இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் நற்குணத்திற்கு இறைவன் திருமறைக் குர்ஆனில் ‘மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்’ (திருக்குர்ஆன் 68:4) என்று சான்றளிக்கின்றான்.
மனிதகுலத்திற்கு அருட்கொடையாகத் திகழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் ஒழுக்க வாழ்வியல் பல நூற்றாண்டுகள் கடந்தும் மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. நபி(ஸல்) அவர்கள் பன்முகத்தன்மை மிக்க ஒழுக்கச் சீலர் என்பதால் தான் உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி பத்து இலட்சம் நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளது. வேறு எந்த மனிதருக்கும் இவ்வளவு வரலாற்று நூல்கள் எழுதப்பட்டதில்லை.
நபி(ஸல்) அவர்கள் அதிகம் பணிவுடையவர்களாகத் திகழ்ந்தார்கள். பெருமை கொள்வதை விட்டும் விலகி வாழ்ந்தார்கள். மக்கள் அரசர் முன்பு எழுந்து நிற்பது போன்று தன் முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். மக்கள் மீது மிக்க அன்பும், அரவணைப்பும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். மக்களில் மிக உன்னதமான குணம் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அருவருப்பான சொல், செயல், சபிக்கும் குணம் எதுவும் அவர்களிடம் காண முடியாது. எவரையும் தனக்குப் பின்னால் நடக்க அனுமதிக்க மாட்டார்கள். உடையில் தங்கள் அடிமைகளைக் காட்டிலும் தம்மை உயர்வாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
தங்கள் பணியாளரை ‘சீ’ என்று கூடக் கூறியதில்லை. தங்களுக்குப் பணிவிடை செய்தவதர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். தங்கள் காலணிகளையும், ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். உறவினர்களுடன் சேர்ந்து நெருக்கமாக வாழ்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்நிலைமையிலும் பொய் பேசவோ, தேவையின்றியோ பேச மாட்டார்கள். கருத்தாழமுள்ள வாக்கியங்களால் உரையாற்றுவார்கள். இறைவனின் அருட்கொடை குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக மதிப்பார்கள்.
நேரிய சிந்தனை, ஆழ்ந்த பார்வை, நுண்ணறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். தாம் ஒழுக்க வாழ்வைக் கடைப்பிடித்ததுடன் மக்களின் சமூக நிலைமைகளை ஆராய்ந்து அவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகளைக் களையப் பாடுபட்டார்கள். மக்களைத் தவறான வழிகேட்டிற்கு இட்டுச் செல்லும் மது, போதை, ஆபாசம், வட்டி, இலஞ்சம் போன்ற தீமைகளை அகற்றினார்கள். நபி(ஸல்) கூறினார்கள்: ‘மது சிறிதளவாயினும் அதிகமானாலும் தடை செய்யப்பட்டதே! போதை தரும் அனைத்தும் தடை செய்யப்பட்டவையே’ ‘வட்டி வாங்குபவன், கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதற்குச் சாட்சி பகர்பவன் ஆகிய யாவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்’. (முஸ்லிம்)
‘ஆபாசப் பார்வையும், பேச்சும் விபச்சாரமே’ என்று பகிரங்கமாகக் கூறினார்கள். ‘கண்ணியமான ஆடைகளையே ஆண்கள், பெண்கள் அணிய வேண்டும்’ என்று
போதித்தார்கள். பெண்களுக்கான உரிமைகளையும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பையும் செய்வதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
சிலை வணக்கங்கள், மூடப்பழக்க வழக்கங்கள், சடங்குகள், அறிவை மழுங்கச் செய்யும் அனைத்து அறியாமைகளை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். பேராசை, அகந்தை, மோசடி, குரோதம், வஞ்சம், பொறாமை போன்ற இழி குணங்கள், பண்பற்ற செயல்களிலிருந்து மக்களைத் தடுத்து ஒழுக்கப் பண்பை விதைத்தார்கள்.
ஒழுக்கத்தின் உயர்வையே மக்களிடம் புகச் செய்தார்கள். இறைக்கட்டளையை முழுமையாக தாங்களும் பின்பற்றி மக்களிடமும் கொண்டு சேர்த்தார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்வழி மனிதனுக்கு மிக அவசியம். அதன் மூலமே மனிதன் ஈடேற்றம் பெற முடியும் என்று வழிகாட்டினார்கள்.
மனித குலம் நேர்வழியிலேயே நிலை பெற வேண்டும், அறியாமை இருளில் சிக்கிவிடக் கூடாது என்றும் ஒழுக்க வாழ்வியலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரிப்பதுடன் நின்றுவிடாமல் அனைத்து நற்குணங்களுக்கும் தாமே அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.