பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கழிப்பறையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அன்னாரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தார், உற்றார் உறவினர், அவரது நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக!
முதியவர்கள் வீட்டில் கீழே விழுவதும் தலையிலோ, எலும்பு முறிவு ஏற்படும் வகையிலோ காயம் ஏற்படுவதும் முதியோர்களை வீடுகளில் பேணுபவர்களுக்கு எப்போதுமே கலக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கீழே விழுவது, அது தொடர்பான மரணங்கள் மிக அதிகமாகப் பதிவு செய் யப்பட்டு வருகிறது.
ஒருமுறை கீழே விழுந்து எலும்பு முறிவு, இடுப்பெலும்பு முறிவு, தலையில், மூளையில் பலத்த அடி ஏற்பட்ட பின் முதியோர்களால் பிறரது உதவியின்றி வாழ இயலாது எனும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் பொருட்டு நாம் அனைவரும் கட்டாயம் முதுமையில் ஏற்படும் இந்த விழுதல் விபத்துகள் குறித்து விழிப்புஉணர்வு பெற்றிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
ஒருமுறை தவறி கீழே விழுந்த முதியவர் மீண்டும் தவறி விழுவதற்கு அதிக வாய் ப்பு உள்ளது. எனவே முதல் முறை வழுக்கிக் கீழே விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய் ய முற்படுவது அடுத்த முறை விழுவதைத் தடுக்கும் செயலாக அமையும். பொதுவாக முதியவர்கள் கீழே விழுவதற்கு மூன்று வகையான காரணங்கள் உள்ளன.
1. முதுமை, நோய் கள், மருந்துகள்
முதியவர்களுக்கு அவர்களின் வயது மூப்பின் காரணமாக தள்ளாட்டம் இல்லாமல் நிலையாக நிற்பதும் நடப்பதும் என்பது சிறுகச் சிறுக சவாலாக மாறுகிறது. கண் பார்வை மங்குதல் குறைபாடுகள் காரணமாக நிறத்தின் வெளிர் அடர் பாகுபாடுகளை உணர இயலாமை, இரவு நேரப் பார்வைப் போதாமை.
நடக்கும் போது நிலையாக இருப்பதற்கும் தள்ளாட்டம் இல்லாமல் இருப்பதற்கும் தேவையான செரிபெல்லம் எனும் மூளையின் பகுதியில் ஏற்படும் தேய் மானம், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, இதய, சிறுநீரக, நுரையீரல், கல்லீரல் நோய் கள். அவற்றுக்கு உட்கொள்ளும் மருந்துகள். தூக்கமின்மை, மனத்தாழ்வு நிலை, சோர்வுக்கு உட்கொண்டு வரும் மனநல மாத்திரைகள். இரத்த சோகை, இதயத் துடிப்பில் மாறுபாடு, நீரிழப்பு, தாது உப்புகள் மாறுபாடு, நுரையீரல் தொற்று, இதய வால்வுகளில் அடைப்பு, நினைவாற்றல் குறைபாடு, மூட்டு தேய் மானம், பக்கவாதம், கழுத்து, குறுக்குத் தண்டுவட எலும்புத் தேய் மானம், பார்கின்சோனிசம், நீரிழிவினால் ஏற்படும் நியூரோபதி, உள்காதில் உள்ள லேபிரின்த் எனும் உறுப்பில் ஏற்படும் பிரச்னை காரணமாக தலைச்சுற்றல், கண் புரை நோய் , கண் அழுத்த நோய் , நீரிழிவு, இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விழிப்படலச் சிதைவு நோய் என்று முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பட்டியல் இடலாம்.
மேற்கூறிய அனைத்துப் பிரச்னைகளும் ஒரு நபரைக் கீழே விழ வைக்க முடியும்.எனவே இத்தகைய காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இவையன்றி முதியவர்கள் மேற்கூறிய பல நோய் களுக்கு மாத்திரைகளை உட்கொள்வர். உடல் வலிக்குப் பயன்படும் மார்ஃபின் வகை மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய் யும் வலி நிவாரணிகள், இதயத் துடிப்பைச் சீராக்கும் மாத்திரைகள், நீரிழிவுக்கான மாத் திரைகளால் இரத்த க்ளூகோஸ் மிகவும் குறை வது, சில இரத்தக் கொதிப்பு மாத்திரைகள், நீரை வெளியேற்றும் மாத்திரைகள் ஆகியவற்றால் தலைச்சுற்றல், மயக்க நிலை ஏற்பட்டு கீழே விழும் நிலை ஏற்படலாம்.
2. சுற்றுப்புறம் சார்ந்த காரணங்கள்
தங்குமிடத்தில் முதியவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு போதாமை, போதிய வெளிச்சமின்மை, வழுக்கும் தரைகள் போன்றவற்றால் முதியவர்கள் வழுக்கி விழும் வாய் ப்பு ஏற்படுகிறது.
