மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இஸ்லாமும் திராவிடமும் 1991ஆம் ஆண்டு நடந்த மீலாது விழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரை
அ. அப்துல் சத்தார், 16-30 செப்டம்பர், 2024



நபிகள் நாயகம் அவர்களை இன்றல்ல; என்னுடைய இளம் பிராயம் முதல், நாற்பது ஆண்டு காலமாகப் பாராட்டுகின்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றவன் நான். தந்தைப் பெரியாரும், அறிஞர் அண்ணாவும், திராவிட இயக்கத்தின் தலைவர்களும், இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற வாய்ப்பை விரும்பிப் பெற்றவர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை அகற்றிட, உறுதியை, துணிவை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, சமதர்மத்தை நிலைநாட்டிட நபிகள் பெருமானுடைய வாழ்க்கையும் அவரது அறிவுரைகளும் எந்த அளவிற்குப் பயன்படும் என்பதைக் கண்டு அவற்றைப் பயன்படுத்தியவர்கள். எனவே தான் இந்தப் பெருவிழாவிலே நான் கலந்து கொள்வதை எனக்குற்ற பெருமையாக, பெரும்பேறாகக் கருதுகிறேன்.


இந்தியாவைப் பொறுத்தவரையில் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வந்ததைக் குறித்து பண்டித ஜவஹர்லால் நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலிலே ‘அரசியல்
சக்தியாக இந்தியாவிற்குள் நுழைவதற்குச் சில நூற்றண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்து விட்டது’ என்று குறிப்பிடுகின்றார். அரசியல் சக்தியாக இந்தியாவின் வடபகுதியிலேயே இஸ்லாம் மார்க்கம் நுழைந்தது என்றாலும் கூட, அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அது ஒரு மார்க்கமாகவே தென்னகத்திலேயே நுழைந்துவிட்டது. தென்பகுதியை அடைந்துவிட்டது.


‘(கி.பி.780834இல்) சேரமான் பெருமான் என்கிற பாஸ்கர ரவிவர்மா இஸ்லாமிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். அப்துல் ரஹ்மான் சாமிரி என்ற இஸ்லாமிய பெயர் பூண்டார். பின்னர் மக்காவுக்குப் பயணம் சென்றார். நான்கு ஆண்டுகள் மக்காவில் தங்கியிருந்தார். திரும்பி வரும் வழியில் ‘சகர்’ என்ற இடத்தில் மரணமடைந்தார். அவர் திரும்பி வராததால் அவரது சகோதரியின் வழிவந்தோர் ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். ஆட்சிபீடம் ஏறும் போது முஸ்லிம் ஆடைகளை அணிந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு முஸ்லிம் ஒருவர் தான் மணிமுடியை எடுத்துத் தலையில் சூட்டுவார். முடி சூடிக்கொண்ட மன்னர் தனது வாளை உயர்த்தி, ‘எனது தாய் மாமா மக்கா நகரிலிருந்து திரும்பி வரும் வரையில் இந்த வாளை தான் வைத்திருப்பேன்’ என்று சத்தியம் செய்வார். இந்த வம்சத்தாருக்கு ‘சாமிரின்’ என்ற பெயர் பிற்காலத்திலேயே வந்தது என்று தாராசந்த் ‘இந்திய கலாச்சாரத்தில் இஸ்லாமிய தாக்கம்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.


எனவேதான், வடபகுதியிலேயே இந்துக்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே எவ்வளவு கசப்புகள் ஏற்பட்டாலும், காழ்ப்புகள் ஏற்பட்டாலும் அதன் காரணமாக கலகங்கள் விளைந்தாலும்கூட தென்னகத் திலேயே அந்த அளவு இல்லாமல் ஓர் அமைதியான சூழ்நிலை இருப்பதற்குக் காரணம் ஏற்கனவே அந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் திராவிடர்கள். தமிழர்கள். தென்னாட்டு மக்கள், எனவேதான் இன்றைக்கு நாம் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றோம். திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் இஸ்லாத்தை மதிப்பதற்குக் காரணம், நபிகள் நாயகத்தைப் போற்றுவதற்குக் காரணம் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று குறிப்பிட்ட திருமூலருடைய வாக்கியத்தை நாங்கள் நபிகள் நாயகத்தின் வாக்கியத்தில், இஸ்லாம் மார்க்கத்தில் காணுகின்றோம்.


