மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

உலகின் மனசாட்சியை உலுக்கியெடுத்த IITமாணவர்
- ஜ. ஜாஹிர் உசேன், ஜூலை 16-31




சென்னை IITயின் 61ஆவது பட்டமளிப்பு விழா ஜூலை 19ஆம் நாள் நடைபெற்றது. வேதியியல் துறையில் 2012ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற முனைவர் ப்ரியன் கோபில்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இஸ்ரோ தலைவர் சோமநாத் Ph.D பட்டம் பெற்றார். இவர் உள்ளிட்ட 2,636 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். மொத்தம் 3,016 பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவில் கல்விசார், கல்வி சாரா இணைச் செயல்பாடுகளில் ஆல் ரவுண்டராக விளங்கியமைக்காக ஆளுநர் விருதை மெக்கானிக்கல் பொறியியல் மாணவர் தனஞ் செய் பாலகிருஷ்ணா பெற்றார். தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

‘இந்த மேடையைப் பயன்படுத்தி மிகவும் முக்கியமான செய்தியை இங்கே சொல்ல வில்லையானால் எனக்கும், நான் நம்பிக் கொண்டிருக்கும் எல்லாவற்றிற்கும் அநீதி இழைத்தவனாவேன் என்றே உணர்கிறேன்.
இது செயல்பாட்டுக்கான நேரம். ஃபலஸ்தீனில் திரளான இனப்படுகொலை நடக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகிறார்கள். இதற்கு வெளிப்படையான முடிவு எதுவுமில்லை. இதுகுறித்து நாமெல்லாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

பொறியியல் மாணவர்களாகிய நாம் பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் இத்தகைய பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஃபலஸ்தீனப் போரில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. ஃபலஸ்தீனர்களைக் கொல்ல தொழில்நுட்பங்களைக் கொடுக்கின்றன.

இதைத் தடுக்கும் வழி எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பொறியியல் பட்டதாரிகளான நமக்கு, நாம் செய்யும் பணிகளின் விளைவுகள் தெரியும். அறிவியல், தொழில்நுட்பம், பொறி யியல், கணிதம் (STEM) பின்புலத்தில் இருந்து பெரு நிறுவனங்களுக்குச் செல்கின்றோம். அவை இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்திய அரசுகளை முன்னேற்றுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் சாதி, வர்க்கம், நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றால் நசுக்கப்படும் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். இது என்றுமே முடிவுறாத சுழற்சியைத் தடுக்கும் முதல் படியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‘இந்த ஜாம்பவான்களின் தோள்களின் மீது ஏறி நான் எங்கு செல்ல நினைத்தேனோ அங்கே என்னைக் கொண்டு செல்ல வைத்தேன்’ என்று ஐசக் நியூட்டன் கூறினார். நானும் அதையே இங்கே சொல்ல விரும்புகிறேன், நான் இங்கு இருக்கிறேன்.

சிறந்த இந்திய மக்களின் பெருந்தன்மையான தோள்களின் மீதேறி நாமும் இங்கு நின்று கொண்டிருக்கிறோம்.

துன்பங்களில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு தனி மனிதனையும் அந்தத் துன்பங்களில் இருந்து மீட்டு அவர்களை உயர்த்தி விட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். செயல்படாமல் இருப்பது, உடந்தையாக இருப்பதற்குச் சமம். எப்படிப்பட்ட கடினமானதாக இருந்தாலும், சரியான முடிவுகளை எடுக்க நீங்களும், நானும் அனைவரும் சேர்ந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்