்றவை) அவர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. ஊதியம் அதிகம் பெற முடிந்தவர்கள், தாய் நாட்டிற்குத் திரும்புவதைக்கூட தரக்குறைவாகவே நினைக்கின்றனர். நம் நாட்டு பாஸ்போர்ட் வேண்டாம் என்று சொல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. அவர்களின் வயோதிகப் பெற்றோருக்குச் செலவுக்குப் பணம் கொடுப்பதே பெரிய சேவை என்று வாழ்வோரும் உண்டு.

தேசிய நிறுவனங்களின் ஈர்ப்பு

தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களைத் தேடுபவர்கள் அதிகரிக்கின்றார்கள். கல்வியாளர் வாஜித் ஷா, சமரசம் (16-31 மே, 2024, பக்கம்: 34-35) இதழில் இது குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர், இந்தியாவில் உள்ள தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் யாவை?IIM, IIT, NIT, TISS, ISI, NIRD, IGIDR, ISEC, IISc, CDS, JNUஆகியவற்றில் CUET, CLAT, JEE, JRF, NET, CAT மூலம் மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது? அங்கு படிப்பதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? என்பன குறித்து விளக்கியுள்ளார். பல மாநிலங்களில் இருந்து வந்து ஆசிரியர்கள் அங்கு பாடம் நடத்துவதாலும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அங்கு படிப்பதனாலும், சிறந்த கட்டமைப்புக்கள் இருப்பதாலும், விரும்பிய பாடங்களுடன் பல மொழிகளையும் பண்பாடுகளையும் தேசிய அளவிலான திறன்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது; அவர்கள் சற்று அதிக நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கின்றனர். அங்கும் என் மாணவர்களில் சிலர் படிக்கின்றனர் என்பதறிய எனக்கு மகிழ்ச்சிதான்.

ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கான தனியார் நிறுவனங்களில் வசூல் செய்வதைவிட, அந்த நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் குறைவுதான்; ஆசிரியர்களின் தகுதியும் தரமும் அதிகம். அந்தப் பலன்களைப்
பெற முயற்சிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டிய செய்திகளும் சில உள்ளன. ஒன்று, அவர் குறிப்பிட்டுள்ள நுழைவுத் தேர்வுகளில் பல, நம் மாநிலத்தில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு முன்பே முடிந்து விடுகின்றன. உதாரணத்திற்கு 2024ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதமே நுழைவுத் தேர்வு எழுதி 2023 டிசம்பர் மாதமே CLAT மதிப்பெண்கள் வந்துவிட்டன. இரண்டாவதாக language (ஆங்கில மொழி) quantitative aptitude இல்லாமல் அந்தத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது சிரமம். இதனால்தானோ என்னவோ அது போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் உள்ளவைகளில்கூட சேர்ந்து படிக்க தமிழக மாணவர்கள் அவ்வளவாக முயற்சிப்பதில்லை.

மருத்துவம் மட்டும்தான் கல்வியா?

நம் மாணவர்களைப் பற்றி நாம் அனைவரும் அறிந்த செய்திகளில் ஒன்று. செம்மறி ஆட்டுக் கூட்டம்போல சாய்ந்த பக்கமே சாய்வது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25 இலட்சம் பேர் NEET தேர்வு எழுதி மருத்துவத் தொழிலுக்குச் செல்ல விழைகின்றனர். (இந்தமுறை NEET தேர்வில் சில குழப்பங்களும் நிகழ்ந்துள்ளன; அவற்றைச் சரி செய்யும் முயற்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன). அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஏகப்பட்ட பண, நேர விரயம்; தோல்வி எனில், மனச்சோர்வு, சில தற்கொலைகளும் கூட நிகழ்கின்றன.

மருத்துவக் கல்வியின் சிறப்பை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒவ் வொரு குடும்பத்திலும் ஒரு மருத்துவராவது இருந்தால் நல்லதுதான்; அவசர காலங்களில் பிறருக்கும் உதவலாம். அதற்காக தங்க ஊசி என்றால் வயிற்றில் குத்திக் கொள்ளலாமா? மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு (பணம்) கிடைத்தால் நல்லது; இல்லையெனில் வாழ வேறு வழியே இல்லையா? பல சிறந்த வழிகள் உண்டு என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் அறிவது அவசியம். மருத்துவம் படிக்காமலும் மகிழ்ச்சியோடு வாழ முடியும் என்பதும் உண்மைதானே.

