மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஒழுக்கமே சுதந்திரம்
- டாக்டர் K.V.S ஹபீப் முஹம்மத், செப்டம்பர் 1-15, 2024


 

சுதந்திரத்தை விரும்பாத மனிதனே இல்லை. குழந்தைகளும் சுதந்திரத்தை விரும்புகின்றன. விலங்குகளும் கூண்டுகளில் அடைக்கப்படுவதையும் மனிதனால் ஆட்டுவிக்கப்படுவதையும்  விரும்புவதில்லை.மனிதன் கூறுகிறான்: My Body My Rights, ‘என் உடல் என் உரிமை’, ‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ என்கிறான். ஆனால் எல்லையற்ற சுதந்திரம் ஆபத்தானதல்லவா! சுதந்திரத்திற்கு அனுமதி அளிக்கும் அரசியல் சாசனம் பேச்சு, எழுத்து, செயல் உரிமைகள் ஆகியன ‘பொது ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும், அமைதிக்கும் உட்பட்டது’ (Subject to Public Morality Order and Peace) என்று கூறுகிறது.

சுதந்திரம் என்ற பெயரால் பொது அமைதியை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டைக் குலைக்க எவருக்கும் உரிமை இல்லை. ஒருவன் தெருவில் கையை வேகமாக வீசிக் கொண்டு நடந்து சென்றான். ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு ‘அது என் சுதந்திரம். கேட்பதற்கு நீ யார்?’ என்றான். அவனுக்குச் சொல்லப்பட்டது ‘அடுத்தவர் மூக்கு ஆரம்பமாகுமிடம் உன் சுதந்திரம் முடிவடையும் இடம்’.

எனவே எல்லா சுதந்திரத்திற்கும் எல்லை உண்டு. அத்தோடு அதற்குப் பொறுப்பு உணர்வும் உண்டு - (Freedom With Responsibility). ஆனால் இன்று நடப்பதென்ன? சுதந் திரம் என்ற பெயரில் எதையும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மது ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. நமது நாட்டில் ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர எல்லா மாநிலங்களிலும் மது திறந்து விடப்பட்டுள்ளது. லாட்டரி, குதிரைப் பந்தயம், ஆன் லைன் ரம்மி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்-கப்-பட்டுள்ளது. இவை சூது அல்ல என்றும் திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டுகள்(Skilled Games) என்றும் நீதிமன்றங்களில் வாதிடப்படுகிறது. மறைவாகச் செய்ய வேண்டிய செயல்கள் பூங்காக்கள், மால்கள், கடற்கரை போன்ற இடங்களில் வெளிப்படையாகச் செய்யப்படுகின்றன. இச்செயல்களைச் செய்பவர்கள் எத்தனைய நாணமும் கொள்வதில்லை. அதனைப் பாக்கும் மற்றவர்தாம் நாணமுற்று விலகிச் செல்ல வேண்டும்.

அலைப்பேசிகளே  ஆபாசத்தின் கிடங்குகள். அதில் கிடைக்காத ஆபாசச் சரக்கே கிடையாது. ஆனால் அலைப்பேசிகளைப் பார்க்க குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர். ஆபாசத்தை வழங்குவதில் அலைப்பேசிகள் திரைப்படங்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டன. ஆபாசமாக உடையணிவது நாகரிகம், முன்னேற்றம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒருவர் எவ்வளக்கெவ்வளவு ஆடைக் குறைப்பு செய்கிறாரோ அந்தளவிற்கு அவர் முன்னேற்ற சிந்தனை உடையராகக் கருதப்படுகிறார். இதில் சில முரண்பாடுகள். ஆண்கள் தங்களை நன்றாக மூடிக் கொள்கின்றனர். பெண்கள் திறந்து காட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் (Exhibitionism).

பிக்னி உடை அணிந்தால் அதைக் கேலி செய்யக் கூடாது. அது அவர் உரிமை என்று பேசப்படுகிறது. உடலை கண்ணியமாகப் போர்த்திக் கொண்ட பெண் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறாள். பிக்னி அணிய உரிமை உண்டு என்றால் உடலை மறைக்க உரிமை இல்லையா? ஏனிந்த இரட்டை நிலை? விரும்பிய ஆணும் பெண்ணும் திருமண-மின்றியே தொடர்பு வைத்துக் கொள்ளலாம். தேவை இருவரின் சம்மதம் மட்டுமே. அவர்கள் ஏன்கெனவே மணமாகி திருமண பந்தத்தில் இருந்தாலும் சரியே! இதற்கு சட்ட வடிவிலான அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது. ஒரு பால் உறவுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்து விட்டது. ஒருபால் உறவை எதிர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகப் பார்க்கப்படுகின்றனர்.

