மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பிரபல்ய வெறியால் தவறிழைக்கும் இர்ஃபான்: தண்டனையிலிருந்து தப்புவதேன்?
புதுமடம் ஜாபர் அலி, நவம்பர் 16- 30, 2024




‘இர்ஃபான்ஸ் வியூ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பிரபல யூடியூபர் இர்ஃபான் பெய்டு பிரமோசன் என்கிற பெயரில் ரிவிய்யூ செய்த பல ஹோட்டல்கள் சுகாதாரமற்றுச் செயல்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து எச்சரித்தும் சீல் வைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. இர்ஃபான் ஓட்டி வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்தக் காரை ஓட்டி வந்தவர் என்று சொல்லி அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டு இர்ஃபான் தப்பிக்க வைக்கப்பட்டார். அவருடைய வீடியோக்களின் இடையிடையே பல தவறான கருத்துகளுக்காகவும், உளறல்களுக்காகவும் சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்ட சம்பவங்களும் பல இருக்கின்றன. அதனால் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

இதனிடையே இர்ஃபான், துபாயில் உள்ள மருத்துவமனையில் தன் மனைவியின் கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, விழா எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு சட்ட விரோதச்செயலைச் செய்திருந்தார். பாலினத்தைக் கண்டறிவதும் குற்றம். அதை வெளிப்படையாகப் பகிர்வதும் அதுவும் சமூக ஊடகத்தில் பதிவதும் குற்றம்.இவையெல்லாம் குற்றம் என்பது அவருக்குத் தெரியாமல் இல்லை. தனது பிரபல்யத்தால் விஐபிக்கள், அரசியல்வாதிகளின் தொடர்பால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற மமதையில் இருக்கிறார். அதோடு சமூக ஊடகத்தின் மூலம் மிகப்பெரிய வருமானம் வருவதால் பொருளாதாரம் ஒரு பிரச்னை இல்லை என்பதால் வழக்கறிஞரை அணுகி எளிதில் தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்கிற அசட்டு தைரியம் அவருக்கு இருக்கிறது.

ஏற்கனவே பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் திருமணத்திற்குத் துணை கிடைக்காத  சூழல்கள் இருந்து வருகிறது. அது போல  பெண்களுக்கு எதிரான  குற்றங்கள், பெண்கள்  வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் போன்ற பல்வேறு சமூகக் காரணங்களால் சிசுக்கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் இர்ஃபானின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கருவில் பிறப்பைக் கண்டறியும் போக்கு அதிகரிக்கவே செய்யும். தற்போது சென்னையில் பிரபல மருத்துவமனையில் தனது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்கும் நிகழ்வால் இது ஒரு சடங்கு, மதம் சார்ந்த நம்பிக்கையாக மாற்றம் பெற்று அது ஒரு கலாச்சாரமாக மாறும் சூழலும் இருக்கிறது.

2021ஆம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபைப் பார்த்து கணவரும் அவருடைய சகோதரியும் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. 2023ஆம் ஆண்டு இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பதாகக் கூறிக்கொண்டு யூடியூப் தளத்தைப் பார்த்து பிரசவம் பார்த்த கார்த்திகேயன் மனைவி கிருத்திகா மரணமடைந்தார். தற்போது பல்வேறு விழிப்பு உணர்வை கல்வி போன்றவற்றால்  மானுட சமுதாயம் அறிவு வளர்ச்சி பெற்று பிற்போக்குத்தனங்களைக்  கைவிட்டு வளர்ந்து வரும் சூழலில் மிகவும் பிரபலம் வாய்ந்த இர்ஃபானின் இதுபோன்ற செயல்களால் பலரும் இதனைப் பின்பற்றும் அபாயகரமான நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும். இன்றைக்கு ஊடகம் மூலம் ஒரு தகவலை உலகம் முழுவதும் கடத்த முடிகிறது. அதனால் ஏற்படும் தாக்கம் என்பது அரசியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒன்றை எளிதாகக் கட்டமைக்க முடிகிறது.


‘இர்ஃபானின்  இதுபோன்ற  செயல்களால் பெண்  குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். சமூகக் குற்றங்கள் அதிகரிக்கும். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும்  நபர்களின் மீது சட்டப்பூர்வமான  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  யூடியூபில் வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும்’ என்றும் தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுவரை இர்ஃபான் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை வீடியோவை நீக்கக் கோரி கடிதம் அனுப்பி கெஞ்சும் போக்கு வாய்ப்புக்கேடானது. சட்டமும் அரசின் நிர்வாகமும் அந்தஸ்து சார்ந்து தராதரம் பார்த்து இயங்கி வருவது இந்திய அரசியலமைப்பு, இந்திய குடியாட்சித் தத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் போக்காக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மிகப்பெரிய தண்டனைக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டால் தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்கிற புது விதப் போக்கும், பணம் இருந்தால் நீதிமன்றத்தில் உள்ள அதிகப்படியான வழக்கின் காரணமாகவும் பிணை பெற்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற போக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழல்களை இர்ஃபானும் பயன்படுத்தியுள்ளார். குழந்தையின் பாலினத்தை அறிவது, குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பது துல்லியமாகக் குறிப்பிட்ட நொடியைக் கணக்கிட்டு அறுவை சிசிக்சை செய்வது போன்ற பல குற்றங்கள் இன்றைக்கு நடந்து கொண்டுதான் வருகிறது. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்வது தொடங்கி வயிற்றைக் கிழிப்பது, குழந்தையை வெளியே எடுப்பது, அதன் தொப்புள் கொடியை வெட்டுவது என வீடியோவில் பலவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும்  பரிசோதனைக்கு  தன் மனைவியை உட்படுத்தி  குழந்தையின் பாலினத்தை அறியச் செய்ததன் மூலம், துபையில் போய் ரிப்போர்ட் வாங்கி பெண் குழந்தை தேவையில்லை எனில் கருக்கலைப்பு செய்யலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இது அந்த மருத்துவமனைக்கு செய்யப்பட்ட ஒரு பெய்டு பிரமோஷனாகக் கூட இருக்கலாம்.

சமூகப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதோடு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குத் தவறான முன் மாதிரியை ஏற்படுத்தியுள்ளார் இர்ஃபான். குற்றங்கள் எதுவாயினும் செய்தது யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தக் குற்றங்கள் குறையவும், போதிய விழிப்பு உணர்வு சமூகத்தில் ஏற்படவும் செய்யும். அதைவிடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க வைக்கப்பட்டால் அரசு சமூக அக்கறையற்று இருப்பதாகவும் சட்டம், அரசு நிர்வாகம் பாராபட்டசமானது என்பது போன்ற சிந்தனைகள்  மக்கள்மனதில் ஏற்பட்டு விடும்.

குற்றம் செய்பவர்களைத் தண்டிக்க முடியாது என்ற போக்கால் எல்லோரும் இந்த முயற்சியை செய்யத் துணிவார்கள். சமூக ஊடகத்தில் பிரபலமானால் அல்லது அரசியல்வõதிகளை அண்டி ஒண்டிக்கொண்டால் எந்தத் தவறையும்  செய்யலாம் என்கிற அளவில் தன்னை தகவமைத்துக் கொள்ள பலரும் முன்வருவார்கள். இவர்கள் தொடர்ந்து தவறான முன்னுதாரணமாகப் பல்வேறு விஷயங்களையும் தொடரச் செய்வார்கள்.‘இர்ஃபான் மன்னிப்புக் கோரினாலும் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்று சமூக நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் இர்ஃபான் தப்பிக்க வைக்கப்பட்டதால், அடுத்தடுத்த தவறு களைச் செய்யத் துணிகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்