பொறியியல் மோகம்

NEETக்குப் பயப்படும் மாணவர்களையும் அதிகம் பார்க்க முடிகிறது; பொறியியல் படிப்பிற்கான மனத்திட்பமும், போதிய அறிவும், பொருளாதார வசதியும் உள்ளவர்களோடு, பெருமைக்காகவும் பலர் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிடத் துடிக்கின்றனர். கல்விக் கடன் வாங்கி இறுதிவரை படிப்பைத் தொடர முடியாமல் போனவர்களும் உண்டு; படிப்பை முடித்துவிட்டு செலவு செய்த பணத்தைத் திரும்ப ஈட்ட முடியாமல் போனவர்களும் உண்டு. பொறியியல் கல்லூரிகளின் பிரச்னைகளை இங்கு முழுதாக எழுத இடம் இருக்காது. சுருங்கக் கூறின், அது, ‘நரியூருக்குப் பயந்து கிளியூருக்குப் போனால், கிளியூர், புலியூராக மாறிய’ கதைதான். அதிகப் பணம் செலவு செய்து பொறியியல் பட்டங்கள் பெற்றுவிட்டு எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே போகிறது. நல்ல நிலையை அடைந்தவர்களும் உண்டு.

நம்மைவிட முப்பது மடங்கு வருமானத்தைக் கொண்டிருக்கிற அமெரிக்காவை விட, நாம் பதினைந்து மடங்கு அதிகமாகப் பொறியியல் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். பொறியியல் மாணவர்களுக்கு அதிகம் வேலை தரும் நம் தொழில் துறையோ, விழுக்காடு அளவில் சுருங்கிக்கொண்டே வருகிறது. வேகமாக எண்ணிக்கையில் பெருகிவரும் நம் பொறியியல் மாணவர்களுக்கு எப்படி ஆசிரியர்கள் கிடைப்பார்கள்? எப்படி சரியான திறன் கிடைக்கும்? எப்படி கண்ணியமான வேலை கிடைக்கும்? எப்படி போதுமான வருமானம் கிடைக்கும்?

மத்திய பல்கலைக்கழகங்கள்

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம். இங்கு தேசிய அளவிலான ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் பழகும் வாய்ப்பு உள்ளதால், மாணவர்களுக்கு படிப்போடு பல மொழிகளையும், திறன்களையும் பெறும் வசதி உள்ளது. இதில் சோகமான செய்தி என்னவெனில், தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களுக்குள் ளேயே, தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

பொதுவாக மாணவர்களும் பெற்றோரும் இந்நிறுவனங்களின் சிறப்பினை அறிய வேண்டியுள்ளது. இங்கு கல்விக் கட்டணங்கள் குறைவு; திறன்மிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு என்றாலே ஓர் அச்சம் தமிழக மாணவர்களுக்கு இருப்பது தெரிகிறது. எளிதாக எங்கு இடம், மதிப்பெண்கள் கிடைக்கும் என்று அலைபவர்களே அதிகம். கல்வியின் தரம் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை; பட்டம் ஒன்றே குறியாக உள்ளார்கள். பெறும் பட்டம் ஒன்றாக இருந்தாலும், பெறும் திறன்கள், கல்வி நிலையங்களுக்கு இடையே வேறுபடுகின்றன.

