ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்: ‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘எனது உம்மத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சத்தியத்தைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து போராடுவார்கள்; நியாயத்தீர்ப்பு நாள் வரை வெற்றியுடன் இருப்பார்கள்’ ஸஹீஹ் முஸ்லிம் 1923ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் இரண்டும் மாறுபட்ட குழுக்கள். அவை வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் செயல்படுகின்றன. இரண்டு குழுக்களும் இஸ்ரேலின் அக்கிரமத்திற்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராகக் களமாடி வருகின்றன. ஹமாஸ், காஸாவில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகிறது. இன்னொரு பக்கம், 18 ஆண்டுகள் (1982-2000) இஸ்ரேல் லெபனானின் தெற்குப் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இன்றும் லெபனானிற்குச் சொந்தமான ஷேபா வயல்களை இஸ்ரேல் ஆக்கிர மித்துள்ளது.
கடந்த ஆண்டில், காஸாவில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில், ஒரே நாளில் 550 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இது சமகாலப் போர் வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த மிக அதிக எண்ணிக்கையிலான படுகொலை ஆகும். ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் இரண்டும் வேறுபட்டாலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஒரே நோக்கத்தைக் கொண்டதாக இருக்கின்றன.
2023 அக்டோபர் 7 தாக்குதல்தான் காரணமா?
ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல இஸ்ரேல் 2023 அக்டோபர் 7ஆம் நாள் ஹமாஸ் இஸ்ரேல்மீது நடத்திய தாக்குதலை ஒரு காரணமாகக் காட்டுகிறது. ஆனால் உலகின் நீண்ட ஆக்கிரமிப்பு இஸ்ரேல் செய்வது தான். 1967இல் இருந்து தொடர்ந்து ஃபலஸ்தீனை அபகரித்து வருகிறது இஸ்ரேல். 1978 அக்டோபர் 7 தெற்கு லெபனானை ஆக்கிரமித்தது. 1982ஆம் ஆண்டு ஷத்திலா படுகொலை, 2006ஆம் ஆண்டு இரண்டாம் லெபனான் போர். இந்தப் போரில் 82% (35,000 குண்டுகள்) இஸ்ரேலிலிருந்து லெபனான் மீது வீசப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளைக் கொல்வதாகச் சொல்லி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் ராணுவம் 60,000 மக்களை வடக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றி உள்ளது.
1. லெபனானில் 2023 அக்டோபர் 13ஆம் நாள் இஸம் அப்துல்லாஹ் எனும் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.
2. Leon Panetta Ex.Director of CIA, இஸ்ரேல் தீவிரவாதச் செயல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்கிறார்.
3. இஸ்ரேலின் அட்டூழியம் எந்த அளவுக்கு என்றால் பூமியின் நரகம் (Hell on Earth) என்று காஸாவைப் பற்றி சொல் கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.
4. கண்ணிப் பொறி (Boody Trap) வைத்து யாரையும் கொல்வது உலகப் போர் விதிகளுக்கு எதிரானது என ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் இஸ்ரேல் பேஜர் மூலம் அவர்களைக் கொல்கிறது.
5. UNICEF செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக காஸா மாறியுள்ளது என்று கூறுகிறார்.
இஸ்ரேலின் தாக்குதல் நீதி மிக்கதா?
ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்தபோது ரஷ்யா எல்லை மீறி ஆக்கிரமிக்கிறது என நீதி நியாயம் பேசியவர்கள் இஸ்ரேல் மீது மட்டும் ஏன் அந்த நியாயத்தைக் காட்டுவது இல்லை?
அக்டோபர் 7இல் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலளிக்க உரிமை உண்டு எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால், இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நீதி அடிப்படையில் செய்கிறதா? பச்சிளம் குழந்தைகள், பெண்கள், பள்ளிகள் எல்லாம் சூறையாடப்படுகிறது, அகதிகள் கொல்லப்படுவது சர்வதேசச் சட்டங்களை மீறும் குற்றமாகும். வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி காஸாவுக்குள் ஊன்றுகோல் நெயில் கிளிப் பர்கள், சாக்லேட் கிராஸன்ட் போன்றவற்றை எடுத்துச் செல்லும் உதவி லாரிகள் (Aid Truck) தடுக்கப்படுவது நியாயமானதா? இரண்டாம் உலகப் போரின் போது அழிக்கப்பட்டதை விட வடக்கு காஸாவில் உள்ள கட்டிடங்களில் அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளது. 42 மில்லியன் டன் இடிபாடுகள். கடந்த அக்டோபரில் மத்திய காஸாவில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதை நியாயப்படுத்துவதா?
மக்களை பாதுகாப்பான மண்டலங்களுக்குச் செல்லச் சொல்லி, பின்னர் அவர்கள் மீது குண்டுவீசிக் கொன்றது நியாயமானதா? காஸாவில் 17,000 குழந்தைகளைக் கொன்றதை இஸ்ரேல் எவ்விதம் நியாயப்படுத்துகிறது? போரில் போராடுபவர்களை எதிர்கொள்வதும், போரிடுவதும் போரின் நியதி. ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் திட்டமிட்டுக் கொன்று குவிப்பதை என்னவென்று
சொல்வது?
இஸ்மாயீல் ஹானியாவைத் துல்லியமாகக் குறிவைத்து ஈரானில் உள்ள தெஹ்ரானில் தேடிக் கொல்வது எவ்வித நியாயம்? இஸ்ரேல் ராணுவம் ஏன் இத்தனை மக்களை போர் எனும் பெயரிலும், தீவிரவாதத் தடுப்பு எனும் பெயரிலும் அப்பாவிகளைக் கொத்துக் கொத்தாகக் கொன்று அழிக்கிறது? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்(ஐஇஇ) தலைமை வழக்கறிஞர், இஸ்ரேலின் பிரதம மந்திரியும், பாதுகாப்பு அமைச்சரும், பொதுமக்களை பட்டினியால் கொன்று குவிப்பது, கொலை செய்தல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை வேண்டுமென்றே இயக்குவது, அழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்படவேண்டும் என்று கூறுகிறார்.
நம் பங்களிப்பு
1. இந்த விழிப்பு உணர்வும் ஆவணமும் சமூகத்தில் பரவ வேண்டும்.
2. உலக நாடுகள் போரை நிறுத்த தொடர்ந்து முயலவேண்டும். போர் குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றத்திடம் அழுத்தமாக முறையிட வேண்டும்.
3. இஸ்ரேலியப் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
4. இந்தப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.
5. அப்பாவி மக்களுக்கு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குப் போதுமான ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
6. அப்பாவிகளுக்காக நாம் துஆச் செய்ய வேண்டும்.