ஹரியானா மாநிலத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி களுக்கு அதிர்ச்சியையும், ஜம்மு காஷ்மீர் மாநில முடிவுகள் சற்று ஆறுதலையும் அளித்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் சற்றுத் துவண்ட நிலையிலிருந்த பாஜகவுக்கு ஹரியானா தேர்தல் முடிவுகள் ஊக்கத்தைத் தந்துள்ளன. அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீர் முடிவுகள் அம்மாநிலத்தின் அந்தஸ்தைக் குறைத்து, அதனை ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த மத்தியில் ஆளுகின்ற பாஜகவுக்குப் பாடம் புகட்டியுள்ளது.
ஹரியானா
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமெனத் தெரிவித்திருந்தன. பாஜகவின் ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றே கணித்திருந்தது. பாஜகவும் தோற்று விடுவோம் என்ற மனநிலையிலேயே இருந்தது. எனினும் தேர்தல் முடிவுகள் அதற்கு எதிராக அமைந்து விட்டது. பாஜக 48 இடங்களையும், காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாஜக 39.94 விழுக்காடு வாக்குகளையும், காங்கிரஸ் 39.09 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன.
ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸுக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.84 விழுக்காடு மட்டுமே (அதாவது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு) இரண்டு கட்சிகளுக்குமிடையேயுள்ள வாக்கு வித்தியாசம் 1,18,198. காங்கிரஸ் கட்சி நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. அக்கட்சிக்கு ஜாட் சமூகத்தின் வாக்குகள் மட்டுமே பெரும்பான்மையாகக் கிடைத்திருப்பதும், ஜாட் அல்லாத மக்களின் வாக்குகள் பெருமளவு கிடைக்கவில்லை என்றும் தேர்தல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமாக இருந்த ஜாட் வகுப்பைச் சார்ந்த பூபிந்தர் சிங் ஹுடாவுக்கும் இன்னொரு இளம் தலித் தலைவரான ஜெல்சாவுக்கும் இணக்கமான உறவுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. குமாரி ஜெல்சா, தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இறுதி நேரத்தில் மேலிடத் தலைவர்களின் தலையீடு காரணமாக சில பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்த உள்கட்சிப் பூசல் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பாதித்த காரணிகளில் முக்கியமானதாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களைப் பெருமளவில் தேர்தல் களப் பணிக்குக் கொண்டு வந்திருந்தது. காங்கிரஸுக்கு அத்தகைய வாய்ப்புகள் எதுவும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலின் போது இண்டியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, ஹரியானாவில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.76 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இக்கட்சியை தனது கூட்டாளியாக இணைத்துக் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது. காங்கிரஸுடன் ஆம் ஆத்மி தலைவர்கள் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அக்கட்சிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே கொடுக்க காங்கிரஸ் முன் வந்தது. இதனை ஆம் ஆத்மி கட்சி ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தலையிட்டு ஆம் ஆத்மியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மாநில காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக பூபிந்தர் சிங் ஹுடா தனது கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்து விட்டார். ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள 1.76 விழுக்காடு வாக்குகளில் பாதியளவு காங்கிரஸுக்குக் கிடைத்திருந்தால் கூட அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். கூட்டணி விஷயத்தில் பல மாநிலங்களிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் நீக்குப் போக்குடன், தாராளமாக நடந்து கொள்வதில்லை என்ற அரசியல் பார்வையாளர்களின் குற்றச் சாட்டுகளில் உண்மை இருக்கவே செய்கிறது. காங்கிரஸ் கட்சி தனது அமைப்பின் பலத்தை உணர்ந்து, கூட்டணி விஷயத்தில் தாராளமாக பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிலும் காங்கிரஸும், பாஜகவும் களத்தில் இருக்கின்ற வடமாநிலங்களில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமானால், காங்கிரஸ் கட்சி சிறிய கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் வெற்றி பெற இயலாது.