பல மேலைநாடுகளில் நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே உறவுகள் வைத்துக் கொள்ள(Incest) அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் மருத்துவ பாடப் புத்தகங்களில் எவை எல்லாம் வக்கிர பாலியல் உறவுகள்(Perverted Sex) என்று குறிக்கப்பட்டு தண்டனைக்குரியதாக இருந்ததோ அவை எல்லாம் இன்று சட்ட அங்கீகாரத்தோடு, மேளதாளங்களோடு பவனி வருகின்றன. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஒழுக்கத்தை உரத்துப் பேச வேண்டிய ஆன்மிகத் தலைவர்கள் இவற்றை ஆதரித்துப் பேசுகின்றனர். அல்லது மௌனம் காக்கின்றனர்.

பத்திரிகைகளில்  இச்செயல்களை ஆதரித்து விரிவான கட்டுரைகளையும், தலையங்கங்களையும் சளைக்காது எழுதி வருகின்றனர். இத்தீய செயல்களுக்கு உறுதியான ஆதரவைத் தருகின்றனர். ஒழுக்கக் கேடுகளை எதிர்ப்பவர்களைப் பத்தாம்பசலிகள் என வர்ணிக்கின்றனர்.மேலைநாடுகளில் தேர்தல் காலங்களில் இந்தத் தீய செயல்களுக்கு ஆதரவு
தருவோம் என தமது தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளிக்கின்றனர். சுருங்கச் சொல்வதாயின் சமூகம் நாணத்தை இழந்து விட்டது. ‘உனக்கு நாணமில்லை எனில் எதை வேண்டுமானாலும் செய்துகொள்’ என்ற நபிமொழிக்கேற்ப சமூகம் மாறிவிட்டது. இத்தகைய சுதந்திரம் ஒரு சமூகத்தின் முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது. இதனை எதிர்ப்போர் பழமைவாதிகள், மதவாதிகள், அடிப்படைவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

உண்மையில் இச்செயல்கள் முன்னேற்றமா? பின்னேற்றமா?

மதுவின் கேடுகளை அனைவரும் அறிவர். பெருகி வரும் நோய்கள், குற்றங்கள்,  அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகள்,  விதவைகளாக்கப்பட்ட பெண்கள், வறுமையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள், கோர விபத்துகள் ஆகியன அன்றாடச் செய்திகள். ‘மது தீமைகளின் தாய்’ என்ற நபிமொழிக்கேற்ப மது அருந்தியவர்கள் எல்லா பஞ்சமா பாதகங்களையும் செய்யத் துணிவார்கள். பொய் பேசுவதில் தொடங்கி, திருட்டு, கட்டாயப் பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை வரை செய்யத் தயங்க மாட்டார்கள். இருப்பினும் மது ‘தீமைகளின் தாய்’ என்பதற்குப் பதிலாக ‘வருமானத்தின் தாய்’ என ஆகிவிட்டதால் மது ஒழிப்பைப் பற்றி அரசு கண்டுகொள்வதில்லை. மக்களும் எப்போதேனும் தமது குரலை உயர்த்திவிட்டு பின்னர் ஓய்ந்து போய்விடுகின்றனர்.

மது ‘தீமைகளின் தாய்’
என்பதற்குப் பதிலாக
‘வருமானத்தின் தாய்’ என
ஆகிவிட்டதால் மது ஒழிப்பைப் பற்றி
அரசு கண்டுகொள்வதில்லை.

மது, சூது, ஆபாசம் இம்மூன்றும் ஒட்டிப்பிறந்த குழந்தைகளைப் போல சமூகத்தின் சாபக்கேடுகள். சமூகத்தை அழிக்க வந்த கோடரிகள். நாம் ஏற்கெனவே கூறியதுபோல், எல்லா சுதந்திரத்திற்கும் எல்லை உண்டு. ஒழுக்க விஷயங்களிலும் எல்லை உண்டு, வரம்பு உண்டு, கட்டுப்பாடு உண்டு. தனிமனித உரிமை அவசியமே. ஆனால் தனிமனித உரிமை சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றால், அந்தச் செயல்களை அனுமதிக்க முடியாது. தனிமனித உரிமை என்ற பெயரால் நினைத்ததை எல்லாம் எழுத முடியாது, பேச முடியாது. கருத்துச் சுதந்திரம் அதிகம் வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்றங்களிலும், சட்ட மன்றங்களிலும் உறுப்பினர்களின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் அவைத் தலைவருக்கு உண்டு. ஒருபால் உறவும், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளும், ஆபாசப் புத்தகங்களும், திரைப்படங்களும் ஒரு சமூகத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் எதன்பதற்கு ஆய்வுகள் தேவைய்யில்லை. மேலைநாடுகளைப் பார்த்தாலே போதுமானது.

சிதைந்துபோன குடும்ப அமைப்பு, குற்றவாளிகளாக உருவாகும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவருடன் மட்டுமே வளரும் குழந்தைகள்(Single Parent Family), பாலியல் நோய்கள் என அந்நாடுகள் அவதியுறுகின்றன.

