மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

3 செய்திகள் சொல்லும் ஒரே செய்தி
S.A. இப்ராகிம், அக்டோபர் 16-31, 2024




செய்தி 1

கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஸ்ரீசானந்தா ஒரு வழக்கு விசாரணையின் போது பெங்களூரின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழுகின்ற ஒரு குடியிருப்புப் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டார். இச்செய்தி ஊடகங்களில் வந்த உடனேயே, உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து அந்த நீதிபதியிடம் விளக்கம் கேட்டது. அந்த நீதிபதி தனது கருத்துக்கு வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தார். அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு வழக்கை அத்துடன் முடித்து வைத்தது. ‘நீதிபதிகளின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற நடவடிக்கைகளும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. எனவே நீதிபதிகள் எச்சரிக்கையாகப் பேச வேண்டும்’ என்றும் அந்த நீதிபதிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு நாட்டு பெயர் கூறி அழைக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையில் கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அந்த நீதிபதிக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இரண்டாவதாக,  இந்த  வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்ற ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷர் மேத்தாவின் வேண்டுகோளையும் நிராகரித்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த விரைவான நடவடிக்கை நமக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது.அதே நேரத்தில், பெங்களூரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது அது முஸ்லிம்கள்  பெரும்பான்மையினராக
வசிக்கின்ற ஒரு பகுதி என்பதால் தான். இது மிகவும் விஷமத்தனமானது. ஒரு நீதிபதி பின் விளைவுகளை எதிர்பார்க்காமல் இப்படி நீதிமன்றத்தில் கூறியிருக்க முடியாது.

அவரின் இந்தக் கூற்று முஸ்லிம்களுக்கு எதிராக அவர் கொண்டிருக்கின்ற வெறுப்பு உணர்வின் வெளிப்பாடேயாகும். இப்படிப்பட்ட எண்ணப் போக்கு கொண்டவர்களை  உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் எப்படி நீதிபதியாகப் பரிந்துரைத்தது என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்டவர் எழுதுகின்ற தீர்ப்பு எப்படி நடுநிலையõக, நேர்மையாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.தமிழ்நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஒரு முஸ்லிம், அவர் ஏதோ ஒரு அரபி மதரஸாவுக்கு நன்கொடை வழங்கினார் என்ற காரணத்தாலேயே உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவரை நீதிபதிப் பதவிக்குப் பரிந்துரை செய்ய மறுத்து விட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி; இது என்ன அநீதி? கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவை மன்னித்ததோடு நின்று விடாமல், உச்ச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நீதி பிழைக்கும்.

செய்தி 2

ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா 2024ஐ பரிசீலனை செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில், ஒன்றிய அரசு நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை நியமித்துள்ளது. இதன் தலைவராக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் இருக்கிறார். கூட்டுக் குழுவின் தலைவர் பொதுமக்கள் இந்தச் சட்டத் திருத்த மசோதா குறித்த தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என் பொது அறிவிக்கை ஒன்று வெளியிட்டிருந் தார். அதன்படி சுமார் 1.25 கோடி பேர் தங்களது கருத்துகளை இமெயில் மூலமாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கூட்டுக் குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இதனை விமர்சித்துள்ள பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸ்லாந்த் துபே என்பவர் இப்படி அதிக எண்ணிக்கையில் இமெயில் வந்திருப்பது ஐயத்திற்கு இடமளிக்கிறது. இதில் அந்நிய நாட்டின் சதி இருக்கலாம். எனவே நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த லட்சணத்தில் இவர் இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஓர் உறுப்பினராகவும் இருக்கிறார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் இதனை இமெயில் ஜிகாத் என வர்ணித்துள்ளார்.  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழியைத்தான் இவரின் கூற்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இமெயில், கடிதங்கள் அனுப்பியவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே! அதனால் தான் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித் தொடர்பாளரும் அந்நிய சதி; விசாரணை வேண்டும் எனப் பிதற்றுகின்றனர். நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவரின் பொது அறிவிக்கையை ஏற்று இமெயில் அனுப்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் முஸ்லிம்களைப் பாதிக்கின்ற சட்டம் எனக் கருதுகின்ற அவர்கள் அதற்கு எதிராக தங்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இது ஒன்றும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாகவே நடக்கிறது. இது ஒரு ஜனநாயகப்பூர்வ நடவடிக்கையே. இதில் எந்தவிதமான சட்ட விரோதமுமில்லை. முஸ்லிம்களின் ஜனநாயகப் பூர்வமான எதிர்ப்புகளைக் கூட ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒரு கண் துடைப்பே! நாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என இவர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர். அவ்வளவே!

