மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
ச.அய்யம்பிள்ளை, மேனாள் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி., அக்டோபர் 16-31, 2024


 

 

திருச்சி மாநகரின் வரலாற்றில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு மாத காலமாக ‘ஒழுக்கமே சுதந்திரம்’ என்ற மையக்கருத்தில் அகில இந்திய அளவில் பரப்புரையை, தொடர் சிந்தனையைப் பல நகரங்களிலும், தளங்களிலும், களங்களிலும் காணப்படும் பல தரப்பட்ட மக்களின் மனதுக்குள் ஏற்றி, செப்டம்பர் 29 அன்று திருச்சி தேவர் ஹாலில் சாதி மத பேதமின்றி இளைஞர்கள் முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைத்துத் தரப்பினரையும் அடக்கிய ஒரு மாபெரும் மானுட சங்கமத்தை இயக்கிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினருக்கு எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் தகும்; அதனைப் பாராட்டாமல், பதிவிடாமல் விடுவது, எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது என்று கருதியே, அதனை இங்கு முதலில் பதிவிட விரும்புகிறேன்.


சிற்றேடுகள், கட்டுரைப் போட்டிகள், நேர்காணல்கள், உரையாடல்கள், மேடை நாடகங்கள், கோரிக்கை விண்ணப்பம் அமைச்சரிடம் சமர்ப்பித்தல் எனப் பல வடிவங்களில், ஒழுக்கம் அவசியம் என்ற உன்னதச் சிந்தனையை, மிகச் சரியான சமயத்தில் செதுக்கியவர்களோடு, தொடர்பு கொள்ளும் ஒரு பாக்கியம் எனக்கும் கிடைத்ததை எண்ணி அகம் மிக மகிழ்கின்றேன். தேவர் ஹாலில் நடந்த நிகழ்ச்சிகளை நேரடியாகப் பார்க்கச் சென்றபோது, வியப்பிலும் வியப்பு; என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.


சாதி, மதம் தொடர்பான திருவிழாக்களில், அரசியல் கூட்டங்களில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், பள்ளி, கல்லூரி விழாக்களில், வியாபார விளம்பர அரங்கங்களில் பெரிய கூட்டங்களைப் பார்த்து இருக்கலாம்; அறிவுப்பூர்மான உரையாடல்களை நிகழ்த்தும் அரங்கங்களில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பிற்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியின் அடையாளமாகவே இதனைக் கொள்ளலாம்.


ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் (அதிகாரம் 14இல்) 10 குறட்பாக்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சில சொற்கள்:


‘ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்’


‘பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்’; ‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், ஒழுக்கத்தின் எய்துவர்’ ‘மேன்மை, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்,’


‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ ‘தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்.’


அசையும் சொத்துக்கும் அசையாச் சொத்துக்குமே முக்கியத்துவம் கொடுக்கிற இந்நாளில், தொட்டுணர இயலாத, கண்களுக்குப் புலப்படாத பெரும் சொத்தாகிய ஒழுக்கத்தின் இன்றியமையாமை ஏனோ குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனவேதான், இன்று அனைத்து மக்களும் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானவையாக ஒழுக்கச் சீர் கேடுகள் இருக்கின்றன. அந்த அவலங்களை அபாயங்களை அன்றாடம் ஊடகங்களில் படித்தால், பார்த்தால் பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நாம் எப்படியோ தப்பிவிட்டோம்; நம்முடைய வருங்காலச் சந்ததியினர் எவ்வளவு சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளப் போகிறார்களோ என்று எண்ணாமல், கவலைகொள்ளாமல் இருக்க இயலவில்லை. எவ்வளவுதான் சொத்துச் சேர்த்து, பிள்ளைகளிடம் கொடுத்தாலும், ஒழுக்கம் இல்லாத பிள்ளைகள் உருப்படுமா?


சொத்துதான் மிஞ்சுமா?, சமூகம் சரியில்லை எனில் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள் அல்லவா? சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சரியாக வண்டி ஓட்டுபவர்களுக்கும் விபத்துக்கள் நிகழலாம் அல்லவா?