மனிதன் இந்நிலைக்குத் தாழ்ந்து போனதேன்?

மன இச்சைகளுக்கு மனிதன் அடிமையாகிப் போனதுதான் முக்கியக் காரணம். இவ்வுலக வாழ்வில் எல்லா இன்பங்களையும் துய்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை. இத்தகையோர் விலங்குகளுக்கு ஒப்பாவர் என்று குர்ஆன் வர்ணிக்கிறது. விலங்குகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும், விதிகளும் கிடையாதல்லவா. அவை விரும்பியவற்றை உண்ணும், விரும்பியவற்றோடு உறவு கொள்ளும், விரும்பிய நிலத்தில் மேயும். மனிதனும் அந்நிலைக்கு இறங்கிவிட்டான். சுதந்திரத்திற்கு(Free Will) எல்லை உண்டு என்பதை மனிதன் மறந்துவிடுவது அடுத்த காரணம்.

கட்டுப்பாடுகள் தன்னை அடிமைப்படுத்த வந்தவை என எண்ணுகின்றான். கட்டுப்பாடுகளிலும் தேவையுள்ள கட்டுப்பாடுகள், தேவையற்ற கட்டுப்பாடுகள் எனப் பிரிவுகள் உண்டு. எவ்வாறு போக்குவரத்து விதிகள் போக்குவரத்தைச் சீராகச் செயல்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் வைக்கப்பட்டுள்ளதோ அதுபோலவேதான் ஒழுக்க வரம்புகளும், விதிகளும். மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், தேவையற்ற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உதறித் தள்ளி-னால் மனிதனுக்குச் சுதந்திரம் கிட்டும்.

ஆனால் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாடுகள் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் என்பதை மனிதன் மறந்து விடுகின்றான். எவையெல்லாம் மனிதனுக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தருமோ அவற்றைச் செய்வதில் என்ன தவறு (Utilitarianism) என்று வாதிடுகின்றான். இவை தொடக் கத்தில் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளித் தாலும் இறுதியில் அழிவைத் தரும் என்பதை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை.

மதம், ஒழுக்க நெறிகள், ஒழுக்க மாண்புகள் என்ற பெயர்களைச் சொல்லி எங்களை ஏன் அடிமைப்படுத்துகின்றீர்கள் என்று சிலர் வினவுகின்றனர். நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும், சாலை விதிகளையும், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் அடிமைத்தனமாகக் கருதாத நீங்கள், இன்ப நுகர்ச்சியில் மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்கிறீர்கள்? வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம்தானே.

இன்பவெறியின்(Hedonism) காரணமாக மனிதன் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டான். நன்மை தீமையைப் பிரித்தறியும் திறனை இழந்துவிட்டான். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? எங்கே போகின்றேன்? என்ற கேள்விகளுக்கான விடைகளை மறந்துவிட்டான். தன்னையும் மறந்துவிட்டான்.தன்னைப் படைத்தவனையும் மறந்துவிட்டான். மனிதத் தன்மையை இழந்து விலங்குகளின் நிலைக்கு இறங்கிவிட்டான். படைப்புகளில் மிகச் சிறந்தவனாக இருக்க வேண்டியவன் கீழ் நிலைக்கு இறங்கிவிட்டான். ‘எதில் சுதந்திரம் வேண்டும், எதில் சுதந்திரம் கூடாது’ என்று பகுத்தறியும் ஆற்றலையும் இழந்துவிட்டான்.

மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். மன இச்சைகளுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து விடுதலை பெற வேண்டும். சாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஃபாசிஸம், நாசிசம், மதவெறிக் கொள்கைகளிலிருந்தும் விடுதலை பெற வேண்டும். இதுவே உண்மையான விடுதலை. இதனை விடுத்து அறம் சார்ந்து, விழுமம் சார்ந்து(Value Based Life) வாழ்வதிலிருந்து விடுதலை பெற விழைவது, நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்வதாகும். அடிமைத் தனத்தை சுதந்திரம் என்று கருதுவது எவ்வளவு பெரிய அறியாமை.

எனவே, உண்மையில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதே சுதந்திரம். கட்டுப்பாடற்ற வாழ்க்கை அடிமைத்தனம், இழிவு. கட்டுப்பாட்டோடு இவ்வுலகில் எவ்வாறு அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை இறைவன், இறைத்தூதர்கள் வாயிலாக மனித சமூகத்திற்கு வழங்கியுள்ளான். இச்சைசய்தியை மக்களிடம் எடுத்-துரைத்து மக்களை அறியாமையிலிருந்தும், ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் காப்பது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும். இல்லையேல் இத்தகையக் கலாச்சாரம் நம்மையும் நமது சந்ததிகளையும் சூழ்ந்து கொள்ளும். மறுமையிலும் இழப்பை ஏற்படுத்தும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்