3. சந்தர்ப்பச் சூழ்நிலை
இரவில் உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டு அதற்காக விரைந்து கழிப்பறை செல்ல எத்தனிக்கையில் விழுவது, அலைப்பேசியில் பேசிக்கொண்டே மாடிப்படிகளில் ஏறும் போது வழுக்கி விழுவது என சந்தர்ப்பச் சூழ்நிலைகளும் விழுவதற்கு வழிவகுக்கின்றன.
பொதுவாக கீழே விழுந்த முதியவர்களிடம் ‘எப்படி விழுந்தீர்கள்?’ என்று மருத்துவர் கேட்டால், ‘தெரியாம தடுக்கி விழுந்தேன். மேஜை அல்லது நாற்காலி இடறி விழுந்தேன். பாத்ரூம்ல டைல்ஸ் வழுக்கி விழுந்தேன்’ என்று கூறுவார்கள்.
ஆனாலும் உண்மையில் தங்களுக்கு வரும் தலைச்சுற்றல் குறித்தோ, படபடப்பு குறித்தோ கூறமாட்டார்கள். காரணம் இவையெல்லாம் பெரிய அறிகுறிகளல்ல என்று அசட்டை செய் வார்கள் அல்லது அத்தகைய அறிகுறிகள் தங்களுக்கு ஏற்படுகிறது என்பதையே உடனே மறந்து விடுவார்கள்.
எளிய பரிசோதனை
ஒருவர் நடக்கும் போது கீழே விழுவதற்கான வாய் ப்பைக் கண்டறியும் எளிய பரிசோதனைகள் இரண்டு உள்ளன. அவற்றை நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் செய்து பார்ப்பார்கள்.அனைவருமே முயற்சி செய் து பார்க்கலாம்.
கை வைத்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும். நாற்காலியில் இருந்து எழுந்து நேர்கோட்டில் பத்து அடி நடக்க வேண்டும். மீண்டும் அதே நேர்கோட்டில் திரும்ப வேண்டும். திரும்பி வந்து நாற்காலியில் அமர வேண்டும். இவ்வாறு முதியவர்கள் செய் யும் போது அவர்கள் இதை எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் செய் கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இந்தச் செயல்முறையை நிறைவு செய்ய 12 நொடிகள் போதுமானது. இந்தப் பரிசோதனைக்குப் பெயர் ‘கெட் அப் கோ’ (எழு செல்) ஆகும்.
12 நொடிகளுக்கு மேல் ஒருவர் எடுத்துக் கொண்டால் அவர் அடுத்தடுத்து விழுவதற்கான வாய் ப்பு அதிகம் என்று எடுத்துக் கொண்டு அவரை மேலும் பாதுகாப்பாகக் கவனிக்க வேண்டும். அவருக்கு நான் மேற்கூறிய பல காரணங்களுள் விடையைத் தேடி பரிசோதனைகள் செய் யப்பட வேண்டும்.
மூளை நரம்பியல் மருத்துவர், கண் நோய் சிறப்பு நிபுணர், இதய நோய் சிறப்பு நிபுணர், மனநல மருத்துவர் ஆகியோரிடம் அந்த முதியவரைக் காட்டி காரணத்தை அறிந்து அதற்குச் சிகிச்சை செய் ய வேண்டும். இன்னும் நாம் நடக்கும் போது நமக்குச் சரிசம நிலையை வழங்கி தள்ளாட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் மூளையின் ‘செரிபெல்லம்’ சரியாகச் செயல்படுகிறதா என்பதை வைத்து ஒருவர் அடிக்கடி கீழே விழுவாரா என்பதை யூகிக்கலாம்.
முதியவர் ஒருவரை அவரது ஒரு காலில் பத்து நொடிகள் நிற்கக் கூறவும். பிறகு உடனே கண்களைத் திறந்து கொண்டு நேர்க்கோட்டில் பத்து அடிகள் நடக்க வேண்டும். இதை அவர் தள்ளாட்டம் ஏதுமில்லாமல் சரியாகச் செய் து விட்டால் மூளை சார்ந்த தள்ளாட்டப் பிரச்னை இல்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.
பாதுகாப்புக்கான வழிகள்
முதியவர்கள் வாழும் இல்லங்களை அவர்கள் விழாத வண்ணம் பாதுகாப்பாக அமைக்க சில யோசனைகள்:
1. வீடு முழுவதும் குறிப்பாக இரவில் கழிப்பறை செல்லும் வழி தோறும் ஒளி விளக்குகளை அமைக்க வேண்டும். அதற்குரிய ஸ்விட்ச்களை கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்.
2. வீட்டில் எங்கெல்லாம் தண்ணீர் புழக்கம் உள்ளதோ அங்கெல்லாம் கால் உலர்த்தும் சாக்குகள் அல்லது கார்பெட்டுகளைப் போட்டு வைக்க வேண்டும்.
