வக்ஃப் சொத்துகள் நம்முடைய மதிப்பு மிகுந்த மூலதனங்கள் ஆகும். இறை திருப்தியையும் அவனது பெரும் கூலியையும் நாடி நமது முன்னோர்கள் தங்களது
சொத்துகளை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்துள்ளார்கள். இந்த வக்ஃப் சொத்துகளைப் பரிபாலனம் செய்வதும் பாதுகாப்பதும் நமது முக்கியமான கடமையாகும். வக்ஃப் சட்டம் 2013ஐத் திருத்தம் செய்வதற்கு ஆளும் வர்க்கத்தினர் முயற்சிசெய்கின்றார்கள்.
வக்ஃப் சட்டத்தில் ஏற்படுத்துகின்ற திருத்தங்கள் எண்டோவ்மென்ட்களின் நிலை களையும் தன்மைகளையும் மாற்றி விடுவதோடு என்டோவ்மென்ட்களின் பாதுகாப்பையும் வக்ஃபின் அதிகாரங்களையும் நிச்சயமற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடும். வக்ஃப் போர்டுகளின் சுதந்திரத்தை அழிப்பது வக்ஃப் சொத்துகளைப் பறிப்பதற்கு வழி வகுக்கும்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வக்ஃப் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குக் குரல் உயர்த்தியிருப்பதுடன் வக்ஃபின் இயல்பிலும் நிலையிலும் அடிப்படையானதும் கணிசமானதுமான மாற்றம் ஏற்படுகின்ற வகையில் வக்ஃப் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாதென்று அரசிடம் கோரிக்கையையும் வைத்துள்ளது. இந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஜும்ஆ உரை போன்ற ஏற்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்லாத்தில் அனைத்து வல்லமையும் கொண்ட அல்லாஹ்வுக்கு இபாதத் (வழிபாடு) செய்வதற்கும் அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கியத்துவம் இருப்பது போலவே, மனிதர்களுக்கு உதவி செய்வதற்கும் சேவை செய்வதற்கும் பெரும் முக்கியத்துவம் உண்டு. அதனால்தான் பிரார்த்தனை, விரதம் போன்றவற்றுடனேயே ஜகாத், சதக்கத்துல் ஃபித்ர் ஆகியவற்றின் கட்டளைகளும் வந்துள்ளன.
ஒரு தனி மனிதனின் தரப்பிலிருந்து ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் பொருளாதார பிராயச்சித்தம் அதாவது, ஏழைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் உணவு வழங்குவதற்கும் ஆடைகள் வழங்குவதற்கும் அமைப்பு உண்டு. உதாரணமாக, யாரேனும் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டால், ஒன்று அவர் அதற்குப் பிராயச்சித்தமாக அறுபது நோன்புகள் வைக்க வேண்டும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நோன்பு எனும் வழிபாட்டுக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் உரிய பிரதிபலன் ஒன்றேயாகும்.
இதன் இரண்டாவது வடிவம், ஏராளமானவர்களுக்கு நீண்ட காலங்கள் பயனளிக்கின்ற வகையில் சேவைகள் கிடைக்கின்றன என்பதாகும். இரண்டு வடிவங்களும் பயனளிக்கக் கூடியவைதான் என்றாலும் இரண்டாவது வடிவத்துக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன. ஏனென்றால், எந்தவொரு விஷயத்தின் பயன்கள் அதிகமான மக்களுக்கு நீண்ட காலங்கள் கிடைக்குமோ அதற்குத்தான் அதிகமான நன்மைகள் கிடைக்கும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் இறந்து விடுகின்ற போது மூன்று விஷயங்களைத் தவிர மற்றவை அனைத்தும் அவனை விட்டு விலகி விடுகின்றன. ஒன்று, சதக்கத்துன் ஜாரியா எனப்படும் என்றென்றும் நிலைத்திருந்து பயனளிக்கின்ற தான தர்மங்கள். இரண்டு, தனது மரணத்துக்குப் பிறகு மக்களுக்குப் பயனளிக்கின்ற கல்வி. மூன்று, தனக்காக மரணத்துக்குப் பிறகு பிரார்த்தனை செய்கின்ற பிள்ளை’. (முஸ்லிம்)
பயனளிக்கின்ற அறிவு என்றால் ஏதேனும் ஓர் அறிஞரின் அறிவு நூற்களும் அவரது மாணவர்களும் ஆவர். அவை நீண்ட காலத்துக்கு மக்களுக்குப் பயனளிக்கின்றன. நல்ல பிள்ளைகள் என்றால் மிகவும் தெளிவானதாகும். இஸ்லாமிய பயிற்சி கிடைத்துள்ள பிள்ளைகள் தங்களது பெற்றோருக்குரிய பிரார்த்தனைகளை மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
சதக்கத்துன் ஜாரியா எனப்படும் என்றென்றும் நிலைத்திருந்து பயனளிக்கின்ற தான தர்மங்கள் என்றால் ஒரு மனிதர் தன்னுடைய காலத்துக்குப்பிறகும் மக்களுக்குப் பயனளிப்பதற்காகக் கிணறு தோண்டுதல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மஸ்ஜித்கள், கல்வி நிறுவனங்களின் கட்டுமானத்தில் பங்களிப்பது, மார்க்க நூல்களைப் பதிப்பித்தல், பயணிகளுக்கும் அநாதையருக்கும் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகள் செய்தல் போன்ற ஜீவகாருண்யப் பணிகளாகும்.
