இதில் உரையாற்றிய பாகிஸ்தானின் புதிய பிரதமரான லியாகத் அலீ கான் ‘இந்தியாவில் முஸ்லிம்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும், உயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டால் எங்களிடம் முறையிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என இந்தியத் தலைவர்களைப் பார்த்துக் கூறினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய காயிதே மில்லத் ‘நீங்கள் உங்களது நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களான இந்துக்களின் நலன்களுக்கும், உரிமை களுக்கும், உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருங்கள். இந்தியாவில் நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், அகில இந்திய முஸ்லிம் லீகின் செயற்குழுக் கூட்டம் கராச்சி நகரில் 1947ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13, 14ஆம் தேதிகளில் நடைபெற்றது. இது ஒரு பிரிவு உபசாரக் கூட்டம் போல் அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் சென்னை மாகாணத்திலிருந்து காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப், கே.டி.எம். அஹமது இப்ராஹீம், சீதி சாஹிப், ஏ.கே. ஜமாலி, என்.எம். அன்வர் ஆகிய ஐவரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் இந்தியாவில் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை இந்தியத் தலைவர் களிடமே விட்டு விடலாம் என்றும், இது பற்றிப் பரிசீலித்து முடிவெடுக்க காயிதே மில்லத்தைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் உரையாற்றிய பாகிஸ்தானின் புதிய பிரதமரான லியாகத் அலீ கான் ‘இந்தியாவில் முஸ்லிம்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும், உயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டால் எங்களிடம் முறையிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என இந்தியத் தலைவர்களைப் பார்த்துக் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய காயிதே மில்லத் ‘நீங்கள் உங்களது நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களான இந்துக்களின் நலன்களுக்கும், உரிமை களுக்கும், உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருங்கள். இந்தியாவில் எங்களது பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து கொள்கிறோம். எங்களது பிரச்னைகளில் நீங்கள் தலையிட வேண்டாம்’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டார். காயிதே மில்லத்தின் இந்தப் பதில் கேட்டு பாகிஸ்தான் லீக் தலைவர்கள் வாயடைத்துப் போயினர். காயிதே மில்லத்தின் நிலைப்பாடே இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடாக அன்றும், இன்றும் இருக்கின்றது. என்றும் இருக்கும்.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டம் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹஸீனா, பதவியிலிருந்து விலகி இராணுவத் தளபதியின் ஆலோசனையின்படி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அந்த நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப் பெற்று தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் பதவிப் பொறுப்பேற்றுள்ளார். ஷேக் ஹஸீனா நாட்டை விட்டு வெளியேறிய பின், அந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்படுவதாகவும், கோயில்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. வங்கதேச இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று நமது நாட்டிலுள்ள இந்துத்துவ அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசப் புதிய அரசின் தலைமை ஆலோசகரான முஹம்மது யூனுஸைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்புக்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
வங்கதேசத்தில் மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களால் சில இடங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டதும், சில கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதும் உண்மையே! ஆனால் இந்தத் தாக்குதல்கள் பெரிய அளவில் நடைபெற்றதாகவோ, உயிர்சேதங்கள் ஏற்பட்டதாகவோ செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. உண்மை என்னவென்றால் வங்கதேசத்தின் பல்வேறு ஊர்களில் முஸ்லிம்களே கோயில்களைச் சுற்றி நின்று கொண்டு அவற்றை யாரும் தாக்கா வண்ணம் பாதுகாப்புக் கொடுத்தனர். வங்கதேசத்திலுள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், இயக்கங்களும் இந்து மக்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என வேண்டுகோள், அறிக்கைகள் விடுத்தன. புதிய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முஹம்மது யூனுஸும் இந்துக்களின் மீது தாக்குதல்கள் தொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக் கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார். இச்செய்தி இந்திய ஊடகங்களில் மட்டுமல்ல, உலக ஊடகங்களிலும் வெளிவந்தன.
