மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

அரசுத் துறைகளில் பாஜக அரசின் அத்துமீறல்
புதுமடம் ஹலீம், 16-30 செப்டம்பர், 2024





ஒன்றிய அரசுத் துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்புவதற்காக நேரடியாகப் பணியாளர்களை நியமிக்கும் பொருட்டு அரசு நிறுவனமான யு.பி.எஸ்.ஸியின்
சார்பில் ஒரு விளம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 45 பணி இடங்களுக்கு நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்காக அவ்விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.


கடந்த காலங்களில் இவ்வகையான உயர் பதவிகள் நாடு முழுவதும் குடிமைப் பணி செய்து கொண்டிருக்கும் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்படுவதுதான் வழக்கமான நடைமுறையாகும். ஆனால் வழக்கத்திற்கு மாற்றமாக தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு அவுட் சோர்ஸிங் முறையில் பணியாளர் தேர்வை நடத்தலாம் என கொள்கை முடிவை எடுத்த ஒன்றிய பாஜக அரசு யுபிஎஸ்சி மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாகத் தேர்வு செய்யும் முறைக்கு லேட்டரல் என்ட்ரி என்று பெயரிட்டிருப்பதாக ஒரு புதுமையான விளக்கத்தையும் யுபிஎஸ்சி கொடுத்திருந்தது.


தனியார் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களைத் திடுதிப்பென அரசாங்கத் துறைக்கு எந்தவிதமான முன்அனுபவமுமின்றி துறை சார்ந்த கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்புகளுக்குக் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல என்பதும், ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்துகின்ற லேட்டரல் என்ட்ரி முறை தேர்வுக்குக் கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் என்றில்லாமல் பாஜகவின் கூட்டணிக் கட்சிக்கு இடையிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. லோக் ஜனசக்தி கட்சியைச் சார்ந்தவர் சிராக் பாஸ்வான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உணவு பதப்படுத்தல், தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பவர். அவர் லேட்டரல் என்ட்ரி முறைக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தவர்களில் முக்கியமானவர். உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது பட்டியல் இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை முழுமையாக நீர்த்துப் போக வைத்து விடும். ஆகவே உடனடியாக லேட்டரல் என்ட்ரி முறையை ரத்து செய்ய வேண்டும் என அவர் ஒன்றிய அரசிற்கு நேரடியாகவே கோரிக்கை வைத்தார்.


லேட்டரல் என்ட்ரி முறை தற்போதுதான் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. 2018ஆம் ஆண்டு அன்றைய மோடி அரசாங்கம் இதனை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக 53 உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தியிருக்கிறது. அவர்களும் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2018இல் லேட்டரல் என்ட்ரி மூலமாக உயர் பதவிக்கு தேர்வானவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

                       


லேட்டரல் என்ட்ரி மூலமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தங்கள் அடிப்படையில் மட்டுமே பணி செய்வதற்கு  அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவ்வல்லுநர்களின் செயல் திறன், அரசின் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே அவர்களின் பணிக் காலம் நீட்டிப்பு செய்யப்படும் என ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது என்றாலும் லேட்டரல் என்ட்ரி மூலமாக ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலையில் உள்ளவர்களை ஒன்றிய அரசின் உயர்மட்டப் பொறுப்புகளுக்குக் கொண்டு வருவதும், அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் முக்கிய இடங்களில் அவர்களைப் பணி அமர்த்துவதுமே இதன் நோக்கம் என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கார்க்கே.


இடஒதுக்கீட்டு முறையை முறையாகப் பின்பற்றாமல் நேரடித் தேர்வு என்பதன் காரணமாகவே பலமான எதிர்ப்பை எதிர்க் கட்சிகளின் சிலர் வெளிப்படுத்தினாலும், அரசின் கொள்கைகளை உருவாக்கும் உயர் பொறுப்புகளுக்குத் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் துறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக நியமிப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது. அவர்களின் கவலையில் உண்மை இருப்பதாகவே நாமும் கருத வேண்டியிருக்கிறது. பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி முறையை ஒன்றிய அரசு ரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளது.
பணியாளர்கள்,  பொதுத்துறைகள் அமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சிக்கு எழுதிய கடிதத்தில் லேட்டரல் என்ட்ரி முறையை உடனடியாக இரத்து செய்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.


எனில் 2018ஆம் ஆண்டில் லேட்டரல் என்ட்ரி முறை தேர்வு மூலமாகத் தேர்வான 53 நபர்கள் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்படாது என்பதாகவே நாம் புரிந்துகொள்ள முடியும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்