‘யாராவது வந்திட மாட்டாங்களா, நல்லது செஞ்சிட மாட்டாங்களான்னு ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டோட வளர்ச்சியப் பத்தி ஏங்குற மக்கள ஏமாத்துற கரப்ஷன் கபடதாரிகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காகத் தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம்’ என்று விஜய் தமது வெற்றிக் கழக மாநாட்டு உரையில் ஓரிடத்தில் குறிப்பிட்டதைப் போல இங்கு தமிழ்நாடு வலிமையான மக்கள் தலைமைக்காக எதிர்பார்த்திருக்கின்றது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் இறப்பிற்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருக்கின்றார். வலிமையான தலைமையின்றி அதிமுக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி என்று பல்வேறு பிளவுச் சிக்கலுக்கு உள்ளாகியது.
அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கான கொல்லைப்புற வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தாலும் மக்கள் ஃபாசிஸ பாஜகவைப் புறக்கணித்தே வந்திருக்கின்றனர். ஏதாவது ஒரு சந்தடி சாக்கில் திராவிடக் கட்சிகளை வீழ்த்திவிட்டு உள்ளே நுழைந்து விட பல்வேறு குறுக்குவழிகளை பாஜக தொடர்ந்து வந்தாலும் அதில் தொடர் தோல்வியையே சந்தித்து வந்திருக்கிறது. திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. இதற்கு மாற்றாக புதிய தலைமைக்கான இடமும், தேவையும் இங்கு இருக்கின்றன. விஜயகாந்த் தே.மு.தி.கவைத் தொடங்கிய போது மக்கள் அவரை ஆதரித்தனர். எதிர்க் கட்சித் தலைவராக முடிந்த விஜயகாந்தின் தேமுதிக விரைவிலேயே மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கியது. விஜயகாந்த் இறப்பிற்குப் பிறகு அந்த நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிட்டது. கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தொடக்கத்திலிருந்தே மக்கள் நம்பிக்கையைப் பெரிய அளவில் பெறவில்லை.
‘வருவாரா, மாட்டாரா?’, ‘இதோ வந்து விட்டார்’ என்று நெடுநாள் ஆட்டம் காட்டிய ரஜினிகாந்த் விளையாட்டிலிருந்து விலகிக் கொண்டார். சீமான் தனித்து நின்று களம் கண்டாலும் தமிழ் இனவாதம் பேசும் அவரால் ஒட்டுமொத்த மக்கள் நம்பிக்கையையும் பெறமுடிவதில்லை. இச்சூழலில்தான் நடிகர் விஜய் நடிப்புத் துறைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றார். ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டுமே பேசி வந்த விஜய், மக்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும் வெகுதூரத்திலேயே இருப்பவர். கட்சித் தொடக்கமும் அறிவிப்பாகவே தான் வெளியானது. முறையான மக்கள் சந்திப்போ, ஊடகச் சந்திப்போ இல்லை. இச்சூழலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 விக்கிரவாண்டியில் மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய் பேசிய உரை ஊடகங்களில் பரவலானது. பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது. நின்றும், நடந்தும், பார்த்தும், பார்க்காமலும் சற்றேறக்குறைய முக்கால் மணிநேரம் விஜய் உரையாற்றினார்.
கொள்கை
வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாட்டில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எல்லாருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது அரசியல் குறிக்கோள் என்று தொடங்கி கொள்கை அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்துப் பார்க்கப் போவது இல்லை. இரண்டும் இந்த மண்ணோட இரண்டு கண்கள். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையே தங்கள் கொள்கை’ என அறிவித்தார்.
‘ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவுச் சிந்தனை மனப்பான்மை, மாநிலத் தன்னாட்சி, இருமொழி ஆட்சிக் கொள்கை, இயற்கை வளப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கேற்ற வளர்ச்சி, உற்பத்தித் திறன், போதை இல்லா தமிழகம் என்ற அடிப்படையில் சமதர்ம சமத்துவத்தை உருவாக்குவதுதான் இலக்கு’ என்பதைக் கொள்கை முழக்கமாக எடுத்துரைத்ததுடன் ‘அரசியல் போரில், கொள்கை கோட்பாடுகளில் சமரசத்திற்கோ, சண்டை நிறுத்தத்திற்கோ இடமே இல்லை’ என்றார்.‘தாம் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பு செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும்’ என்ற அரசியல் அணுகுண்டை வீசுவதாகப் பெருமிதம் கொண்டார்.