இது நம் நிலையென்றால், இதற்கு எதிர் வாதம் வைப்பவர்களையும், குறிப்பாக இளைஞர்களையும், நான் கல்வி நிலையங்களில் சந்திக்கிறேன். அவற்றை விதண்டா வாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களின் கருத்துகளில் பிழைகள் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்யும் பொறுப்பும் நமக்கு உள்ளது; எனவே, அவர்கள் கூறும் சில கூற்றுக்களையும் நாம் நம் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதால், அவற்றை இங்கே தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அவை:


  • ஒழுக்கச் சீர்கேடுகள் இல்லாமல் இருந்தால் நல்லது தான்: ஆனால், பலதரப் பட்ட விழுமியங்களையும் மதிப்பீடு களையும் சட்டங்களையும் கொண்டுள்ள மக்களை மாற்ற முடியுமா? உலை வாயை மூடலாம்; ஆனால், ஊர் வாயை மூட முடியுமா?

  • அதிகாரத்தில் உள்ளவர்களே அக்கிரமம் செய்யும்போது, பூனைக்கு யார் மணி கட்டுவது?

  • டஒழுக்கச் சீர்கேடுகள் ஒன்றும் புதிதல்ல, காலம் காலமாகக் காணப்பட்டதுதான்.

  • இவ்வளவு வேறுபட்ட மக்கள் வாழும்போது, ஆங்காகே சிறு சிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும்; வண்டிகள் விபத்துக்குள்ளாகின்றன என்பதால் வண்டியில் செல்லாமல் இருக்க முடியுமா?

  • அன்று ஊடகங்கள் குறைவாக இருந்தன, இன்று மிகுந்துவிட்ட ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு, வணிக நோக்குடன், ஒழுக்கக் கேடுகளின் அவலங்களை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

  • ஆங்காங்கே ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடந்தாலும், அவற்றை (பலூன் போல)ஊதிப் பெரிதாக்கி மக்களைத் திகிலடையச் செய்கின்றனர் சிலர்.

  • டகாந்தி கூறியதைப்போல் வாய், கண்கள், காதுகளை மூடிக்கொண்டு செல்ல வேண்டியதுதான்.

  • அதது விதிப்படித்தான் நடக்கும்.

  • டயாராருக்கு என்ன எழுதி உள்ளதோ அது நடந்தே தீரும்.

  • இது கலி காலம். நாம் ஒன்றும் செய்ய முடியாது; கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வான்.

  • வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

  • பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கினா பிற்பகல் தாமே வரும்.

அசையும் சொத்துக்கும் அசையாச்
சொத்துக்குமே முக்கியத்துவம் கொடுக்கிற
இந்நாளில், தொட்டுணர இயலாத, கண்களுக்குப் புலப்படாத பெரும் சொத்தாகிய ஒழுக்கத்தின் இன்றியமையாமை ஏனோ குறைத்து மதிப்பிடப்படுகிறது.


  • முதியவர்கள் எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

  • அன்றாட நிகழ்வுகளை நேர்மறையாக (Positive) பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர் மறையாகப் (Negative) பார்க்காதீர்கள்.

  • மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்பத்தான் ஒழுக்கச் சீர்கேடுகளின் தாக்கங்களும் கூடியுள்ளன; அதிகமாக இல்லை.

  • ஒழுக்கச் சீர்கேடுகளால் பெண்களும், குழந்தைகளும் இயலாதோரும் பல ஆண்டு காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரலாறு, திரைப்படங்கள், இதிகாசங்கள், புராணங்கள் கூறுகின்றன.