செய்தி 3

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பு வகிக்கும் ஜெகதீப் தங்கர், மேற்கு வங்காளத்தில் ஆளுநராக இருந்த போது அந்த அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தவர். சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர். இப்படிப்பட்டவரைத்தான் பாஜக துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. துணை ஜனாதிபதி என்ற நிலையில் இவர் மாநிலங்களவையின்  தலைவராகவும் (அதாவது சபாநாயகராக) இருக்கிறார். மாநிலங்களவையை இவர் நடத்துகின்ற விதம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இவர் நடுநிலை தவறிச் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரடியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயே பல முறை இவருடன் நேருக்கு நேர் மோதியிருக்கிறார். நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாதவர். அண்மையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்து ஆன்மிகச் சேவைக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டு உரையாற்றும் போது மதமாற்றம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார். Vice president Jagdeep Dhankhar on thursday described religious conversion as "antithetical" to national values and constitutional principles, (Hindu, 26.09.24) ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊதுகுழலாகவே மாறி அவர் மதமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மதமாற்றம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதல்ல. ஒருவர் மதம் மாறுவதற்கு அரசியல் சட்டம் அனுமதியளிக்கிறது. ஒருவர் இன்னொரு மதத்தின் கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு அந்த மதத்திற்கு மாறுவதை அரசியல் சட்டம் தடை செய்யவில்லை. கட்டாய மதமாற்றத்தையே அரசியல் சட்டப் பிரிவுகள் தடை செய்துள்ளன. மேலும் அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய துணை ஜனாதிபதி They target the valunerable sections of the society and encroach more into our tribal communitios என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். அதாவது அவர்கள் (கிறித்தவ அமைப்புகள்) சமூகத்தின் பலவீனமானவர்களையும் பழங்குடி இன மக்களையும் குறி வைத்தே செயல்படுகின்றனர் என்று கூறியிருக்கிறார்.

சமூகத்தின் பலவீனர்களான பட்டியலின மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. ஆனால் அவர்கள் இந்துக்களாக இருந்தால் மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைக்கும். முஸ்லி மாகவோ அல்லது கிறித்தவராகவோ மதம் மாறினால் அவர்கள் இந்தச் சலுகைகளை இழப்பார்கள். இதையும் மீறி அவர்கள் மதம் மாறுகிறார்கள் என்று சொன்னால், அதற்கு இந்து சமயத்தின் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதன தர்மமேயாகும். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ள ஃபாசிஸ்ட்கள் மறுக் கிறார்கள். உண்மை நிலவரத்தை உணராது மதமாற்றம் நாட்டிற்கு ஆபத்தானது எனக் கூக்குரல் இடுகிறார்கள். தீவிர கீகுகுகாரரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரும் அதற்கு விதிவிலக்காக இல்லை.

இந்த மூன்று தனித்தனி செய்திகளும் தெளிவாக ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகின்றன. கீகுகுகாரர்கள், அதன் அனுதாபிகள், அதன் துணை அமைப்பினர்கள் அவர்கள் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரையில் ஈடுபடுவார்கள். சனாதன தர்மத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். மதமாற்றம் நாட்டிற்கு ஆபத்து, அந்நிய சதி என்றெல்லாம் பிதற்றுவார்கள் என்பதே அந்த ஒற்றைச் செய்தியாகும். மேலும் அவர்கள் அனைவரையும் இஸ்லாமிய கிலி பிடித்து ஆட்டுகிறது என்பதும் அந்த ஒற்றைச் செய்தியில் அடங்கி இருக்கிறது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்