செயல்முறை
The End Justice The Means இலக்குகளே எங்கள் வழிகளைத் தீர்மானிக்கின்றன. அரசியல் தெளிவு எங்கள் நிர்வாகச் செயல்முறையாக இருக்கும். ‘மகத்தான அரசியல்; மக்களுக்கான அரசியல்’ எங்கள் வழி. மக்களோட மக்களாக இருக்க வேண்டும். நல்ல ரிசல்ட் கொடுக்கும் திட்டம் தீட்டுவோம், உடனே செயல்படுவோம். திட்டங்கள் சரியாகச் செயல்படுகிறதா என்று பார்ப்போம். மீன் பிடிக்கத் தெரிந்தவர்களுக்குத் தூண்டிலையும், மீன் பிடிக்கத் தெரியாதவர்களுக்கு மீன்களையும் கொடுப்பதுதான் கட்சியின் செயல்முறையாக இருக்கும். சொல் அல்ல செயல் தான் முக்கியம்’ என்று விளக்கினார்.
இரண்டு எதிரிகள்
‘மதம், சாதி, இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்று பிரிக்கும் பிளவுவாதம் தங்களின் முதல் எதிரி. நாட்டையே பாழ்படுத்துகின்ற பிளவுவாத அரசியல் தங்களின் கொள்கை எதிரி. ஊழல் கபடதாரிகள் தங்களின் அடுத்த எதிரி. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொழுக்கின்ற குடும்ப சுயநலக் கூட்டம்தான் தங்களுடைய அரசியல் எதிரி’ என்று உரத்து முழங்கினார்.
கொள்கைத் தலைவர்கள்
த.வெ.கவின் கொள்கைத் தலைவர்களாக, வழிகாட்டிகளாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகிய ஐவரையும் ஏற்றுக் கொண்டு செயல்படுவதாகக் கூறியதுடன் மாநாட்டு மேடை முகப்பில் ஐவருடைய மிகப்பெரிய வெட்டுருக்களும் வைக்கப்பட்டிருந்தன.
தீர்மானங்கள்
மாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பதிலாக சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் செயற்குழு, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 3ஆம் தேதி நடந்தது. அக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை, ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்புக்குக் கண்டனம், வக்ஃப் வாரியச் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தல், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு, மாதந்தோறும் மின்கணக்கீடு கொண்டுவர வலியுறுத்தல், மூன்றாவது மொழியைத் திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு, கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வலியுறுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிற்க!
கொள்கை, செயல்முறை, கொள்கைத் தலைவர்கள், எதிரிகள், இலக்குகள், தீர்மானம் என்று நாம் மேலே வரிசைப்படுத்தியதை த.வெ.க தலைவராக விஜய் பேசி யிருந்தால் அவர் வருகையின் மீது நம்பிக்கை துளிர்த்திருக்கும். ஆனால் இவை அனைத்தையும் நடிகர் விஜயாகவே அவர் பேசியது தான் இத்தனை விமர்சனங்களுக்கும் உள்ளானது. கொள்கை, கோட்பாடுகளை நக்கலும், நையாண்டியுமாக முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதும், மோசமான உடல்மொழியும் சீரியசோட சிரிப்பையும் சேர்த்துப் பேசுவதாகச் சொல்வதும், குட்டிக்கதை சொல்வதும் விஜய் ரசிகர்களை வேண்டுமானால் திருப்திப் படுத்தியிருக்கலாம். புள்ளிவிவரங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் பேசுவது பெரும் குற்றம்போலக் கூறிவிட்டு, ‘ஸ்பீச் மணிக்கணக்கா இருக்கக்கூடாது. அரசியல்வாதிகள் மாதிரி பேசி டைம் வேர்ட்ஸ் பண்ணப்போறதும் இல்லை’ என்று சொல்லிவிட்டு வழக்கமான அரசியல்வாதிகள் போலவே முக்கால் மணி நேரம் பேசினார். ‘கோபமாக் கொந்தளிக்கறத விட்டுட்டு பாய்ண்டுக்கு வந்திடணும்’ என்று சொன்னவர் கோபமாகப் பல இடங்களில் கொந்தளித்தார். பாய்ண்டுக்கும் வரவில்லை. ‘தான் யாருக்கும் மாற்று இல்லை’ என்று சொல்லிக் கொண்டே ‘சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிதான் மாறணுமா அரசியல் மாறக்கூடாதா? நியூ வேர்ல்ட் எல்லாத்தையும் மாத்திடும்’ என்கிறார். யாரோட பேரையும் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு திராவிட மாடல், குடும்ப ஆட்சி என்று நேரடியாகவே போட்டுத் தாக்கினார்.