வங்கதேசத்தில் வசிக்கின்ற சிறுபான்மையினரான இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சியையே தேர்தல்களில் ஆதரித்து வாக்களித்து வருகின்றனர். (இந்திய முஸ்லிம்களின் பெரும்பான்மையோர் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தது போல்) இதனால் ஷேக் ஹஸீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்களின் கோபம் சில இடங்களில் இந்துக்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இது தான் அவர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணம் என நடுநிலை ஊடகங்கள் கூறுகின்றன. எனினும் வங்கதேசப் புதிய அரசு துரித நடவடிக்கைகள் எடுத்து நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
25.8.24 தினமணி நாளிதழ் ‘வங்கதேசம் இந்து முஸ்லிம்கள் இணைந்து பாதுகாத்த ஸ்ரீதாகேஸ்வரி கோயில்’ (பக்கம் 8) என்று தலைப்பிட்டு செய்தி ஒன்றினைப் பிரசுரம் செய்துள்ளது. அதில் தலைநகரிலுள்ள ஸ்ரீதாகேஸ்வரி கோயிலை இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பாதுகாத்த நெகிழ்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்தச் செய்தியில் வங்கதேச இடைக் கால அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் இக்கோயிலுக்குக் கடந்த 13 ஆம் தேதி வருகை தந்து இந்து சமூகத்தினரிடம் உரையாடினார் என்றும், கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி கோயிலில் நடைபெற உள்ள பூஜையில், அந்த நாட்டின் மதம், சட்டத்துறை ஆலோசகர் ஆசிஃப் நஜ்ருல் கலந்து கொள்ளவிருப்பதாக கோயில் பூசாரி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளிலிருந்து வங்க தேசத்திலுள்ள சிறுபான்மை இந்து மக்களைப் பாதுகாக்க ஒரு நாகரிக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை அந்நாட்டு அரசு செய்துள்ளது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நமது நாட்டின் நிலைமை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக நமது நாட்டில்
வசிக்கின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
பசு இறைச்சியை வைத்திருந்ததாக முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல், கொலை, முறையாகப் பணம் செலுத்தி சந்தைகளிலிருந்து மாடுகளை வாங்கிச்
சென்ற முஸ்லிம்களை வழிமறித்துத் தாக்கிக் கொலை செய்தல், இராமநவமி ஊர்வலங்களின் போது பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் தொடுத்தல், பள்ளிவாசல்களில் காவிக் கொடி ஏற்றல், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு, உத்திரப்பிரதேசத்திலும் டெல்லியிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தல், அலிகர், டெல்லி ஜாமியா மில்லியா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் போராடிய முஸ்லிம் மாணவர்களை ‘உபா’ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தல், பாஜக ஆளுகின்ற மாநிலங் களில் போராட்டங்கள் நடத்திய முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கல், மதரஸாக்களைப் புல்டோசர் கொண்டு இடித்தல் என முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களின் பட்டியல் நீளுகிறது. பாஜக மாநில அரசுகளின் துணையுடனேயே புல்டோசர் கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களைக் கண்டித்து நமது நாட்டின் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ யாருமோ அறிக்கை எதுவும் விடவில்லை. மாறாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் மோடியே உத்திரப்பிரதேச முதல்வரின் புல்டோசர் இடிப்பை நியாயப்படுத்திப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி மிக மோசமான முஸ்லிம் வெறுப்புப் பரப்புரையில் ஈடுபட்டார். நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் கூட முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் தகுந்த நீதி வழங்கவில்லை. பிரதமரின் வெறுப்புப் பேச்சுகளை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றங்கள் தாமாகவே முன்வந்து பிரதமரின் மீது விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி மிகுந்த கவலைப்படுகிறார். அந்நாட்டு பிரதமருடன் பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான தொலைப்பேசிப் பேச்சு வார்த்தையின் போது பிரதமர் மோடி இது குறித்துக் கவலை தெரிவிக்கிறார். இதனை நாம் குறை சொல்லவில்லை. ஆனால், நமது நாட்டிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் எங்ஙனம் நடத்தப்படுகின்றனர் என்பது குறித்து அவர் கொஞ்சமேனும் கவலை கொண்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவரது அறிக்கைகள், பேச்சுகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ அறிக்கை வெளியிட்டால் ‘எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ என்ற ரீதியில் வெளியுறவுத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் பதில் அளிக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மலேசியா, துருக்கி, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் அதிபர்கள் கருத்துத் தெரிவித்த போது, இந்திய அரசு அந்நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைகளால் எதிர்வினையாற்றியது. மலேசியாவிலிருந்து பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டாமென பெரும் வணிகர்களுக்கு ஒன்றிய அரசு அப்போது ஆணையிட்டது.
வங்கதேச இந்து சமய மக்களின் பாதுகாப்பிற்காக நமது அரசும், பிரதமரும் பேசலாம். இலங்கையில் வாழுகின்ற தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் நமது நாட்டில் சிறுபான்மையினர் பாதிக்கப்படும் போது அது குறித்துப் பிற நாடுகள் கருத்து தெரிவித்தால் அதனை ஏற்று தவறுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வது தானே ஒரு ஜனநாயக, நாகரிக அரசு செய்ய வேண்டிய செயலாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராகப் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.
இன்றைக்கும் முஸ்லிம்களின் மீதான அரசின் தாக்குதலும், இந்துத்துவச் சக்திகளின் தாக்குதலும் தொடர்கின்றன. தனது நாட்டில் சிறுபான்மையினராக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகின்ற, செயல்படுகின்ற பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை இந்து சமய மக்களின் நிலை பற்றிப் பேச எந்த விதமான தார்மிக உரிமையும் இல்லை. அல்லது அந்த உரிமையை அவர் இழந்து விட்டார் என்பதே உண்மை.