  • வெட்கத்தலங்களை மூடாத,  ஆண்பெண் உடலுறவுகளின் பல நிலைகளையும் படம் பிடித்துக்காட்டும் சிலைகளும் (பல ஆலயங்களில், Eg. Khajuraho Group of Monuments in Madhlya Pradesh) பிரபல்யமான புத்தகங்களும் பழங்காலம் தொட்டே பரவலாகக் கிடைக்கின்றன; அவை, மக்களுக்கு இயற்கையின் அழகை வியப்பதற்கும், அறிவை வளர்ப்பதற்கும் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

  • எங்கள் பெற்றோர், ஒரே வேலையில், ஒரே ஊரில், (ஒரே) குடும்பத்தோடு நீண்ட காலமாக வாழ்ந்தார்கள்; சிலர் முழு வாழ்க்கையையும் ஒரே ஊரில் கழித்துவிடுகிறார்கள். ஆனால், இப்போதுள்ள வேலை நிலைமையில், நாங்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது; (நாட்டுக்கு நாடு கூட) மாறிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. எனவே, குடும்பத்தைக் கட்டிக் காப்பது சிரமமாக உள்ளது.  ஆகையால், திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டியுள்ளது; திருமணம் செய்யாமல் இருப்பதுகூட வசதியாகத்தான் உள்ளது; அதற்கு, மாற்று ஏற்பாடுகளும் இருக்கின்றன; அவையே சுலபமாகவும் சுகமாகவும் இருக்கின்றன; எங்களுக்குத் தவறு என்று தெரிந்தும் நாங்கள் பலவிதத் தீய செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது.

  • எங்களுக்குத் தேவையான பொருள்களின் எண்ணிக்கையும், அவற்றின் பண மதிப்பும் அதிகமாகிவிட்டன; அவற்றை வாங்கச் சொல்லி விளம்பரங்களும் எங்களை விடாமல் துரத்துகின்றன; அவற்றை வாங்குவதற்குக் கடன்களும் கிடைக்கின்றன; யாருக்கும் தெரியாமல் எதையும் இரகசியமாக வாங்கி, படுக்கை அறை வரை எடுத்துச் செல்லும் அளவுக்கு, இரகசிய வியாபார உத்திகள் வந்துவிட்டன; அவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும் அல்லவா? பணத்தின் தேவை அதிகரிக்கும்போது ஒழுக்கம் ஒதுங்கிவிடுகிறது; (When Economic Takes Place, the first thing getting eroded is ethics) எனச் சொல்லப்பட்டுள்ளது.
  • ஆண்களும் பெண்களும் இப்போதுள்ள அளவுக்கு நெருக்கமாகப் பழக முன்பு வாய்ப்பில்லை; ஆனால், இன்று பல
    ஆண்கள் பணம் சம்பாதிப்பதற்காக நீண்ட நாள்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கவேண்டி இருக்கிறது; வீட்டு வேலைகளைப் பெண்களே செய்ய வேண்டியுள்ளது; ஆண்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களுக்கு, வீதிகளுக்கு, உணவகங்களுக்கு, கல்வி நிலையங்களுக்கு, அலுவலகங்களுக்கு, வியாபார ஸ்தலங்களுக்கு பெண்கள் செல்லாமல் இருக்க முடியுமா? ஆண் பெண் இடைவெளி குறைந்துவிட்டதே; கடைகளில் ஆணும் பெண்ணும் பேரம் பேசும்போது, சறுக்கல்கள் ஆகிவிடலாம் அல்லவா? பஞ்சும் நெருப்பும் பக்கம் வரவர, பற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கத்தானே செய்யும்.

  • இப்போது  குடும்பங்களுக்குள் அதிகாரப் பகிர்வில் மாற்றங்கள், அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதால், குழப்பங்கள் கூடியுள்ளன; பணியிடங்களில் பணிப்பளு அதிகரித்துள்ளன; எனவே, மன அழுத்தம் கூடி, நிம்மதி குறைந்து, தூங்கக்கூட இயலாத நிலையில், மது வகைகளும் போதைப் பொருள்களும் சற்று மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு தருகின்றன; இவைபோல, இன்னும் பல வாதங்களை இளைஞர்கள் நம்முன் வைக்கின்றனர்.


மேலே கூறப்பட்ட கருத்துகளில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது சமூக அக்கறை கொண்டவர்களின் கடமையாக உள்ளது.


