மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

வக்ஃப் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க முடியாது
- அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் திட்டவட்டம், ஆகஸ்ட் 16-31, 2024


 

 

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றி-யமைக்கும் வகையிலோ அல்லது அவற்றை அரசு அல்லது தனிநபர்கள் எளிதாகப் பறிக்கும் வகையிலோ வக்ஃப் சட்டம் 2013இல் செய்யப்படும் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உறுதிபடத் தெரிவித்ததுடன் வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்களைக் குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவதையும் பொறுத்-துக் கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் DR. S.Q.R இல்யாஸ் அளித்த செய்தி அறிக்கையில், ‘வக்ஃப் சட்டம் 2013இல் சுமார் 40 திருத்தங்கள் மூலம் வக்ஃப் சொத்துகளின் அந்தஸ்து, தன்மையை மாற்ற இந்திய அரசு விரும்புகிறது. இதனால் அவற்றைக் கைப்பற்றுவது அவர்களுக்கு எளிதாகிவிடும். வக்ஃப் சொத்துகள் என்பது சமய, மக்கள்சேவை நோக்கங்களுக்காகச் செலவிடப்படும் முஸ்லிம் செல்வந்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் என்பதைத் தெளிவுபடுத்துவது முக்கியம் என்று முஸ்லிம் தனியார்
சட்ட வாரியம் கருதுகிறது. அவற்றை ஒழுங்கு-படுத்துவதற்காக மட்டுமே அரசு வக்ஃப் சட்டத்தை இயற்றி இருக்கிறது.

வக்ஃப் சொத்துகள் இந்திய அரசிய லமைப்பு, ஷரீஅத் சட்டம் 1937 ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, இந்தச் சொத்துகளின் தனித்தன்மையையும் அதிகாரத்தையும் மாற்றியமைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் அரசு செய்யக் கூடாது. முஸ்லிம்கள் தொடர்பாக இதுவரை மோடி அரசு எடுத்துள்ள அனைத்து முடிவுகள், நடவடிக்கைகள் மூலமாக முஸ்லிம்களிடமிருந்து ஏதாவது பறிக்கப்பட்டுள்ளதே தவிர, எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் முஸ்லிம்களுடன் மட்டும் நிற்கப் போவதில்லை. வக்ஃப் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பிறகு, சீக்கியர்கள், கிறித்தவர்களின் அறக் கட்டளைகள், இந்துக்களின் மடங்கள், பிற இந்து மதச் சொத்துகள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

வக்ஃப் சட்டத்தில் அதன் நிலையை மாற்றும் எந்தவொரு திருத்தத்தையும் முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுபோல் வக்ஃப் வாரியங்-களின் சட்ட, நீதித்துறை அந்தஸ்து, அதிகாரங்களில் தலையிடுவதையும் அனுமதிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள், பிற எதிர்க்கட்சிகள் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் முற்றிலுமாக
நிராகரித்து, அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது. ஒன்றிய அரசின் இந்தத் தீங்கிழைக்கும் செயலுக்கு எதிராக அனைத்து முஸ்லிம்களும், சமய, தேசிய அமைப்புகளும் ஒன்றுபட வாரியம் வேண்டுகோள் விடுக்கிறது. இந்த முயற்சியை முறியடிக்க அனைத்து வகையான சட்ட ரீதியான, ஜனநாயக நடவடிக்கைகளையும் முஸ்லிம் சட்ட வாரியம் மேற்கொள்ளும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்