நண்பர்கள் வழி நம் வழி

நுழைவுத் தேர்வு இல்லாமல், அல்லது பெயரளவில் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் உயர் கல்வி நிறுவனங்கள் நம் மாநிலத்தில் (மற்ற மாநிலங்களைவிட) மிக அதிகம். இங்கு ஏதோ ஒரு பாடத்தில், ஏதோ ஒரு கல்லூரியில் இடம் பெறுவது எளிதாகிவிடுகிறது. இங்கு படித்து சிறந்தவர்களும் ஏராளம் உண்டு. ஆனால் மிகுதியானோர் ஏதோ ஒரு படிப்பு பட்டம், ஏதோ ஒரு வேலை என்ற அளவில் இருந்துவிடுகின்றனர். குறைந்த
சிரமத்தில் கடின உழைப்பு இன்றி அதிக மதிப்பெண்கள் பெற விரும்புவோரை இங்கு அதிகமாகக் காணலாம். இதில் மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகம். தற்போது அதிக அளவிலான மாணவர்கள் ஏதோ ஒரு மோகத்தில் பி.காம், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவே ஆசைப்படுவதாகத் தெரிகிறது. எனவே சில கல்லூரிகளில் இந்த வகுப்புகளில் பதினைந்து செக்ஷன் வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்தன.

பல மாணவர்கள், மாணவிகள், தமக்கு இருக்கிற மன இயல்பு, திறன், பொருளாதார வசதி ஆகியவற்றை மனதில் கொள்ளாமலேயே நண்பர்களோடு சேர்ந்து சுற்ற (மன்னிக்கவும், படிக்க) ஏற்றவாறு பாடங்
களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தப் பாடத்தில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை எனில் பெற்றோரைக் குறை சொல்கின்றனர். பணம் அதிகம் கட்டியாவது தனக்கு அந்த (நண்பர்கள் சேர்ந்துள்ள) கல்லூரியில் இடம் பெற்றுத் தர வேண்டும் என பெற்றோர்களைத் தொந்தரவு செய்கின்றனர்.

சிரமமில்லாத கல்வி

தன்னால் சாதிக்க முடிகிற பாடங்களை, கல்வி நிலையங்களைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, எளிதாக மதிப்பெண்கள் பெறும் அழகான, வசதியான, சொகுசான, நிறுவனங்களில் சேர்ந்து வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தை வீணாக்கிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக பல மாணவர்கள் வங்கியில் பணி பெற ஆசைப்பட்டு அதனால் பி.காம் பாடத்தைத் தெரிவு செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ஏதேனும் ஒரு பட்டமே போதும் என்பதையும், அவர்கள் ஐஆககு தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே வங்கி வேலை கிடைக்கும் என்பதையும் அத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற கணித அறிவு அவசியம் என்பதையும், அத்தேர்வுக்கும் பி.காம் பாடத்திட்டத்திற்கும் பெரிய தொடர்பு இல்லை என்பதையும் மாணவர்கள் அறிய வேண்டியிருக்கிறது.

தேரான் தெளிவு

கல்வி என்பது வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. எனவே அது பற்றிய முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும். அதற்கு போதுமான செய்திகளை அறிய நிறைய நூல்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்க வேண்டும். நம் விருப்பம், இயல்பு, திறன், பொருளாதார வசதி பற்றி எதுவுமே அறியாத எதிர் வீட்டாரிடமும், அண்டை வீட்டாரிடமும், நண்பர்களிடமும் இலவசமாகக் கிடைக்கும் விவரங்களோடு, உண்மையான விவரங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பெற்றோரின் தவறான முடிவுகளால் பாதிக்கப்படும் மாணவர்களும், தாமே தவறான முடிவுகள் எடுத்து பாதிக்கப்படும் மாணவர்களும் பலர்.

ஆர்வமும் திறனும் இருந்தும் பெற்றோ ரின் ஒத்துழைப்பும் பொருளாதார வசதியும் இல்லாததால் பாதிக்கப்படும் மாணவர்களும் இருக்கின்றனர். கல்வி நிலையங்களால் ஒவ்வொருவருக்கும் தேவையான அனைத்துத் திறன்களையும் தந்திட முடியாது. எனவே பாடங்களைச் சிறப்பாகப் படிப்பதோடு நமக்குத் தேவையான பிற திறன்களையும் நாம்தான் பெற முயற்சிக்க வேண்டும்.

புத்திக்கூர்மை, வாழ்வியல் அறிவு, சிரமங்களை, இன்னல்களை எதிர்கொள்ளும் திறன், தோல்வி கண்டு துவளாத தன்மை, விடா முயற்சி போன்ற குணாதிசயங்களையும் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறந்த கல்வி நிலையங்களைத் தேடி மாணவர்கள் சென்றால் சிறந்த நிலையை அடைய முடியும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்