23.7.2024 அன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் முக்கிய சில திட்டங்களுக்கு, குறிப்பாக சென்னை மெட்ரோ இரயிலின் இரண்-டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கும், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ இரயிலின் முதல் கட்டப் பணிகளுக்கும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் உடமைகளுக்கும், விளைநிலங்களுக்கும் மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.37,000 கோடி நிதி உதவியை ஒன்றிய அரசிடம் கோரியிருந்தது. மத்திய நிபுணர் குழுவும் வந்து சேதங்களைப் பார்வையிட்டு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு நிதி எதுவும் வழங்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னர் ஒன்றிய அரசு ரூ.276 கோடியை வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாட்டிற்கு அளித்தது. இது யானைப் பசிக்குச் சோளப் பொறி போட்ட கதைதான். மேலும் கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசு எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தான் ஒன்றிய நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் இரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகளுக்காக மத்திய நிதி நிலை அறிக்கையில் ரூ.6362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்-நாட்டை விட நிலப்பரப்பிலும்,
மக்கள் தொகையிலும் குறைந்த குஜராத், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்தரகாண்ட், ஒரிசா, சட்டீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தமிழ்நாட்டைக் காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 22 திட்டப் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றமுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஏனெனில் இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஆனால் இரயில்வே வருவாயில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்-கிறது. ஆனால் நிதி ஒதுக்கீட்டிலோ 11ஆவது இடத்தில் இருக்கிறது. ஏன் இந்தப் பாரபட்சம்?
அதே நேரத்தில், பீகாருக்கும் ஆந்திரா-வுக்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் கணிச-மாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,500 கோடியும், சாலைத் திட்டப் பணிகள், மின் உற்பத்தித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக ரூ.47,000 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா--வில் அமராவதி, தலைநகர் உருவாக்கப் பணிகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. வேறு பல நீர்ப்பாசன மின் திட்டங்களுக்கும் தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்று கடந்த பத்தாண்டுகளாகவே பீகாரும், ஆந்திராவும் ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வந்தன. ஆனால் ஒன்றிய அரசு செவி சா#க்கவில்லை. இம்முறை சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்று அறிவித்து விட்டு அம்மாநிலங்களுக்குத் தாராளமாக நிதி ஒதுக்கியுள்ளது.
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைமையிலான ஆட்சியில் பவன் கல்யாண் கட்சியும், பாஜகவும் இடம் பெற்றுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போன பாஜக, ஐக்கிய ஜனதா தளம் - தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவில்தான் மூன்றாவது முறை
யாக ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே கடந்த நிதிநிலை அறிக்கைகளில் இந்த மாநிலங்-களின் கோரிக்கையை ஏற்க மறுத்த பாஜக அரசு, இப்போது தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே காரணம். உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி (வெள்ள நிவாரண நிதி) வழங்கவில்லை ஏன்? பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செ#யப்பட்டிருப்பதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்குத் திட்டப் பணிகளுக்கோ, வெள்ள நிவாரணத்-திற்கோ, இரயில்வே பணிகளுக்கோ ஏன்
நிதி ஒதுக்கீடு செ#யவில்லை என்று கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில திருக்குறள்களை இடம் பெறச் செய்தார். ஆனால் இம்முறை அவரது அறிக்கையில் திருக்குறளும் இடம் பெறவில்லை. தமிழ்நாடு என்ற பெயரும் இடம்பெறவில்லை. இதனைச் சுட்டிக் காட்டி தமிழ்நாடு முதலமைச்சரும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டால், காங்-கிரஸ் ஆட்சியின் போது சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தனவா என நிர்மலா சீதாராமன் எதிர்க்கேள்வி கேட்கிறார். இது என்ன விதண்டாவாதம்? தமிழ்நாட்டிற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை என முதலமைச்சரும், பிற தலைவர்களும் கூறியுள்ளனர். இத-னைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டே வேண்டுமென்று அவர் இது-போன்று பதிலளித்து பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கிறார்.
ஒன்றிய அரசின் இந்தப் பாரபட்சமான போக்குக் குறித்து தமிழ்நாட்டிலுள்ள பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகைள் நம்மை வியப்படைய வைக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், பாஜக கூட்டணிக்குத் தமிழக மக்கள் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றியைக் கொடுத்திருந்தால், நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் பெயர் இடம் பெற்றிருக்கும் என்கிறார். பாஜக கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்து விட்ட காரணத்-தால் தான் தமிழ்நாட்டிற்குப் போதிய நிதி வழங்கப்படவில்லை என்பதை எவ்-வளவு வெளிப்படையாக அன்புமணி குறிப்பிடுகின்றார். பாஜக தலைவர்கள் கூட இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அன்புமணி தெரிவிக்கின்றார்.
