சுகபோகங்களும் சுகந்தமும் நிறைந்த சுவனபதியில் மகிழ்ந்து உலாவிய ஆதி மனிதர் ஆதம் நபி(அலை) அவர்களும், அவரது துணைவியார் ஹவ்வா(அலை) அவர்களும் இறைவன் விதித்த வரம்பை மீறியதாலே சுவர்க்கச் சோலைகளிலிருந்து துன்பங்களும் சோதனைகளும் நிறைந்த இந்த பூமிக்கு இறக்கி விடப்பட்டார்கள்.
ஆம்! இறைவனின் முதல் தண்டனை அவன் போதித்த ஒழுக்க வரம்பை மீறியதாலே முதல் மனிதருக்குக் கொடுக்கப்பட்டது. தீண்டக்கூடாது என எச்சரித்தும் அவர்கள் அம்மரத்தைத் தீண்டியதாலே வெட்கத்தலங்கள் அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் பூமிக்கு இறக்கிவிடப்பட்ட தண்டனைக்கு உள்ளானார்கள் எனில், நம் இறைவன் அவனது தூய மார்க்கத்தின் வழியே நமக்குக் கற்பித்த ஒழுக்கங்களை நாம் எவ்வாறு பேணிக் காக்க வேண்டும் எனப் புரிந்து கொள்ளலாம்.
ஒழுக்கம் என்றவுடன் நம்மில் பலரும் கற்பொழுக்கங்கள் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொள்கின்றோம். உண்மையில் நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி தூய இஸ்லாம் நமக்கு வலியுறுத்து கிறது. சிறுநீர் கழிப்பதற்கும் இஸ்லாம் சில ஒழுங்குகளை வரையறுத்துள்ளது. பொதுவாக நின்றபடி சிறுநீர் கழிப்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அதற்குக் காரணம் மனிதர்களையும் விலங்குகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரு சில நடவடிக்கைகளில் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதும் ஒன்று.
மத போதனைகளுடன் நின்று விடாமல் ஒழுக்கத்தையும் கற்பித்து வழிகாட்டியவர்கள் நபி(ஸல்) அவர்கள். ஒழுக்கசீலர், உத்தமர், உன்னத குணநலன்களை அணியாகக் கொண்டவர் என ஒருவர் புகழாரம் சூட்டப்படுகிறார் எனில் அது நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்கள் தான். இவ்வாறு அவர்களுக்குப் பெருமையும் புகழாரமும் சூட்டுவது முஸ்லிம்களாகிய நாம் அல்ல! விவேகானந்தர், ஜார்ஜ் பெர்னாட்ஷா, தாமஸ் கார்லைல், அல்ஃபோன்ஸோ டி லாமர்டின் போன்றவர்கள் கூறுகின்றார்கள்.
மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை ஒழுங்குகளிலும் தத்துவார்த்த முறைமைகளை வகைப்படுத்தி உண்பதிலும், உடுத்துவதிலும், உறங்குவதிலும், கல்வி
கற்பதிலும், பொருளாதாரத்தைச் செலவழிப்பதிலும், கால்நடைகளிடம் நீதமாக நடந்து கொள்வதிலும், சக மனிதர்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும், மனைவியரிடத்திலும், குழந்தைகளிடத்திலும் என வாழ்நாள் முழுவதிலும் ஒருவர் எப்படியெல்லாம் கண்ணியத்தைப் பேணி ஒழுக்கமாக வாழவேண்டுமென தனது சொல்லாலும் செயலாலும் காட்டித் தந்தவர்கள் மாநபி முஹம்மது(ஸல்) அவர்கள்.
மனித நாகரிகத்தின் உச்சம் என ஒருவரைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் அது நபி(ஸல்) அவர்கள் தான் எனும் போது அவர்களது வாழ்வையும் செயல்பாடுகளையும் அடிச்சுவடுகளாகப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் எவ்வாறான உயர்ந்த இலக்குடன் கூடிய ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும். மட்டுமின்றி பிறரிடமும் கொண்டு சேர்க்கும் பெரும் கடமையைச் சுமர்ந்தவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர்.