போதை என்றால் என்ன?
தன்னிலையை மறக்கச் செய்து உடல், மன பாதிப்புகளை ஏற்படுத்துவது. ‘மது, சூதாட்டம் போன்றவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். இவற்றின் வாயிலாக, உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையம் ஏற்படுத்தி, அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:90,91)
மாணவச் செல்வங்களை வழிகெடுக்கும் வழிகளில் ஒன்றுதான் போதைப் பொருள். மனித ஆற்றலை உருக்குலைத்து ஒன்றுக்கும் உதவாததாக மாற்றி விடுகிறது. மது, புகை, கஞ்சா, ஹெராயின், கொக்கைன், பிரவுன் சுகர், அபின், பான்பராக் போன்ற போதை வஸ்துகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கோபுரத்தில்இருப்பவனைக் குப்பைத் தொட்டிக்கும் பூக்கடையில் இருப்பவனைச் சாக்கடைக்கும் தள்ளிவிடும். நல்ல குணத்தை நாசமாக்கி, வாழ்வு முழுவதையும் சீர்கெடுக்கும்
போதைப் பொருள்கள் அனைத்து நோய் களுக்கும் முன்னோடி என்றால் அது மிகையாகாது.
உலகளாவிய ரீதியில் 15 வயது முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியனுக்கும் அதிகமானோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதில் 80% பேர் ஆண்கள், 20% பேர் பெண்கள். கடந்த 3 ஆண்டுகளில் 6 இலட்சம் பேர் போதைப் பொருள்களினால் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான முன்னெடுப்பாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் நாள் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
காரணங்கள்
மகிழ்விற்காக, துக்கம், கவலை, வலி போன்றவற்றை மறப்பதற்காக, சமூக அந்தஸ்து, கெஸ்ட் மேனர்ஸ் என்று போதை பயன்பாட்டிற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவை மேலை நாட்டு கலாச்சாரம் என்று உயர்வாகக் கருதுவதும், இத்தகைய பழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தவறில்லை என்பது போல் திரைப்படங்கள் சித்திரிப்பதும், பிரச்னைகளை மறந்து நிம்மதியாக இருக்க போதை தேவை என்ற எண்ணமும் இத்தீய பழக்கங்களுக்கு மக்களை அடிமைப்படுத்துகிது.
ஒரு சமுதாயத்தின் எழுச்சியை, முன்னேற்றத்தைத் தடுப்பதாக இருந்தால் போதைப் பொருள் பயன்பாட்டை அந்த சமுதாயத்தில் லேசாகத் தூவி விட்டாலே போதும். இப்பழக்கம் சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் சிந்தனை ரீதியான தாக்குதலாகவே பார்க்கப்படுகின்றது.
போதைப் பழக்கம் தனிமனிதனைமட்டும் பாதிக்கும் பழக்கமல்ல. குடும்பம், சமுதாயம், அந்தஸ்து, வேலை, நட்பு, உறவு வட்டம் என அனைத்தையும் பாதித்து விரிசலை ஏற்படுத்தும் பழக்கமாகும்.குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது. வேலையையும் பொருளாதாரத்தையும் இழப்பதால் குடும்பத்தை வறுமையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. உலகில் ஏற்படும் 60% விபத்துகள் போதையில் வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கம் சீர்கெடுவதால் நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. போதை ஏற்படுத்தும் அனைத்தும் தடுக்கப்பட்டது என்பது நபிமொழியாகும்.
இளைஞர்களே இலக்கு
போதைப் பொருள்கள் தூளாக, மாத்திரைகளாக, ஊசிகளாக பல வடிவங்களில் வருகிறது. மாணவப் பருவம் எதையும் செய்து பார்த்து விடலாம் என்று நினைக்கும் பருவம் என்பதால் பெரும்பாலும் பள்ளி மாணவர்களும் இளைஞர்களுமே இலக்காகின்றனர். உடல் வலிமைமிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும் வேட்கைகளும் உணர்வுகளும், சரியான முறையில் வளப்படுத்தப்படாமல் விடப்பட்டால் அது நாட்டிற்குப் பெரும் கேடாவே அமையும் என்பதை மறுக்க முடியாத நிதர்சனம். இந்தச் சிறப்புமிக்க பருவத்தைப் போதையின் பக்கம் இழுத்துச் சென்று சீர் கெடுப்பதில் நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
பாதிப்புகள்
போதைப்பொருள் பயன்பாடு உடலில் சிறு மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்படையச் செய்வதால் மனிதனின் நடத்தையிலும் உளவியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலில் பாதிப்படைவது நரம்பு மண்டலம் என்பதால், மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கிறது. இதனால் சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. ஆகவே இதனை உட்கொள்கிறவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கின்றனர்.