வெள்ள நிவாரணம் வழங்காதது குறித்து மூன்று இலட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை போடுகின்ற தமிழ்நாடு அரசால், வெள்ள நிவாரணத்திற்கு நூறு கோடி ஒதுக்க முடியாதா என்று அவர் கேட்கிறார். 48 இலட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்துள்ள ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ரூ.1000 கோடி வெள்ள நிவா-ரணம் வழங்க முடியாதா என நாம் திருப்பிக் கேட்க முடியும். வெள்ள நிவாரணம் வழங்க வேண்டிய கடமை ஒன்றிய அரசிற்கு இருக்கிறது. தமிழ்நாடு ஒன்றும் யாசகம் கேட்கவில்லை. அன்புமணிகளுக்கு இது ஏன் புரியவில்லை?
வெள்ள நிவாரணம் ரூ.37000 கோடி வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், வெறும் ரூ.276 கோடி மட்டும் ஒன்றிய அரசு கொடுத்திருப்பது எந்தக் கணக்கில் வருகிறது? வெள்ளச் சேதப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்த மத்திய நிபுணர் குழு அரசிடம் அளித்த பரிந்துரைகள் என்ன? அவர்களின் மதிப்பீட்டின்படி சேத மதிப்பு எத்தனை கோடி ரூபாய்? இப்படி எந்த ஓர் உண்மையையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றிய அரசைக் கண்டிக்க வேண்டும் என்று கூட நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நிதி ஒதுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்துவதில் அவர்களுக்கு என்ன தயக்கம்?ஊடகங்களின் நிலை என்ன? இந்து ஆங்கில நாளிதழ் மட்டுமே ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்-துத் தலையங்கம் எழுதியது. அதே நிறுவனத்திலிருந்து வெளிவரும் இந்து தமிழ்த் திசை தனது 25.7.24 தலையங்கத்தில் (அரசியலைத் தாண்டிய ஆக்கப்பூர்வமான பட்ஜெட் என்ற தலைப்பில்) கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. ‘பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பெரிதும் சார்ந்-திருப்பதால், இந்த இரண்டு மாநிலங்-களுக்-கும் பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்-கப்-பட்டிருப்பதை மறுக்க முடியாது.
தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கை அதிகரிக்க விரும்பும் பாஜக அரசு, மறுபுறம் தமிழ்நாட்டின் முக்கியத் தேவைகளைப் புறக்கணித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்தப் போக்கை திமுக மட்டுமல்லாது பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான அதிமுகவும், தற்போதைய கூட்டணிக் கட்சியான பாமக-வும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரிசா, ஆளும் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.’ இந்து தமிழ்த் திசை நாளிதழின் கருத்துகள் குழப்பமாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கும், வெள்ள நிவாரணத்திற்கும் நிதி உதவி வழங்காத ஒன்றிய அரசைக் கண்டிக்க அதன் ஆசிரியருக்கு மனம் வரவில்லை. பாமக தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்-படாததை வரவேற்கும் தொனியிலேயே கருத்துத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்து
தமிழ்த் திசை இதழின் ஆசிரியர் பாமக விமர்சித்ததாகக் குறிப்பிடுகின்றார். ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடும் ஆசிரியர், தமிழ்நாடு புதிய திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கீடு கோரவில்லை. ஏற்கனவே செயல்-படுத்தி வரும் திட்டங்களுக்குத் தான் நிதி உதவி கோருகிறது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டார்.
இரயில்வே நிதி ஒதுக்கீட்டில் ஒரிசாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் முறையே ரூ.10,586 கோடியும், ரூ.15,940 கோடியும் ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு ரூ.6362 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது பாராபட்சம் இல்லையா? இதனை அரசியலுக்கு அப்பாற்-பட்ட ஆக்கப்பூர்வமான பட்ஜெட் என இந்த இதழின் ஆசிரியர் எங்ஙனம் கூறுகின்றார்? நமக்குப் புரியவில்லை. மற்றொரு முக்கிய நாளிதழான தினமணி பீகாருக்கும் ஆந்திராவுக்கும் அதிக நிதி ஒதுக்கியதைக் குறிப்பிட்டு கூட்டணி அரசியலில் இது தவிர்க்க இயலாதது என்று சப்பைக் கட்டுக் கட்டியுள்ளது. ஒன்றிய அரசிற்கு வரி வசூல் வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இரயில்வே வருவாயில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு ரூ.100 வரி வழங்கினால் 29 ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் திரும்ப வழங்குகிறது. ஆனால் பீகார், உ.பி. ஆகிய மாநிலங்-களுக்கு ரூ.100க்கு ரூ.600 என்ற விகிதத்தில் திரும்ப வழங்கி வருகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டு நிதி அமைச்சராக முன்னர் இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒருமுறை பேசும் போது ‘எத்தனை ஆண்டுகளுக்குத் தான் பின்தங்கிய மாநிலங்கள் என்று சொல்லி பீகாருக்கும், உத்தரப்பிரதேசத் திற்கும் அதிக நிதி வழங்கிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள். அந்த மாநிலங்கள் எப்போது தான் முன்னேறிய மாநிலங்களாக மாறும்?’ எனக் கேள்வி எழுப்பினார். நமது கேள்வியும் அதுவே.