மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இஸ்லாம்: நம்பிக்கையும், வாழ்வியலும்
K.M. முஹம்மத், ஆகஸ்ட் 16-31, 2024


 


இஸ்லாம் குறித்து இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை, நீதி நல்லொழுக்க வாழ்க்கை என்று சொல்லலாம். இறைவன் ஒருவன் தான் என்ற நம்பிக்கையோடு மனிதர்கள் நீதியுடனும் நல்லொழுக்கத்துடனும் வாழ வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மனிதர்கள் நீதி நேர்மை ஒழுக்கத்துடன் வாழ வேண்டுமானால் ஓர் இறைவன் இருக்கிறான் என்பதில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை இருக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கை தான் மனிதர்களை அவ்வாறு வாழத் தூண்டும். இறைவன் மீது எத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும் என்றால் அந்த இறைவன் இந்த உலகை, பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்து ஆட்சி செய்து நிர்வகித்து வருபவன். தான் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரம் அளித்து பராமரித்து வருபவன்.

அவனுடைய பராமரிப்பின் இன்னொரு வகை, மனிதர்கள் இவ்வுலகில் எவ்வாறு நீதியுடனும் நல்லொழுக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு வாழ்க்கை முறையையும் சட்ட திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளான். இதற்காக மண்ணுலகில் இறைவன் தூதர்களை அனுப்பி அவர்களிடத்தில் வேதங்களைக் கொடுத்து வழிகாட்டல் வழங்கி உள்ளான்.
மனிதர்கள் இறைநம்பிக்கையோடும் தூதர்கள் மீதும், வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டும் அதன்படி வாழ வேண்டும். தூதர்களைப் பின்-பற்றி நடக்க வேண்டும். தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்த முஹம்மத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் இந்த உண்மைகள் அனைத்தையும் மறுத்து இறைவனை நிராகரித்து தங்கள் இஷ்டம் போல் வாழ்வதற்கும் மனிதர்களால் முடியும். அப்படி வாழ்வதற்கு இறைவனும் விட்டு விடுவான். அவர்களை நிர்பந்தித்து ஏதேனும் செய்து தண்டிக்க மாட்டான். இது மனிதர்களை சோதிப்பதற்காக இறைவனே செய்து வைத்த ஏற்பாடு. ஆனால் இதற்கு ஒரு முடிவை இறைவன் வைத்திருக்கிறான். அதாவது தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதனும் மரணம் அடைவான். ஒட்டுமொத்தமாக ஒரு நாள் இந்த உலகம் அழிக்கப்படும். அதன் பிறகு பூமி சீரமைக்கப்பட்டு மரணம் அடைந்து விட்ட அனைத்து மனிதர்களையும் இறைவன் உயிர் பெற்று எழச் செய்வான்.

அந்த நாளில் உலகில் நிகழ்ந்த அனைத்து விவகாரங்களையும் இறைவன் விசாரித்து அதற்குரிய பிரதிபலனை மனிதர்களுக்கு வழங்குவான். அதாவது இறைநம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கு நற்கூலியும், வெகுமதியும், நிராகரித்து வாழ்ந்தவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பான். அதுதான் மறுமைக் கோட்பாடு. இதையும் மனிதர்கள் நம்ப வேண்டும்.
ஓரிறைக் கோட்பாடு, தூதர்கள் மீது நம்பிக்கை, மறுமையின் மீது நம்பிக்கை. இந்த மூன்று நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்கள் வாழ்ந்தால் அவர்கள் மேற்சொன்ன நீதி ஒழுக்கம்
சார்ந்த வாழ்க்கை வாழலாம்.

தனி மனிதனைப் பொறுத்தவரை ஐந்து விஷயங்களை இறைவன் வகுத்துத் தந்துள்ளான்.
(1)  இறைவன் மனிதன் மீது சுமத்திய வணக்க வழிபாட்டுக் கடமைகளை அவன் முழுமையாக நிறைவேற்றி வர வேண்டும்.
(2)  தனக்குத்தானே நிறைவேற்ற வேண்டிய கடமைகள். அதாவது உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல். அறிவை வளர்த்துக் கொள்ளுதல். உண்மைகளை விளங்கிக் கொள்ளுதல்.
(3)  தன் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள். அதாவது தன் உடல் உழைப்பின் மூலம், சம்பாத்தியத்தின் மூலம் தன் மனைவி மக்களைப் பராமரித்தல். தம் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தல், உறவினர்களுக்கு உதவி செய்து வாழ்தல்.
(4) சமுதாய கூட்டு வாழ்வுக்கான கடமைகள்: அதாவது சமூகத் தோடு இணங்கி வாழ்தல், சமுதாய நன்மைக்குப் பாடுபடுதல். நாட்டு மக்களின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும், உழைத்தல்.

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங் களை இந்த பூமியில் நடைமுறைப் படுத்துவதற்கு இறைவனுடைய பாதை-யில் அவன் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய தன் உடல் பொருள் அனைத்தையும் அர்ப்பணித்து உழைத்தல்.

மனிதர்கள் நீதி நேர்மை ஒழுக்கத்துடன் வாழ வேண்டுமானால் ஓர் இறைவன் இருக்கிறான் என்பதில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை இருக்க வேண்டும்

கூட்டு முறையில் மனிதர்களுக்கான கடமை   

மேற்சொன்ன  கடமைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாக ஒத்துழைப்பாளர்களாக வாழ்தல். ஒவ்வொரு குடும்பத்தில் ஆண்களும் பெண்களும், கணவன் மனைவியும், உறவினர்களும் இந்தப் பொறுப்பு உணர்வோடு பரஸ்பரம் உறவும் தொடர்பும் கொண்டு இணக்கத்தோடு வாழ்தல். சமுதாயக் கடமைகளில், தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், செல்வந்தர்கள், பரஸ்பரம் கைகோர்த்து ஒரு சமூக வாழ்வை, கூட்டமைப்பாக  இயங்கி நடைமுறைப்படுத்துதல்.  இதற்காக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு ஜமாஅத்தாக, இயக்கமாகச் செயல்படுதல்.

அந்த இயக்கம் மேற்சொன்ன ஐந்தாவது செய்தியை நிறைவேற்ற முடிந்த அளவுக்குக் கடுமையாகப் பாடுபடுதல். அப்பொழுதுதான் இஸ்லாத்தின் கோட்பாட்டின்படி இறைவன் விரும்பியபடி அந்த நீதி நல்லொழுக்க வாழ்வு இந்த பூமியில் நிலை பெறும். அதன் வாயிலாகத்ம் தான் தனி மனிதர்களும் அந்த வாழ்வை இங்கு வாழ முடியும். மேற்சொன்ன விளக்கங்கள்படி எதுவும் நடக்காமல் போனாலோ அல்லது அரைகுறையாக நிறைவேற்றிக் கொண்டிருந்தாலோ இறை நம்பிக்கையாளர்களால் கூட நீதி, நல் ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியாமல் போகும்.




உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்