மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஐயங்களுக்கு இடமளிக்கும் சந்திப்பு
சேயன் இப்ராகிம், அக்டோபர் 01-15




அண்மையில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமை நீதிபதியின் அழைப்பின் பேரில் தான் பிரதமர் அவரது இல்லத்திற்குச் சென்று இருக்க முடியும். தனது இல்லத்தில் நடைபெற்ற பூஜைக்கு பிரதமரை அழைக்க வேண்டிய தேவை தலைமை நீதிபதிக்கு ஏன் ஏற்பட்டது? தலைமை நீதிபதி பிரதமரை மட்டும் தான் அழைத்தாரா அல்லது வேறு தலைவர்களையும் அழைத்திருந்தாரா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.


பொதுவாக, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் பொது வெளிகளிலேயே நடத்தப் படுகின்றன. ஊர்வலமாக அவை எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப் படுகின்றன. அப்படி இருக்கும் போது, தலைமை நீதிபதி தனது இல்லத்தில் பூஜையை நடத்தியதும், அதில் பிரதமர் கலந்து கொண்டிருப்பதும் ஓர் அரிதான நிகழ்வேயாகும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் தலைமை நீதிபதி நடத்திய பூஜையில் பிரதமர் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டில் மட்டும் ஏன் தலைமை நீதிபதி பிரதமருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது.


தலைமை நீதிபதி அவரது இல்லத்தில் பூஜை நடத்தியதும், அதில் கலந்து கொள்ளுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்ததும் அவரது தனிப்பட்ட உரிமை. அது போல் அழைப்பை ஏற்று பிரதமரும் தலைமை நீதிபதியின் இல்லத்திற்குச் சென்றது அவரது தனிப்பட்ட உரிமை. இதில் மற்றவர்கள் கருத்துச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை என்ற ரீதியில் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். சந்திரசூட்டும், நரேந்திர மோடியும் தனி மனிதர்கள் என்றால் பிரச்னை இல்லை. முன்னவர் இந்தியாவின் உயரிய நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. பின்னவர் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற பிரதம மந்திரி. எனவே இருவருக்குமிடையே தனிப்பட்ட நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்வதில் தான் பிரச்னை இருக்கிறது. அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வருகின்ற தலைமை நீதிபதி, அந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்குக் காரணமாக இருந்த பிரதமருடன் நெருக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது சரியானது தானா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.


தலைமை நீதிபதியின் நடுநிலை குறித்து ஐயம் எழாதா? என்றும் கேள்வி எழுகின்றது. இதற்குத் தலைமை நீதிபதி தரப்பிலிருந்து பதில் இல்லை. ஆனால் பாஜகவின் முன்னணித் தலைவர்களும், பிரதமரும் பதில் அளித்துள்ளனர். அந்தப் பதில் பிரச்னையைத் திசை திருப்பும் வகையிலே அமைந்துள்ளது. ஏதோ எதிர்க்கட்சித் தலைவர்கள் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்கும், பூஜைகளுக்கும் எதிராக இருப்பது போல் அவர்கள் அறிக்கை விடுகிறார்கள். பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்கள். பிரதமர் வெளிப்படையாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் விநாயகர் வழிபாட்டிற்கு எதிராக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். பிரச்னை தலைமை
நீதிபதியின் இல்லத்திற்கு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சென்றது தானே தவிர, பூஜை பற்றியது அல்ல.
தலைமை நீதிபதி நேர்மையானவர்.


சட்டம் நன்கு தெரிந்தவர். கண்டிப்பானவர். சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியவர் (உதாரணம்: தேர்தல் பத்திர வழக்கு) என்ற பெயர் இருக்கிறது. அந்த நற்பெயருக்கு இந்த நிகழ்வால் பாதகம் வந்து விடுமோ என்றுதான் நேர்மை யாளர்கள் அஞ்சுகிறார்கள். அத்தகைய ஓர் அச்சம் ஏற்பட தலைமை நீதிபதி இடம் கொடுக்கலாமா என்பதே கேள்வி. அரசியல் சட்டம் சம்பந்தமான பல வழக்குகளை விசாரித்து வருகின்ற தலைமை நீதிபதி இதனைத் தவிர்த்திருக்கலாமே என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்தக் கருத்தும் நியாயமானதே!


ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போதும் நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளிலும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வந்துள்ளனர். பொது
நிகழ்ச்சியிலும், அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்களுடனும் அறிமுகம் ஏற்பட்டு அந்த அறிமுகம் நட்புறவாக மலர்ந்து நீதிபதிகளுக்கு நட்பு ரீதியான நெருக்கமும், அந்த நெருக்கம் அவர்களது நடுநிலைத் தன்மையைப் பாதிக்கவும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கருதியே தவிர்த்து வந்துள்ளனர். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல நிலைமைகள் மாறிக் கொண்டே வருகின்றன. தலைமை நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சாதி, சமய ரீதியில் நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கூடக் கலந்துகொள்கிறார்கள்.]


விளையாட்டுப் போட்டிகளில் கூடக் கலந்து கொள்கிறார்கள்.  தனிப்பட்ட  குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மற்ற துறைகளைப் போலவே நீதித்துறையும் ஆகிவிடக் கூடாது. ஏனெனில் நீதித்துறை மட்டுமே மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாக இன்றைக்கும் கருதப்பட்டு வருகிறது. அந்த நம்பிக்கை தகர்ந்து விடக்கூடாது. பிரதமர், தலைமை நீதிபதியின் இல்லத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் தன்மை குறித்து நாம் இந்த ரீதியில் தான் அணுக வேண்டும். நமக்கு வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.


நீதித்துறை மட்டுமே
மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாக இன்றைக்கும்
கருதப்பட்டு வருகிறது.
அந்த நம்பிக்கை தகர்ந்து
விடக்கூடாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்