வங்கதேசப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். இப்போது அங்கு இடைக்கால அரசு அமைந்து அதில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இவ்வளவு பெரிய மாற்றம் வங்கதேசத்தில் நிகழ்ந்ததற்குக் காரணமாக அமைந்தது அங்கே ஏற்பட்ட மாணவர் எழுச்சிதான். அது எப்படித் தொடங்கியது, அதைத் தொடர்ந்து என்னவெல்லாம் நடந்தன என்பது குறித்து சற்று விரிவாகக் காண்போம்.
போராட்டத்தின் தொடக்கம்
ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்தே வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெறத் தொடங்கியது. விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்-களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரானதுதான் அந்தப் போராட்டம். அதில் அரசு கடும் அடக்கு-முறையைக் கையாண்டதன் விளைவாக 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் காயம் அடையும் நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். விடுதலைப் போராட்டக்காரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக ஜூன் மாதம் வங்கதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்துதான் பல்வேறு நகரங்களில்
மாணவர் போராட்டம் தொடங்கியது. அதனால் நாடே நிலைகுலைந்து போனது. போராட்டம் தீவிரம் அடைந்ததால் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 21 அன்று அரசு வேலைகளில் அதிகபட்சம் 5% பணியிடங்களை மட்டும் விடுதலைப் போர் வீரர்களுடைய சந்ததியினருக்கு ஒதுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
இதில் சிக்கல் என்னவெனில் இந்த 5 விழுக்காட்டை அரசாங்கம் வேண்டிய அளவிற்கு உயர்த்திக்கொள்ள நீதிமன்றம் அனுமதித்திருந்தது. இதனால் மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்தனர். மாணவர்கள், போராட்டக்காரர்கள் எனப் பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா இதற்குப் பொறுப்பேற்று பொதுமன்னிப்புக் கோர வேண்டும். பதவி விலக வேண்டும் என்று மாணவப் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். இன்னும் சில கோரிக்கை முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். ஆனால், எல்லாவற்றையும் புறந்தள்ளிய வங்கதேச அரசு இணைய வசதியை முடக்குவது, ஊரடங்கை அறிவிப்பது, பொது விடுமுறை தருவது எனப் பல முயற்சிகளை மேற்கொண்டது. இவையெல்லாம் போராட்டத்தின் வீரியத்தைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் வீரியம் அடையவே வழிவகுத்தன.
1972இல் தொடங்கிய பிரச்னை
திடீரென்று ஏற்பட்டதல்ல வங்கதேசப் புரட்சி. இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி, அரசியல் பின்னணி உண்டு. இந்தியா - பாகிஸ்-தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என பாகிஸ்தானும் வங்கதேசமும் ஒரே நாடாக இருந்தது. 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பாகிஸ்-தானிலிருந்து பிரிக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. வங்கதேசத்தில் இந்தப் பிரிவினையை ஏற்கக்கூடிய ஒரு தரப்பும் எதிர்க்கக்கூடிய ஒரு தரப்பும் இருந்தன. இறுதியில் நாடு பிரிக்கப்பட்டதற்குப் பிறகு, தனி நாடு கோரிக்கைக்காகப் போராடியவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டது.
அதில் ஒன்றுதான் அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு வழங்கியது. இதை 1972இல் நடைமுறைப்படுத்தியவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரே வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த முக்கியத் தலைவர். இவர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் ஆவார். இந்த இடஒதுக்கீடு ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் முதலில் கூறப்பட்டது. பிறகு அதுவே தொடர்ந்தது. விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு மட்டும் இருந்த இந்த இடஒதுக்கீடு நடைமுறையை, 1997 இல் அவர்களுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கும் நீடித்தனர். இதனால் பலரும் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக உணர்ந்தார்கள். இது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நீடிக்கக் காரணமாக இருந்தது.
சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை இவ்வாறாகக் கேலிக்கூத்தாக ஆக்குவதா என அரசாங்கத்தை நோக்கிக் கேள்வி எழுப்பினர். இறுதியில் 2018ஆம் ஆண்டு மாணவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக இந்த 30% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் வங்கதேச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதால் ரத்து செய்யப்பட்ட இடஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வந்த பின்னணியில் தான் மாணவர் போராட்டம் மீண்டும்
வெடித்தது.
வங்கதேசத்தில் 1.8 கோடி படித்த இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளானர். வேலையின்மை என்பது தற்போதைய எழுச்சிக்கு முக்கியக் காரணம். இது ஒரு பக்கம் இருக்க, பிரதமர் ஹசீனாவுக்கும், அவருடைய கட்சியான அவாமி லீக்கிற்கும் விசுவாசமாக இருந்த-வர்-களுக்கு நேரடியாகப் பயன்-படக்-கூடிய வகையில் இந்த விடுதலைப் போராட்டக்காரர்களுக்கான இடஒதுக்கீடு இருந்தது.