மனஅழுத்தத்தை உண்டாக்கும். கோபம், உடல்சூடு அதிகமாகும். மயக்க நிலையை உண்டாக்கும். இதயம் சார்ந்த நோய்களை உருவாக்கும். புற்றுநோயைப் பரிசாகத் தரும். கல்லீரல் பாதிக்கப்படுவதால் கண்கள் மஞ்சள் நிறமாகும். இரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுவதைத் தடுக்கும். மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். மேலும் வலிகளை உணர்வதும் தடுக்கப்படுகிறது. இவ்வாறு பலவித உடலியல் நோய்களை ஏற்படுத்தி மனிதனை முழுமையாக உருக்குலைக்கும்.
போதைப் பொருள் உபயோகிப்பதால் டோபமைன் (Dopamine) என்ற ஹார்மோன் உடலில் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் ஒருவகையான இன்பத்தைப் பெறுகின்றனர். இந்த இன்பம் 3 முதல் 5 மணி நேரம் வரை நீடிக்கும். புதுவித இன்ப அனுபவத்தைத் தருவதால் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே இதனைப் பயன்படுத்துகின்றனர்.
தொடக்கத்தில் சக்தி அதிகரிப்பதைப் போன்ற நிலையை ஏற்படுத்தி புத்துணர்வு அளிப்பதாகத் தோன்றினாலும் போகப் போக விதவிதமான ஆரோக்கியமின்மையை ஏற்படுத்துகிறது. முதலில் ஆண்மை அதிகரித்தது போன்ற உணர்வைத் தந்தாலுமே காலப் போக்கில் அறவே ஆண்மையற்றவர்களாக ஆக்கி விடும். உடல் சோர்வு, குற்ற உணர்வு, தனிமையை நாடுதல் போன்ற அவல நிலையை உருவாக்கும். உடல் ஆரோக்கியம் பாதிப்படைவது மட்டுமின்றி சமுதாயத்திலும் குடும்பத்திலும் இத் தீய பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக மிக அதிகம். போதைக்கு அடிமையானவர்கள் சுயகட்டுப்பாட்டை இழந்து, சுயமாகச் சிந்திக்க முடியாமல் போவதால் மனச்சிதைவு, உடல்நலக் கோளாறு, நாள்பட்ட நோய்கள், தீராத வலிகள் என பாதிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆரோக்கியம் என்பது இறைவன் கொடுத்த அருட்கொடை. உடலின் உரிமைகளை நிறைவேற்றுவது நமது கடமையõகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வது பாவச் செயலாகும். இறைநம்பிக்கையின் பக்கம் மனதைத் திருப்புவதன் மூலமே இத் தீய பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆனால் மறுமையில் இது குறித்த விசாரணையும் தண்டனையும் உண்டு என்று அஞ்சுவோர் மட்டுமே இதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.
5 முதல் 6 முறை போதைப் பொருள்களைப் பயன்படுத்தி டோபமைன் என்ற ஹார்மோன் சுரந்து அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால், அதற்கு அடிமையாகி விடு கின்றனர். இப்பழக்கம் அதிகரிக்கும் போது, அந்த அற்ப இன்பத்திற்காகத் திருடுதல், பொய் பேசுதல், கொலை, மானக்கேடான பாலியல் குற்றங்களையும் செய்யத் துணிகின்றனர். தான் என்ன செய்கிறோம் எதைச் செய்கிறோம் என்று அறியாமல் சமூகச் சீர்கேடுகளை விளைவிக்கின்றனர்.
இன்று சமுதாயம் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று போதைப் பொருள் பயன்பாடு. மனித சமுதாயத்தை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் உலகளாவிய அச்சுறுத்தலாகவும் இருக் கின்றது. இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழித்து, திசை மாற்றி அவர்களைத் தவறான பாதையில் தள்ளி விடக் கூடியது. |
எவ்வாறு அறிவது?
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் யாரோடு பழகுகின்றனர், அவர்களின் நண்பர்கள் யார் என்பதைக் கண்டிப்பாக அவதானிக்க வேண்டும். ஏனெனில் இந்தச் சீர்கேடு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள தீய நண்பர்கள் மூலமே பரவுகின்றது. உண்மையான நண்பன் யாரென்றால் தடம் மாறும் போது தட்டிக் கேட்பான், தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பான் என்ற நட்பின் அழகிய அடிப்படையையே இன்று இப்பழக்கம் சிதைத்து விட்டது எனலாம்.
நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் திடீரெனக் குறைந்தால், உடல் ரீதியில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், பிள்ளைகளின் செயல்பாடுகளிலோ உரையாடல்களிலோ மாறுபாடுகள் தோன்றினால், அவர்களின் தனி அறையில் யாரும் நுழைவதைத் தடுத்தால், உண்மையான காரணமின்றி அடிக்கடி பணம் கேட்டால், ஏதேனும் பிழை இருக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது.
தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும் குழப்பத்தையும் மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான். பள்ளிப் பருவத்திலோ, கல்லூரி காலங்களிலோ தீய நண்பர்களால் ஏற்பட்ட பழக்கங்களால், பொழுதுபோக்காகப் பழகிய பழக்கத்திலிருந்து இன்றுவரை மீள முடியாமல் பலர் வருத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து மீள வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும் உள்ளனர். ஒன்றிலிருந்து மீள வேண்டி மற்றொன்றிற்கு அடிமையானவர்களும் இருக்கின்றனர். கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வேதனையை மறக்க போதை மருந்துகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பலர் நிச்சயம் ஒரு நாள் மரணம் வரத்தான் போகிறது. இவற்றை விட்டு விட்டால் மட்டும் மரணமின்றி வாழ்ந்து விட முடியுமா? என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
போதைப் பொருள் பயன்படுத்துபவர்களில் ஆறில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ வசதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அந்த ஆறில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இதிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவம் பெற்றுக் கொள்வதில் பல தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. விளையாட்டாகப் பழகிய இத் தீயபழக்கம் தொடக்கத்தில் பயன்படுத்திய அளவை விடச் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றால், அதற்கு அடிமையாகிறார்கள் என்று பொருள். அடிக்கடி அதை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது, எதை இழந்தாலும் பரவாயில்லை, போதையைப் பெற்றாக வேண்டும் என்று தோன்றுவது முன்னேற் பாடாக வாங்கி வைத்துக் கொள்வது, போன்றவை போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதற்கான அறிகுறிகளாகும்.
எப்படித் திருத்துவது?
முதலில் போதைக்கு அடிமையானவர்கள், நான் இந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று அவர்கள் மனதளவில் தயாராக வேண்டும். இல்லையெனில் பெற்றோர்களோ அவரைச் சார்ந்தவர்களோ அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அவரை ஓர் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் சென்று, போதைப் பொருளின் விளைவுகள், ஆபத்துகள் என்னென்ன என்பதை விளங்கவைக்க வேண்டும்.
போதைப் பொருள் பயன்படுத்துவதை நிறுத்தும் போது அதீத பிடரி வலி, உடல் வலி, தூக்கமின்மை போன்றவற்றால் மிக மோசமாக அவதிப்படுவார்கள். அருகிலிருப்பவர்கள் அவர்கள் படும் சிரமத்தைப் பார்க்கும் போது சிறிது போதைப் பொருளைக் கொடுத்து விடலாமோ என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் மிகவும் வேத னையில் பாதிக்கப்படுவார்கள். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோரை அவர் களின் சூழல், தொழில், நட்பு வட்டம் ஆகிய வற்றிலிருந்து பிரித்து தனிமைப்படுத்த வேண்டும். வீடு தேடி வரும் இப்பழக்கம் சார்ந்த நண்பர்களைத் தவிர்க்க வேண்டும். போதைப் பொருள்களை எந்த அளவில் பயன்படுத்தினார்கள் என்பதை மருத்துவரிடம் தெரிவித்து, அதை நிறுத்துவதால் அவர் உடலில் ஏற்படும் உணர்வு மாற்றங்களுக்கும் வலிகளுக்கும் ஏற்றார் போல் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். இடத்தை மாற்றி, சூழலை மாற்றி வெளியே போக விடாமல், தனிமைப்படுத்தி, நமது கண்காணிப்பிலேயே வைப்பது மிகவும் சிறந்தது.