3. முதியவர்கள் வாழும் இடத்தில் போடப்படும் நாற்காலி, மேஜை ஆகியவற்றை பிளாஸ்டிக்கில் இல்லாமல் மரத்தில், இரும்பினால் செய் யப்பட்டதாக வலிமையானதாக இருக்க வேண்டும். ஒருவேளை வழுக்கி விழுந்தாலும் இந்த மேஜை நாற்காலி மீது சாய் ந்து கொள்ள அல்லது பிடித்துக் கொள்ள உதவும். கட்டாயம் சக்கரங்கள் பூட்டப்பட்ட நாற்காலிகளைத் தவிர்க்க வேண்டும்.
4. வீட்டில் அங்குமிங்கும் காலில் மாட்டி விழச் செய் யுமாறு வயர்கள், கயிறுகள் இருக்கக் கூடாது.
5. சமையலறையில் முதியவர்கள்கைக்கு எட்டும் தூரத்திலும் உயரத்திலும் அலமாரிகள், அடுக்குகள் இருக்க வேண்டும்.
6. பாத்திரம் கழுவும் இடத்துக்குக் கீழ் தரையில் ரப்பர்மேட் போடுவது நல்லது.
7. கழிப்பறைகளில் வழுவழுப்பான டைல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ரப்பர் மேட்களை விரிக்கலாம். கழிப்பறைக்குச் செல்லும் போது ரப்பர் செருப்புகளை அணிந்து செல்லலாம். பிடிமானம் நன்றாக இருக்கும்.
8. கழிப்பறையில் பிடித்துக் கொள்ள கைப் பிடிகளை சுவரில் அடித்து வைக்க வேண்டும். ஒருவேளை தலைச்சுற்றல் ஏற்பட்டாலும் அந்தப் பிடிமானக் கம்பிகள் காப்பாற்றும்.
9. மலம் கழிக்கும் கோப்பையை வெஸ்டர்ன் முறையில் உயரம் ஏற்றி வைப்பது நல்லது.
10. முதியவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் இருபக்கம் இருந்தும் திறக்குமாறு தாழ்பாள்களை அமைப்பது நல்லது.
11. முதியவர்கள் படியேறும் போது சிரமம் இல்லாமல் இருக்கவும் வழுக்காமல் இருக்கவும் ஒரு படியின் உயரத்தை 15 சென்டி மீட்டருக்குள் அமைப்பது சிறந்தது. படியின் உயரம் அதிகமாக இருப்பின் இடறி விழும் வாய் ப்பு அதிகம்.
12. மாடிப் படிக்கட்டுகளில் சில படிகளுக்கு ஒருமுறை நிற்பதற்கு வசதியாக லேண்டிங் அமைப்பது சிறந்தது.
13. படிக்கட்டுகள் முழுமைக்கும் இருபுற மும் உருளை வடிவில் ஸ்டீல் கைப்பிடி அமைக்க வேண்டும். அந்தக் கைப்பிடிச் சுவற்றில் இருந்து 2.5 முதல் 5 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.
14. படிக்கட்டுகளின் கைப்பிடிகள் ஏற்றத் திலும் சரி இறக்கத்திலும் சரி படியை விட ஓர் அடி அதிகமாக இருக்க வேண்டும். கைப்பிடி முடிவுறும் இடத்தில் உள்பக்கமாக வளைத்து விடப்பட்டிருக்க வேண்டும்.
15. படிக்கட்டுகளில் தண்ணீர் வடியுமாறு இயன்றவரை அமைக்கக் கூடாது. அவ்வாறு தண்ணீர் வழுக்கும் என்று தெரிந்தால் படிக்கட்டுகளில் தண்ணீர் உலர்த்தும் சாக்குகளைப் போட வேண்டும்.
16. மாடிப்படிகளில் இரவு நேரங்களில் சரியான ஒளி கிடைக்குமாறு ஒளிவிளக்குகளை அமைக்க வேண்டும்.
17. நடக்கச் சிரமப்படும் முதியவர்கள் நடப்பதற்கு கைத்தடி, வாக்கர்களை உபயோகப்படுத்துவது நல்லது.
18. தசைகளை வலுப்படுத்தவும், மூட்டுகளைப் பலப்படுத்தவும் உடல் பயிற்சிகளை இயன்முறை சிகிச்சையாளரின் பரிந்துரையில் பெற வேண்டும். டாய் ச்சி (TAI CHI) எனும் தற்காப்புக் கலை உடற்பயிற்சியை முதியவர்கள் செய் வது அவர்களைக் கீழே விழுவதில் இருந்து தடுக்கிறது என்று ஆய் வுகள் கூறு கின்றன. அதையும் முயன்று பார்க்கலாம்.
19. எலும்புகளுக்கு வலிமை கூட்டும் விட்டமின் ஈ சத்துக்காக தினமும் இருபது நிமிடங்கள் சூரியக்குளியல் எடுக்கலாம். விட்டமின் ‘ஈ’யை சப்ளிமெண்ட்டாகவும் உட்கொள்ளலாம். மேற்கூறிய பல விசயங்களையும் கருத்தில் கொண்டு முதியவர்கள் கீழே விழுவதைத் தடுப்போம். அதன் வழி ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ வழிவகை செய் வோம்.
https://www.facebook.com/share/p/MJmM-wiVdFDYJopeR/