வாருங்கள் சிறார்களே..!
உலகின் முதல் விமானியான அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் பற்றித் தெரிந்து கொள்ளலாம். உலகில் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் என்பார்கள். ஆனால் உலகின் இருண்ட காலமாகக் கருதப்படும் இஸ்லாமிய பொற்காலத்தின் போதே விமானத்திற்கான வடிவத்தைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி அதை இயக்கியும் காட்டியவர் தான் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.
அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் அல்-அண்டலூசியா (இன்றைய ஸ்பெயின்) கிபி.810இல் பிறந்தார். அப்போது ஸ்பெயின் உலகின் அறிவின் மையமாக இருந்தது. முஸ்லிம்கள் பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர்.
அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளில் கல்வி கற்றார். சிறு வயதில் இருந்தே இயந்திரங்களை ஆய்வு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அறிவியல், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தால் அவரது வாழ்க்கையில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் பறக்கும் இயந்திரம்.
அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் தனது முதல் பறக்கும் இயந்திரத்தைக் கி.பி 875 இல் ஸ்பெயினின் கோர்டோபாவில் உருவாக்கி மக்கள் முன் அதில் பறந்தும் காட்டினார். ஆனால் தரையிறங்க எந்த வடிவமைப்பும் செய்யாததால் தரையில் மோதி சிறுகாயம் அடைந்தார். பின்னர் அதற்கான தீர்வையும் அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதுவே இப்போது நாம் பயன்படுத்தும் விமான தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருக்கிறது. இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கும் முன்னோடியாக இருந்தவர் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.