‘பக்கா பிளானோட வந்திருக்கேன்’ என்று சொல்லிவிட்டு ‘பின் விளைவுகளைப் பார்க்காமல் இறங்கி அடிக்கணும்னு தோணுச்சு. எதையும் யோசிக்கல’ என்று சொல்கிறார். ‘உதார் உடுற பிளான்ஸ் இருக்கக்கூடாது. எல்லாமே செயல், செயல் மட்டும்தான்’ என்று சொல்லிக் கொண்டு நிறைய பிளான்கள், ஐடியாக்களைச் சொல்கிறார். ‘ஊழல்தான் தங்களது அரசியல் எதிரி’ என்று சொல்லிக் கொண்டே ‘ஊழலை நூறு பிரசெண்ட் ஒழிக்க முடியுமான்னு தெரியல’ என்கிறார்.‘நம்மை வாழவைச்ச மக்களுக்கு எதுவும் செய்யாம இருக்க முடியுமா? மக்களுக்கு என்ன செய்யப்போறோம்? என்பதற்கான விடைதான் அரசியல்’ என்று சொல்லிவிட்டு அரசியலை நச்சுப் பாம்புடன் ஒப்பிடுகிறார். இப்போது அவரும் நச்சுப் பாம்பு விளையாட்டுக்கு வந்து விட்டார். பாம்பின் வீரியம் தெரியாமல் விளையாட்டுத்தனமாக, குழந்தைத்தனமாக, விவரம் புரியாமல் குழந்தை பாம்பைக் கையில் எடுப்பது போல் தமது அரசியல் வருகையை அறியாமல் இறங்கிய விளையாட்டுத்தனம்’ என்று சொல்லாமல் சொல்கிறார்.
கொள்கைத் தெளிவின்மை
மாநாட்டில் அறிவித்த கொள்கைகளையெல்லாம் புரிந்துகொண்டு கூடிய கொள்கைக்கூட்டமல்ல இது. விஜய் என்ற நடிகரின் மேல் கொண்ட பிரியத்தினால் கூடிய ரசிகர்களின் கூட்டம்தான் அது. மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு கொள்கைத் தலைவர்களான பெரியார், காமராஜர், அம்பேத்கர் கொள்கைள் தெரிவது ஒருபுறம் இருக்கட்டும். அஞ்சலை யம்மாள், வேலுநாச்சியார் அவர்களுக்கு யாரென்றாவது தெரிந்திருக்குமா? பெரியார், அம்பேத்கரிடம் கொள்கை இருந்தது சரி, காமராஜர் காங்கிரஸ்காரர். அதுதான் அவரது கொள்கை. அதிருக்கட்டும். வேலுநாச்சியாரின், அஞ்சலையம்மாவின் கொள்கை என்ன? வீரம், நேர்மை, நிர்வாக முன்மாதிரிகளாக அவர்களை முன்னிறுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கொள்கைத் தலைவர்கள் என்று சொன்னால் அவர்களு டைய கொள்கைகளை விளக்க வேண்டும். ‘கொள்கை கோட்பாட்டை யாரிடமிருந்து எடுத்தோம். எப்டி அப்ளை பண்ணுகின்றோம்?’ என்று சொன்னவர் என்ன கொள்கை, கோட்பாட்டை அவர்களிடமிருந்து எடுத்தார் என்று இறுதிவரை சொல்லவே இல்லை.