ஹரியானா மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்த அளவில் பாஜகவும் காங்கிரஸும் சம பலத்தில் இருப்பதாகவே கருத வேண்டும். தேர்தல் என்ற ஓட்டப் பந்தயத்தில் பாஜக இறுதி நான்கைந்து நொடிகளில் வேகமாக ஓடி வெற்றியை தட்டிப் பறித்து விட்டது. காங்கிரஸ் கட்சி அந்த இறுதி நான்கைந்து நொடிகளில் மெத்தனம் காட்டி தோல்வியைச் சந்திதுள்ளது என்பதே உண்மை. கடந்த பத்து ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக அரசு மீது மக்களுக்குப் பெருமளவு அதிருப்தி இருந்தது. விவசாயிகள் போராட்டம், இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் சுக்னவீர் திட்டம், அம்மாநில மல்யுத்த வீராங்கனைகளை பாஜக நடத்திய விதம் என மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். இந்தப் பிரச்னைகளைச் சுற்றியே
காங்கிரஸின் பரப்புரையும் இருந்தது. (கிஷான், ஜவான், பயில்வான்). ஆனால் அக்கட்சி கடுமையான முறையில் களப் பணியாற்றி அதிருப்தியை வாக்குகளாக மாற்றத் தவறி விட்டது. அதே நேரத்தில் பாஜக, தேர்தலுக்குப் பிறகு ஓர் ஆண்டிற்கு முன்னர், மாநில முதல்வரான மனோகர் லாலை மாற்றி விட்டு, நயால் சிங் சைனி என்பவரை முதல்வராக்கியது. மக்களின் அதிருப்தியைப் பெற்றிருந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இப்படியாக பாஜக தனது ஆட்சிக்கு எதிராக இருந்த அதிருப்தியைச் சற்று மட்டுப்படுத்தி விட்டது என்பதும் அக்கட்சியின் மூன்றாவது தொடர் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகும்.
ஜம்மு காஷ்மீர்
2018ஆம் ஆண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (மஹ்பூபா முப்தி) இணைந்து நடத்திய ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்திய பாஜக, பின்னர் 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அதன் மாநில அந்தஸ்தைக் குறைத்தும், அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு அம்மாநிலத்திறகு வழங்கியிருந்த சலுகைகளை இரத்துச் செய்தும், சிறுமைப்படுத்தியது. ஆறாண்டுகளுக்குப் பிறகு தற்போது தேர்தல் நடைபெற்று முடிவுகள் வந்துள்ளன. காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 49 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளையும், மஹ்பூபா முக்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களையும், பிற கட்சிகளும் சுயேட்சைகளும் 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பாஜக ஜம்மு பகுதியில் மட்டும் 29 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாஜகவுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை.
ஹரியானா மாநிலத் தேர்தல் முடிவுகளைப் போல, ஜம்மு காஷ்மீரில் நெருக்கமான போட்டி இல்லை. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி 37 விழுக்காடு வாக்குகளையும், பாஜக 26 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் 11 விழுக்காடாகும். மக்கள் ஜனநாயகக் கட்சி 9 விழுக்காடு வாக்குகளையும், பிற சிறு கட்சிகளும் சுயேட்சைகளும் 28 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன. மக்கள் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இருந்தால், பாஜக இன்னும் குறைவான இடங்களையே பெற்றிருக்கும்.
காங்கிரஸ் கட்சி தனது அமைப்பின் அதிலும் காங்கிரஸும், பாஜகவும் களத்தில் இருக்கின்ற வடமாநிலங்களில் |
அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு இரத்துச் செய்யப்பட்டதையும், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதையும் எதிர்த்தே தேசிய மாநாட்டுக் கட்சி பரப்புரை செய்தது. பாஜக தவிர்த்த மற்ற சிறு கட்சிகளும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. எனவே ஜம்மு காஷ்மீர் மக்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு இரண்டு கோரிக்கைளுக்கும் ஆதரவாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பாஜகவின் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்திலும் ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும் என்று வாக்குமூலம் அளித்திருந்தது.
ஆனால், தங்களது கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் பாஜக இந்தக் கோரிக்கையை அவ்வளவு விரைவில் ஏற்குமென்று தோன்றவில்லை. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மாநில முதல்வராகப் பொறுப்பேற்றாலும் அவர் ஓர் அதிகாரமற்றவராகவே இருப்பார் என்பதுதான் இப்போதைய நிலை. 370ஆவது சட்டப் பிரிவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மத்தியில் பாஜக ஆட்சி போய், காங்கிரஸ் ஆட்சி வந்தாலும், இந்தச் சட்டப் பிரிவு மீண்டும் கொண்டு வரப்படும் என்ற உத்தரவாதம் எதுவுமில்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சியும் 370ஆவது சட்டப் பிரிவு விஷயத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை. இந்தச் சூழ்நிலைகளில், ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் நிலவரம் இன்னும் சில காலத்திற்கு தெளிவற்ற நிலையிலேயே இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.