முற்காலம் எல்லாம் பொற்காலம் என்றோ, தற்காலம் கற்காலமாக மாறிவருகிறது என்றோ, நூறு விழுக்காடு ஒழுக்கம் முன்பு இருந்தது என்றோ, இன்று நூறு விழுக்காடு தீயொழுக்கம் வந்துவிட்டது என்றோ, விவாதம் செய்வது நம் நோக்கம் அல்ல. அன்றுமுதல் இன்றுவரை, குற்றங்களும் குறைகளும் ஒழுக்கச் சீர்கேடுகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன என்பது உண்மைதான். ஆனால், கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, தொழில் நுணுக்கம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நவீன நாகரிக காலம் என்று வர்ணனை செய்யப்படுகிற இந்தக் கால கட்டத்திலும், காட்டுமிராண்டித்தனமான ஒழுக்கக் கேடுகளில் இருந்து விலக முடியாமல், மனிதன் மாட்டிக்கொள்ளலாமா?


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், மக்கள் நலனுக்காக உழைக்கும் அரசு(!) இருக்கும்போது, இவ்வளவு ஒழுக்கக் கேடுகள் நிகழலாமா? ஒழுக்கக் கேடுகளே சுதந்திரம் என்று  உரைக்கப்படலாமா? தீயொழுக்கங்களைக் கண்டும் காணாமலும் போகலாமா? தீயொழுக்கங்களைப் பரப்ப அனுமதிக்கலாமா? அவற்றை அரசாங்கமே அனு மதித்து, அதற்கேற்ப சட்டத் திருத்தங்கள் கொண்டு வரலாமா? இப்படியே சென்றால், இது எங்கு போய் முடியும்? வன்முறைகள் வாழ்க்கையாகுமா? அமைதியான ஆரோக்கியமான வாழ்வு அமையுமா? இவ்வினாக்களுக்கெல்லாம் பதில் ஒன்றேதான்.


சிற்றின்பங்களும் வன்முறைகளும் நிரந்தரமான தீர்வு ஆகா. கானல் நீர் பார்க்கவேண்டுமானால் அழகாக இருக்கலாம், ஆனால், பயன்படாது, குடிக்க முடியாது. தீய ஒழுக்கங்களும் அப்படித்தான். பொருளா தார வளர்ச்சி என்ற பெயரில், வருவாய் வளர்ச்சிக்காக, (இயற்கை வளங்களை இழந்து வருகிறோம்; காற்றையும் நீரையும் களங்கப்படுத்தி வருகிறோம்) குடும்பங்களையும் நல்ல குணங்களையும் இழந்து வருகிறோம்; நல்ல எதிர்காலத்தை பெறப் பேணிக்காக்க வேண்டிய குழந்தைகளைக் கருவிலேயே காணாமல் செய்துவிடுகிறோம்; குழந்தைகளே வேண்டாம் என்கிறோம்; ஏன், திருமணமே தேவைதானா என்று கேட்கிறோம்; மனித இனத்தில் சரிபாதியாக இருக்கிற, நல்லபிள்ளைகளைப் பெற்றெடுத்துத் தரத் தேவையான, பெண்களைத் துன்புறுத்துகிறோம். சுருங்கக் கூறின் நல்ல மாண்புகளை மறந்து வருகிறோம்; காசுக்காக எல்லாவற்றையும் விற்று வருகிறோம்; அதுவும் சரியென்று சட்டம் இயற்றுகிறோம்.


இதுபற்றிப் பேசவோ, எழுதவோ தைரியம் இல்லாத அநேக ஆண்கள் நடமாடுகிற இந்நாட்டில், இந்நாளில்(Sunalini Mathew ,Indian Uncle Inc., The Hindu Magazine , October 6,2024, p.1), இவையெல்லாம் பாதகமான செயல்கள் என்று பரப்புரை செய்துவருகிற தைரியமான நல்ல உள்ளங்களைப் பாராட்டாமல் இருக்கலாமா? இருக்க முடியுமா? எனவே, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினருக்குப் பாராட்டுகள்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்