மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மதரஸா என்பது பாடசாலை மட்டுமல்ல!
மு. அய்யூப் கான், நவம்பர் 1- 15, 2024



‘கதப’ என்றால் எழுதினான் என்பது பொருள். மக்தப் என்றால் எழுதப்பட்டது (கிதாப்) என்பதாகும். படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் தனது வல்லமைக்கும் மாட்சிமைக்கும் உகந்த சிறந்த படைப்பாக மனித குலத்தைப் படைத்தான். இறைவனின் விருப்பப்படி இறைவனின் நேசத்தையும், நெருக்கத்தையும் பெற்றுக் கொள்பவர்களுக்கே இறைவன் சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான். அந்தச் சுவனத்தில் வாழத் தகுதி மிக்கவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவே தூதர்களை தூதுச் செய்தியான வேதங்களுடன் அனுப்பினான். அதில் இறுதித் தூதராக நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

‘அல்லாஹ்தான் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான். அவர், அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக! இந்த உண்மைக்கு அல்லாஹ்வின் சாட்சி போதுமானதாகும்.’ (திருக்குர்ஆன் 48:28)

அல்லாஹ் தன் தூதர்களுக்குத் தூதுச் செய்தியை ஒட்டு மொத்தமாக நூல் வடிவில் கொடுக்கவில்லை. மனிதனின் விளங்கிக்கொள்ளும் ஆற்றலின் அளவை இறைவன் அறிவான். எனவே, மனிதன் கேட்டு அறிந்து விளக்கம் பெற்று அதைக் கடைபிடித்தொழுகி ஈடேற்றம் அடைந்து கொள்ளும் பொருட்டு அவன் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் செய்திகளைத் தூதர்கள் மூலமாகச் சிறுகச் சிறுக அருளினான்.நபி(ஸல்) அவர்கள் மூலமாகக் கிடைத்த இறைச்செய்திகள் அனைத்தையும் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் இலைகளிலும், எலும்புகளிலும், தங்கள் உள்ளங்களிலும் பதிந்து கொண்டிருந்தனர். பின்னர் அவை அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரே நூல் வடிவிலான திருக்குர்ஆன் வடிவமைக்கப்பட்டது. அடுத்து வரும் தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு இவ்வாறு அமையப் பெற்ற இறைவேதம் குர்ஆனில் இருந்து கற்று, விளங்கி, கடைப்பிடித்து வரும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருக்கின்றது.

இறைவன், இறைத்தூதர், வழிகாட்டல், தூதுச் செய்தி, அதை மேலோங்கச் செய்ய வேண்டிய வேலை. இதில் தூதுச் செய்தியான சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டிய பணியை இறுதி மனிதன் வரை கொண்டு செல்லப்பட வேண்டிய பணியõக இருக்கின்றது. அதற்கு இறைமறைக் குர்ஆன் வழிகாட்டுகிறது.நமது கடமைகளில் முதன்மையானது வேதத்தைக் கற்பதற்கும் கற்றுக் கொடுப்பதற்குமான கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதும், பின்பு அதைப் பரவலாக்குவதும், இஸ்லாமியப் பண்பாட்டின் முன்மாதிரிகளாக இளம் தலைமுறையினரைப்  பயிற்றுவிப்பதுமே  இந்த இஸ்லாமியக் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். நமது எல்லாப் பள்ளிவாசல்களிலும் உள்ள மதரஸாக்களில் உலமா பெருமக்களும், நிர்வாகிகளும், பெற்÷றார்களும் அனைத்து ஜமாஅத்தார்களும் தங்கள் கவனத்தை மார்க்கக் கல்வியின் மீது குவிக்க வேண்டும்.

‘உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன்

சென்று போன மக்களைப் பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாய் மாற்றித் தருவான். எனவே, அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும், என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும். மேலும், இதன் பின்னர் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர்.’ (திருக்குர்ஆன் 24:55)

‘மனிதர்களே! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், அந்தப் பெரும் ஏமாற்றுக்கார(ஷைத்தா)னும் உங் களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றி விட வேண்டாம்.’ (திருக்குர்ஆன் 35:5)

இறைமார்க்கத்தை முறையாகக் கற்றுத் தேர்வதற்கான முதல் படிநிலையாக மதரஸாக்கள் திகழ்கின்றன. இங்கு வெறும் மொழியை மட்டும் கற்பிக்காமல் வாழ்வியல் ஒழுக்க நெறிகளும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் போதிக்கப்பட வேண்டும். இன்றைய காலச் சூழலுக்கேற்ப மதரஸா பாடத் திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்