இஸ்லாம் பாலியல் வன்கொடுமையை ஆகப்பெரும் குற்றங்களில் ஒன்றாகக் கருதுகிறது. அதில் ஈடுபடுவோருக்கு எந்த தயவு தாட்சண்யமுமின்றி கடும் தண்டனைகளை அது வழங்குகிறது. இந்த விவகாரத்தை இஸ்லாம் எப்படி அணுகும் என்பது குறித்து சில அடிப்படையான அம்சங்கள் உள்ளன. நீதி, பாதுகாப்பு, பாதிக்கப்பட்டோரின் கண்ணியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே பாலியல் வன்கொடுமையை இஸ்லாம் அணுகும். ‘பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்’ என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொதுவாக இன்றைக்கு பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்துகள் சமூகத்தில் மிகப் பரவலாகப் பேசப்படுவதை நாம் பார்க்கலாம். குற்றம் இழைத்தவன் மீதே முழுப் பழியும் சுமத்தப்பட வேண்டுமே தவிர, குற்றத்தில் பலியானவர்கள் மீது பழி சுமத்தப்படக் கூடாது. ஆனால் இன்றைக்கு பாதிப்பை ஏற்படுத்தியவனை விடுத்து பாதிக்கப்பட்டவர்களை இலக்காக்கும் தவறான போக்கு நிலவுகிறது. இது அநீதிக்குள்ளானவர்களுக்கு இழைக்கப்படும் மற்றொரு அநீதி என்பதில் ஐயமில்லை. பாதிக்கப்பட்டவர் பக்கம் சமூகமும் அரசும் நிற்க வேண்டும். அவரின் உணர்வு ரீதியான, சமூகபொருளாதார ரீதியான தேவைகளைக் கருத்தில் கொண்டு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அரசும் சமுதாயமும் சமூக மட்டத்தில் நீதியையும் ஒழுக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும். அதுதான் குற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
இறைவன் கூறுகின்றான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந் தாலும் சரியே!’ (திருக்குர்ஆன் 24:135)
இஸ்லாம் உறுதி காட்டும் மற்றொரு அம்சம், குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்குதல். பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான சூழலை ஒழிப்பதற்கு இஸ்லாம் முன்னுரிமை வழங்கும். அதேவேளை குற்றத்தைச் செய்தவருக்கு மரண தண்டனை அல்லது கசையடி வழங்க வலியுறுத்துகிறது. குற்றவாளிகள் உருவாவதைத் தடுப்பது இப்படியான கடும் தண்டனைகளின் முதன்மை நோக்கமாகும்.
குற்றவாளிக்கு மரண தண்டனைதான் வழங்க வேண்டும் என்றும், அது குற்றத்தைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும் என்றும் அநேகர், முஸ்லிமல்லாதார் உட்பட, கருத் துரைக்கின்றனர். நவீன சட்ட நடைமுறை என்பது விரைந்து நீதி வழங்குவதாகவும், பாதிக்கப்பட்டோருக்குச் சாதகமாகவும் இல்லை என்பதால்தான் இப்படியான கருத்துகள் பொதுமக்களிடையே நிலவுகின்றன. இங்கு இன்னொன்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். குற்றத்தை ஒருவர் செய்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடனேயே எந்த ஆய்வுமின்றி அவர் மீது தண்டனைகளை நிறைவேற்ற இஸ்லாம் வலியுறுத்தவில்லை. முறையான ஆதாரங்களையும்
சாட்சிகளைக் கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிபந்தனை யாகும்.
ஓரிடத்தில் திருமறை இப்படிக் கூறுகிறது: ‘எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள்.’ (திருக்குர்ஆன் 24:4)
தற்காலத்தில் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை பாய்கிறது என்றால் இஸ்லாமியச் சட்டம் மரபார்ந்த முறையைக் கடைப்பிடிக்கும் அதேவேளை நவீன தடயவியல் ஆதாரங்களையும், இன்ன பிற சான்றுகளையும் கருத்தில் கொள்ளும்.
இறுதியாக நாம் குறிப்பிட விரும்புவது குற்றம் உருவாவதைத் தடுப்பது தொடர்பானது. அதுதான் ஆக முதன்மையான அம்சம். இஸ்லாம் கண்ணியத்தையும் மரியாதையும் சமூக நீதியையும் ஊக்குவித்து பாலியல் வன்முறைகளைத் தடுக்க முயல்கிறது; தனிமனித உரிமைகளைக் காக்க முனைகிறது. அதற்குத் தனிப்பட்ட வாழ்வையும், கூட்டு வாழ்வையும் ஒழுக்க நெறிமுறைகளின் அடிப்படையில் செப்பனிடுவதற்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்குகிறது. உதாரணத்துக்கு, ஆண்களின் தனிப்பட்ட ஒழுங்கு சார்ந்து குர்ஆன் எடுத்துரைக்கும் வசனத்தைப் பாருங்கள்.
‘(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்
படியும் நீர் கூறும்’ என்று குர்ஆன் அறிவுறுத்துகிறது. இன்றைக்கு நாடு முழுக்க பாலியல் குற்றங்கள் தலைவிரித்தாடும் சூழலில் இஸ்லாம் அதைத் தடுப்பதற்குக் காட்டும் சில முதன்மையான விஷயங்களை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமாகும். உலகம் இன்றைக்குப் பலவற்றுக்குத் தீர்வு தேடி திண்டாடுகிறது. இஸ்லாத்தில் அவற்றுக்கான தீர்வு உள்ளது என்பதை உலகம் உணர வேண்டும்.