இப்படிப்பட்ட தர்மச் செயல்பாடுகளின் ஒரு வடிவம் ‘வக்ஃப்’ என்று கூறப்படுகிறது. வக்ஃப் எனும் அரபு வார்த்தையின் நேரடிப்பொருள் ‘தடுத்து வைத்தல்’ என்பதாகும். வக்ஃபின் உண்மையான பொருட்களைத் தடுத்து தனியாகப் பிரித்து வைப்பதால் அதன் மூலம் ஏற்படுகின்ற பயன்பாடுகளை வக்ஃப் செய்தவரின் எண்ணத்துக்குத் தகுந்தாற்போல சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் சேர்ப்பிக்கப்படுகிறது. அதன் மூலம் பொருட்கள் பாதுகாக்கப்படுவதுடன் தடுத்தும் வைக்கப்படுகிறது. அதனால்தான் இதனை வக்ஃப் என்று கூறப்படுகிறது.
வக்ஃப், பொதுவான (சாரிட்டி) தர்மத்துக்கும் மத்தியில் இருக்கின்ற அடிப்படையான வேறுபாடு என்னவென்றால், சாதாரண தான தர்மங்களில், ஏழைகள், தேவையுடையவர்களை உண்மையான பொருட்களின் தனியுடைமையாக்கப்படுகின்றது என்பதாகும். மற்ற உரிமையாளர்களுக்கு அதிலிருந்து பயன் பெறுவதற்கான வாய்ப்பில்லை. ஆனால், வக்ஃபில் நிலைமை முற்றிலும் இதற்கு நேர் எதிராகும். அதிலிருந்தே அதன் முக்கியத்துவமும் பயனும் எளிதில் விளங்கும். வக்ஃபில் வக்ஃப் செய்தவருக்கோ (பள்ளிவாசல்) முத்தவல்லிகளுக்கோ, பயன் பெறுவதற்கு உரிமை கிடைத்தவர்களுக்கோ எந்த விதமான (நிரந்தர) உரிமையும் இருக்காது. வக்ஃப் குறித்த இஸ்லாமிய ஷரீஅத்தின் கண்ணோட்டம் சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் நேரடியான உரிமையில் இருக்கின்ற சொத்துகள் என்பதாகும்.
இஸ்லாத்தில் வழிபாடுகளுக்கு மட்டுமல்ல; மக்கள் சேவைக்கும் பிரதிபலன்கள் உண்டு. அதனால், வக்ஃபின் நோக்கம் என்பது மிகவும் பரந்து விரிந்ததாகும். ஏழைகளுக்குப் பயனளிக்கின்ற வகையில் அமைந்த வக்ஃபும் செல்லுபடியாகும். செல்வந்தருக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியாகப் பயனளிக்கின்ற வக்ஃபும் செல்லுபடியாகும். எந்தளவுக்கென்றால் தனது பிள்ளைகளுக்கு வக்ஃப் செய்வதும் கூட செல்லுபடியாகும். அதனால், மதரஸாக்கள் எனப்படும் கல்விச்சாலைகள், அநாதை நிலையங்கள், ஏழைகளுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள், மார்க்க, உலகியல் கல்விகளுக்காக நிறுவப்பட்டுள்ள சாரிட்டபிள் ட்ரஸ்ட்கள், நோயாளிகளுக்கான மருத்துவம், விதவைகள் பராமரிப்பு முதல் இவை போன்ற தேவைகளுக்காக நிறுவப்பட்டுள்ள ட்ரஸ்ட்கள், இவற்றின் நோக்கங்கள் வியாபாரம் அல்லது எவரேனும் தனி நபரின் உலகியல் லாபமோ இல்லையெனில் அவையெல்லாம் வக்ஃபில் உட்படும். இறை மார்க்கம், ஜீவகாருண்யச் செயல்பாடுகளுக்குப் பொருளாதார உதவிகள் வழங்குதல் எனும் கருத்தாக்கம் மிகவும் பழமையானதாகும்.
அரேபியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்னரே அரபிகள் இறையில்லமாகிய கஅபாவுக்கு வழிபாடுகளை அர்ப்பணம் செய்து வந்திருந்தனர். இறைவனின்
பெயரால் பொருட்களை நேர்ச்சை செய்கின்ற நிகழ்வுகள் பைபிளிலும் விவரிக்கப்பட்டுள்ளன. மர்யம்(அலை) அவர்களது தாயார் தனக்குப் பிறக்கவிருக்கின்ற குழந் தையை அல்லாஹ்வுக்காக நேர்ந்து விடுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாறுதான் மர்யம்(அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸின் சேவைக்காக அவருடைய மாமா முறை உறவினரான ஸகரிய்யா(அலை) அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். (பார்க்க: திருக்குர்ஆன் 3:37)
பல்வேறு வகையான (சாரிட்டி) தர்மச் செயல்களின் நோக்கங்களுக்காக இஸ்லாம் சமர்ப்பித்த விரிவான வக்ஃப் ப்ரொஜெக்ட் போல ஒன்றை இஸ்லாத்துக்கு முன்னர் எங்கும் எப்போதும் காண முடியாது. முஹம்மத் நபியவர்களின் சமுதாயத்தில் முதலாவது வக்ஃபை உமர்(ரலி) அவர்கள்தான் செய்தார் என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்த வக்ஃப் என்பது குறிப்பிட்ட வகை, விரிவான சட்டங்களின் அடிப்படைகள் கொண்டதாகும். அதை விடுத்தால் முதன் முதலில் வக்ஃப் வழங்கியது அண்ணல் நபி(ஸல்) அவர்களாவார்கள். மதீனாவின் இரண்டு அநாதைச் சிறுவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் வாங்கிய நிலத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மஸ்ஜிதைக் கட்டியதுடன் அதனுடன் இணைந்து கல்வித் தேவைகளுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தவும் செய்தார்கள். அதனை அரபியில் ‘ஸுஃப்ஃபா’ என்று கூறுவர். ஆம், அதுதான் இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது தாருல் உலூம் கல்விச்சாலையாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் முதலாவதாக வக்ஃப் செய்து வழங்கிய நிலத்தில்தான் முதலாவது மஸ்ஜிதும் முதலாவது பள்ளிக்கூடமும் நிறுவப்பட்டது.
இதே முறையில்தான் உஸ்மான்(ரலி)அவர்கள் ‘பிஃரே ரூமா’ ரோமா கிணற்றை விலைக்கு வாங்கி முஸ்லிம்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வக்ஃப் செய்தார். இன்னொரு நிகழ்வு ஜாபிர்(ரலி) அவர்கள் தனது பேரீச்சை மரத்தோட்டத்தை வக்ஃபாக வழங்கியதாகும். இவையெல்லாம் உமர்(ரலி) அவர்கள் வக்ஃப் செய்வதற்கு முன்னராகும். வக்ஃப் குறித்த விவரணைகள் திருக்குர்ஆனிலேயே உள்ளது. காரணம், செல் வத்தை நற்செயல்களுக்காகச் செலவு செய்வதற்கும் தானம் செய்வதற்கும் அல்லாஹ் திரும்பத் திரும்ப அறிவுறுத்தியுள்ளான். ஹதீஸ்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்களது தெளிவான வலியுறுத்தல்களையும் காணலாம்.
என்றைக்கும் நிலைத்திருக்கின்ற ஸதகாவின் மிக உயர்ந்த வடிவம் என்பதால், பல போதும் நபித்தோழர்கள் இந்த நல்ல செயலில் பங்காளிகளாகியுள்ளனர். மார்க்க அறிஞர்கள் பலருக்கும் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துள்ளது என்பதையும் காணலாம். அதனால், இஸ்லாமிய சட்டங்கள் இதனை ஒரு (முஸ்தஹப் எனும்) உபரியான விரும்பத்தக்கது எனும் அந்தஸ்து கொண்ட இபாதத் ஆகும் என்று கருதுகின்றது. (அல் முஃக்னி 187/8)
(அடுத்த இதழில் முடியும்)