மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஃபலஸ்தீனின் இன்றைய நிலை
- ஜ.ஜாஹிர் உசேன், ஆகஸ்ட் 16-31, 2024




2023 அக்டோபர் 7ஆம்தேதி தொடங்கி 2024 ஆகஸ்ட் 1ஆம் நாள் வரை இஸ்ரேல் இராணுவம் 82,000 டன் வெடி பொருட்களைக் காஸாவில் வீசியிருக்கிறது. காஸாவின் கட்டமைப்பையே ஒட்டுமொத்தமாக அழித்து, 33 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என காஸா அரசாங்க மீடியா அலுவலகம் அறிவித்திருக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் மூலம் முழுவதுமாக அழிவிற்குள்ளானவைகளின் விவரங்கள் :

198 அரசாங்கக் கட்டிடங்கள், 117 பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள், 610 மஸ்ஜித்கள், 3 தேவாலயங்கள், 1,50,000 வீடுகள், 206 பழமையான தொல்லியல் இடங்கள், 34 விளையாட்டு அமைப்புகள், 3,030 கிலோமீட்டர்கள் உள்ள மின்சார வலையமைப்பு(இணைப்பு), 700 கிணறுகள்.

சேதப்படுத்தப்பட்டவைகள் அல்லது பயன்படுத்த முடியாத அளவு பாதிப்படைந்தவைகளின் விவரங்கள் :

117 பல்கலைகழகங்கள், பள்ளிக்கூடங்கள், 211 மஸ்ஜித்கள், 2,89,000 வீடுகள், 34 மருத்துவமனைகள், 68 சுகாதார மையங்கள் சேவை ஆற்ற முடியாத அளவு இஸ்ரேலின் வான் வழித்தாக்குதல்களால் சேதமடைந்து இருக்கின்றன.
இஸ்ரேலிய இராணுவத்தால் 3,457 படுகொலைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன.


39,653 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 10,000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். 91,535 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.


போருக்கு முந்தைய கணக்கின்படி மொத்தமுள்ள 22 இலட்சம் காஸா மக்கள் தொகையில், 6 விழுக்காட்டினர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள், காயமடைந்து இருக்கிறார்கள், காணாமல் போயிருக்கிறார்கள்.
கொல்லப்பட்டவர்களில் 16,314 குழந்தைகள், 10,980 பெண்கள். 520 பேர் குவியலாக மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். 35 பேர் பசியால் இறந்திருக்கிறார்கள்.


கிட்டத்தட்ட காஸாவின் எல்லா மக்களும் இன்றளவும் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இப்படி, முகாம்களில் இருந்து வேறு முகாம்களுக்கு அடிக்கடி இடம் பெயர்ந்ததால் 1.7 மில்லியன் (17 இலட்சம்) மக்கள் தொற்று நோய்களால் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர். அதில் நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது காயம்பட்டவர்கள் வெளிநாடுகளில் அவசரமாகச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக் கிறார்கள்.

இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் உள்ள ஃபலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேற்குக்கரையில்(வெஸ்ட் பேங்க்) கொல்லப்பட்டவர்கள் 589 பேர். அதில் 142 குழந்தைகள். 5,350க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து இருக்கிறார்கள்.

2023 அக்டோபர் 7ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,139 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டும், 8,730 பேர் காயமடைந்தும், 200 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப் பட்டும் இருக்கிறார்கள். இதில் பலர் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டு, சிலர் மீட்கப்பட்டு, சிலர் மீட்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதற்குப் பின்னர் மிச்சம் பிணைக் கைதிகளாக இன்னும் ஹமாஸின் பிடியில் இருப்பவர்கள் 116 பேர் (இஸ்ரேலிய இராணுவம் அறிவித்த தகவலின்படி). அதில் 42 பேர் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். இஸ்ரேலிய இராணுவம் அளித்த தகவலின்படி, 8,663 வீரர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். 35 விழுக்காட்டினர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். 70,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஏதாவது ஓர் உறுப்பை இழந்தவர்களாகி இருக்கிறார்கள்.


இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9,600. அதில் 3,450 பேர் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாகச் சிறை வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச்சரியாக எத்தனை பேர் என்று தெரியவில்லை என்று ஐ.நாவின் மனிதநேய அமைப்பான OCHA தெரிவித்து இருக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த தகவலின்படி, இஸ்ரேலிய இராணுவத்தின் பிடியில் சிக்கி சிறையிலடைக்கப்பட்டவர்களில் 54 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists - CPJ)அறிவித்த தகவலின்படி, 166 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


