நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 08ஆம் நாள் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட வக்ஃப் மசோதாவை முஸ்லிம் சமுதாயத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லா ஹுசைனி தெரிவித்துள்ளார்.
சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், ‘புதிய UMEED சட்டத்தின் மூலம் வக்ஃப் சட்டம், 1995இல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நாங்கள் எதிர்க்கிறோம். வெளித்தோற்றத்தில் நன்மை பயக்கக் கூடியதாக இருந்தாலும், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வக்ஃப் சொத்துகளையும், அது சேவை செய்யும் சமூகத்தின் தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் குலைக்கக் கூடிய நோக்கத்தைக் கொண்டுள்ளன. இதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. இந்தத் திருத்தச் சட்டப்படி நிறுவப்பட்ட வகுப்பு அமைப்பையும், சிறுபான்பான்மையின சமூகத்தின் பாரம்பரியம், நடைமுறைகளை நடத்தவும், பாதுகாத்துக் கொள்ளவும் அரசியலமைப்பு வழங்கிய உரிமையைக் குறி வைப்பதாக உள்ளது.
முன்மொழியப்பட்ட மசோதா மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கும் ‘கலெக்டர் ராஜ்’ போன்ற வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. இது வக்ஃப் சொத்துகள் மீது ஆட்சியாளருக்கு(Collector) முன் இல்லாத அளவிற்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. இந்த மாற்றம் வக்ஃப் தீர்ப்பாயத்தின் இறுதியான, உறுதித் தன்மையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயனரிடத்திலிருந்து வக்ஃபின் தேவையையே நீக்குகிறது. தற்போதைய சட்டத்தின் கீழ், வக்ஃப் சொத்து தொடர்பான எந்தவொரு வழக்கும் ஓர் ஆண்டிற்குள் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் இந்தக் காலத்தை நீடித்துள்ளனர். இது குழப்பத்தையும் சட்ட மோதல்களையும் உருவாக்கும்.இந்த மசோதா, அதன் பரவலான விதிகளுடன், முக்கியமாக இந்தச் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள எந்த கலந்தாலோசனையும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தான் மிக ஆபத்தானது.
மசோதாவின் நோக்கங்களும், காரணங்களும் சட்ட மேம்பாடுகளின் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால் இத்தகைய விரிவான மாற்றங்களை நியாயப்படுத்தத் தவறிவிட்டது. வக்ஃப் நீதித்துறை நிபுணர்களுடன் உண்மையான ஆலோசனை நடந்தியிருந்தால், வக்ஃபை மறுவரையறை செய்வது சட்டரீதியான களத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும், இது முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்கள். தற்போதைய வக்ஃப் வாரியச் சட்டம் இதர மத, சமூகங்களின் நிலங்களை அபகரிக்கிறது என்ற ஊடகப் பரப்புரையின் மூலம் கூறப்படும் கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கின்றோம். இந்தப் பொய்யான கூற்றுகள் புனையப்பட்டவை, ஆதாரமற்றவை. வக்ஃப் வாரியம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வமாக அரசாங்கத்தின் மேற்பார்வையில் செயல்படுகிறது.
மக்களின் சொத்துகளைப்பாதுகாப்பதற்குப் பதிலாக, இந்த மாற்றங்கள் |
இந்தத் திருத்தம் காலாவதியான காலனித்துவ சட்டங்களிலிருந்து உத்வேகம் பெற்று, கலெக்டரை இறுதி அதிகாரியாக நிலை-நிறுத்துகிறது. இதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் மத அறக்கட்டளைகளை நிர்வகிப்பதற்கான உரிமைகளை நசுக்குகிறது. இது NGTயின் சுற்றுச்சூழல் அதிகாரத்தை அல்லது ITATயின் வரி அதிகாரத்தை அகற்றுவதற்கு ஒப்பானது. வக்ஃப் நீதித்துறையின் அடிப்படை அம்சத் தையும், நீண்ட கால மத, தொண்டு பயன் பாட்டை அங்கீகரிக்கும் பயனரிடம் இருந்து வக்ஃப் என்ற கருத்தை நீக்குவதாக உள்ளது. இந்த மாற்றம் வக்ஃப் சொத்துகள் தொடர்பாக மேலும் சர்ச்சைகளையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
இத்திருத்தம் மாநில அரசுகள் வக்ஃப் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களையும் நியமிக்க அனுமதிக்கிறது. இது முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த குறைந்தது இரண்டு உறுப்பினர்களை நியமிக்கும் ஜனநாயகத் தேர்தலை நீக்குகிறது. முத்தவல்லிகளின் வாய்வழி நியமனத்திற்கான ஏற்பாட்டை அகற்றுவதன் மூலம், இந்த மசோதா இஸ்லாமியச் சட்டத்தின் தீர்க்க மான அம்சமாக இருந்த வக்ஃபின் வாய்வழி நடைமுறையை மறைமுகமாகக் குறை-மதிப்பிற்கு உட்படுத்துகிறது. மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் எம்.பிக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கான தேவையை இந்தத் திருத்தம் நீர்த்துப்போகச் செய்கிறது. அதனால் இது இதர மத சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழி வகுக்கிறது. வக்ஃபின் உள் விவகாரங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிப்பது பற்றிய கவலையை எழுப்புகிறது.
இந்தச் சட்டம் கொண்டு வருவதற்கு முன் இஸ்லாமிய சமுதாயத்துடனும், எந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருடனும் எந்த ஆலோசனையும் நடத்தப்படாமல் இந்த மசோதா உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம். இந்த மசோதாவிற்குத் தொடர்புடைய எந்த நபருடனும் ஆலோசனையில் ஈடுபடவில்லை. சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களில் நன்மையை விட தீமை அதிகமாக உள்ளது. இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இத்தகைய தீங்கு விளைவிக்கும் சட்டங்கள் இயற்றப்படுவதை எதிர்த்து தடுக்க வேண்டும்.
சட்டத்தில் சில மாற்றங்கள் பெண்களைச் சேர்ப்பது, ஷியா அல்லது பிற சிந்தனா பள்ளிகளின் பிரதிநிதிகளைச் சேர்ப்-பது போன்றவை நன்மை பயக்கும்; நாங்கள் அதை வரவேற்கிறோம். இருப்பினும், மக்களின் நலனுக்காகச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை-யும், சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனை, செயல்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அரசாங் கத்-திற்கு நினைவூட்ட விரும்புகிறோம். தேவை ஏற்பட்டால், வக்ஃப் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உத்தர-வாதம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு விதிகள், நிறுவப்பட்ட விதிமுறைகள், தற்போதுள்ள சட்டத்தில் திருத்தங்களின் நோக்கங்கள், நீதியின் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதை முன்னிலைப்படுத்த உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம். மக்களின் சொத்துகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, இந்த மாற்றங்கள் அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, இந்தத் திருத்தங்களை நிறுத்துவது முக்கியம்’ என்று கூறியுள்ளார்.