உருவ வழிபாடுகள் இல்லை. இஸ்லாம் மார்க்கத்திற்கு வடிவங்களைச் சமைத்து சிலைகளை வடித்து அவற்றைத் தெய்வங்களாக வணங்குகின்ற பழக்கம் இல்லை.


‘நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா,
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள் இருக்கையில்’


என்று சிவவாக்கியர் அன்றைக்குச் சொன்னதைத் தான் இஸ்லாம் மார்க்கம் சொல்கின்றது என்ற காரணத்தால் நாங்கள் இஸ்லாம் மார்க்கத்திலேயே கவரப்படுகிறோமே அல்லாமல் வேறல்ல, மறு ஜென்மம் கிடையாது என்ற கருத்தை கறந்த பால் மடி புகாது என்று ஒரு சித்தர் தான் விளக்கினார். அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்ற மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்கிற காரணத்தால் நாங்கள் அதன்பால் ஈர்க்கப்படுகின்றோம். தேசிய கவியாக திகழ்ந்து மறைந்த பாரதியார் ‘ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி அலையும் அறிவிலிகாள்’ என்றார். இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று புறப்பட்டிருக்கின்ற சீலர்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன். ஏதோ இஸ்லாம் மார்க்கம் வந்து கடவுள்களை எல்லாம் அழித்து விடுகிறது. தெய்வங்களை எல்லாம் சிதைத்து விடுகின்றது என்று தவறான பரப்புரைகள் செய்யும் நண்பர்களுக்குச் சொல்லிக்
கொள்ள விரும்புகின்றேன். நமது மண்ணில் பிறந்த சுப்பிரமணிய பாரதி, ஆயிரம் தெய்வங்களை ஒத்துக் கொள்ளவில்லை ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று குறிப்பிட்டார். இஸ்லாம் மார்க்கம், ஆயிரம் தெய்வங்கள் இல்லை, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று குறிப்பிட்ட காரணத்தினாலே தான் நானும் இந்த இயக்கமும் இஸ்லாம் மார்க்கத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கின்றோமே  அல்லாமல் வேறல்ல.


இஸ்லாமிய சகோதரர்களுக்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள ஈடுபாடு, நட்பு மன்னிக்க வேண்டும் ஈடுபாடுமல்ல, நட்புமல்ல இன்று நேற்றல்ல நீண்ட காலமாக இருக்கின்ற உறவாகும். நான் இங்கே குழுமியிருக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களையும் கேட்டுக் கொள்வேன். உத்தமர் காந்தியடிகளுடைய விழாவைக் கொண்டாடி இருக்கின்றோம். பெருந்தலைவர் காமராஜரின் விழாவைக் கொண்டõடியிருக்கின்றோம். கடந்த செப் டம்பர் திங்களிலேயே பெரியார் விழாவை; அண்ணா விழாவைக் கொண்டாடி இருக்கின்றோம். அம்பேத்கர் விழாவை நூறாண்டு விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். சகோதரத்துவம், சமத்துவத்துக்கான கவிதைகள் எழுதிய புரட்சிக் கவிஞன் பாரதிதாசனுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.


இப்படி எல்லா வகையிலும் சிறந்த ஆண்டில் இன்றைக்கு முப்பெரும் விழாவை கொண்டாடுகின்ற நாம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. இந்த நாடு, இந்தச் சமுதாயம், இந்த சமுதாயத்திலேயே முகிழ்ந்திட வேண்டிய ஒற்றுமை பாதிக்கப்படாமல் கட்டிக் காக்க வேண்டும். அந்தச் சூளுரையை இந்த இனிய விழாவிலேயே நபிகள் நாயகத்தின் பெயரால் எடுத்துக் கொள்வோம்.

உதவிய நூல்: இஸ்லாம் பற்றித் திராவிடத் தலைவர்கள், அடியார், பக்கம் 1318,
நீரோட்டம் பதிப்பகம்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்