ஐக்கிய நாடுகள் அறிவித்த தகவலின்படி, காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலால் சேதமடைந்த இடிபாடுகளை அகற்ற மட்டும் 15 ஆண்டுகள் ஆகும். இந்த இடிபாடுகளைச் சேகரித்து வைக்க மட்டும் 250 லிருந்து 500 ஹெக்டேர் இடம் வேண்டுமாம். சுகாதாரம், கல்வி, வாழத்தேவைப்படும் வீடுகளைக் கட்டி முடிக்க 44 ஆண்டுகள் தேவைப்படுமாம். இஸ்ரேல் பயன்படுத்திய வெடிகுண்டுத் தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட குப்பைகள், கழிவுகள், கட்டிடச் சேதங்கள் 39 மில்லியன் டன்கள் அளவிற்குச் சேர்ந்து கிடக்கின்றன. ஒவ்வொரு சதுர மீட்டர் நிலப்பரப்புக்குள்ளும் சராசரியாக 107 கிலோ குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தக் குப்பைகளை அள்ள ஆகும் செலவு 500 மில்லியனிலிருந்து 600 மில்லியன் டாலர்கள் ஆகலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. வெடிக்காத குண்டுகள், அபாயகரமான பொருட்கள் மட்டும் 100 லாரிகளில் அள்ளும் அளவிற்கு இருக்கிறதாம்.


9,211 மாணவர்கள், 397 ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 3,402 ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் காயமடைந்து இருக் கிறார்கள். 353 அரசாங்க பள்ளிக்கூடங்களும், பல்கலைக் கழகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஐ.நா அமைப்பு நடத்தி வந்த 65 பள்ளிக்கூடங்கள் வெடிகுண்டுத் தாக்குதலால் நாசமடைந்து இருக்கின்றன. 6,20,000 மாணவர்கள் தங்களுடைய கல்வியை இழந்து நிற்கிறார்கள்.


காஸாவில் இயங்கி வந்த எல்லாப் பல்கலைக்கழகங்களையும் இஸ்ரேல் முற்றிலுமாகத் திட்டமிட்டு அழித்து விட்டது. 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. ஆயுதப்போர்களின் இடங்கள், நிகழ்வுகள் பற்றிய தகவல் திட்ட அறிக்கையின்படி (Armed Conflict Location and Event Data Project- ACLED), வான்வழி, ட்ரோன்கள், ஏவுகணை, தொலைவிலிருந்து இயக்கப்படும் வெடிகுண்டுகள், கட்டிடங்களின் மீதான தாக்குதல்கள் என மொத்தம் 17,081 சம்பவங்களுக்கு இஸ்ரேல் காரணமாகியிருக்கிறது. அக்டோபர் 7ஆம் நாள் முதல், ஃபலஸ்தீன் பகுதிகள், லெபனான், சிரியா, எகிப்து, ஏமன், ஜோர்டான், ஈரான், ஈராக் ஆகிய எட்டு நாடுகளில் தாக்குதல்கள் நடந்தேறி இருக்கிறது. பெரும்பான்மையான தாக்குதல்கள் ஃபலஸ்தீன் பகுதிகளில் தான், குறிப்பாக காஸாவில் நடத்தப்பட்டது.


மொத்தமுள்ள 17,081 சம்பவங்களில், 60 விழுக்காட்டிற்கும் மேலாக காஸாவிலும், 6,544 சம்பவங்கள் (38 விழுக்காடு) லெபனானிலும், சிரியாவில் 144 சம்பவங்களும் நடந்தேறி இருக்கிறது. மிக முக்கியமாக, ஹமாஸின் தளபதி முஹம்மது தயிஃப்பைக் கொல்வதற்காக ஜூலை 13ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 90 பேர் கொல்லப்பட்டார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இதில் குழந்தைகள், மருத்துவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டது உலகளாவிய கண்டனத்திற்கு உள்ளானது.


20,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காணவில்லை. 17,000 குழந்தைகள் யாரும் இல்லாத அநாதைகளாக இருக்கிறார்கள். 4,000 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கிறார்கள்.


மருத்துவப் பணியாளர்கள் 723 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 924 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். 310 பேர் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


ஃபலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டியின் அறிக் கைப்படி, அக்டோபர் 7ஆம் தேதி முதல் 400 தடகள வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் 69 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்கள். 42 விளையாட்டு மையங்கள் (ஜிம்கள், பயிற்சிக் கூடங்கள், தடகள மைதானங்கள், ஸ்டேடியங்கள்) முற்றிலுமாக இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.


300 நாள்களைக் கடந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. உலக நாடுகளால் இதனைத் தடுக்க முடியவில்லை. ஐநாவால் கூக்குரலிட மட்டுமே முடிகிறது. இந்தக் கொடுமைகள் ஒருநாள் நிறுத்தப்படும். ஃபலஸ்தீன் மீண்டெழும் என்ற நம்பிக்கை அந்த மக்களை இன்னும் நிலைகுலையாமல் களத்தில் நிற்கச் செய்கிறது. அந்த நம்பிக்கைகள் வீண்போகாது. இஸ்ரேல் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தத் தியாகங்கள் வீண்போகாது. ஃபலஸ்தீன் ஒரு நாள் நிச்சயம் வெல்லும். இன்ஷா அல்லாஹ்..!


தகவல் உதவி : Jazeera Newspaper,  TRT World, Middle East Eye websites


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்