எதிரிகள் குறித்த தடுமாற்றம்
பிளவுவாதம் கொள்கை எதிரி என்று சொன்னவர் ஏழை, பணக்காரன் என்று பிளவு வாதம் பேசுகிறவர்களை எதிரி என்கிறார். ஏழை, பணக்காரன் என்பது இயல்பு நிலைதானே! வெறுப்பு அரசியல்பேசி மத வெறியால் மக்களைப் பிளப்பவர்கள் என்று தெளிவுபடச் சொல்லவில்லை. ஃபாசிஸம் இந்த நாட்டின் பேராபத்து என்று சொல்வதற்குப் பதிலாக பாயாசத்துடன் ஒப்பிட்டு ஃபாசிஸம் குறித்த எந்த அடிப்படைப் புரிதலும் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘இவங்களுக்கு எப்ப பார்த்தாலும் இந்த ஃபாசிஸம், ஃபாசிஸம், ஃபாசிஸம்..! ஒற்றுமையா இருக்கற நம்ம மக்கள் மத்தியில சிறுபான்மை, பெரும்பான்மைனு பேசி ஃபுல்டைமா ஒரு சீன போடுறதே ஒரு வேலையாப் போச்சு. நான் தெரியாமத்தான் கேட்கிறேன். அவங்க ஃபாசிஸம்னா நீங்க பாயாசமா?’ என்று ஃபாசிஸ எதிர்ப்பை மழுங்கடிக்கச் செய்திருக்கும் இவர் எப்படி அவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பார்? ஊழல் கபடதாரிகள் என்ற அரசியல் எதிரி விவகாரத்தில் திராவிட மாடல் ஆட்சியை நேரடியாக, கடுமையாப் பேசித் தாக்கியதுடன், செயற்குழு தீர்மானத்திலும் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்ச்சித்திருக்கின்றார். அரசியல் எதிரியிடம் இருக்கும் கடுமையும், தெளிவும் கொள்கை எதிரிகளிடம் ஏன் இல்லை? திராவிடத்தை ஒழித்துக் கட்டுவதற்காக களம் இறக்கிவிடப்பட்டவரா விஜய்? என்ற கேள்விக்கான இடத்தை இந்த பாயாசப் பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது.
அச்சம் தரும் செயல்முறை
The End Justify The Means. இலக்கு வழிமுறைகளைத் தீர்மானிக்கும் என்று சொன்னால் இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்களா என்ற கேள்வி இருக்கிறது. இலக்கை அடையும் வரை நெருப்பாய் இருப்போம் என்கிறார். நோக்கமும் நன்றாக இருக்க வேண்டும். அதை அடைகின்ற வழிமுறைகளும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா?
வெற்று முழக்கமா?
‘மது இல்லா தமிழகத்தை உருவாக்க இப்போது ஓர் உறுதியளிக்கிறேன். த.வெ.க உறுப்பினர்கள் எவரும் மது அருந்த மாட்டார்கள். அப்படி அருந்துபவர்களுக்குக் கட்சி யில் இடமில்லை. ஊழலை ஒழிப்பது எங்கள் இலக்கு. த.வெ.க தொண்டர்கள் எவ்வித ஊழலுக்கும் ஒருக்காலும் துணைபோக மாட்டார்கள். அப்படி ஊழலுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்குக் கட்சி இடம் தராது’ என்றெல்லாம் விஜய் அறிவித்திருந்தால் அது தான் கொள்கை முழக்கமாக இருந்திருக்கும். தன்னை முன்மாதிரியாகக் கொண்டு திரண்ட இளைஞர் பட்டாளத்திற்கான பாதையாக இருக்கும். அதையெல்லாம் விடுத்துவிட்டு எள்ளலும், துள்ளலுமாகக் குட்டிக்கதை சொல்லிக் கொண்டிருந்தால்.. ரொம்ப.. ரொம்ப.. கஷ்டம் ப்ரோ..!