இதிலிருந்து விடுபட்ட பின், அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் மீண்டும் இப்பழக்கத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே அவரைக் கண்டிப்பாக 4 நாள்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். திருந்த வேண்டும் என்ற எண்ணத்தின் வேகம் தணியும் போது, மீண்டும் அதை நினைவுப்படுத்தி புத்துணர்வை ஊட்ட வேண்டும். உளவியல் ஆலோசகர்கள் DMR எனப்படும் Deep Relaxtation Technique பயன்படுத்தி, இப்பழக்கத்திலிருந்து மீண்டவரை, தூங்க வைத்து, அவரது Subconcious Mind இல் போதைப் பொருள் மீதான வெறுப்பை உண்டாக்கும் விஷயங்களைப் புகுத்துவார்கள். தனிமைப்படுத்தப்படல், புனர்வாழ்வு மையங்களை அணுகுவது, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகி, அதற்கான சரியான மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றோடு நின்று விடா மல் மீண்டும் அதில் விழாமலிருக்க நமது சூழல், தொழில், நட்பு போன்றவற்றையும் மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.
புனர்வாழ்வு மையங்கள்
புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைப்பதால், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்பது நூறு விழுக்காடு சாத்தியமில்லாதது. அங்கிருந்து வெளியேறியதும் 90% விழுக்காட்டினர், மீண்டும் போதைப் பொருள்களை உட்கொள்ளத் தொடங்குகின்றனர். ஏனெனில், போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் நிறையப் பேர் முகாம்களில் ஒன்று கூடுவதால், எந்த போதைப் பொருளை எப்படிப் பயன்படுத்தலாம், எங்கு விலை குறைவாகக் கிடைக்கும் என்பன போன்ற தகவல்கள் பரிமாறப்படும் இடமாக புனர்வாழ்வு மையங்கள் மாறி விடுகின்றன. எனவே வெளியே வந்த பின் மீண்டும் அந்தச் சீர்
கேட்டில் விழுவதற்கு இதுவே காரணமாகிறது.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் இரண்டு விதமாக மாறுவார்கள்.
1. Hyper Active Depression அனைத்தையும் தூக்கிப் போட்டு உடைத்து அமளி துமளி செய்பவர்கள்.
2. மேனியா (Mania): எப்போதும் தலையைத் தொங்கப் போட்டு, பித்துப் பிடித்தவர்கள் போலவும் எதையோ இழந்தவர்கள் போலவும் இருப்பவர்கள்.
அது மட்டுமின்றி இப்பழக்கம் மூளை யில் Chemical Imbalanceஐ ஏற்படுத்தி மிக மோசமான பிரச்னைகளை உண்டு பண்ணும். எனவே மருத்துவரின் ஆலோசனைப்
படி மருத்துவர்களின் உதவியோடு, உளவியல் நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி செயல் பட்டால் தான் இதிலிருந்து மீள முடியும்.
எந்த ஒரு பொருளின் அதிக அளவு பயன்பாடு போதை தருமோ, அதே பொருளின் குறைந்த அளவு பயன்பாடும் போதை தான். அது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே குறைந்த அளவு போதை என்றாலுமே அதை உட்கொள்வது கூடவே கூடாது. அது மறுமையில் தண்டனைக்குரியது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கண்டித்த தடுத்த விஷயம் என்பதைப் புரிய வேண்டும்.
மதுவுக்கு அடிமையான ஒருவரிடம் ‘ஏன் நீங்கள் மது அருந்துகிறீர்கள்?’ என்று இமாம் ழஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கேட்ட போது அந்த மனிதர் உணவு ஜீரணமாகவே குடிக்கிறேன் என்றார். அதற்கு இமாம் அவர்கள், ‘மது உன் மார்க்கத்தையும் அறிவையும் உன் உணர்வோடு சேர்த்து ஜீரணித்து விடுமே, அது பற்றி உமக்குக் கவலையில்லையா?’ என்று வினவினார்கள். ஆகவே மறுமை வாழ்வை நாசமாக்கக் கூடியதே இந்த போதைப் பொருள்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது மிக அவசியம்.
2024ஆம் ஆண்டிற்கான பள்ளி திறப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைக் கூட்டத்தில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் போதை எதிர்ப்பு விழிப்பு உணர்வு சார்ந்த தகவல்கள், கவிதைகள், சுவரொட்டிகள், நாடகம், பாட்டு, திருக்குறள் போன்றவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்ற தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுபோன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் கேடுகளையும் ஆபத்துகளையும் உடல் மன பாதிப்புகளையும் எடுத்துக் கூறி காட்சிப்படுத்துவதன் மூலம் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆனால் போதைப் பொருளை பயன்படுத்துபவர்கள் நான் இதிலிருந்து விடுபட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்வதே மிகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.