ஆம், வங்கதேச தனிநாடு கோரிக்கையை ஆதரித்துத் தொடங்கப்பட்டதே அவாமி லீக் கட்சி. அதனால் இடஒதுக்கீட்டு முறையால் அவர்களே பலன் பெறுவர் என்று மக்கள் உணர்ந்தனர். பொது மக்கள் அரசு வேலைகளைப் பெறுவதற்கு எதிராக அவாமி லீக் கட்சி இருப்பதாகக் கருதினர். இது மட்டுமின்றி, ஏற்கனவே அரசு வேலைகளில் பல தரப்பினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு 10%, சிறுபான்மையினருக்கு 5%, சில குறிப்பிட்ட மாவட்டங்களை அடையாளப்-படுத்தி அங்கு இருப்பவர்களுக்கு 10%, மாற்றுத் திறனாளிகளுக்கு 1% என இடஒதுக்-கீட்டுக் கொள்கை இருந்தது. இதில் தனியாக விடுதலைப் போராட்ட வீரர்களுடைய வழித்தோன்றல்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தால்
அங்குள்ள மாணவ இளைஞர்களுடைய நிலை என்னவாகும் என நாம் சிந்திக்க வேண்டும்.
சரியாகச் சொல்ல வேண்டும் எனில் 54% இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்பட்டு; மீதம் இருக்கின்ற 44% தான் பொதுமக்களுக்காக இருக்கும். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் ஒருவேளை குறிப்பிட்ட அந்த 54% இட ஒதுக்கீடு நிரம்பவில்லை எனில் அந்தப் பணியிடங்கள் அப்படியே நிரப்பப்படாமல் விடப்படும். இவை அனைத்தும் தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபடக் காரணம்.
போராட்டம் வன்முறையானது எப்படி?
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஜூலை மாதத் தொடக்கத்தில் மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். Students Against Discrimination என்ற அமைப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்தது. அமைதியான முறையில் நடந்த போராட்டத்தைப் பொறுக்க முடியாத ஆளுங்கட்சி அவாமி லீக்கின் மாணவர் பிரிவும், காவல்துறையும் சேர்ந்து மாணவர்கள்மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஜூலை 16ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின் மேல் போலீசார் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் போராட்டம் பரவியது. இந்தப் பின்னணியில்தான் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியது மட்டுமின்றி துணை இராணுவப் படை, பயங்கரவாத எதிர்ப்புப் படைகளையெல்லாம் இறக்கியது அரசாங்கம். இதுதான் போராட்டம் வன்முறையாக மாறக் காரணமாக இருந்தது. இவ்வளவு உயிர்கள் பறிபோகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடையவும் அரசுடைய அடக்குமுறையே காரணம். பிரதமர் ஷேக் ஹசீனா போராட்டக்காரர்கள் ‘ரஸாக்கர்கள்’ என்று சாடினார். ரஸாக்கர்கள் என்றால் நாடு பிரிவினைக்கு முன்னர் பாகிஸ்தானை ஆதரித்துச் சண்டையிட்டவர்கள் என அர்த்தம். இப்படியான கருத்துகள் மாணவர்களை இன்னும் கொதித்தெழ வைத்தது.
வெளிநாடுகளிலும் பரவிய வங்கதேசப் போராட்டம்
வங்கதேச அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பல நாடுகளில் வசிக்கின்ற வங்கதேசர்கள் தங்களுடைய அரசு நடத்தும் கொடூரத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க், லண்டன், யுஏஇ, ஜோர்டான் போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. யுஏஇ-ல் நடந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வங்கதேசர்கள் கைது செ#யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அண்மையில் அபுதாபி நீதிமன்றம் மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 47 நபர் களுக்குப் பத்தாண்டுச் சிறை தண்டனையும் வழங்கியது. தண்டனைக் காலம் முடிந்ததும் குற்றவாளிகள் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்த எதேச்சதிகாரம்
தொடர்ச்சியாக எதேச்சதிகாரப் போக்கைக் கையாண்ட ஷேக் ஹசீனா 2009இல் ஆட்சிக்கு வந்தவர். சுமார் 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவர் ஏகப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், போராட்டங்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒடுக்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மையைச் சொன்னால் வங்கதேசத்தை ஒருகட்சி ஆட்சிமுறை உள்ள நாடாக ஷேக் ஹசீனா மாற்றியிருந்தார். வங்கதேச தேசியவாதக் கட்சி, ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற தரப்பினரை மிகக் கடுமையாக ஒடுக்கியே தன் ஆட்சியைத் தக்க வைத்தார்.
இவர் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மாணவர் போராட்டம் போலவே பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. உதாரணத்திற்கு, 2015-16இல் தனியார் கல்லூரிக் கட்டணத்தில் வரி விதிப்பு செய்ததற்கு எதிராகப் போராட்டம், 2018-19இல் சாலைப் பாதுகாப்பு சார்ந்த மாணவர்கள் போராட்டம், 2021-22இல் Digital Security Actக்கு எதிரான போராட்டம் எனப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இவையெல்லாம் அரசின் மீதுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக அமைந்தன.
எதிர்க்கட்சிகள் தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் இல்லாததன் பின்னணியிலேயே இப்படியான வெகுஜன போராட்டங்கள் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். தற்போதைய மாணவர் எழுச்சியில் ஏற்பட்ட வன்முறைகளுக்குக் கூட எதிர்க்கட்சிகளைக் காரணம் காட்டினார் ஷேக் ஹசீனா. மாணவர் போராட்டம் ஹசீனா அரசாங்கத்தின் மேல் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உலகளவில் அதைப் பேசுபொருளாக்கியது. ஒடுக்குமுறைகளால் போராட்டம் தீவிரமடைந்த பின்னணியில் இன்றைக்கு ஹசீனாவின் ஆட்சியே கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசு நியமிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அரசியல் மாற்றம் அந்த நாட்டில் எதேச்சதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இனி எந்தத் திசையில் நாடு பயணிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.